World Socialist Web Site www.wsws.org |
Ukraine round-table talks fail as power struggle intensifies அதிகாரத்திற்கான போராட்டம் தீவிரமடைகையில் உக்ரேன் வட்டமேசை மாநாடு பேச்சுவார்த்தை தோல்வியடைகின்றது
By Johannes Stern வெள்ளியன்று வட்டமேசை பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றபின் உக்ரேனில் அதிகாரத்திற்கான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் அரசாங்கத்திற்கும் வலதுசாரி, ஐரோப்பிய சார்புடைய எதிர்த்தரப்பு தன்னலக் குழுவின் அர்சேனி யட்செங்கின் தலைமையிலான ஜூலியா தீமோஷெங்கோவின் தாய்நாட்டு கட்சிக்கும் மற்றும் குத்துச் சண்டை வீரர் விட்டாலி கிளிட்ஷ்கோவிற்கும் பாசிச ஒலேக் தியானிபோக்கிற்கும் இடையே உடன்பாடு ஏதும் அடையப்படவில்லை. பேச்சுவார்த்தைகளில் மாணவர் தலைவர்கள், மத முன்னணியினர், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரும் அடங்கியிருந்தனர். இவர்கள் கடந்த மாத கடைசியில் யானுகோவிச் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு கூட்டு உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்தவுடன் அரசாங்கத்திற்கும் எதிர்த்தரப்பிற்கும் இடையிலான நேரடி மோதலினால் எதிர்ப்புக்கள் எழுந்தவுடன் அதில் சேர்ந்தவர்களாவர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்த அதிக அழுத்தத்தின்கீழ், யானுகோவிச் அரசாங்கம் தான் தன் முடிவை பரிசீலனை செய்யக்கூடும் என்று அடையாளம் காட்டியது. வியாழன் அன்று ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கத்திற்கான ஆணையரான ஸ்டீபன் ப்யூலேயுடன் பேச்சுக்களுக்குப்பின் துணைப் பிரதம மந்திரி செர்ஹே ஆர்புஷோவ் பிரஸ்ஸல்ஸில் “தேசிய, மூலோபாய நலன்களை கருத்தில் கொண்டு விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருங்கிணைப்பு உடன்பாட்டில் கீவ் கையெழுத்திடும்” என்றார். அதே நேரத்தில் யானுகோவிச் ரஷ்யாவுடனான உறவுகளைத் தக்க வைத்துக்கொள்ள முற்படுகிறார். ரஷ்யாவிற்கு ஒரு இணைத் தூதுக்குழுவை அனுப்பி வைத்தார். அடுத்த வாரம் மாஸ்கோவிற்கு ரஷ்யாவுடன் ஒரு வணிக உடன்பாடு குறித்து விவாதிக்க செல்ல இருக்கிறார். ஞாயிறன்று யானுகோவிச்சின் Party of Regions முதல்தடவையாக அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இது தலைநகருக்கு 200,000 ஆர்ப்பாட்டக்காரர்களை கொண்டுவரும் என்றும் கூறியது. வெள்ளியன்று நடந்த வட்டமேசைப் பேச்சுவார்த்தைகளில் யானுகோவிச் “எத்தகைய ஸ்திரமற்றதன்மையும் நாட்டின் தோற்றத்திற்கு மட்டுமல்லாது மக்களுடைய வாழ்விலும் எதிர்மறையான தாக்கங்களை கொண்டுவரும். பொருளாதார ஸ்திரத்தன்மை மிகவும் உறுதியற்றுள்ளது” என்று எச்சரித்தார். எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அவர் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஒரு பொது மன்னிப்பும் வழங்கினார். “மோதல் போக்கினை நிறுத்த உத்தரவாதமளிக்கவே இது செய்யப்படுகிறது” என்றார். ஆனால் இது போதாது என்று எதிர்த்தரப்பு வலியுறுத்தியுள்ளது. அவர்கள் பிரதம மந்திரி மைகோலா அஸாரோவ் மற்றும் மந்திரி விட்டாலி ஸாகர்ஷெங்கோவ் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் எனக் கோருகின்றனர். எதிர்ப்பாளர்கள் இவர்கள்தான் கூடுதல் பொலிஸ் வன்முறைக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளனர். வட்ட மேசையில் பேசிய யானுகோவிச் கூறினார்: “குற்றம் சார்ந்த உத்தரவுகளைக் கொடுத்தவர்கள், அவற்றைச் செயல்படுத்தியவர்கள் பொறுப்பு ஏற்கவேண்டும். இதனால் சமாதானமான மக்கள்மீது எவரும் தாக்குதல் நடத்தக்கூடாது என்பதை நாடு முழுவதும் காணும்... இந்த அரசாங்கம் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு தனது சொந்தப் பொறுப்பைக் கொண்டுள்ளது” என்றார். கூட்டம் முடிந்தபின் கிளிட்ஸ்கோ பின்வருமாறு புகார் கூறினார்: “இந்த வட்டமேசை வெறும் அறிவிப்புத்தான். எதிர்தரப்பு கருத்தைச் சந்திக்க ஒரு நடவடிக்கைகூட எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் இன்று எதிர்த்தரப்பின் கோரிக்கைகள் ஒன்றைக்கூட கேட்கவில்லை என்றுதான் நான் உணர்கிறேன்.” மூன்று வாரம் நீண்டுவிட்ட தேக்கநிலையில் இருந்து வெளியேறும் வழிகண்டுபிடிக்க தோல்வியுற்ற நிலையில், நாட்டின் போட்டிக்குள்ளான தன்னலக் குழுக்களுக்கும் அவற்றின் பல ஐரோப்பிய, அமெரிக்க, ரஷ்ய ஆதரவாளர்களுக்கும் இடையே ஆழ்ந்த மோதல் உருவாகிவருகிறது. எதிர்த்தரப்பு ஞாயிறன்று புதுப்பிக்கப்படும் வெகுஜன எதிர்ப்புக்களுக்கு அழைப்பு விடுத்தள்ளது. புதிய ஆர்ப்பாட்டக்காரர்கள்—முக்கியமாக உக்ரேனின் மேற்குப் பகுதியில் இருந்து, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு வலுவாக உள்ள இடம்—கீவிற்கு வந்து விட்டதாகக் கூறப்படுகிறது. முன்னர் புதன் அன்று பொலிசாரால் அகற்றப்பட்டிருந்த சில புதுப்பிக்கப்பட்ட தடைகள் சுதந்திரச் சதுக்கத்தைச் சுற்றி வந்துள்ளன. முந்தைய இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளிலும் அணிவகுப்புக்கள் நூறாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்ப்புக்களின் மையத்திற்கு ஈர்த்திருந்தன. எதிர்க்கட்சித் தலைவர்கள் மேற்கு ஆதரவால் வலுப்பெற்றுள்ளதாக உணர்கின்றனர். சில செல்வாக்குப்படைத்த தன்னலக்குழுக்கள் எதிர்ப்பாளர்கள் பக்கம் சேர்ந்துள்ளன. கடந்த வாரம், உக்ரேனின் இரண்டாம் மிகப் பெரிய பணக்காரரும் முன்னாள் ஜனாதிபிதி லியோனிட் குச்மாவின் மருமகன் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக வந்தார். பெரும்பாலான தன்னலக்குழுவினர் குறிப்பாக கிழக்கில் இருந்து வந்தவர்கள் யானுகோவிச்சை ஆதரித்து, ரஷ்யாவுடன் பிணைப்பை கொண்டுள்ளனர். ஆனால் பலரும் தங்கள் சொத்துக்களை பாதுகாத்துக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான ஒத்துழைப்பு தேவை எனக் கருதுகின்றனர். சமீபத்திய நாட்களில் ஐரோப்பிய ஒன்றியமும் வாஷிங்டனும் தங்கள் அழுத்தங்களை யானுகோவிச் மீது அதிகரித்துள்ளனர். வியாழன் அன்று அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல், உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி பாவ்லோ லேபெட்யேவை அழைத்து “ஆர்ப்பாட்டங்களை முறிக்க இராணுவத்தை ஈடுபடுத்துவதில் உள்ள பாதிப்பின் சாத்தியம் குறித்து” எச்சரித்தார். அதற்கு முந்தைய நாள் அமெரிக்க வெளிவிவகாரத்துறை செய்தித்தொடர்பாளர் ஜீன் பிசாகி பொருளாதாரத் தடைகள் உட்பட அனைத்துக் கொள்கை விருப்புரிமைகளும் “மேசையின்மீது உள்ளன.” என்றார். ஆரம்பத்தில் இருந்து ஆர்ப்பாட்டங்களை மிகவும் வெளிப்படையாக ஆதரித்தவற்றுள் ஒன்றான ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யாவிற்கு எதிராக தன் குரலை உயர்த்தியுள்ளது. வியாழன் அன்று, ஐரோப்பிய பாராளுமன்றம் தீர்மானம் ஒன்றை இயற்றி “வர்த்தக தடைகள் உள்ளடங்கலாக உக்ரேன் மீது ரஷ்யாவால் பிரயோகிக்கப்படும் ஏற்கவியலாத அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தத்தை உறுதியாக கண்டித்தது.” இது ஐரோப்பிய ஆணையத்தை “ரஷ்யா உலக வணிக அமைப்பின் வணிக விதிகளை குறுகியபார்வை உடைய அரசியல் நோக்கங்களுக்காக (WTO) முறிக்கும்போது ஐரோப்பிய ஒன்றியம் எடுக்க வேண்டிய எதிர் நடவடிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.” என அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கும் சுதந்திர சதுக்கத்தில் நடத்தப்படும் ஐரோப்பிய ஒன்றிய சார்பு எதிர்ப்புக்கள் (ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் எத்தகைய நப்பாசைகளை கொண்டிருந்தாலும்), உக்ரேன்மீது பூகோள மூலோபாய போராட்டத்தை நடத்தும் வழிவகையாகவும், நாட்டின் தன்னலக்குழுக்களுடன் நெருக்கமான உறவுகளை நிறுவவுமே உதவும். ஒருங்கிணைப்பு உடன்பாட்டுடன், ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுக்கு ஜனநாயகம் கொண்டுவர முற்படவில்லை. ஆனால், இந்த மூலோபாய முக்கியத்துவம் கொண்ட நாட்டில் ரஷ்ய செல்வாக்கை குறைக்கவும் உக்ரைனை மேற்கு ஐரோப்பிய நிறுவனங்களுக்கு குறைவூதியத் தொழிலாளர் அரங்காக மாற்றவும்தான் விரும்புகிறது. ரஷ்ய பிரதம மந்திரி டிமிட்ரி மெட்வெடேவ் வெள்ளியன்று ஐரோப்பிய ஒன்றிய அரசியல்வாதிகள் எதிர்ப்புக்களில் தம்மை ஈடுபடுத்துவது உக்ரேனின் விவகாரங்களில் “மூர்க்கமான தலையீடு” என்றார். மற்றவர்களுடன், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைப் பிரிவுத் தலைவர் கத்தரின் ஆஷ்டன் மற்றும் ஜேர்மனிய வெளியுறவு மந்திர கீடோ வெஸ்டெர்வெல்லேயும் கடந்த சில நாட்களில் சுதந்திர சதுக்கத்திற்கு முக்கிமாக வந்துள்ளனர். மேற்கு, கிழக்கு உக்ரேன் பகுதிகளுக்கு இடையே பிராந்திய அழுத்தங்களின் ஒரு “நிலப்பிரிவுப் பிளவு” ஆபத்து குறித்தும் எச்சரித்தார். இது அரசியல் நெருக்கடியினால் அதிகமாகிறது என்றும் கூறினார். நியூ யோர்க் டைம்ஸில் “கிழக்கு உக்ரேனில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஒரு தகவல்: நிறுத்து” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று இந்த மோதல்களை எடுத்துக் காட்டுகிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான இரயில்வேக்களில் முன்பு உழைத்த 35 வயது கணினி வல்லுனர் செர்ஜேவ் யேர்மோலெங்கோவையும் டைம்ஸ் மேற்கோளிடுகிறது: “உக்ரேனில் இப்படித்தான் நடக்கிறது. கிழக்கு பணம் ஈட்டுகிறது, மேற்கு அதைச் சாப்பிடுகிறது... நமது தொழிற்துறை கனரகமானவை. இவை இரயில்பாதைகள், தொழிற்சாலைகளாகும். ஐரோப்பாவைவிட நமக்கு ரஷ்யாதான் தேவை” என்றார். யேர்மொலெங்கோ புதன்கிழமை சுதந்திர சதுக்கத்தை முற்றிலும் விடுவித்ததற்காக தான் “ஜனாதிபதியை முழுமையாக ஆதரிப்பதாகவும்” கூறினார். லெனின் சிலையை பாசிச எதிர்ப்பாளர்கள், தியாக்னிபோக்கின் ஸ்வோபோடா கட்சி அழித்தது “ஒரு மோசமான காடைத்தனம்” என்றார். கிழக்கில் பெரும்பாலான தொழிலாளர்கள் ஐரோப்பிய சார்பு எதிர்ப்புக்களை புறக்கணிக்கையில் அல்லது வெளிப்படையாக எதிர்க்கையில், டைம்ஸ் ஆர்ப்பாட்டங்களுக்கான எதிர்ப்பு “திரு.யானுகோவிச்சிற்கு புதிய ஆதரவை உருவாக்கியுள்ளது எனக் கூறுவதற்கில்லை. நாடு திவால் நிலைமையின் விளிம்பை அடைகையில் அவருக்கு ஆதரவானவர்களின் எண்ணிக்கை குறைகிறது. பலரும் கீவில் நடக்கும் மோதல்களை, திரு.யானுகோவிச்சின் அரசியல்வாதிகள் குழுவிற்கும் மாணவர் இயக்கங்களுடன் சேர்ந்துகொண்டு அதிகாரத்தைப் பெற முயலும் பேராசைமிக்க எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் என்றே காண்கின்றனர்.” |
|