World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Behind North Korea’s political crisis

வட கொரிய அரசியல் நெருக்கடியின் பின்னால்

Peter Symonds
23 December 2013

Back to screen version

வடகொரியாவின் இரண்டாவது முன்னணி தலைவர் ஜங் சாங்-தியேக் (Jang Song-thaek) மீதான விசேட விசாரணையும், டிசம்பர் 12இல் அவர் தூக்கில் இடப்பட்டதும் பியான்ங்யாங் ஆட்சிக்குள் நிலவும் ஓர் ஆழ்ந்த உள் நெருக்கடியை குறித்துக் காட்டுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தலைவர் கிம் ஜோங்-அல்'லின் மரணத்திற்கு பின்னர், அவரது மகனும் அவருக்குப் பின்னர் பதவிக்கு வந்தவருமான கிம் ஜோங்-அன், அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் பேழையுடன் இணைந்து சென்ற ஏழு பேரில் இருவரைத் தவிர ஏனைய அனைவரும் உட்பட, அந்நாடின் 218 உயர்மட்ட அதிகாரிகளில் சுமார் 100 அதிகாரிகளையும் பதவியிலிருந்து நீக்கி உள்ளார்.

வட கொரியாவிற்குள் நிலவும் கொந்தளிப்பிற்கான தெளிவான குறிப்பு, ஜங்கினால் வழங்கப்பட்டதாக கூறப்படும் "ஒப்புதல் வாக்குமூலத்தில்" இருந்து வருகிறது, “பொருளாதாரம் முற்றிலுமாக திவால்நிலைமைக்கு சென்று கொண்டிருக்கின்ற நிலையில், மேலும் அரசு பொறிவின் விளிம்பில் இருக்கின்ற போது,” அவர் அதிகாரத்தைக் கைப்பற்ற திட்டமிட்டிருந்ததாக அந்த வாக்குமூலத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த பொலிஸ்-அரசாட்சியில் ஆழ்ந்த சமூக பதட்டங்களையும், ஸ்திரமின்மையையும் உருவாக்கி வருகின்ற ஒரு செயலற்று போன, நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கு ஜங் பலிக்கடாவாக ஆக்கப்பட்டுள்ளார்.

அந்த கன்னை உள்மோதல்களுக்கான உடனடி காரணம் என்னவாக இருந்தாலும், அந்த அரசியல் கொந்தளிப்பிற்கான பிரதான பொறுப்பு பியான்ங்யாங்கில் தங்கியில்லை, மாறாக அது வாஷிங்டனின் மீது தங்கியுள்ளது. வட கொரியாவின் பிரதான பங்காளியான சீனாவிற்கு குழிபறிக்கும் நோக்கில், ஒபாமா நிர்வாகம் அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக, பியான்ங்யாங்கை ஓர் அரசியல் கொதிகலனாக மாற்றி, அந்நாட்டின் மீது நடத்திவரும் நீண்டகால அமெரிக்க முற்றுகை நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக வாஷிங்டன் வட கொரியாவை நோக்கி ஒரு கட்டுப்பாடற்ற விரோத போக்கை கொண்டுள்ளது. அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட பலம் வாய்ந்த சின்ங்மேன் ரீஹியின் (Syngman Rhee) வலது சாரி தென் கொரிய ஆட்சிக்கு முட்டுக்கொடுக்க, 1950'இல் இருந்து 1953 வரையில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளும் ஒரு பேரழிவுகரமான யுத்தத்தை நடத்தின. அந்த யுத்தத்தில் மில்லியன் கணக்கான சிப்பாய்களும், குடிமக்களும் கொல்லப்பட்டதோடு, அது கொரிய தீபகற்பத்தையே சீரழித்தது. ஒரு போர்நிறுத்தம் அந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தது, ஆனால் ஓர் அமைதி உடன்படிக்கை ஒருபோதும் கையெழுத்தாகவில்லை, அதாவது யுத்த நிலை இன்னும் நீடிக்கிறது என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது.

அமெரிக்காவை பொறுத்த வரையில், கொரிய யுத்தத்தின் இலக்கு வெறுமனே வட கொரியாவாக இருக்கவில்லை, மாறாக சீனாவாக இருந்தது, அங்கே 1949 சீன புரட்சியில் அமெரிக்க பின்புலத்திலான கோமின்டாங் தூக்கியெறியப்பட்டது. சீன எல்லையை நெருங்கி கொண்டிருந்த அமெரிக்க துருப்புகளை சீனப் படைகள் திருப்பி அடித்துக் கொண்டிருந்தமையால், அமெரிக்க தலைமையிலான படைகளின் தளபதி ஜெனரல் டக்ளஸ் மெக்ஆர்தர் சீனாவிற்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ஆலோசனை வழங்கினார். பனிப்போர் காலம் முழுவதும், அமெரிக்க இராணுவம் ஆயிரக்கணக்கான துருப்புகளையும், அத்தோடு யுத்தகப்பல்கள் மற்றும் யுத்தவிமானங்களையும், தென் கொரியாவில் நிறுத்தி இருந்தது, இன்றும் அதையே தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

1991'இல் சோவியத் ஒன்றியத்தின் பொறிவும் மற்றும் பனிப்போரின் முடிவும் வட கொரியாவின் மீது அமெரிக்க அழுத்தத்தைத் தீவிரப்படுத்துவதற்கு மட்டுமே வழி வகுத்தது. தென் கொரியாவில் அமெரிக்கா பல தசாப்தங்களாக தந்திரோபாயரீதியில் அணு ஆயுதங்களை வைத்திருந்த போதினும், தென் கொரியா மற்றும் ஜப்பானில் அதன் இராணுவ தளங்களை தக்க வைப்பதற்காக அது வட கொரியாவின் மட்டுப்படுத்தப்பட்ட அணுசக்தி திறன்களை போலிக்காரணமாக பயன்படுத்தியது. வட கொரியா அணுஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பின்னர், வட கொரியாவை அணுஆயுதமின்றி செய்வதற்கான கட்டமைப்பு உடன்பாட்டு ஒப்பந்தம் (Agreed Framework) என்றழைக்கப்பட்ட ஓர் உடன்படிக்கையில் அதை கையெழுத்திடவும் மற்றும் பின்னுக்கு இழுக்கவும் செய்வதற்கு முன்னால், கிளிண்டன் நிர்வாகம் 1994'இல் அந்த தீபகற்பத்தை யுத்தத்தின் விளிம்பிற்கு கொண்டு வந்திருந்தது.

சூரிய ஒளி கொள்கை" (Sunshine Policy) என்றழைக்கப்பட்டதன் கீழ் வட கொரியா மற்றும் தென் கொரியாவிற்கு இடையே ஒரு நல்லிணக்கத்தை நோக்கிய முரண்பாடுகளைக் குறைத்தல் மற்றும் வெள்ளோட்ட நகர்வுகள், புஷ் நிர்வாகம் நிறுவப்பட்டதோடு விரைவாக முடிவுக்கு வந்தன. 2002'இல், ஈராக் மற்றும் ஈரானுடன் சேர்த்து "கொடூரமானவைகளின் அச்சு" (axis of evil) என்ற தரப்பில் வட கொரியாவையும் முத்திரை குத்தியதன் மூலமாக, அதனுடனான மோதலைத் தீவிரப்படுத்துவதற்கான தமது உறுதியான நிலைப்பாட்டை புஷ் குறிப்பிட்டுக் காட்டினார். பியான்ங்யாங்கில் ஓர் அரசியல் உள்வெடிப்பை உருவாக்குவதற்காக பொருளாதாரரீதியில் அந்நாட்டை முடமாக்கஅனைத்தோடும் சேர்ந்து அத்தியாவசிய அமெரிக்க மூலோபாயம் என்னவென்பதை புஷ் வெளிப்படையாக வெளிப்படுத்தினார்.

ஈராக்கில் அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு ஓர் இராணுவ புதைகுழியாக மாறிய நிலையில், கொரிய தீபகற்பத்தின் மீதான பதட்டங்களைச் சுருட்டி வைத்துவிட்டு புஷ் சீனாவின் பக்கம் திரும்ப நிர்பந்திக்கப்பட்டார். பெய்ஜிங்கால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆறு-கட்சி பேச்சுவார்த்தைகளில் (six-party talks) புஷ் நிர்வாகம் பங்கெடுத்தது, ஆனால் கட்டமைப்பு உடன்பாட்டு ஒப்பந்தத்திற்குள் (Agreed Framework) பியான்ங்யாங்கிற்கு ஒரு சிறிய விட்டுகொடுப்பும் கூட வழங்க அங்கே விருப்பம் இருக்கவில்லை.

1991க்குப் பின்னர் சோவியத் உதவி நிறுத்தப்பட்டதும் வட கொரியா சீனாவைச் சார்ந்திருக்க தள்ளப்பட்டதோடு, அது ஓர் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியில் இருந்தது. உலகெங்கிலும் இருந்த ஸ்ராலினிச ஆட்சிகளைப் போலவே, பியான்ங்யாங்கும் முதலாளித்துவ மீட்சிக்கு நகர்ந்ததன் மூலமாக விடையிறுப்பு காட்டியது. இருந்தபோதினும், உலகளாவிய பொருளாதாரம் மற்றும் அன்னிய முதலீடு ஆகியவற்றை அணுகுவதற்கான அதன் திட்டங்கள் அமெரிக்காவின் நிராகரிப்பால் குழிபறிக்கப்பட்டன. 2006இல் இருந்து பேரங்களில் அணுசக்தி பரிசோதனைகளுக்கான சலுகைகளைப் பெற பியான்ங்யாங் பெரும்பிரயத்தன முயற்சியைச் செய்து வந்துள்ளது.

ஒபாமா நிர்வாகம் அதன் வெளியுறவு கொள்கையை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிய யுத்தங்களில் இருந்து ஆசியாவிற்கு திருப்பியதன் பாகமாக வட கொரியா மீது அழுத்தத்தைத் தீவிரப்படுத்தி உள்ளது. சீனாவை இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்தும் மற்றும் இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் நோக்கம் கொண்ட "முன்னெடுப்பு" என்று அழைக்கப்படுவதானது, ஒரு பரந்த மற்றும் முற்றிலும் இரக்கமற்ற மூலோபாயமாகும். ஒபாமா பதவிக்கு வந்தவுடன், அவர் ஆறு-கட்சி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க எந்த முயற்சியும் செய்யவில்லை, ஆனால் அதற்கு மாறாக அவர்புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு வட கொரியாவின் அணுசக்தி மற்றும் ராக்கெட் சோதனைகளைப் பயன்படுத்தியதோடு, சீனாவையும் அவ்வாறு செய்ய அழுத்தம் அளித்துபடிப்படியாக கொரிய தீபகற்பத்தின் மீது பதட்டங்களை முறுக்கினார். மார்ச்சில் திணிக்கப்பட்ட சமீபத்திய ஐநா கட்டுப்பாடுகளுக்கு பியான்ங்யாங் முரட்டுத்தனமாக ஆனால் வெற்று அச்சுறுத்தல்களோடு எதிர்வினையாற்றிய போது, அமெரிக்கா ஆத்திரமூட்டும் விதத்தில் அணுஆயுதம் ஏந்தக்கூடிய B-52 மற்றும் B-2 குண்டுவீச்சு விமானங்களை தென் கொரியாவிற்குள் பறக்க விட்டதோடு, ஆசியாவில் அதன் ஏவுகணை தடுப்பு உபகரண அமைப்புமுறையை விஸ்தரிக்கவும் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியது.

ஒபாமாவின் "முன்னெடுப்பு" தெற்கு சீனா மற்றும் கிழக்கு சீன கடல்களில் பிராந்திய சச்சரவுகளைத் தூண்டி உள்ளதைப் போலவே, கொரிய தீபகற்பத்திலும் பெரும் கொந்தளிப்பான சூழலை உருவாக்கி உள்ளது. பெய்ஜிங் அப்பிராந்தியத்தில் அமெரிக்க படைகளுக்கு எதிரான ஒரு முக்கிய மூலோபாய இடைத்தடையாக பியான்ங்யாங்ஙை அரவணைத்துள்ளது, ஆனால் அதன் வடக்கு எல்லைப் பகுதியின் மீது கொடுமையான ஓர் அரசியல் மேலெழுச்சியை அதனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏப்ரலில் இருந்து, சீனா அமெரிக்காவிற்கு விட்டுகொடுப்புகளை வழங்க வட கொரியாவிற்கு அழுத்தம் அளித்து வந்துள்ளது. பெய்ஜிங்கிற்கு மிக நெருக்கமானவராக பரவலாக கருதப்படும் ஜங் தூக்கிலிடப்பட்டதும் அதற்கான விடையிறுப்பாக இருக்குமென்று தோன்றுகிறது.

ஒற்றுமை என்ற வேஷத்திற்குப் பின்னால், வட கொரிய ஆட்சி தெளிவாக அழுத்தத்தின் கீழ் மற்றும் சுலபமாய் நொறுங்கக் கூடிய விதத்தில் உள்ளது. அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் வாஷிங்டனுடன் சேர்ந்து நிற்கும் ஓர் ஆட்சியை உருவாக்க அந்த நெருக்கடியை பயன்படுத்த முனைந்திருக்கின்ற நிலையில்இந்த நகர்வுகளை நிச்சயமாக சீனா எதிர்க்க முயலும்பியான்ங்யாங்கில் ஏற்படக்கூடிய ஓர் அரசியல் நிலைகுலைவானது உடனடியாக மோதல்களுக்கான ஒரு ஆபத்தை உயர்த்தக்கூடும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதன் மேலாதிக்கத்தைத் தொடர்வதை உறுதி செய்ய அதன் இராணுவ பலத்தை உபயோகிக்க முனைந்திருக்கின்ற நிலையில், அப்பிராந்தியத்தில் உள்ள அபாயகரமான வெடிப்பு புள்ளிகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் எரியூட்டப்பட்டுள்ள கொரிய தீபகற்பமும் ஒன்றாக உள்ளது. முதலாளித்துவத்தை அகற்றி மற்றும் ஒரு திட்டமிட்ட உலக சோசலிச பொருளாதாரத்தின் அடித்தளத்தில் சமூகத்தை மறுகட்டமைப்பு செய்வதன் மூலமாக, அதிகரித்துவரும் ஒரு பேரழிவுகரமான யுத்த ஆபத்தை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஒரே சமூக சக்தியாக இருப்பது சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும்.