தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா US arrest and strip-search of diplomat provokes India’s retaliation தூதர் மீதான அமெரிக்க கைது நடவடிக்கை மற்றும் உடை-கலைத்து சோதனை நடத்தியமை இந்தியாவின் எதிர்நடவடிக்கையை தூண்டுகிறது
By Keith Jones Use this version to print| Send feedback ஒரு இந்திய பெண் தூதரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தமையும் மற்றும் எல்லைமீறி அவரது உடை-கலைத்து சோதனை செய்தமையாலும் வாஷிங்டனுக்கும் புது டெல்லிக்கும் இடையே பெரும் பூசல் எழுந்துள்ளது. மன்னிப்பு கோர வேண்டுமென இந்தியா கோரிக்கை விடுத்து, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர்களுக்கு வழங்கி வந்த சில சலுகைகளையும் அது திரும்ப பெற்றது, இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு செல்லும் வாகன சாலைகளில் இருந்த பாதுகாப்பு தடுப்புகளையும் அது நீக்கியது. இதற்கு பதிலாக வாஷிங்டன், அதன் தூதரக அலுவலகங்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் கடமையை அது உறுதிப்படுத்த வேண்டுமென கோரியுள்ளது. சீனாவை இராணுவரீதியில் முகங்கொடுக்க வேண்டி இருந்தால் அதை சுற்றி வளைக்கவும், மூலோபாயரீதியில் தனிமைப்படுத்தவும் உதவியாக அதன் உந்துதலுக்குப் பிரதானமாக பார்க்கப்படும் ஒரு நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே, இந்த கைது நடவடிக்கையும், புது டெல்லியின் ஆக்ரோஷமான தூதரக சலுகைகள் பறிப்பு நடவடிக்கையும் கணிசமான பதட்டங்களை தூண்டிவிட்டுள்ளன. நியூயோர்க் தூதரகத்திற்கான இந்திய துணை தூதரான தேவயானி கோப்ரகடே, கடந்த வியாழனன்று அவரது மகளின் பள்ளிக்கு வெளியே கைது செய்யப்பட்டு விலங்கிடப்பட்டார். தமக்கு தூதரக பாதுகாப்புச்சலுகைகள் உண்டு என்ற கோப்ரகடேயின் எதிர்ப்புகளைப் புறக்கணித்து, அமெரிக்க காவல் அதிகாரிகள் அவரை ஜெயிலுக்குக் கொண்டு சென்று பலமுறையும் உடலுக்குள் உள்ளார்ந்த சோதனைக்கு உட்படுத்தியது உட்பட, அவரை உடை-கலைந்த சோதனையும் செய்தனர். சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்திய அரசு 250,000 டாலர் பிணை பத்திரம் வழங்கிய பின்னரே அவர் விடுவிக்கப்பட்டார். அவர் மீது விசா மோசடி மற்றும் தவறான தகவல் வழங்கினார் என்பதற்கான குற்றச்சாட்டும் -இந்த குற்றச்சாட்டுக்களுக்கு அதிகபட்சமாக முறையே 10 ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கமுடியும்-, மேலும் அவரால் அமெரிக்காவிற்குள் அழைத்து வரப்பட்ட இந்திய வீட்டுப்பணி பெண்ணுக்கு அவர் சட்டப்பூர்வ குறைந்தபட்ச கூலி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோப்ரகடே மீதான கைது நடவடிக்கையை ஓர் அப்பட்டமான சர்வதேச விதிமீறலாக கூறி இந்திய அரசு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கான அமெரிக்க தூதரை ஆஜராகுமாறு அழைப்பு அனுப்பியது. ஆனால் அமெரிக்க அதிகாரிகளால் கோப்ரகடே அவமானப்படுத்தப்பட்டமை மற்றும் கடுமையாக நடத்தப்பட்டமை குறித்த கூடுதல் விபரங்கள் வெளியான போது, இந்த வாரம் இந்திய ஆளும்தட்டினரிடமிருந்து ஒரு பலமான பிரதிபலிப்போடு அமளிகள் எழத் தொடங்கின. இந்தியன் எக்ஸ்பிரஸின் வார்த்தைகளைப் பயன்படுத்துவதானால்—அரசு உடனடியாக "அதன் வழமைக்குமாறான இறுக்கமான பதிலடியை" வெளிப்படுத்தியது...அது "புது டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான நட்புறவில் திடீர் அதிர்ச்சியாக இருந்தது." கோப்ரகடே அவரது நண்பர்களுக்கும், சக இராஜாங்க அதிகாரிகளுக்கும் எழுதி இருந்த ஒரு மின்னஞ்சலை பல இந்திய செய்தியிதழ்களும் வலைத் தளங்களும் சுட்டிக் காட்டின, அதில் அவர், “எனக்கு சட்ட சலுகை இருப்பதை வலியுறுத்திய போதினும், பலமுறை கைவிலங்கிட்டும், உடை-கலைந்த சோதனை மற்றும் உடலுக்குள் உள்ளார்ந்து சோதனை செய்தும், ஒற்றை ஆடையுடன் இருக்கவைத்தும், பொது கைதிகளோடும், போதைப் பழக்கம் உடையவர்களோடும் என்னை சேர்த்து நிறுத்தி வைத்திருந்த போதும், இவை எல்லாம் என் மீது திணிக்கப்பட்ட போது நான் பலமுறை உடைந்து போனேன் என்பதை நான் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.” அமெரிக்காவின் குற்றவியல் நீதித்துறையின் அன்றாட விஷயங்களாக உள்ள இந்த காட்டுமிராண்டித்தனமான நடைமுறைகளை, தங்களில் ஒருவர் எதிர்கொண்டதால் இந்திய அரசியல் மேற்தட்டும், இராஜாங்க பிரிவுகளும் உண்மையிலேயே அதிர்ந்தும், ஆத்திரமடைந்தும் போனதாக தெரிகிறது. ஆனால் விருப்பத்திற்கேற்ப சர்வதேச விதிமுறைகளை மீறும் வாஷிங்டனின் வழக்கமான நடவடிக்கையோடு இந்த கோப்ரகடே விவகாரமும் பொருந்தி நிற்கிறதென்பதை அவர்கள் துல்லியமாக அறிவார்கள். டிரோன் தாக்குதல்கள் மூலமாக மரணதண்டனை நிகழ்த்துவது; வெளிவேடத்திற்கு நட்புறவைக் காட்டிக் கொண்டு வெளிநாட்டு அரசுகள் மீது உளவுபார்ப்பது உட்பட, உலகின் மின்னணு தொடர்பு சேவைகளின் மீது வேவு பார்ப்பதாகட்டும், அல்லது நாடுகளை ஆக்கிரமிப்பது மற்றும் அவற்றின் மீது தாக்குதல் நடத்துவதாகட்டும் இவை அனைத்தும் அவர்களின் வழமையான நடடிக்கைகளில் உள்ளடங்கும். இந்திய மேற்தட்டு இந்தியாவை ஒரு வல்லரசாக மாற்றும் அதன் அபிலாஷைகளுக்கு, அமெரிக்கா உடனான ஒரு மூலோபாய கூட்டுறவைத் தொடர்வதை ஒரு முன்னெடுப்பாக காண்கிறது, இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் வாஷிங்டனின் கட்டுங்கடங்கா குற்றவியல்தனம் குறித்து ஆழ்ந்த மௌனமாக இருந்து வந்துள்ளது. எவ்வாறிருந்த போதினும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பின்(NSA) சட்டவிரோத நடவடிக்கைகளின் மீது இந்தியா மௌனமாக இருப்பதானது இந்தியாவை பலவீனமாக காட்டுகிறது என்ற வாதங்களோடு, அந்த சம்பவத்தின் மீது இந்திய அரசாங்கம் எவ்வித எதிர்ப்பு குரலும் அளிக்க தவறியதன் மீது இந்திய அரசியல் ஆளும்தட்டிற்குள்ளும் பெருநிறுவன ஊடகங்களுக்குள்ளும் கண்டனங்கள் அதிகரித்து வந்த பின்னர், கோப்ரகடே கையாளப்பட்டதன் மீதான இந்த தற்போதைய எதிர்ப்புகள் வருகின்றன. NSA இன் தகவல்களை அம்பலப்படுத்திய எட்வார்ட் ஸ்னோவ்டெனால் கசிய விடப்பட்ட ஆவணங்கள் NSA உளவுவேலைகளின் இலக்கில் இருந்த மிக முக்கிய இலக்குகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது என்பதை மட்டும் அம்பலப்படுத்தவில்லை, மாறாக அந்த அமெரிக்க உளவு அமைப்பு நியூ யோர்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தின் இந்திய அலுவலகம் மற்றும் அதன் வாஷிங்டன் தூதரகம் உட்பட அமெரிக்காவில் உள்ள அதன் இராஜாங்க நடவடிக்கை அலுவலகங்களின் மீதும் மற்றும் இந்திய அரசின் மீதும் திட்டமிட்டு உளவு பார்த்துள்ளது. இதுவரையில் அமெரிக்க ஜனாதிபதிகள் ஜோர்ஜ் டபிள்யு. புஷ் மற்றும் பராக் ஒபாமாவிற்கு அனுசரணையாக துதிபாடி வருபவராக பார்க்கப்படும் இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் கூட, கோப்ரகடே கையாளப்பட்ட விதத்தை "வருந்தத்தக்கதாக" குறிப்பிட்டதோடு, பதிலடி நடவடிக்கைகளுக்கு அவரது ஒப்புதலையும் வழங்கி உள்ளார். அந்த அரசு எந்தளவிற்கு அந்த பிரச்சினையை ஆழமாக கருதுகிறது என்பதை அடிக்கோடிடும் ஒரு நடவடிக்கையாக, வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் செவ்வாயன்று இந்திய பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளின் முன்னால் தோன்றி, கோப்ரகடே மீதான சட்டமீறுகையிலும் மற்றும் இந்திய உரிமைகள் தொடர்பாகவும் "நாடு ஒரே குரலில் ஒலிப்பதாக" வலியுறுத்தினார். அந்த தூதரின் "கண்ணியம்" மீண்டும் நிலைநிறுத்தப்படும் வரையில் அவர் பாராளுமன்றத்திற்கு வரப் போவதில்லை என்றும் சூளுரைத்தார். இந்தியாவின் எதிர்கட்சிகள், ஸ்ராலினிச தலைமையிலான இடது முன்னனியில் இருந்து இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) வரையில், அமெரிக்காவிற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன, இந்தியா அடிக்கடி வாஷிங்டனால் அச்சுறுத்தப்பட்டிருப்பதாக பலர் குறிப்பிட்டனர். பாராளுமன்றத்தின் உத்தியோகப்பூர்வ எதிர்கட்சி தலைவர் அருண் ஜெட்லி (பிஜேபி) கூறுகையில், “நடந்தது நடந்துவிட்டதென்ற விதத்தில் நாம் வெளியுறவு கொள்கையை நடத்தி சென்றால், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறும்,” என்றார். திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தெரெக் ஓ'பிரெய்ன் கூறுகையில், “நாம் ஒரு உலகளாவிய கிராமத்தில் வசிக்கிறோம் தான், ஆனால் தன்னைத்தானே உலக கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக நியமித்த கொண்ட யாரும் நமக்கு தேவையில்லை,” என்றார். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிஜேபி பிரதம மந்திரி வேட்பாளர் நரேந்திர மோடி, மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் உட்பட பல அரசியல் தலைவர்களும் அரசு அதிகாரிகளும் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் இந்த வாரம் நடக்கவிருந்த கூட்டங்களை இரத்து செய்துள்ளனர். கோப்ரகடேயின் கைது நடவடிக்கையை மற்றும் உடை-கலைந்த சோதனையை அமெரிக்கா நியாயப்படுத்தி உள்ளது. வியன்னா உடன்படிக்கையின் கீழ் ஒரு நாட்டின் தூதரகத்தை சேர்ந்தவர்களைப் போலில்லாமல், துணைத்தூதரக அதிகாரிகள் முக்கிய குற்றங்களில் (serious crimes) இராஜாங்க பாதுகாப்புசலுகையை அனுபவிக்க முடியாது என்று அது வாதிட்டது. எவ்வாறிருந்த போதினும், இதேபோன்ற விஷயம் மறுபக்கத்தில் நடந்த போது, ஒபாமா நிர்வாகம் இதையே தலைகீழாக வாதிட்டது. ஒரு போலி காரணத்தின் கீழ் அமெரிக்காவின் லாகூர் துணைத்தூதரகத்தை சேர்ந்திருந்த ஒரு CIA ஒப்பந்ததாரர் ரேமாண்ட் டேவிட் இராஜாங்க பாதுகாப்புசலுகைகளைப் பெற வேண்டுமென அது வலியுறுத்தியது, அவர் இரண்டு பாகிஸ்தானியர்களை கொடூரமாக படுகொலை செய்ததில் இருந்து அவர் சுதந்திரமாக விடுவிக்கப்பட வேண்டுமென பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு அது பெரும் அழுத்தம் கொடுத்தது. அனைத்திற்கும் மேலாக, இராஜதந்திரிகள் குறைந்தபட்ச கூலி சட்டங்களை மீறுவது ஒரு பெரிய குற்றமென்று (serious crime) துல்லியமாக அமெரிக்க அரசு எப்போது முடிவு செய்து இருந்தது? அமெரிக்க அதிகாரிகள் இந்தளவிற்கு முனைப்போடு நடக்க ஏன் கோப்ரகடேயைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதோ, அல்லது அவர்கள் புது டெல்லிக்கு என்ன தகவலை தெரிவிக்க விரும்புகிறார்கள் என்பதையோ தற்போதைய நிலைமையில் துல்லியமாக கூற முடியாதபடி உள்ளது. ஆனால் கோப்ரகடே விவகார பூசல் "வானத்திலிருந்து திடீரென வந்து விழுந்து விடவில்லை," அதற்கு ஒரு "வரலாறு" இருக்கிறது என்று வெளியுறவு மந்திரி குர்ஷித் இந்திய பாராளுமன்றத்தில் கூறிய போது, அவர் ஏதோ விடயங்களை மறைத்து வைக்கிறார். அமெரிக்க அதிகாரிகள் ஒன்றரை வருடங்களாக அந்த இந்திய இராஜதந்திரிக்கு எதிராக அவர்களின் வழக்கை கட்டியெழுப்பி வந்திருந்தனர். மேலும் அந்த விவகாரத்தை தீர்ப்பதற்கான இந்திய முயற்சிகளை புறக்கணித்தனர் மற்றும் மறுத்தளித்தனர். கோப்ரகடே கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், அவர் யாருடைய உரிமையை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளாரோ அந்த வீட்டு பணிப்பெண்ணின் குடும்பம் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சென்றது, அங்கே அவர்களுக்கு குடிவரவு பத்திரங்கள் (immigration papers) வழங்கப்பட்டுள்ளன. இது தெளிவாக அவர்கள் இந்திய அரசின் அழுத்தத்திற்கும், பழிவாங்கலுக்கும் உள்ளாக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாக உள்ளது. கடந்த தசாப்தத்தில் அமெரிக்கா இந்தியாவை "உலகளாவிய மூலோபாய பங்காளி" என்று கூறி, ஆதரவுகாட்டி வந்துள்ளது. இந்தியா அதன் கடற்படையை அபிவிருத்தி செய்வதற்கும் இந்திய பெருங்கடலில் ஒரு சக்தியாக மாறுவதற்கும் அதன் ஆதரவை வாஷிங்டன் அறிவித்துள்ளது. அமெரிக்காவால் வடிவமைக்கப்பட்ட அணுஆயுத பரவல் உடன்படிக்கையை மீறி இந்தியா அணுஆயுதங்களை அபிவிருத்தி செய்திருந்த போதினும், உலக பொது அணுசக்தி நெறிப்படுத்தும் அமைப்பில் இந்தியாவிற்கு ஒரு சிறப்பு அந்தஸ்து வழங்கவும் அது பேரம் பேசியது. அந்த சிறப்பு அந்தஸ்து அணு ஆயுதங்கள் தயாரிப்பின் மீது அதன் சுதேச அணுதிட்டத்தைத் தொடர்ந்து நடத்த இந்தியாவிற்கு அனுமதி வழங்குகிறது. அமெரிக்கா அதன் நெருக்கமான கூட்டாளிகளுக்கு மட்டுமே விற்பனை செய்யும் அதிநவீன ஆயுத உபகரணங்களை இனிமுதல் இந்தியாவிற்கும் கிடைக்க செய்யும் என்று கடந்த செப்டம்பரில் ஒபாமா மன்மோகன் சிங்கை சந்தித்த போது அறிவித்தார். ஆனால் இவை அனைத்தும் வாஷிங்டனின் வேட்டையாடும் உலகளாவிய மூலோபாய நிகழ்ச்சிநிரலுக்கு இந்தியாவை அணிதிரட்டும் நோக்கில் செய்யப்பட்டவை ஆகும். ஈரானை கட்டுப்பாடுகள் மற்றும் யுத்த அச்சுறுத்தல்கள் மூலமாக அதன் காலடியில் விழ வைக்கும் அதன் முயற்சிகளோடு இணைந்து நிற்க, கடந்த எட்டு ஆண்டுகளில் திரும்ப திரும்ப, அமெரிக்கா இந்தியாவிற்கு அழுத்தம் அளித்துள்ளது, இந்தியாவும் கீழ்ப்படிந்துள்ளது. எவ்வாறிருந்த போதினும், இந்தியா போதியளவிற்கு கீழ்படியவில்லை என்பதாக அங்கே வாஷிங்டனில் அடித்தளத்தில் ஓர் கருத்தோட்டம் உள்ளது. புது டெல்லியின் புவிஅரசியல் சிந்தனையானது "அணிசேராமை" போன்ற காலாவதியாகிப்போன குளிர் யுத்தகால கருத்துருக்களில் பிணைந்துள்ளது மற்றும் அதன் தேசிய-பாதுகாப்பு ஸ்தாபகம் ஒரு "பரந்த கண்ணோட்டத்தை" கொண்டிருக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்களில் அந்த கருத்தோட்டம் அதன் வெளிப்பாட்டை காண்கிறது. இந்தியாவின் "தன்னிச்சையான மூலோபாய" கருத்துரு "புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது" மற்றும் "ஆதரவளிக்கப்படுகிறது" போன்றவற்றை வார்த்தைகளில் அமெரிக்கா உதிர்த்த போதினும், அமெரிக்கா தலைமையிலான ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் ஒரு இந்தோ-பசிபிக் முக்கூட்டில் அது தென்மேற்கு தூணாக ஒரு தளபதியின் இடத்தில் புது டெல்லியை நிறுத்த அதற்கு ஆசை காட்டுவதும், தொந்தரவு கொடுப்பதும் வாஷிங்டனின் நோக்கமாக உள்ளது. கோப்ரகடே விவகாரத்தின் விளைவு என்னவாக இருந்தாலும், வாஷிங்டனின் ஒப்பீட்டளவிலான பொருளாதார சக்தி பெருமளவிற்கு பலமிழந்துள்ள நிலைமைகளின் கீழ், யூரேஷியா மீதான அமெரிக்க மூலோபாய ஆதிக்கத்தை தக்கவைக்க வாஷிங்டனின் ஆக்ரோஷமான மற்றும் இரக்கமற்ற உந்துதலால், அதற்கும் புது டெல்லிக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள ஆழ்ந்த பதட்டங்களில் சிலவற்றை அந்த சம்பவம் மேற்புறத்திற்கு கொண்டு வந்துள்ளது. |
|
|