World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The US budget deal and the political conspiracy against the working class

அமெரிக்க வரவு-செலவு திட்ட உடன்படிக்கையும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அரசியல் சதியும்

Andre Damon
13 December 2013

Back to screen version

ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவோடு, காங்கிரஸில் உள்ள ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினருக்கு இடையே எட்டப்பட்ட வரவு-செலவு திட்டம் மீதான இருகட்சி உடன்படிக்கையானது, சமூக திட்டங்களை வெட்டும் மற்றும் செல்வ வளத்தை பெருநிறுவன மற்றும் நிதியியல் மேற்தட்டிற்கு மேலதிகமாக மறுபங்கீடு செய்யும் நோக்கத்தோடு, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஓர் அரசியல் சதியின் சமீபத்திய நடவடிக்கையாகும்.

வியாழனன்று பிரதிநிதிகள் சபையில் 332-94 என்ற பெரும்பான்மை வாக்குவித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த உடன்படிக்கை, நிரந்தரமாக ஒரு ட்ரில்லியன் டாலருக்கு மேல் வரவு-செலவு கணக்கில் "ஒதுக்கீடு" வெட்டுக்களை (sequester) செய்கிறது, மத்திய பணியாளர் ஓய்வூதிய பங்களிப்புகளை அதிகரிக்கிறது, புதிய நுகர்வு கட்டணங்களை விதிக்கிறது, மற்றும் மெடிக்கேர் திட்டத்தின் கீழ் செலவு பணத்தைத் திரும்ப பெறுவதில் அண்ணளவாக 30 பில்லியன் டாலர்கள் கூடுதல் வெட்டுக்களைச் செய்கிறது. அந்த முறைமையில் அவர் கையெழுத்திடுவதாக ஜனாதிபதி ஒபாமா ஏற்கனவே அறிவித்துள்ளார்.

அந்த வரவு-செலவு திட்ட உடன்படிக்கையின் பிற்போக்குத்தனமான, சமூக-விரோத குணாம்சம் பெடரல் வேலைவாய்ப்பின்மை சலுகைகளை நிறுத்துவதை அது அனுமதிக்கிறது என்ற உண்மையால் மிக தெளிவாக வெளிப்படுகிறது. கிறிஸ்மஸ் பண்டிகைக்குப் பின்னர் நீண்டகால வேலையின்மைக்கான ரொக்க உதவி முடிவுக்கு வர உள்ளது.

டிசம்பர் 28இல் மொத்தம் 1.3 மில்லியன் பேர் தங்களின் வேலைவாய்ப்பின்மை சலுகைகளை இழக்க உள்ளனர் மற்றும் கூடுதலாக 3.6 மில்லியன் மக்கள் அடுத்த ஆண்டு வருமான உதவியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். வெள்ளை மாளிகையின் சொந்த மதிப்பீட்டின்படி, விரிவாக்கப்பட்ட வேலையின்மை உதவித்தொகையைப் பெறும் ஒவ்வொருவரும் கூடுதலாக இரண்டு குடும்ப உறுப்பினர்களை ஆதரிக்க வேண்டி இருக்கும், இந்த பெடரல் வேலையின்மை சலுகைகள் நிறுத்தப்படுவதால் அண்ணளவாக 15 மில்லியன் மக்கள்மக்கள் தொகையில் ஏறத்தாழ ஐந்து சதவீத மக்கள்பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது.

ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையின் வர்க்க குணாம்சம் இந்த கொடூரமான சட்டத்தால் அப்பட்டமாக அம்பலப்படுத்தப்படுகிறது. பெடரல் ரிசர்வ் மாதத்திற்கு 85 பில்லியன் டாலரை பாய்ச்சும் நடவடிக்கையை தொடர்கின்ற நிலையிலும் கூட, இது நடைமுறைப்படுத்தப்படுகிறது, இந்த தொகை ஒரு ஒட்டுமொத்த ஆண்டு முழுவதும் சலுகைகளை வழங்கினால் ஆகும் செலவை விட மூன்று மடங்கிற்கும் அதிகமாகும். வரவு-செலவு திட்டம் மீதான இந்த உடன்படிக்கை, வேலைவாய்ப்பின்மை சலுகைகளுக்கு ஆகும் செலவுக்கு ஏறத்தாழ சமமான அளவிற்கு இராணுவ செலவுகளை மீளிருப்பு செய்கிறது, இது ஒவ்வொரு ஆண்டும் 1 ட்ரில்லியன் டாலர் உறிஞ்சும் ஓர் இராணுவ மற்றும் உளவுத்துறை இயந்திரத்திற்கு கூடுதலாக ஊட்டமளிக்கிறது.

வேலைவாய்ப்பின்மை சலுகை வெட்டுக்களின் விளைவாக எத்தனை பேர் வீடற்றவர்களாக ஆக்கப்படுவார்கள், அல்லது மருத்துவ பராமரிப்புக்கும், மேஜையின் மீது வரும் உணவுக்கும் இடையில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கப்படுவார்கள்? எத்தனை பேர் வறுமைக்குள் தள்ளப்படுவார்கள்? உணவு மானிய உதவி கோரும் கோரிக்கைகள் அதிகரித்து வருகின்ற நிலையில் மற்றும் பாரிய வேலைவாய்ப்பின்மையால் நாடு பாதிக்கப்பட்டிருக்கையில், பொருளாதார மீட்சி" என்ற ஒபாமா நிர்வாகத்தின் மற்றும் ஊடகங்களின் பேச்சுக்களுக்கு இடையில், இத்தகைய வெட்டுக்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இரண்டு பெருவணிக கட்சிகளும் கசப்பான எதிர்ப்பாளர்களைப் போல காட்டிக் கொள்கின்றன, ஆனால் எதார்த்தத்தில் கொள்கையின் அனைத்து அடிப்படை உட்கூறுகளிலும் அவை ஒற்றுமையாக உள்ளன. இரண்டு கட்சிகளின் அந்த அடிப்படை ஒற்றுமை, செவ்வாயன்று உடன்படிக்கையை அறிவிக்கையில் ஜனநாயக கட்சியின் செனட் வரவு-செலவு திட்ட கமிட்டியின் தலைவர் பேட் முர்ரேயால் தொகுத்து வழங்கப்பட்டது. அவரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அவரது சமதரப்பினரான போல் ரயானும், ஒரு வித்தியாசமான இணைப்பிற்காக சந்தோஷப்படுவதாக" முர்ரே கூறினார். நாங்கள் வேறுவேறு மீனை பிடிக்கிறோம். நாங்கள் கொள்கைரீதியில் சில வேறுபாடுகளைக் கொண்டுள்ளோம், ஆனால் நமது நாட்டிற்கு சிறிது உறுதிப்பாடு அவசியப்படுகிறது என்பதிலும், எங்களால் இணைந்தும் வேலை செய்யமுடியும் என்பதை காட்ட வேண்டியுள்ளது என்பதிலும் நாங்கள் உடன்படுகிறோம்."

சபையின் வரவு-செலவு கமிட்டி சேர்மேனும் 2012இல் குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளருமான ரயான், சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ பராமரிப்பு (Medicare) ஆகியவற்றை தரைமட்டமாக்கும் அந்த வரவு-செலவு திட்டத்தை முன்வைத்தார். அவர் தற்போது ஊடகங்களால் குடியரசு கட்சியின் "நிதானமான" மனிதராக காட்டப்படுகிறார்.

வரவு-செலவு திட்டம் மீதான விவாதங்களின் விளைவு எதிர்பார்க்கப்பட்டதுதான். அக்டோபரில் அரசாங்க மூடலுக்கான உத்தியோகபூர்வ சொல்லாடல் அது முக்கிய ஊடகங்கள் மற்றும் பல்வேறு போலி "இடது" அமைப்புகள் இரண்டினாலும் ஒத்து ஊதப்பட்டது ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளுக்கு இடையிலான பரந்த சித்தாந்த பிளவே அமெரிக்க அரசியலின் பிரதான குணாம்சமாக உள்ளது என்று ஊக்குவித்தவர்களுக்கு எதிராக உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது. இருகட்சி 'வேலியின்' மாயைக்குப் பின்னால், சமூக கொள்கையின் நிலையான விவகாரங்கள் மீது இரண்டு கட்சிகளுக்கும் இடையே அங்கே எப்போதும் மிகப் பெரியளவில் கருத்தொற்றுமை இருந்துள்ளது. அவை அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடிக்காக பரந்த வெகுஜனங்களை விலை கொடுக்கச் செய்ய முற்றிலுமாக உடன்பட்டுள்ளன."

WSWS முன்கணித்ததைப் போலவே, அரசாங்கம் மூடப்பட்டமை ஒபாமா நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியால் இன்னும் வலதிற்கு திரும்புவதற்கான பீடிகையாக இருந்தது. அரசாங்க முடக்கம் நடந்து முடிந்த பின்னர் மக்களை ஏழ்மைக்குள் தள்ளும் ஒரு புத்தம்புதிய உந்துதல் கொண்டு வரப்பட்டுள்ளது.

நவம்பரில், அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக உணவு மானிய முத்திரைகள் மீதான சலுகைகள் தேசியளவில் வெட்டப்பட்டன, அது 47.7 மில்லியன் மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் உணவை இல்லாமல் செய்வதற்கு சமமாகும். வரவிருக்கும் நாட்களில் காங்கிரஸ் வேளாண்மை மசோதாவில் வாக்கெடுப்பு நடத்த உள்ளது, அது இன்னும் கூடுதலாக உணவு மானிய திட்டத்தில் பில்லியன்களை வெட்டும்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், வெள்ளை மாளிகையின் ஆதரவோடு, ஒரு பெடரல் நீதிபதி டெட்ராய்ட் திவால்நிலைமையை அங்கீகரித்தார். அது டெட்ராய்ட் நகர தொழிலாளர்களின் ஓய்வூதியங்களில் பாரிய வெட்டுக்களைச் செய்ய களம் அமைத்தது மற்றும் நாடு முழுவதிலும் பொதுத்துறை பணியாளர் ஓய்வூதியங்களில் அதேபோன்ற தாக்குதல்கள் செய்யப்பட்டது.

இது தொடர்ச்சியான பல்வேறு நடவடிக்கைகளின் சமீபத்திய நிலை மட்டுமே ஆகும், இவை ஒவ்வொன்றும் செல்வ வளத்தை மேலும் மேலும் பெருநிறுவன மற்றும் நிதியியல் மேற்தட்டிற்கு கை மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளன. தன்னியல்பான ஒதுக்கீடு வெட்டுக்களில் இருந்து விலகி இருக்க விரும்புவதாக இரண்டு கட்சிகளுமே ஆரம்பத்தில் கூறிய போதினும், இத்தகைய வாதங்கள் முற்றிலுமாக வெளிப்பார்வைக்காக இருந்தன.

ஒவ்வொரு ஆண்டும், ஆண்டுக்கு ஆண்டு, நூறு பில்லியன் டாலர் அளவிற்கு செலவினங்களை வெட்டும் ஒரு இயங்குமுறைக்கு உதவும் விதத்தில் மற்றும் உள்நாட்டு செலவுகளை 1950களில் இருந்த அந்த அளவிற்கு கொண்டு வர, இருகட்சிகளின் உடன்படிக்கையானது ஒதுக்கீடு வெட்டுக்களை நிலைநிறுத்துகிறது. 2011இல் இருந்து, அமெரிக்க உள்நாட்டு சமூக செலவுகள் 8.9 சதவீதம் குறைப்பட்டுள்ளது, இந்த உண்மையை ஒபாமா பெருமையாக பேசுகிறார்.

பல ஆண்டுகளாக, குறிப்பாக 2008 நிதியியல் பொறிவிலிருந்து, ஆளும் வர்க்கம் வர்க்க உறவுகளை மறுசீரமைப்பு செய்வதில் ஈடுபட்டு வந்துள்ளது. ஒருபுறம், பிணையெடுப்புகளும் "பணத்தைப் புழக்கத்தில் விடுவதும்," மறுபுறம், சமூக திட்டங்களில் வெட்டுக்கள் மற்றும் கூலிகளைக் கீழிறக்க மற்றும் வாழ்க்கை தரங்களைக் குறைக்க பாரிய வேலைவாய்ப்பின்மையை பயன்படுத்துவது என நடந்து வருகிறது. 2010இல் இருந்து உருவாக்கப்பட்ட ஒவ்வொரு வரவு-செலவு திட்ட  நெருக்கடிகளும் அரசியல் ஸ்தாபனத்தை இன்னும் கூடுதலாக வலதிற்கு நகர்த்தி உள்ளன.

இன்னும் நிறைய வரவிருக்கின்றன. ஒபாமா அவரே கூறுவதைப் போல, இந்த வரவு-செலவு திட்ட உடன்படிக்கை ஒரு "முதல் படி தான்." அந்த உடன்படிக்கையை முடித்த கையோடு, ஆளும் வர்க்கம் மருத்துவ பராமரிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களில் இருக்கும் கணிசமான நிதிகளை நோக்கி அதன் பேராசை ஊறிய பார்வையைத் திருப்பி உள்ளது. எவ்வித வெட்டுக்களுக்கும் நிலவும் பரந்த மக்கள் எதிர்ப்புக்கு முன்னால், சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ பராமரிப்பு போன்ற திட்டங்களின் மீது உரிமையெடுக்க வரவு-செலவு திட்டம் மீதான அந்த உடன்படிக்கை இருகட்சி கட்டமைப்பை உருவாக்குகிறது என்பதே ஊடகங்கள் மற்றும் அரசியல் வியாக்யானங்களில் உள்ள ஒரு உறுதியான உட்பொருளாக உள்ளது.

இவை அனைத்திலிருந்தும், மிக தெளிவாக அரசு ஒரு நடுநிலையான மத்தியஸ்தராக இல்லாமல், மாறாக வர்க்க ஆட்சியின் ஓர் இரக்கமற்ற கருவியாக மேலெழுந்துள்ளது. தொழிலாள வர்க்கம் திருப்பி தாக்குதல் செய்ய, அதிகாரத்தைக் கையிலெடுக்கும் மற்றும் பரந்த மக்கள் நலன்களின் அடிப்படையில் அமைந்த ஒரு திட்டத்தை நிறுவும் நோக்கில், ஓர் அரசியல் மற்றும் புரட்சிகர ஐக்கியம் அவசியப்படுகிறது.

உழைக்கும் மக்களின் சமூக உரிமைகளின் பாதுகாப்பு முதலாளித்துவ அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் சாத்தியமல்ல. சமூகத்தை தனியார் இலாபத்தின் அடிப்படையில் அல்லாமல் சமூக தேவைகளின் அடிப்படையில் மறுஒழுங்கமைப்பு செய்யும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் ஆயுதபாணியான ஒரு பரந்த அரசியல் இயக்கத்தை, இரண்டு பெரும் வணிக கட்சிகளுக்கான எதிர்ப்பில், தொழிலாள வர்க்கம் கட்டியெழுப்ப வேண்டும்.