World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா Five years since Canada’s constitutional coup கனடாவின் அரசியலமைப்பு சதியில் இருந்து ஐந்து ஆண்டுகள்
By Keith Jones இன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் எதிர்கட்சிகளால் அரசாங்கம் தோல்வியடைவதில் இருந்து தடுக்கும் விதத்தில் கனடாவின் பாராளுமன்றத்தைச் செயல்படாமல் நிறுத்த, கனடாவின் பழமைவாத அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத கவர்னர்-ஜெனரலின் ஏதேச்சதிகாரங்களை பயன்படுத்தியது. கவர்னர்-ஜெனரலின் நடவடிக்கை அப்பட்டமாக ஜனநாயகமற்றதாக இருந்தது. அதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் நடத்தப்பட்டிருந்த ஒரு பெடரல் தேர்தலில் எதிர்கட்சிகள் பெரும்பான்மை வாக்குகள் மற்றும் இடங்களைப் பெற்றிருந்தன. ஆனால் பாராளுமன்றத்தை முடக்கியமை பலமாக கனடாவின் ஆளும் வர்க்கத்தால் ஆதரிக்கப்பட்டது. இதை அங்கீகரித்ததோடு, சமூக-ஜனநாயக NDP மற்றும் அதன் தொழிற்சங்க கூட்டாளிகள் உட்பட, எதிர்கட்சிகள், அந்த 2008 டிசம்பர் 4 அரசியலமைப்பு சதிக்குப் பணிந்து நின்றன. ஜனவரியின் இறுதியில் பாராளுமன்றம் மீண்டும் கூடிய போது உத்தியோகபூர்வ தாராளவாத எதிர்கட்சியினர், பெருநிறுவன ஊடகங்களிடம் இருந்து கிடைத்த முழு ஆதரவுடன், சிறுபான்மை பழமைவாத அரசாங்கத்தை அதிகாரத்தில் தக்க வைக்க வாக்களித்தனர். இதற்கு நேர்மாறாக, பழமைவாத கட்சியின் பிரதம மந்திரி ஸ்டீபன் ஹார்ப்பர்—பாராளுமன்றத்தின் செயல்பாட்டை நிறுத்த கவர்னர்-ஜெனரலிடம் அவரது உத்தியோகபூர்வ முறையீட்டை அளிப்பதற்கு முதல்நாள் தேசியளவில் ஒளிபரப்பப்பட்ட அவரது உரையில்—அவரை நீக்கும் தறுவாயில் அதிகாரத்தில் தங்கியிருக்க "அனைத்து சட்ட கருவிகளையும்" பயன்படுத்த இருப்பதாக சூளுரைத்து இருந்தார். அந்த உரையில், ஹார்ப்பர் கனடாவின் "தேசிய ஐக்கியம்" மற்றும் "ஜனநாயகத்திற்கு" ஓர் அச்சுறுத்தலாக ஒரு கூட்டணி அரசாங்கத்தை எதிர் கட்சிகள் உருவாக்க முயற்சிப்பதாக குறிப்பிட்டார், மேலும் கியூபெக் விரோத சோவினிசத்திற்கும் அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். அப்போது உலக சோசலிச வலைத் தளம் விளங்கப்படுத்தியதைப் போல, "பாராளுமன்றத்தை மற்றும் ஜனநாயக நிகழ்முறைகளைக் குலைப்பதில் அவரும் அவருடைய சக பழமைவாதிகளும் எவ்வளவு தூரம் செல்ல தயாராக உள்ளனர் என்ற கேள்வியை" ஹார்ப்பரின் நடவடிக்கைகள் உயர்த்தியது. 2008 நெருக்கடி ஒரு முன்னோடியான அரசியல் நிகழ்வாக இருந்தது, அது கனேடிய ஜனநாயகத்தின் சுபாவம் மற்றும் நெருக்கடியைக் குறித்தும் அத்தோடு NDP, தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடதுகளின் பாத்திரத்தைக் குறித்தும் பிரதான உண்மைகளை அவிழ்த்துக் காட்டியது. அதற்கடுத்த ஐந்து ஆண்டுகளில் கனடா போஸ்ட், ஏர் கனடா, மற்றும் கியூபெக் கட்டுமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் உட்பட தொழிலாளர் போராட்டங்களை குற்றங்களாக்கியும், போராட்டத்தில் ஈடுபட்ட கியூபெக் மாணவர்களுக்கு எதிராக முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு பொலிஸ் வன்முறை மற்றும் கடுமையான சட்டத்தைப் (சட்டமசோதா 78) பயன்படுத்தியும், மற்றும் கனேடிய மக்களின் தொலைபேசி அழைப்புகள், ஈமெயில்கள், தகவல்தொடர்பு சேதிகள், மற்றும் இணைய பயன்பாடுகளின் மீது சட்டவிரோதமாக வேவு பார்க்க அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையின் கனேடிய பங்காளியும், எதிர்பலமுமான கனேடிய செய்திதொடர்பு பாதுகாப்பு அமைப்பைப் (CSEC) பயன்படுத்தியும் கனேடிய ஆளும் வர்க்கம் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் தாக்குதலை விரிவுபடுத்தி உள்ளது. இங்கே சோசலிச சமத்துவ கட்சியின் (கனடா) தேசிய செயலாளர் கீத் ஜோன்ஸால், “கனடா: கடந்த மாதங்களின் அரசியல் நெருக்கடியின் முக்கிய படிப்பினைகள்" என்ற தலைப்பில், 2008 சம்பவங்கள் மீது எழுதப்பட்ட ஒரு கட்டுரையை மறுபிரசுரம் செய்கிறோம். இது முதலில் 2009 ஜனவரி 26இல் பிரசுரிக்கப்பட்டது. சிறுபான்மை பழமைவாத அரசாங்கத்தின் மற்றும் பெரு வியாபாரங்களின் கட்டளையின்படி, தேர்ந்தெடுக்கப்படாத கவர்னர்-ஜெனரலால் மூடப்பட்ட கனடாவின் பாராளுமன்றம் ஏழரை வாரங்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் ஒன்றுகூடும். பாராளுமன்றத்தை ஒத்தி வைத்தமையானது பாராளுமன்ற விதிமுறைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு அப்பட்டமான தாக்குதலாகும். டிசம்பர் 8இல் நடக்கவிருந்த ஒரு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பழமைவாத அரசாங்கத்தைத் தோற்கடிப்பதிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களைத் (எம்பி'கள்) தடுப்பதும் மற்றும் ஒரு மாற்று அரசாங்கம்—கியூபெக்கிய (Québécois) குழுவால் வெளியிலிருந்து ஆதரிக்கப்பட்ட தாராளவாத கட்சி மற்றும் NDPஇன் ஒரு கூட்டணி அரசாங்கம்—உருவாவதைத் தடுப்பதுமே அதன் வெளிப்படையான நோக்கமாக இருந்தது. அரசாங்கத்தின் நவம்பர் 27இன் நிதியியல் மற்றும் பொருளாதார புதுப்பிப்புக்கு விடையிறுப்பு காட்டிய சக்திகளோடு எதிர்கட்சிகள் சேர்ந்து கொண்டன. கனடாவின் போட்டியாளர்கள் அவர்களின் உற்பத்தியாளர்களையும், வியாபாரங்களின் ஏனைய பிரிவுகளையும் பொருளாதார ஊக்கப் பொதிகளோடு அவசரகதியில் ஊக்குவித்து கொண்டிருந்ததாலும் மற்றும் உலக மந்தநிலைமையாலும் கனடாவின் பொருளாதாரம் அதிர்ந்து போயிருந்த நிலையில், அந்த புதுப்பிப்பு நடவடிக்கை பொதுச் செலவினங்களைக் குறைத்திருந்தது. ஒரு நெருக்கடியானது, வெவ்வேறு கட்சிகள் மற்றும் சமூக வர்க்கங்களுக்கு இடையிலான நிஜமான உறவுகளையும், அவற்றின் போக்குகளையும் அவிழ்த்துக் காட்டுவதில் ஆரோக்கியமான தாக்கத்தைக் கொண்டுள்ளது. ஒரு "கணிசமான" பொருளாதார ஊக்கப் பொதிக்கான தங்களின் முறையீடுகளைப் பழமைவாதிகள் கவனித்துக் கொண்டால், கூட்டணியைக் கைவிடவும் மற்றும் தற்போதைய அரசாங்கத்தை அதிகாரத்தில் நிலைக்க செய்யவும் தாங்கள் தயாராக இருப்பதைத் தெரிவித்து தாராளவாதிகள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் குரலெழுப்பி வருகின்ற நிலையில்—இந்த வாரம் பாராளுமன்றத்தில் என்ன நடக்க உள்ளதென்பதற்கு அப்பாற்பட்டு—2008 நவம்பர் இறுதியிலும் மற்றும் டிசம்பர் மாத தொடக்கத்திலும் நிகழ்ந்த அசாதாரண நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை உழைக்கும் மக்கள் ஆழ்ந்து சிந்திப்பது அவசியமாகும். அங்கே குறைந்தபட்சம் மூன்று இன்றியமையா படிப்பினைகள் உள்ளன. முதலாவதாக, கனேடிய முதலாளித்துவம் அதன் வர்க்க நலன்களைப் பின்பற்றுவதில் அடிப்படை ஜனநாயக உரிமைகளின் மீது இரக்கமின்றி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள தயாராக உள்ளது. உலக சோசலிச வலைத் தளம் முன்னரே விவரித்துள்ளதைப் போல, பாராளுமன்றம் முடக்கப்பட்டமையானது ஓர் "அரசியலமைப்பு சதியாகும்." (கனடாவின் பேரரசி இரண்டாம் எலிசபெத் இராணியின் பிரதிநிதியாக விளங்கும்) கவர்னர்-ஜெனரலின் பிற்போக்குத்தனமான அலுவலகம் மூலமாக ஆளும் வர்க்கம் அதற்கு விருப்பமில்லாத ஒரு விளைவைத் தடுக்க பாராளுமன்ற செயல்பாடுகளை நிறுத்துவதில் வெற்றி கண்டது. கனடாவின் பாராளுமன்ற அமைப்புமுறையின் கீழ், கனேடிய மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான எம்பி'கள் தான் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பார்கள், மேலும் ஓர் அரசாங்கம் பாராளுமன்றத்தின் "நம்பிக்கையை" இழந்துவிட்டதென்று எடுத்துக்காட்டப்பட்டால் அது அரசியலமைப்பு முறைப்படி இராஜினாமா செய்தாக வேண்டும். இருந்தபோதினும் கடந்த மாதம் எம்பி'கள், அதற்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு பெடரல் தேர்தலில் தேந்தெடுக்கப்பட்டிருந்த இவர்கள், அரசாங்கத்தைப் பதவியிலிருந்து இறக்க மற்றும் அதை மாற்ற அவர்களின் உரிமையைப் பயன்படுத்துவதிலிருந்து நிர்வாகத்தால்—மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத கவர்னர்-ஜெனரல் உடன் கூட்டிணைந்து செயல்பட்டு வரும் சிறுபான்மை அரசாங்கத்தால்—தடுக்கப்பட்டனர். நடக்கவிருந்த ஒரு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியைத் தவிர்க்கும் நோக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக, பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்படுவதென்பது, அங்கே நவீன கனேடிய வரலாற்றில் அல்லது ஒரு பிரிட்டிஷ் மாதிரியிலான பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கொண்ட எந்தவொரு நாட்டிலும் அதற்கு முன்னுதாரணம் இல்லை. பெரும்பான்மை எம்பி'களின் ஆதரவைப் பெற்றிருக்கும் எதிர்கட்சிகள் பழமைவாதிகளைத் தோற்கடிக்க மற்றும் ஒரு மாற்று அரசாங்கத்தை உருவாக்க விரும்பும் அவர்களின் நோக்கத்தை உத்தியோகப்பூர்வமாக கவர்னர்-ஜெனரல் மெக்கேல் ஜூனுக்கு தெரிவித்திருந்த நிலையில், பாராளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான அப்பெண்மணியின் தீர்மானம் ஏதேச்சதிகார மற்றும் ஜனநாயக விரோத குணாம்சத்தை அடிக்கோடிடுகிறது. முன்மொழியப்பட்ட கூட்டணி "சோசலிஸ்டுகள்" மற்றும் "பிரிவினைவாதிகளுக்கு" ஒரு கருவியாக சேவை செய்யக்கூடும் என்று வாதிட்டும், அது ஓரளவிற்கு தேசதுரோக வடிவத்தில் இருப்பதாக அறிவுறுத்தியும், பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் பழமைவாதிகள் ஒரு வக்கிரமான வலதுசாரி பிரச்சாரத்தைத் தொடுத்தனர். பாராளுமன்ற ஒத்திவைப்பை ஆதரித்த Globe and Mail போன்ற ஆதரவாளர்கள் கூட, பழமைவாதிகள் கியூபெக் விரோத சோவினிசத்தை தூண்டி வருவதாக ஒத்துக் கொண்டனர். பழமைவாதிகள் அவர்களின் நவம்பர் 27 பொருளாதார புதுப்பிப்பில் பொருளாதார ஊக்கப்பொதி முறைமைகளை உள்ளடக்க தவறியமை, பரந்த கண்டனத்தையும் ஆளும் வர்க்கத்திற்குள் அதிருப்தியையும் உருவாக்கியது. ஆனால், இந்த தருணத்தில், தனது பாராளுமன்ற பெரும்பான்மைக்காக சுதந்திர கியூபெக்கிய குழுவைச் (indépendantiste Bloc Quebecois - BQ) சார்ந்திருக்கக்கூடிய, ஒரு சிறிய பங்குதாரராக சேவை செய்யக்கூடிய தொழிற்சங்க ஆதரவு பெற்ற NDP இடம் பெற்றிருக்கும் ஒரு கூட்டணி அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதை கனடாவின் மேற்தட்டு எதிர்த்ததென்பது மிக விரைவிலேயே பகிரங்கமாக வெளிப்பட்டது. அந்த கூட்டணி அதிகாரத்திற்கு வருவதைத் தடுப்பதற்கான ஒரே வழி பாராளுமன்றத்தை முடக்குவது தான் என்பது தெளிவான போது —அந்நாட்டின் முன்னணி செய்தி இதழ்களின் தலையங்க பக்கங்களில் உறுதிப்படுத்தப்பட்ட விதத்தில்—ஆளும் வர்க்கம் அந்த நடவடிக்கையை அதிகப்படியாக ஆதரித்தது. அது கனடாவின் பாராளுமன்ற ஜனநாயக கோட்பாடுகளின் ஒரு அப்பட்டமான விதிமீறல் என்பதைப் பற்றியெல்லாம் அங்கே எந்த கவலையும் இருக்கவில்லை. தாராளவாதிகளுக்கு இந்த சேதி கிடைத்தது. பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு ஒருசில நாட்களுக்குள், தாராளவாதிகள் அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ஸ்டீபன் தியோன் வெளியேறுவதைத் துரிதப்படுத்தி அவரிடத்தில், வலதுசாரியாக மற்றும் ஒரு "கூட்டணியின் மீது அவநம்பிக்கை கொண்டவராக" கட்சியில் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட Michael Ignatieffஐ கொண்டு வந்தனர். கடந்த மாதத்தின் அரசியலமைப்பு சதி தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கையாகும். பாரம்பரிய அரசு கட்சியான தாராளவாதிகள் தலைமையில் ஒரு கூட்டணி அதிகாரத்திற்கு வருவதைத் தடுப்பதற்காக, ஆளும் வர்க்கம் அடிப்படை ஜனநாயக கோட்பாடுகளை நசுக்கவும் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்தவும் விரும்புகிறதென்றால், தொழிலாள வர்க்கத்திடமிருந்து ஒரு நிஜமான சவாலை முகங்கொடுக்கும் போது என்ன மாதிரியான நடவடிக்கைகளை அது உபயோகப்படுத்தும்? கடந்த மாதத்தின் அரசியலமைப்பு சதியைக் குறித்து ஒரு இறுதிப் புள்ளியை சுட்டிக்காட்ட வேண்டும். ஊடகங்களும் அனைத்து எதிர்கட்சிகளும் கவர்னர்-ஜெனரலின் நடவடிக்கைகளை மௌனமான போர்வைக்குள் மூடி மறைத்துள்ளன. Globe and Mail இல் லோரன்ஸ் மார்டினால் எழுதப்பட்ட ஒரேயொரு கட்டுரைக்கு அப்பாற்பட்டு, எந்தவொரு செல்வாக்குமிக்க செய்தித்தாளோ அல்லது பத்திரிகையாளரோ கவர்னர்-ஜெனரல் அவரது நடவடிக்கையை விளங்கப்படுத்த வேண்டுமெனவோ அல்லது, அந்த விவகாரத்தில், பாராளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டுமென பிரதம மந்திரி ஸ்டீபன் ஹார்ப்பர் எந்த சந்திப்பில் கோரினாரோ, கவர்னர்-ஜெனரல் அவருக்கு உத்தரவு வழங்கிய அதே அந்த இரண்டரை மணி நேர டிசம்பர் 4ஆம் தேதி சந்திப்பில் என்ன நடந்ததென்பதை வெளிப்படுத்த வேண்டுமெனவோ கோரவில்லை. கவர்னர்-ஜெனரலின் அலுவலகம், அரசியலுக்கு அப்பாற்பட்டு நிற்கும் ஓர் அலங்கார அரியணையாக, ஒரு நினைவுச்சின்னமாக நம்ப வைக்க கனேடியர்கள் இட்டுச் செல்லப்படுகின்றனர். ஆனால் கடந்த மாதங்களின் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுவது போல, கவர்னர்-ஜெனரல் பாரிய மேலதிக அதிகாரங்களைக் கொண்டுள்ளார். இந்த முதலாளித்துவம், உடந்தையாய் இருக்கும் எதிர்கட்சிகளோடு சேர்ந்து கொண்டு, இந்த பிற்போக்குத்தனமான அமைப்புமுறையானது பொது பரிசீலனைக்கும் விவாதத்திற்கும் உள்ளாக்கப்படக்கூடாது—"அரசியல்மயமாக்கப்பட்டு" விடக்கூடாது—என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறது. அதன் மூலமாக தான், அதன் இன்னும் அதிகப்படியாக அடிப்படை குணாம்சங்களினால் ஏற்படும் எதிர்கால நெருக்கடிகளில், அதன் நலன்களைத் தாங்கிபிடிக்க அதைப் பயன்படுத்த முடியும். இரண்டாவதாக, தொழிற்சங்கங்களும் சமூக-ஜனநாயக NDPயும் இன்னும் கூடுதலாக வலதிற்கு நகர்ந்ததன் மூலமாக முதலாளித்துவ நெருக்கடிக்கு விடையிறுப்பைக் காட்டி உள்ளன. பெருமந்தநிலைமைக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் மிக மோசமான நிதியியல் நெருக்கடியின் வெடிப்பும், உலக பொருளாதாரம் மந்தநிலைமைக்குள் வீழ்ந்திருப்பதும், தொழிலாள வர்க்கம் உழைக்கும் மக்களினது அல்லாமல் பெரு வியாபாரங்களை விலையாக கொடுத்து இந்த நெருக்கடியைத் தீர்க்க அதன் சொந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசரத்தை அடிக்கோடிடுகின்றன. தங்களின் வேலைகள், கூலிகள் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்க, சமூகத்தின் செல்வ வளத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் ஒரு சிறிய செல்வந்தர் ஆட்சியின் (Plutocracy) இலாபத்திற்காக சமூகரீதியில் அழிவுகரமாக சமூகபொருளாதார வாழ்வை அடிபணிய செய்திருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறையை தொழிலாள வர்க்கம் சவால் செய்ய வேண்டும். உழைக்கும் மக்களின் அமைப்புகள் என்று கூறிக் கொள்ளும் தொழிற்சங்கங்களும் NDPயும், அதுபோன்றவொரு போராட்டத்திற்கு முற்றிலும் எதிராக உள்ளன. பொருளாதார நெருக்கடியில் இருந்து உழைக்கும் மக்களைப் பாதுகாக்கும் ஒரு பொருளாதார மீட்பு பொதியைப் பாதுகாப்பதற்காக என்ற பெயரில், கனேடிய தொழிலாளர் காங்கிரஸ் (CLC) மற்றும் கியூபெக் சங்கங்களின் முழு ஆதரவுடன், தாராளவாத தலைமையிலான ஒரு கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்கும் தங்களின் விருப்பத்தை NDP அறிவித்துள்ளது. உண்மையில் NDP மற்றும் CLC இரண்டுமே, கடுமையான நீண்டகால விரோதிகளாக இருந்த தாராளவாதிகள் மற்றும் BQக்கு இடையே இடைத்தரகர்களைப் போல சேவை செய்து, அந்த கூட்டணியை உருவாக்குவதில் கருவியாக இருந்தன. அந்த கூட்டணியில் இருந்து புதிய தாராளவாத தலைவர் Michael Ignatieff தம்மைத்தாமே தூர விலக்கிக் கொண்டுள்ள போதும் மற்றும் நடைமுறையில் ஒரு தாராளவாத-பழமைவாத கூட்டணிக்கான அவரது ஆதரவை காட்டியிருந்த போதினும் கூட, NDP மற்றும் தொழிற்சங்கங்கள் அவற்றின் கூட்டணிக்கு ஒட்டுப்போடுவதை தொடர்ந்து வருகின்றன. அந்த தாராளவாத தலைவர் தொழிற்சங்கத்தின் மாண்ட்ரீல் தலைமையகத்திற்கு விஜயம் செய்த பின்னர், கடந்த வாரம் Ignatieff மீது கியூபெக் தொழிலாளர் கூட்டமைப்பு (FTQ – Quebec Federation of Labour) தலைவர் மிகெல் அர்செனால்ட் பாராட்டுக்களை வாரி இரைத்தார். Ignatieff'ஐ குறிப்பிட்டுக் காட்டி, அர்செனால்ட் கூறியது, “அரசு உள்கட்டமைப்பில் மறுமுதலீடு செய்ய வேண்டி உள்ளது, பொருளாதாரத்தில் மறுமுதலீடு செய்ய வேண்டி உள்ளதென்று யார் நம்புகிறாரோ, அவ்வாறான ஒருவர் நமக்கு தேவைப்படுகிறார்,” என்றார். ஆனால் பழமைவாதிகளைக் கீழே கொண்டு வர Ignatieff'ஐ QFL தலைவர் துதி பாடி வந்த அதேவேளையில், அந்த தாராளவாத தலைவர் இவ்வாறு கூறுகிறார், “வெகுஜன மக்களின் நம்பிக்கையை மீண்டும் வெல்ல அவருக்கு [பிரதம மந்திரி ஹார்ப்பருக்கு] நான் கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென கனேடிய மக்கள் கோருவதாக நான் உணர்கிறேன்,” என்றார். கூட்டணி நீடிக்கிறது, சுமூகமாக இருக்கிறதென்பதை பத்திரிகைகளுக்கு உறுதியளிப்பதில் NDP தலைவர் ஜேக் லேடன் ஆர்வங்காட்டி உள்ளார். ஜனவரி 13இல் Ignatieff உடன் ஒரு மூடிய அறை கூட்டத்தை முடித்த பின்னர் CTV'க்கு லேடன் கூறுகையில், “இதுவொரு மகிழ்ச்சியான இணைவு என்று நான் நினைக்கிறேன், நாங்கள் ஒரு அருமையான காப்பியோடு ஒரு நல்ல விவாதத்தை நடத்தினோம்,” என்றார். தாராளவாத கட்சியின் மற்றும் NDP'இன் ஒரு கூட்டணி ஒரு வலதுசாரி அரசாங்கமாக இருக்கும், அது "முற்போக்கான" சொல்லாடல்களின் போர்வையில் அதற்கு முந்தைய அரசாங்கங்களான பழமைவாத ஹார்ப்பர் அரசாங்கத்தாலும் மற்றும் பால் மார்டீன் மற்றும் ஜீன் கிரீடெயினின் தாராளவாத கட்சி அரசாங்கங்களாலும் நடத்தப்படும் தொழிலாளர்-விரோத மற்றும் ஜனநாயக-விரோத நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்க அழுத்தம் அளிக்கும். தாராளவாதிகளின் ஆதரவைக் காப்பாற்றி வைக்க, பிரதம மந்திரி மற்றும் நிதி மந்திரி பதவிகள் உட்பட கேபினெட்டில் நான்கில் மூன்று பங்கு இடங்களைத் தாராளவாதிகளுக்கு ஒதுக்கித் தர மட்டும் NDP உடன்படவில்லை; ஐந்தாண்டுகளில் 50 பில்லியன் டாலர் அளவிற்கு பெருநிறுவன வரிகளைக் குறைக்கவும் மற்றும் தாராளவாத கட்சியின் மற்றும் பழமைவாத கட்சியின் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் மற்றும் 2011 முழுவதும் ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் கனடா ஈடுபடுவதை ஆதரிக்கவும் NDP உறுதி பூண்டுள்ளது. அந்த கூட்டணியின் கொள்கை உடன்படிக்கையானது, “நிதியியல் கடமைகளில்" தாராளவாதிகளின் மற்றும் NDP'இன் பொறுப்புணர்வை வரையறுத்து தொடங்குகிறது—அதாவது பெரு வர்த்தகத்திற்கு மற்றும் "சர்வதேச போட்டித்தன்மை" என்ற அதன் தாரக மந்திரத்திற்கும் அவர்கள் கீழ்ப்பணிவதற்கான மற்றும் உழைக்கும் மக்களுக்கு சாதகமாக ஏதேனும் விதத்தில் செல்வ வளத்தை தீவிரமாக மறுபங்கீடு செய்வதற்கு அவர்களின் எதிர்ப்பை அறிவிக்கும் ஒரு மங்கல வழக்கு தான் இந்த "நிதியியல் கடமை" என்பது. அந்த உடன்படிக்கையின் இரண்டாவது பத்தி இவ்வாறு தொடங்குகிறது, “இந்த கொள்கை உடன்படிக்கையானது நிதியியல் கடமையின் அஸ்திவாரத்தில் கட்டப்பட்டுள்ளது.” அந்த உடன்படிக்கை, "ஒரு பொருளாதார ஊக்கப்பொதியே" கட்சிகளின் "முதன்மை முன்னுரிமையாக" இருக்கும் என்பதை வலியுறுத்தி செல்கிறது. ஆனால் உள்கட்டமைப்பிற்கு செலவிடுதல் போன்ற முன்வைக்கப்பட்ட ஊக்கப்பொதி முறைமைகள், துல்லியமாக இல்லை, அவை அரசின் நிதியியல் திறனைச் சார்ந்து நிறுத்தப்பட்டு இருந்தன, மற்றும் அவை முற்றிலுமாக கனடாவின் முதலாளித்துவ பொருளாதாரத்தை மீட்டுயிர் பெற செய்யும், மற்றும் பெரு வியாபாரங்களுக்கு இலாபம் கொழிக்க செய்யும் நிலைப்புள்ளியில் உள்ளன. உழைக்கும் மக்களுக்கு இது எதை அர்த்தப்படுத்துகிறதென்பது வாகன தொழில்துறை "பிணையெடுப்பால்" மெய்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பிணையெடுப்பைப் போன்றே, பழமைவாத பெடரல் அரசாங்கம் மற்றும் தாராளவாத ஓன்டாரியோ அரசாங்கத்தால் ஒருங்கிணைந்து வழங்கப்பட்ட கனேடிய பிணையெடுப்பானது, கூலிகளின் மீது நிபந்தனைகளை விதிக்கிறது மற்றும் டெட்ராய்டின் பிரதான மூன்று நிறுவனங்களின் (போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறிஸ்லர்) கனேடிய ஆலைகளில் உள்ள தொழிலாளர்களின் சலுகைகள், தெற்கு அமெரிக்காவில் உள்ள ஜப்பானிய பன்னாட்டு செயல்பாடுகளில் இடம்பெற்றுள்ள தொழிற்சங்கம் சாரா தொழிலாளர்களிய ஊதிய மட்டங்களுக்கு குறைக்கப்படுகின்றன. தாராளவாத-NDP கூட்டணியின் ஆரவார ஆதரவாளர்களில் ஒன்றான கனேடிய வாகனத்துறை தொழிலாளர்கள் (CAW – Canadian Auto Workers) சங்கம் ஏற்கனவே நெருக்கடியிலிருந்து தொழிலாளர்களைப் "பாதுகாப்பதற்காக" அதுபோன்ற விட்டுகொடுப்புகளை ஏற்க அது தயாராக இருப்பதாக சமிக்ஞை காட்டி உள்ளது! பெரு வர்த்தக தாராளவாதிகளுடன் அவர்கள் கூட்டு சேர்வதை நியாயப்படுத்துவதில், NDP'இன் சமூக-ஜனநாயக அரசியல்வாதிகளும் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளும் வேறுபாடின்றி, பழமைவாத ஹார்ப்பர் அரசாங்கத்தின் பேராசை கொண்ட தொழிலாள வர்க்க விரோத குணாம்சத்தை குறிப்பிட்டு காட்டுகின்றனர். ஆனால் வரி வெட்டுக்கள் மூலமாக, கனேடிய விமானப்படையின் விரிவாக்கம் மற்றும் ஆப்கானிஸ்தானிய யுத்த விஸ்தரிப்பு மூலமாக, சமூகத்தின் மிகவும் சலுகை படைத்த அடுக்குகளுக்கு செல்வ வளத்தை மறுபங்கீடு செய்வதிலிருந்து—ஹார்ப்பர் அரசாங்கம் அதற்கு முன்னர் இருந்த தாராளவாத அரசாங்கங்களின் கொள்கைகளைத் தான் தொடர்ந்து வந்துள்ளது மற்றும் விரிவாக்கி உள்ளது. பெரு வியாபார திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டு, கனேடிய முதலாளித்துவ அரசின் பிரதான கட்சியாக தாராளவாதிகள் நீண்டகாலமாக சேவை முடிந்திருக்கிறதென்றால், அது துல்லியமாக தொழிற்சங்கங்கள் மற்றும் NDP'இன் உடந்தையோடு, அவர்களால் பழமைவாதிகளை ஒரு வலதுசாரி படலமாக பயன்படுத்த முடிந்ததால் தான். மூன்றாவதாக, தொழிற்சங்கங்கள் மற்றும் NDP'ஐ தொடர்ந்து குட்டி முதலாளித்துவ இடதுகள் முன்னிழுத்து செல்கின்றன கனடாவின் பெயரளவிற்கான "தீவிர" இடது, உடனடியாக தாராளவாத தலைமையிலான கூட்டணியை "அதைவிட குறைந்த தீமையிலானது" என்று அரவணைத்து கொண்டது. பிரபல பூகோளமயமாக்கல்-விரோத சமூக காரியாளர் நியோமி கிலென், பெண்ணிய ஊடக-பிரபலம் மற்றும் rabble.ca'இன் துணை ஸ்தாபகர் ஜூடி ரெபெக் மற்றும் அமீர் காதிர் மற்றும் இடது கியூபெக் இறைமையியல் அமைப்பு Québec solidaire ஆகிய அனைவரும் அந்த கூட்டணியை வரவேற்றனர். கனடாவின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் அவ்வாறே செய்தது. தீவிர கொள்கையுடையவர்கள் பழமைவாதிகளின் அரசியலமைப்பு சதியைக் குறித்தும் மற்றும் அதன் பரந்த முக்கியத்துவத்தை குறித்தும் ஏதாவது கூறினர் என்றால், NDP மற்றும் தாராளவாதிகளிடம் இருந்து தங்களுக்கான குறிப்புகளை எடுத்து, மிக குறைவாகவே கூறினர். தங்களைத் தாங்களே "புரட்சிகர சோசலிச" குழுக்கள் என்று கூறிக்கொண்ட சில குழுக்கள் அந்த கூட்டணிக்கு கண்டனம் தெரிவித்தன. இருந்தபோதினும் அவை தொழிலாள வர்க்கத்தின் மீது NDP மற்றும் தொழிற்சங்கங்களின் செல்வாக்கை நிலைக்க செய்யும் முயற்சியில் அவ்வாறு செய்தன. தொழிற்சங்கங்களும் மற்றும் NDP'யும் தொழிலாள வர்க்க போராட்டத்தின் கருவிகளாக வகிக்க வேண்டிய உண்மையான பாத்திரத்தை அந்த கூட்டணி தடுக்கும் என்று அவர்கள் குறை கூறினர். Socialist Voice இன் ஜோன் ரெட்டெல் இவ்வாறு அறிவிக்கிறார், “தாராளவாத கட்சியின் செல்வாக்கு உள்ள ஒரு கூட்டணிக்குள் மாட்டிக் கொண்டு, NDP'ஆல் முதலாளித்துவ தாக்குதல்களுக்கு எதிராக பிரச்சாரத்தை நடத்த முடியாது. அதுபோன்றவொரு அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத முறைமைகளுக்கான பொறுப்புணர்வை ஏற்றுக் கொள்வதென்பது, NDP'இன் மதிப்பை விரைவாக குறைத்துவிடும் என்பதோடு சமூக மாற்றத்திற்கான மக்கள் நம்பிக்கையைத் தாங்கியிருக்கும் ஒரு கட்சியாக தொடர்வதற்கான அதன் சக்தியையும் முறித்துவிடும்.” “அதே வேளையில், ஒரு கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதென்ற தொழிலாளர் தலைவர்களின் இப்போதைய வாக்குறுதிகள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் தேவைகளைப் பாதுகாப்பதில் தொழிற்சங்கங்களை சுதந்திரமாக செயல்பட முடியாதபடிக்கு குழிபறிக்கும்.” “முதலாளித்துவ தாக்குதல்களுக்கு எதிரான நடவடிக்கை”? முதலாளித்துவ அமைப்புமுறையின் பிரதான முட்டுகோல்களே NDP'யும் தொழிற்சங்கங்களுமாக உள்ளன. சுமூகமாக நடப்பதற்கு அவை சேவை செய்வதோடு, தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்பை பெரு வியாபாரங்களுக்கு முன்னால் தடம்புரள செய்கின்றன. கடந்த கால் நூற்றாண்டில், ஆழமடைந்துவரும் முதலாளித்துவ நெருக்கடிக்கு அவை காட்டிய விடையிறுப்பில், விட்டுக்கொடுப்புகள் மற்றும் வேலை வெட்டுக்களை திணிப்பதில், அவை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு மிகவும் பகிரங்கமாக ஈடுபட்டுள்ளன, மற்றும் NDP விஷயத்தில் கூறுவதானால், நலன்புரி அரசை கலைப்பதை அது தலைமை தாங்கி உள்ளது. இத்தகைய அமைப்புகளிடம் இருந்து தொழிலாள வர்க்கத்தின் விடுதலை, மற்றும் தொழிலாள வர்க்க போராட்டத்திற்கு புதிய அங்கங்களைக் கட்டியெழுப்புவது ஆகியவை சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தின் அபிவிருத்திக்கான போராட்டத்தில் ஓர் இன்றியமையா உட்கூறாகும். இந்த வாரம் பாராளுமன்றத்தில் என்ன நடந்தாலும் சரி, உலக பொருளாதார நெருக்கடியின் ஆரம்ப கட்ட தாக்கத்தின் கீழ் கடந்த ஆண்டின் இறுதியில் வெடித்த அரசியல் நெருக்கடியானது தீவிரப்பட்ட வர்க்க போராட்டம் மற்றும் அரசியல் அதிர்வுகளின் ஒரு புதிய சகாப்தத்திற்கு அறிகுறியாக நிற்கிறது. அத்தகைய நிகழ்வுக்கான தயாரிப்பில், பெரு வியாபார தாராளவாத கட்சிக்குப் பின்னால் NDP மற்றும் தொழிற்சங்கங்கள் வேகமாக அணிதிரள்வதின் படிப்பினைகளையும் மற்றும் அதை தொடர்ந்து பழமைவாதிகளால் மற்றும் கவர்னர்-ஜெனரலால் வடிவமைக்கப்பட்ட மற்றும் கனேடிய மூலதனத்தின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவுகளால் ஆதரிக்கப்பட்ட அரசியலமைப்பு சதியின் படிப்பினைகளையும் தொழிலாளர்கள் உட்கிரகித்துக் கொள்வது அத்தியாவசியமாகும். |
|