World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Latest Snowden revelations expose Obama’s lies on NSA spy programs

சமீபத்திய ஸ்னோவ்டென் வெளியீடுகள் NSA உளவு திட்டங்கள் மீதான ஒபாமாவின் பொய்களை அம்பலப்படுத்துகின்றன

Bill Van Auken
21 December 2013

Back to screen version

தேசிய பாதுகாப்பு முகமையின் உளவுவேலை நடவடிக்கைகள் மீது, ஒபாமாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்ட ஓர் ஆலோசனை குழுவால் வழங்கப்பட்ட ஓர் அறிக்கையைப் பெற்ற சில மணிநேரங்களுக்குப் பின்னர், ஜனாதிபதி பராக் ஒபாமா உள்நாட்டிலும் மற்றும் வெளிநாடுகளிலும் நடத்தப்பட்ட கட்டுப்பாடில்லா அமெரிக்க உளவுவேலைகளுக்கு ஓர்வெல்லியன் பாணியிலான பாதுகாப்பை வழங்க, வெள்ளியன்று அவரது இந்த ஆண்டின் இறுதி பத்திரிகையாளர் கூட்டத்தைப் பயன்படுத்தினார்.

உள்நாட்டில் உளவுபார்த்தல் மற்றும் தகவல் திரட்டும் வேலைகளில் NSA ஈடுபடவில்லை என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்,” என்று ஒபாமா கூறினார். ஆனால் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் அதற்கு நேரெதிராக நிரூபணம் செய்கின்றன. முன்னாள் NSA ஒப்பந்ததாரர் எட்வார்ட் ஸ்னோவ்டெனிடம் இருந்து வெளியான சமீபத்திய தகவல்கள் உட்பட இத்தகைய வெளியீடுகள், தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள், இணைய தேடல்கள் மற்றும் தோற்றப்பாட்டளவில் ஒவ்வொரு அமெரிக்க மக்களின், நூறு மில்லியன் கணக்கான வெளிநாட்டு மக்களைக் குறித்து கூற வேண்டியதே இல்லை, தினசரி இயக்கத்தையும் கூட அந்த முகமை பதிவு செய்து பில்லியன் கணக்கான கோப்புகளாக திரட்டி சேமித்து வருவதாக நிறுவி உள்ளன.

அவர் தொடர்ந்து கூறினார், “அமெரிக்கா சட்டத்தின் ஆட்சிக்கு கீழ்படிந்திருக்கும் ஒரு நாடாகும், அது அந்தரங்க விவகாரங்கள் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது, அது தனிமனித சுதந்திரங்கள் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது.” இந்த இறுதி தறுவாயில், அமெரிக்க ஜனாதிபதி யாரை முட்டாளாக்க பார்க்கிறார்? ஒருவர்—"தேசிய பாதுகாப்பு" நலன்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டவாஷிங்டன் DC'இன் பெடரல் மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பைப் படித்தாலே போதுமானது, அது NSAஇன் உளவுவேலை முறைகளை "ஏறத்தாழ ஓர்வெல்லியன்" பாணியிலானது என்றும் அதன் நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு புறம்பானது என்றும், அதாவது குற்றவியல் தன்மை கொண்டதென்றும் காண்கிறது.

ஸ்னோவ்டெனைப் பொறுத்த வரையில், அவருடைய தைரியமான நடவடிக்கைகள் இல்லையென்றால் NSA'இன் சட்டவிரோத நடவடிக்கைகள் பொதுமக்களிடமிருந்து இன்னமும் மூடி மறைக்கப்பட்டே இருந்திருக்கும். அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமென்ற முறையீடுகளை ஒபாமா நிராகரித்தார், அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றும் அவரது தலைவிதி அமெரிக்க அட்டார்னி ஜெனரல் மற்றும் நீதிமன்றங்களின் கைகளில் இருப்பதாகவும், பொய்யாக, அவர் வலியுறுத்தினார்.

இதுமட்டுமின்றி, ஸ்னோவ்டெனின் வெளியீடுகள் "அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அது குறித்த முற்றிலும் தவறான பார்வையை" வழங்கி இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். அதன் மூலம் அவர் அர்த்தப்படுத்துவது என்னவென்றால், அரசின் இதயதானத்தில் ஒரு பொலிஸ் அரசின் உள்கட்டமைப்பை அம்பலப்படுத்தியதன் மூலமாக, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் ஒரு கலங்கரை விளக்கமாக அமெரிக்கா விளங்குகிறது என்ற வாஷிங்டனின் பிரச்சாரத்தை அவை மழுங்கடிக்கின்றன என்பதையே ஆகும்.

ஸ்னோவ்டெனின் வெளியீடுகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பரபரப்புகள், "நமக்கு அவசியமான முக்கிய ஆதாரத்தை" பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று அறிவித்ததோடு, ஒபாமா தொடர்ந்து கூறினார், “இந்த வெளியீடுகள் எந்த விதத்தில் நடந்துள்ளனவோ அது அமெரிக்காவிற்கு இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன, அது நம்முடைய உளவுத்துறை செயல்திறனுக்கு இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த இழப்புகள் இல்லாமல் இந்த உரையாடலை நாம் செய்வதற்கு அங்கே வழி இருக்கிறதென்று நான் கருதுகிறேன்.”

அது என்ன வழியென்று அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிடவில்லை. அடுத்து ஒரேயொரு ஆவணத்தை கூட அவர் கசிய விடுவதற்கு முன்னால் ஸ்னோவ்டெனை கொல்ல வேண்டும் என்பதே, சந்தேகத்திற்கு இடமின்றி உளவுத்துறை கருவிகளுக்குள், விருப்பமான அணுகுமுறையாக இருக்கலாம். ஸ்னோவ்டெனின் அந்த நடவடிக்கைகள் இல்லையென்றால் அங்கே "உரையாடலே" இருந்திருக்காது என்பது தான் உண்மை, ஏனென்றால் தேசிய பாதுகாப்பு முகமையோ, அல்லது ஜனாதிபதியோ, அல்லது காங்கிரஸோ அமெரிக்க மக்களின் மற்றும் உலக மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக பாரிய சதி நடத்தப்பட்டு வருவதை அம்பலப்படுத்தி இருக்க போவதில்லை.

ஒரு பிரச்சினையின் மீது, ஒபாமா மௌனமாக இருந்துவிட்டார். திங்களன்று வாஷிங்டனில் நீதிபதி ரிச்சார்ட் லியோனால் வழங்கப்பட்ட தீர்ப்பு, “NSA'ஆல் நடத்தப்பட்ட பிரமாண்ட உளவுவேலைகள் மூலமாக "ஏதேனும் பயங்கரவாத தாக்குதல் தடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு முற்றிலும் ஆதாரம் இல்லை" என்பதை குறிப்பிட்டு காட்டியது. இதேபோல, மூன்று நாட்களுக்குப் பின்னர் ஒபாமாவின் சொந்த ஆலோசனை குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை இறுதியாக கூறியது, “பயங்கரவாத புலனாய்வுகளுக்கு தொலைபேசி மெட்டாடேட்டா மூலமாக கிடைத்த தகவல்கள்... தாக்குதல்களைத் தடுக்க அத்தியாவசியமானவையாக இருக்கவில்லை.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால்அமெரிக்க மக்களை "பாதுகாப்பதற்கு" பாரிய உளவுவேலைகள் அவசியப்பட்டது என்றஒபாமா மற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளால் திரும்ப திரும்ப கூறப்பட்ட போலிக்காரணம் ஒரு பொய் ஆகும்.

ஒரு பயங்கரவாத நடவடிக்கையைத் தோல்வியுற செய்வதில் NSA உளவுவேலை திட்டம் பங்களிப்பு செய்திருந்தது என்பதற்கு அவரால் "ஏதேனும் குறிப்பிட்ட சான்றுகளை" வழங்க முடியுமா என்பதை வெளிப்படையாக கூறும்படி கேட்கப்பட்ட போது, ஒபாமா எதையும் வழங்க தவறினார்.

இவ்விதத்தில் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் முழுவீச்சில் நடத்தப்பட்ட அந்த உளவுவேலை நடவடிக்கையின் உபயோகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை என்ற நிலையில், அது யாருடைய நலன்களுக்கு சேவை செய்வதற்காக? என்பதே வெளிப்படையான கேள்வியாக உள்ளது.

இந்த கேள்விக்கான ஒரு பதில் ஸ்னோவ்டெனால் கசியவிடப்பட்ட இரகசிய ஆவணங்களில் குறிக்கப்பட்டு இருந்தது. NSA'இன் மற்றும் அதன் பிரிட்டிஷ் பங்குதாரரான மைய செய்திதொடர்பு தலைமையகத்தின் (General Communications Headquarters) 1,000 இலக்குகளில், ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டித்திறன் கமிஷனரும் (competition commissioner) மற்றும் தற்போதைய ஐரோப்பிய கமிஷனின் துணை தலைவருமான ஜோகுவின் அல்முனியாவும் இருந்தார் என்பதை எடுத்துக்காட்டி, வெள்ளியன்று நியூ யோர்க் டைம்ஸ், கார்டியன் மற்றும் டெர் ஸ்பெய்கெலில் செய்திகள் வெளியாயின. கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் மருந்துதுறை பெரிய நிறுவனங்களான ஜோன்சன் & ஜோன்சன் மற்றும் சிட்டி குழுமம் மற்றும் பிரமாண்ட நிதியியல்துறை நிறுவனங்களான ஜே.பி. மோர்கன் சேஸ் போன்ற அமெரிக்க பெருநிறுவனங்களுக்கு எதிராக வர்த்தக மற்றும் நிதியியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களை தொடுத்ததில் அல்முனியா சம்பந்தப்பட்டிருந்தார்.

பிரெஞ்சு இராணுவத்துறை ஒப்பந்ததாரர் தலேஸ், பாரீஸை மையமாக கொண்ட பிரமாண்ட எரிசக்தித்துறை நிறுவனம் டோட்டல், ஐரோப்பிய தொலைதொடர்புதுறை நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் மற்றும் நிதியியல் அமைச்சகங்களின் தலைவர்கள் ஆகியோர் இலக்கில் வைக்கப்பட்டிருந்த ஏனையவர்களாக இருந்தனர். இது பிரேசிலின் அரசுத்துறை எண்ணெய் நிறுவனமான பெட்ரோபாஸ் மீதான NSA உளவுவேலைகளின் முந்தைய வெளியீடுகளின் வரிசையில் வந்து நிற்கிறது.

தொழில்துறையின் மீது உளவுவேலைகளில் ஈடுபட்டமைக்காக ஐரோப்பிய ஒன்றியத்தால் மற்றும் ஏனையவற்றால் சீற்றத்தோடு கண்டனங்களை முகங்கொடுத்திருந்த நிலையில், NSA வெளிப்படையாக இவற்றை மறுத்துரைக்க முயன்றது. “வெளிநாடுகளை உளவுபார்க்கும் எங்களுக்கு இருந்த திறனை, அமெரிக்க நிறுவனங்கள் அவற்றின் போட்டித்தன்மையை வளர்த்துக் கொள்ளவோ அல்லது அவற்றின் அஸ்திவாரத்தை பலப்படுத்தவோ வெளிநாட்டு நிறுவனங்களின் வர்த்தக இரகசியங்களை நாங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்காக திருட பயன்படுத்தவில்லை அல்லது நாங்கள் சேகரித்ததை அமெரிக்க நிறுவனங்களுக்கு அளிக்கவில்லை,” என்று வெள்ளியன்று அந்த முகமையின் செய்திதொடர்பாளரான ஒரு பெண்மணி தெரிவித்தார்.

இருந்தபோதினும் அவர் உடனடியாக, “கொள்கை வகுப்பாளர்கள் எங்களின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு உகந்த தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு, அவர்களுக்கு அவசியமாகும் தகவல்களை வழங்க" பொருளாதார உளவுபார்ப்பும் அத்தியாவசியமாகும் என்பதையும் சேர்த்து கொண்டார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சிட்டி குழுமம், கூகுள், எக்ஸான் மொபெல் மற்றும் ஏனையவர்களுக்கு NSA நேரடியாக உளவுத்தகவல்களை வழங்கவில்லை என்றால், அந்த வேலை அதை செய்யக்கூடிய வேறு அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்பதாகும்.

உளவுவேலைகள் தயவுதாட்சண்யமின்றி பரந்த மக்களைக் கண்காணிக்கின்ற அதேவேளையில், பிரமாண்ட பெருநிறுவனங்களின் ஒரு நேரடி பங்குதாரராக செயல்படும் அரசு உளவுத்துறை கருவியின் நிஜமான சர்வாதிபத்திய பரிணாமங்களே மேலெழுகின்றனஅதற்கு பதிலுதவியாக அந்த பெருநிறுவனங்கள் NSA'இன் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு விருப்பத்தோடு ஒத்துழைக்கின்றன.

ஒரு சிறிய நிதியியல் மற்றும் பெருநிறுவன செல்வந்த தட்டு முன்பில்லாத அளவிற்கு நாட்டின் செல்வ வளத்தில் பங்குகளைக் குவித்துக் கொண்டுள்ள அதேவேளையில் சமூக சமத்துவமின்மையின் வெளிப்படையான மட்டங்கள் கீழே இருந்து ஒரு கிளர்ச்சியை தூண்டும் என்ற அச்சங்கள் நிலவுகிறது, இந்த அபிவிருத்தியின் அடித்தளத்தில் இருப்பதென்னவென்றால் சமூக கட்டமைப்பு சுபாவத்தில் அதிகளவில் பிரபுத்துவ தன்மைக்குத் திரும்புகிறது என்பதே ஆகும். ஆளும் அடுக்கிற்குள், மற்றும் அதன் நலன்களைப் பாதுகாக்கும் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளுக்குள் ஜனநாயக உரிமைகளுக்கு ஒரு இடமும் இல்லை. மாறாக அது உழைக்கும் மக்களிடையே அதிகரித்துவரும் எதிர்ப்பை ஒடுக்க சர்வாதிகார முறைகளை பலமாக ஆதரிக்கிறது.

பயங்கரவாத த்திற்கு எதிரான யுத்தம்" என்ற போலிக்காரணத்தின் கீழ்வெளிநாடுகளில் முடிவில்லா யுத்தம் என்ற உண்மையான பின்னணியில்ஒபாமாவின் கீழ் அமெரிக்க அரசு ஒட்டுமொத்த மக்களையும் உளவுபார்க்க, அதன் எதிரிகளாக யாரை உணர்கிறதோ அவர்களை காலவரையின்றி இராணுவ காவலுக்கு உட்படுத்த மற்றும் கூடுதல் அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்தவித விசாரணையும் இன்றி அமெரிக்க குடிமக்கள் உட்பட யாரையும் படுகொலை செய்ய அதன் பரந்த அதிகாரங்களைத் தனக்குத்தானே உரிமையாக்கிக் கொண்டுள்ளது.

பொலிஸ் அரசு சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தலானது, கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் மிக தெளிவாக வெளிப்படுகின்றது. இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டம் அடிப்படையில் ஒரு வர்க்க பிரச்சினையாகும். ஜனநாயக உரிமைகளின் மீது வாழ்வா சாவா என்ற நலன்களைக் கொண்டிருக்கும் ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே ஆகும், அது வரலாற்றுரீதியில் பாரிய போராட்டங்கள் மூலமாக இத்தகைய உரிமைகளைப் பாதுகாத்துள்ளது.

இன்று இத்தகைய உரிமைகளை நீதிமன்றங்கள், ஜனநாயக கட்சி அல்லது அரசின் வேறெந்த பிரிவுகள் மூலமாகவோ மற்றும் அதன் துணை அமைப்புகள் மூலமாகவோ பாதுகாக்க முடியாது. அதற்கு மாறாக, ஒரு பொலிஸ் அரசிற்கு உந்துசக்தி ஆதாரமாக விளங்கும் முதலாளித்துவ இலாப அமைப்புமுறைக்கு முடிவு கட்ட, தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச வேலைதிட்டத்தின் அடிப்படையில் அதன் சொந்த அரசியல் பலத்தை ஒன்றுதிரட்ட வேண்டும். அனைத்திற்கும் மேலாக, இது சோசலிச சமத்துவ கட்சியைக் கட்டி எழுப்புவதைக் குறிக்கிறது.