World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Washington escalates phony “human rights” campaign against China

சீனாவிற்கு எதிரான போலி “மனித உரிமைகளை” வாஷிங்டன் விரிவாக்குகிறது

By Tom Peters 
12 December 2013

Back to screen version

திங்களன்று அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி சீன அரசாங்கத்தின் “மனித உரிமைகள்” மீறல்கள் தொடர்பாக வாஷிங்டனின் பிரச்சாரத்தின் சமீபத்திய தாக்குதலைத் தொடுத்தார். அவர், 5 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நோபல் பரிசு பெற்ற லியு ஜியாபோ, மற்றும் “பேச்சுரிமை என்னும் முழு உரிமையை அமைதியாக வெளிப்படுத்தியதற்காகசிறையில் தள்ளப்பட்டவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்றார். .நா. செயற்குழு ஒன்று லியு சிறையில் இருப்பது “மனித உரிமைகள் முழு பிரகடனத்திற்கு முற்றிலும் மாறானது” எனக் கூறியிப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

கெர்ரியின் கருத்துக்கள், கடந்த வாரம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ், “மனித உரிமைகள்: அமெரிக்க நலன்களையும் மதிப்புக்களையும் முன்னேற்றுபவை” என்னும் தலைப்பில் ஆற்றிய உரையை தொடர்கிறது. அவர் சீனாவை அதன் “பேச்சுரிமை, கூடும் உரிமை, சங்கம் அமைக்கும் உரிமை ஆகியவற்றின் மீதான பெருகும் தடைகளுக்கு”த் தனியே பிரித்து சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாரிகள் “ஊழல், சுற்றுச்சூழல் தவறுகள், தொழிலாளர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அல்லாத பொது சுகாதார நெருக்கடிகளுக்கு” பொறுப்பு ஆக்கப்படுதில்லை, அதே நேரத்தில் “மத சிறுபான்மையினர் –திபேத்தியர்கள் மற்றும் உய்கார்யர்கள் (Uighurs)அவர்கள் அடிப்படைச் சுதந்திரங்கள் மறுக்கப்பட்ட நிலையில் உள்ளனர்” என்று ரைஸ் அறிவித்தார். மேலும் அவர், அரசியல் எதிர்ப்பாளர்களை சிறையில் அடைப்பது என்பது “சீனாவில் எவரும், அமெரிக்கர்கள் உட்பட அங்கு வணிகம் செய்யும் எவரும் பாதுகாப்பை உணரமுடியாது என்ற பொருளாகும்என்றார்.

கடந்த வாரம் தன் ஆசிய சுற்றுப்பயணத்தின் போது, துணை ஜனாதிபதி ஜோ பேடெனும் வாஷிங்டனுடைய “மனித உரிமைகள்” அழுத்தத்தை அதிகரித்தார். பெய்ஜிங்கில் ஒரு அமெரிக்க வணிகர் கூட்டத்தில் பேசிய அவர், சீன அரசாங்கம் மக்களை “சுதந்திரமாகப் பேச அனுமதிக்க வேண்டும்”, “மரபைச் சவால் விட அனுமதிக்க வேண்டும்” என்றார், குறிப்பாக “அமெரிக்க செய்தியாளர்கள்” விசாக்கள் புதுப்பிக்கப்படாதது குறித்து விமர்சித்தார்.

சீன ஆட்சி, பொலிஸ்-அரச நடவடிக்கைகளை குறிப்பாக தொழிலாள வர்க்கத்திடம் இருந்து, விமர்சனங்களையும் எதிர்ப்புக்களையும் அடக்குவதற்கு பயன்படுத்துகிறது  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனினும், ஒபாமா நிர்வாகத்தின் அறிக்கைகள் சீனாவில் ஜனநாயக உரிமைகள் குறித்து அக்கறை எதுவும் கொண்டிருக்கவில்லை, குறிப்பாக தொழிலாளர்களடைய நிலைமை குறித்து. அவர்கள் சுரண்டப்படுவது அமெரிக்காவை தளமாக கொண்ட நிறுவனங்களுக்கு மகத்தான இலாபங்களை தோற்றுவிக்கிறது.

முதலாவதாக, இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை. “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பதாகையின் கீழ், ஜனாதிபதி பாரக் ஒபாமா, எந்த முந்தைய அமெரிக்க ஜனாதிபதியையும்விட அடிப்படை ஜனநாயக உரிமைகள், சட்ட நெறிகளைக் கிழித்து எறிந்துள்ளார். அவருடைய நிர்வாகம், உள்நாட்டிலும் மற்றும் உலகெங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சட்டவிரோத செயல்களை அம்பலப்படுத்தியதற்காக, செல்சீ (பிராட்லி) மானிங், விக்கிலீக்ஸின் ஜூலியான் அசான்ஞ் மற்றும் முன்னாள் தேசியப்பாதுகாப்பு அமைப்பின் (NSA) ஒப்பந்தக்காரர் எட்வார்ட் ஸ்னோவ்டென் ஆகியோரை துன்புறுத்தி வருகிறது. சித்திரவதை பற்றிய ஐ.நா.வின் உயர்மட்ட அதிகாரி, மானிங் “கொடூர, மனிதாபிமானமற்ற, இழிவானமுறையில் நடத்தப்பட்டு” தனிமைச் சிறையில் 9 மாதங்கள் வைக்கப்பட்டார் என கண்டறிந்துள்ளார்.

ரைஸ், சீனாவை விமர்சிக்கும் போது, ஸ்னோவ்டெனால் அம்பலப்படுத்தப்பட்ட NSA  இன் பாரிய, சட்டவிரோத உளவு நடவடிக்கைகளை பாதுகாக்கிறார்; இது “உயிர்களை பாதுகாக்கிறது” என்கிறார். உண்மையில் NSA, பல மில்லியன் கணக்கான சாதாரண அமெரிக்கர்கள் மீதும், உலகெங்கும் இன்னும் அதிகமானவர்கள் மீதும் ஒற்று நடத்துகிறதோ, அதே காரணத்திற்காவே சீனா அதன் பொலிஸ்-அரச கண்காணிப்பை பராமரிக்கிறது. அதி-பெரும் செல்வம் படைத்த நிதியத் தன்னலக்குழுவின் சார்பாக ஆட்சி நடத்தும் ஒபாமா நிர்வாகம், முழு மக்களையும் தனது எதிரியாக கருதுகிறது.

கெர்ரி, லியு ஜியாவோபோ விடுதலைக்கு அழைப்புவிடுகிறார், ஆனால் ஒபாமா நிர்வாகம்  குவாண்டநாமோ குடா சிறை முகாமை இன்னும் திறந்து வைத்துள்ளது; இங்கு நூற்றுக்கணக்கானவர்கள சித்திரவதை செய்யப்படுவதோடு, குற்றச்சாட்டு, விசாரணை ஏதுமின்றி சிறையில் உள்ளனர். தன்னுடைய பேச்சில் ரைஸ், ஒபாமாவின் குவாண்டநாமோ குடா சிறை முகாமை மூடும் உறுதிமொழியை வெற்றுத்தனமாக திருப்பிக் கூறினார்—ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவர் தன் முதல் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியது.

அமெரிக்க டிரோன்களைப் பயன்படுத்தி பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், யேமன் இன்னும் பிற இடங்களில் உடனடி மரணதண்டனை கொடுப்பதையும் பாதுகாத்துப் பேசினார். “அனைத்து அல்குவேடா மற்றும் தொடர்புடைய பயங்கவாதக் குழுக்களுக்கு எதிராக நாளடைவில் தொடர்ந்த முன்னேற்றம், இத்தகைய நடவடிக்கைகளை குறைக்கும்” என்று கூறினார். உண்மையில் 2008ல் இருந்து, ஒபாமா டிரோன் தாக்குதல்களை வியத்தகு முறையில் அதிகரித்ததோடு, அமெரிக்கக் குடிமக்கள் உட்பட இலக்குகளை தேர்ந்தெடுப்பதில் தனிப்பட்டமுறையில் ஈடுபட்டுள்ளார். இந்த நடைமுறை சட்ட தோற்றம் கூட இல்லாமல் நடைபெறுகிறது: நிர்வாகம் தனக்கு தானே நீதிபதி, நடுவர் மன்றம் மற்றும் கொலை செய்பவர் என்ற மூன்று உரிமைகளையும் உலகில் எங்கு இருப்பவராயினும் எவர்மீதும் பயன்படுத்த எடுத்துக் கொண்டுள்ளது.

ஒபாமா நிர்வாகத்தின் “மனித உரிமைகள்” பிரச்சாரம் சீனாவிற்கு எதிராக என்பது முற்றிலும் ஆசியாவில் “முன்னிலை” என்பதுடன் பிணைந்துள்ளது—இது இராஜதந்திர முறையில் சீனாவை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதும், இராணுவமுறையில் அதைச் சூற்றிவளைப்பதுமாகும். இதையொட்டி ஆசியா-பசிபிக்கில் அமெரிக்க மேலாதிக்கம் உறுதி செய்யப்படும். இராணுவ ஆக்கிரோஷத்தை நியாயப்படுத்த “மனித உரிமைகள்” பதாகையை ஏற்றும் நீண்ட வரலாற்றை அமெரிக்கா கொண்டுள்ளது; இதில் லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகியவை அடங்கும்; இது தவிர இராஜதந்திர சூழ்ச்சிககளும் ஆட்சி சதிகளும் நடத்தப்படுகின்றன. தன் பெய்ஜிங் உரையில், பிடென் மீண்டும் அமெரிக்கா “இராணுவ, பொருளாதார, இராஜதந்திர வகையில் பசிபிக் சக்தியாக இருக்கும்” உறுதியைக் கொண்டுள்ளது என அடிக்கோடிட்டது தற்செயல் நிகழ்வு அல்ல.

அமெரிக்க “மனித உரிமைகள்” பிரச்சாரம், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய “ஜனநாயகங்கள்” உடன் ஒரு கூட்டு, சீன “எதேச்சாதிகார முறைக்கு” எதிரான இராணுவத் தயாரிப்புக்களை நியாயப்படுத்தும் இலக்கு கொண்டது. உண்மையில், ஜனநாயக உரிமைகள், ஒவ்வொரு நாட்டிலும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. தற்போது தென் கொரிய அரசாங்கம்,  வட கொரியாவிற்கு ஆதரவாக ஒருஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு திட்டமிடுகிறது என்ற போலிக் குற்றச்சாட்டின் பேரில், எதிர் கட்சியான ஐக்கிய முற்போக்கு கட்சியை கலைக்க  முயற்சிக்கின்றது. டோக்கியோ இப்பொழுதுதான் ஒரு புதிய “அரச இரகசியங்கள்” சட்டத்தை இயற்றுகிறது; இதன்படி குறிப்பாக ஜப்பானின் மறு இராணுவமயமாக்கல் குறித்த ஆவணங்களுடன் தொடர்புபட்ட தகவல் வெளியிடுபவர்களுக்கு கடுமையான சிறைத் தண்டனை கொடுக்கப்படும்.

அமெரிக்கா, சீனாவிற்குள்ளேயே கிளர்ச்சிகள், தலையீடு ஆகியவற்றிற்குப் போலிக்காரணமாக “மனித உரிமைகள்” பதாகையைப் பயன்படுத்தும் நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இங்கு ரைஸ், திபேத்தியர்கள், உய்கார்யர்கள் (Uighurs) உரிமைகள் மீது காட்டுவதாக இருக்கும் போலிக் கவலை குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன் தன் நலன்களை எதிர்க்கும் அரசாங்கங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்த, தேசிய சிறுபான்மையினர் மற்றும் மத வேறுபாடுகளை பயன்படுத்தும் ஒரு நீண்ட, இழிந்த வரலாற்றை கொண்டுள்ளது. 1950 மற்றும் 1960கள் முழுவதும் CIA ஆதரவு தலாய் லாமா மற்றும் அவருடன் திபெத்தில் இருந்து வெளியேறியவர்களும் திபெத்தில் பெய்ஜிங் நிர்வாகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒருங்கிணைந்த முயற்சில் இருந்தனர்.

வாஷிங்டனின் போலி “மனித உரிமைகள்” பிரச்சாரத்தின் பெரும் நோக்கம், ஆசியாவில் அமெரிக்க இராணுவக் கட்டமைப்பிற்கும் சீனாவிற்கு எதிராக முடுக்கி விடப்பட்டுள்ள போர்த்தயாரிப்புக்களுக்கும் ஒரு பதாகை அளிப்பதாகும். உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியால் இயக்கப்படும் அமெரிக்க பொருளாதார சரிவின் தீவிர வெளிப்பாட்டை தூக்கி நிறுத்துவதற்கு, ஒபாமா நிர்வாகம் அமெரிக்க இராணுவ வலிமையை பயன்படுத்தி அதன் பொருளாதார, மூலோபாய மேலாக்கத்தை ஆசியாவில் அதிகரிக்க முயல்கிறது.