World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா Former Chinese security chief under house arrest முன்னாள் சீனப்பாதுகாப்பு தலைவர் வீட்டுக் காவலில்By John
Chan சீன ஆட்சியில் பிளவுகளின் கூடுதல் அடையாளமாக, ஜனாதிபதி ஜி ஜின்பிங் முன்னாள் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் ஜௌ யோங்காங்கிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க முறையான உட்கட்சி அமைப்பிற்கு உத்திரவிட்டுள்ளார். கட்சியின் மூத்த ஆதாரங்களை மேற்கோளிட்டு, நியூ யோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது: “திரு. ஜியும் மற்ற தலைவர்களும் டிசம்பர் மாதம் துவக்கத்தில் மூத்த ஜௌவை நேரடியாக கட்சியின் ஊழலை அகற்றுதல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் இவற்றை விசாரிக்கும் குழு மூலம் முறையான விசாரணைக்கு உட்படுத்துவது என்ற முடிவை எடுத்தனர்... ஒரு மூத்த அதிகாரி மத்திய பெய்ஜிங்கில் உள்ள திரு. ஜோவின் வீட்டிற்கு சென்று அவருக்கு விசாரணை பற்றி தெரிவித்தனர். திரு. ஜௌ மற்றும் அவருடைய மனைவி ஜியா ஜியாவொயீயும் அப்பொழுது முதல் நிரந்தரக் காவலில் உள்ளனர்.” குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால், 1949ல் மக்கள் குடியரசு நிறுவப்பட்டதில் இருந்து சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) இன் உயர்மட்ட தலைமை அமைப்பில் –பொலிட்பீரோ நிரந்தரக்குழு— பணிபுரியும் அல்லது ஓய்வு பெற்ற உறுப்பினர்களில் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் முதல் நபராக இருப்பார். ஜௌ அரசியல் அளவில் கைது செய்யப்பட்ட முன்னாள் சோங்கிங் கட்சித் தலைவர் போ ஜிலை உடன் தொடர்பு கொண்டவர்; பிந்தையவர் அக்டோபர் மாதம் ஆயுட்கால சிறைதண்டனையை ஊழல், அதிகார துஷ்பிரயோகத்திற்காக பெற்றார்—அதில் ஒரு பிரிட்டிஷ் வணிகர் தன் மனைவியை கொன்றதை மூடிமறைத்த குற்றமும் உண்டு. மற்ற உயர்மட்டத் தலைவர்களைப்போல் ஜௌவும் தன் அரசியல் செல்வாக்கைக் குடும்ப உறுப்பினர்கள் நலனுக்குப் பயன்படுத்தியுள்ளார். ஜௌவைப் பொறுத்தவரை, அவருடைய பெரிய அரசுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனங்களுடனான தொடர்பு மற்றும் பாதுகாப்புக் கருவியுடனான தொடர்பு, —பொலிஸ், வக்கீல்கள், நீதிமன்றங்களில் இருந்து உளவுத்துறை வரை—அவரை வணிகரான அவருடைய மகன் ஜௌ பின் மகத்தான சொந்த சொத்துக்களை சேர்க்க உதவியது. செப்டம்பர் மாதத்தில் இருந்து ஜௌ விசாரணையின்கீழ் உள்ளார் என்னும் அறிகுறிகள் இருந்தன. ஜௌவின் “எண்ணெய்ப்பிரிவு” நபர்களில் சிலர், கட்சி அதிகாரத்துவத்தில் எழுச்சி பெற்ற அரச தேசிய பெட்ரோலிய நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் உட்பட, ஊழல் குற்றச் சாட்டில் காவலில் உள்ளனர். இதில் மிக முக்கியமானவர் ஜியாங் ஜீமின் ஆவார்; சமீப காலம் வரை இவர் அரச சொத்து நிர்வாகக் குழுத் தலைவராக இருந்தார்—அது நாட்டின் 100 பெரிய மூலோபாய அரச நிறுவனங்களைக் கண்காணிக்கிறது. (see “China’s former security chief under investigation”). இதுவரை குற்றச்சாட்டுக்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. உயர்மட்ட அதிகாரிகளை இலக்கு கொள்வதென்பது எப்பொழுதும் ஆட்சியில் பெரும் மாற்றத்தின் அடையாளம் ஆகும். மாவோ சேதுங்கின் விதவை ஜியாங் குயிங் மற்றும் அவருடைய நண்பர்களை 1980ம் ஆண்டு “கலாச்சாரப் புரட்சி” என அழைக்கப்பட்ட காலத்தில் அதிகாரத் தவறுக்காக பொது விசாரணைகள் நடத்தியது, டெங் ஜியோபிங் சீனாவில் முதலாளத்துவத்திற்கு மீட்கும் பணியில் ஒரு திருப்பம் ஆகும். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜாவோ ஜியாங் அகற்றப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது, ஆரம்ப மாணவர் எதிர்ப்பு தொழிலாள வர்க்க எழுச்சியாக மாறிக் கொண்டிருந்த 1989க்கு முன் தியனான்மன் சதுக்கப் படுகொலைக்கு முன்பு பொலிட்பீரோ நிரந்தரக்குழுவில் இருந்த ஒரு கசப்பான பிளவுகளின் மத்தியில் நடைபெற்றது. ஊழல், அதிகாரத்துவ வீண்டித்தலை அகற்றுதல் என்னும் கோஷங்களுக்குப் பின், ஜனாதிபதி ஜியின் புதிய தலைமை, மிகப் பெரிய அரசாங்கக் கருவியைக் குறைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளார். இது தங்கள் செல்வக்கொழிப்பிற்கு தடையாக இருக்கிறது என்று புதிய முதலாளித்துவம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆகியோரால் கருதப்படுகிறது. இன்னும் மூலோபாயப் பிரிவுகளான தொலைத் தொடர்பு, எரிசக்தி மற்றும் நிதித் துறைகளில் மேலாதிக்கம் செலுத்தும் பெரிய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை உடைக்க மற்றும் தனியார்மயமாக்க, “ஊழல்” என்பது போலிக்காரணத்தை அளிக்கிறது. இச்செயற்பட்டியல் ஜியின் சந்தை சார்பு மறுசீரமைப்பின் இதயத்தானத்தில் உள்ளது; அதுதான் கடந்த மாத சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு பிளீனத்தில் வெளிப்பட்டது. ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவில் முன்னிலை” (சீனாவை இராணுவ முறையில் கட்டுப்படுத்தி, இராஜதந்திர வகையில் தனிமைப்படுத்துதல்) என்பதற்கு ஜியின் விடையிறுப்பு, அமெரிக்க நிதிய உயரடுக்கை சமாதானம் செய்யும் முயற்சி ஆகும். சீனாவில் சந்தையை அணுகுவதில் உள்ள “தடைகளை” பற்றி வோல் ஸ்ட்ரீட் புகார் நீண்டகாலமாக கூறிவருகிறது; “அரச ஏகபோக உரிமை அமைப்புக்கள்” உடைக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது. கனடாவில் சீனத்தூதராக இருக்கும் ஜாங் ஜுன்சாய், செயற்பட்டியலை நேற்று Global and Mail இடம் சுருக்கிக் கூறினார்: “அடிப்படை பொருளாதார முறையை முன்னேற்றுவிக்க பொதுப் பொருளாதாரத்தின் மீதுள்ள அர்த்தமற்ற தடைகள் நீக்கப்படும்; பொது மற்றும் பொது அல்லாத பொருளாதாரம் இரண்டும் சந்தையை அணுக இயலும்.” வேறுவிதமாகக் கூறினால், தனியார் துறை அரசதுறை போல் உயர்த்தப்படும், நாடு முன்பு தடைக்கு உட்பட்டிருந்த பகுதிகளையும் திறந்துவிடும். ஜாங் தொடர்ந்தார்: “பணித்துறைகளான நிதித்துறை, கல்வி, பண்பாடு, சுகாதாரம் ஆகியவை சந்தை அணுகலுக்கு முறையாகத் திறக்கப்படும். மூலதனத் தடைகள் மழலையர் கல்வி, ஓய்வூதியம், கட்டிடக்கலை வடிவமைப்பு, கணக்கியல், தணிக்கை, வணிகம், போக்குவரத்து, மின் வணிக முறை இவற்றில் அகற்றப்படும். இன்னும் கூடுதலான தாராளமயமாக்குதல் பொது உற்பத்தித் துறையில் சாதிக்கப்படும்.” சந்தை சார்பு வேலைத்திட்டத்திற்கு முக்கிய உந்துதல் கொடுப்பவர் பிரதம மந்திரி லி கெக்கியாங் ஆவார். இவர் முக்கிய புதிய தாராளவாத பொருளாதார வல்லுனர் லி யினிங்கீன் மாணவர் ஆவார். மற்றொரு லி மாணவர் லி யுவான்சாவோ இப்பொழுது துண ஜனாதிபதியாக உள்ளார். இம் மூவரும் 1991ல் சோவியத் ஒன்றியத்தின் சரிவின்போது Towards A Strategic Choice of Prosperity என்னும் நூலை இணைந்து எழுதினர். அவர்களுடைய திட்டங்களை அரசாங்கம் பெரிதும் ஏற்றது; பெரும்பாலான அரசிற்கு சொந்தமான நிறுவனங்கள் அகற்றப்பட்டு முழுமையாக தனியார்மயம் ஆக்கப்பட்டன; இதில் பல மில்லியன் மக்கள் வேலை இழந்தனர். பல முன்னாள் அரச நிறுவனங்கள், மூலோபாயமற்ற துறைகளில் இருந்தவை நாடுகடந்த நிறுவனங்களால் அல்லது வெளிநாட்டு முதலீட்டு வங்கிகளால் எடுத்துக் கொள்ளப்பட்டன, அவற்றின் உலகளாவிய இணையங்களின் ஒரு பகுதியாக. ஆனால் ஜனாதிபதி ஜியாங் ஜெமின் உடைய முன்னாள் தலைமை மிகப்பெரிய 100 அரச நிறுவனங்களைத் தக்க வைத்துக் கொள்ள முடிவெடுத்தது: இது அவர்களை தென் கொரியாவின் சாம்சுங் அல்லது ஜப்பானின் மிட்சுபிஷி போல் முதலாளித்துவ பெரு நிறுவனங்களாக மாற்றும் முயற்சிக்கு உதவும். ஆரம்பத்தில் அரச ஆதரவு இருந்தாலும், இந்த நிறுவனங்கள் இறுதியில் உயர்மட்ட CCP தலைவர்களின் குடும்பக் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன. மேற்கில் ஏற்றுமதி வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்காவிற்கு, சீனாவின் பொருளாதார வளர்ச்சியை ஆண்டிற்கு 10%க்கும் அதிகமாக ஊக்கம் கொடுத்தது. மிகப் பெரிய அரச நிறுவனங்கள், பாதுகாப்பு இருந்த நிலையில், உலகின் மிக இலாபகரமான வணிகங்கள் ஆயின. சீன அரசின் எண்ணெய் நிறுவனங்கள் விரைவில் பெருகி, உலகம் முழுவதில் இருந்தும் அளிப்பைக்களைப் பெற்றன; இது அமெரிக்கா இன்னும் பல மேற்கத்தைய சக்திகளுடன் புவி அரசியல் அழுத்தங்களை அதிகரித்தது. ஆனால் 2008 உலக நிதியச் சரிவைத் தொடர்ந்து ஏற்றுமதி வளர்ச்சி சரிந்தது. அரசாங்கம் மற்றும் பெருநிறுவனங்களில் மிகப் பெரிய கடன் ஏற்பட்டது; அத்துடன் ஆசியாவில் சீன செல்வாக்கை குறைப்பதற்கு அமெரிக்காவின் இடையறா உந்துதலும் இணைந்தது. இது அரச ஏகபோக உரிமைகளுடன் தொடர்பு கொண்டிருந்த அதிகாரத்துவ, வணிக உயரடுக்குகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. ஜௌவுடன் தொடர்பு கொண்டிருந்த இந்த நலன் பெற்ற குழுக்கள் இப்பொழுது சீனப் பொருளாதாரத்தை உலக நிதி மூலதனத்திற்கு திறந்துவிட தடையாகக் கருதப்படுகின்றன. இதன் தாக்கங்கள் மிகவும் பாரதூரமானதாகலாம்; முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமின் உடைய செல்வாக்கிற்கு ஜௌ உட்பட்டவர்; பெய்ஜிங்கில் முந்தையவர் கணிசமான அரசியல் செல்வாக்கைக் கொண்டுள்ளார். நியூ யோர்க் டைம்ஸ் கூறியது: “திரு ஜௌவை விசாரணைக்கு உட்படுத்துவதில், திரு ஜி உயரடுக்கு ஒற்றுமையை சேதப்படுத்தக்கூடும், வழக்கில் தவறு இருந்தால் அல்லது அது கட்சி அதிகாரிகள் மூத்தவர்களிடையே பிளவைத் தூண்டினால்; இதில் ஒய்வு பெற்ற ஜனாதிபதி ஜியாங் ஜெமின் அடங்குவார்; அவருடைய காலத்தில்தான் திரு. ஜௌ நிலத்திற்கு மந்திரியானார், பின்னர் ஒரு மாநிலத்தின் கட்சிச் செயலாளராக இருந்தார். பெய்ஜிங்கில் ஆழ்ந்த தலைமைக் கொந்தளிப்பு என்பது, Bo Xilai ஐ சிறையிட்டது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் உள்ள அரசியல் மோதல்கள் தீர்க்கப்படவில்லை என்பதின் தெளிவான அடையாளம் ஆகும். |
|