World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா India walks fine line over China’s air defence zone சீனாவின் வான் பாதுகாப்பு மண்டல விவகாரத்தில் இந்தியா பதுங்கி நடக்கிறது
By K. Ratnayake கிழக்கு சீன கடலில் கடந்த மாதம் சீனா அறிவித்த ஒரு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தின் (ADIZ) மீதுள்ள பதட்டமான சர்ச்சையில் எந்த தரப்பையும் சார்ந்து செல்வதை இந்தியா இன்று வரையில் தவிர்த்துள்ளது. ஜப்பானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தையும் உள்ளடக்கி இருக்கும் சீன மண்டலத்தினுள் இராணுவ விமானங்களைப் பறக்கவிட்டதன் மூலமாக சீனாவின் அறிவிப்புக்கு அமெரிக்கா மற்றும் ஜப்பான் சவால் விடுத்துள்ளன, அது தவறுதலாகவோ அல்லது தவறான கணிப்பினாலோ தூண்டப்பட்டால் ஆபத்தான மோதலுக்கு இட்டு செல்லும். சீனாவின் ADIZ அறிவிக்கப்பட்ட அண்ணளவாக இரண்டு வாரங்களுக்குப் பின்னர், டிசம்பர் 5இல் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் முதன் முதலில் கருத்து வெளியிட்டார். புது டெல்லியில் எரிசக்தி சார்ந்த ஒரு நிகழ்வில் பேசுகையில், “எந்தவொரு பிரச்சினையும் அதனோடு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்க்கப்பட வேண்டும்" என்பதே இந்தியாவின் "நிலையான நிலைப்பாடு" என்று அறிவித்தார். இந்தியா "அச்சுறுத்தல்களையோ" அல்லது "படைகளின் பயன்பாட்டையோ" ஆதரிக்காது என்று கூறி தொடர்ந்த அவர்: “பிரதான நபர்களை ஒரு பேச்சுவார்த்தைக்கு நீங்கள் அழைக்கும் போது, நீங்கள் இருதரப்பிலும் நிற்கிறீர்கள்,” என்றார். ஹிந்துஸ்தான் டைம்ஸில் காட்டப்பட்ட குறிப்புகளில், “நிலையான நிலைப்பாடு" என்பதன் பின்னால் இருக்கும் கொள்கையை முன்னாள் வெளியுறவு செயலாளர் லலீத் மன்சிங் வெளிப்படுத்தினார், அவர் கூறினார்: “இந்தியாவிற்கு சீனாவுடன் அதன் சொந்த பிரச்சினைகள் பல உள்ளன. சீனாவுடனான வேறு நாடுகளின் பிரச்சினைகள் மீது எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்காமல் இருப்பதே நல்லது,” என்றார். இந்தியாவும் சீனாவும் அருணாச்சல பிரதேசம், லடாக் மற்றும் சிக்கிம் மீதான தசாப்த பழமையான எல்லை சர்ச்சையில் அவற்றின் உறவுகளை முறுக்கிக் கொண்டுள்ளன, அது 1962இல் இரு நாடுகளுக்கும் இடையே யுத்தத்திற்கு இட்டு சென்றது. அவ்விரு பிராந்திய போட்டியாளர்களுக்கும் இடையே அவநம்பிக்கைகள் நிலவுகின்றன, அது சீனாவிற்கு இராஜதந்திர ரீதியில் குழிபறிக்கும் நோக்கில் மற்றும் அதை இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் நோக்கில் ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பால்" தீவிரமடைய செய்யப்பட்டது. தெற்காசியாவில் பெய்ஜிங்கிற்கு எதிர்ப்பலமாக புது டெல்லியோடு வாஷிங்டன் ஒரு மூலோபாய கூட்டை கட்டி எழுப்பி வருகிறது. சீனாவிற்கு எதிராக அமெரிக்கா அதன் நலன்களை ஆக்ரோஷத்தோடு நிலைநிறுத்த, ஜப்பானை போல, இந்தியாவையும் ஊக்குவித்து வருகிறது. கிழக்கு சீன கடலில் நெருக்கடியை முகங்கொடுத்து வருகின்ற நிலையில், சீனா இந்தியாவுடன் பதட்டங்களை தவிர்க்க விரும்பி உள்ளது. இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையிலான எல்லையோரத்தில் பெய்ஜிங் ஒரு ADIZஐ அறிவிக்காது என்று வெளியுறவு மந்திரியின் செய்தி தொடர்பாளர் கின் காங் தெரிவித்தார். அவர் கூறினார், “ஒரு ADIZ என்பதன் கருத்துருவின்படி, அது அதன் பிராந்திய விமான எல்லைக்கு வெளியே ஒரு கடலோர பகுதியில் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு விமானத்தள பகுதியாகும்.” அவர் தொடர்ந்து கூறுகையில், "ஆகவே இந்திய எல்லையோரத்தில் ஒரு வான் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்குவதென்ற பேச்சு எழவே இல்லை,” என்றார். புது டெல்லியுடன் ஒரு அமளியைத் தவிர்க்க பெய்ஜிங்கின் முயற்சிகளுக்கு இடையே, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் சீனாவால் அதன் பகுதியாக கோரப்படும் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்திற்கு விஜயம் செய்தார். அப்பகுதி "இந்தியாவின் ஓர் உள்ளார்ந்த மற்றும் முக்கிய பகுதியாகும்,” என்று முகர்ஜி அறிவித்தார், அது சீனாவிடமிருந்து உடனடியாக ஓர் எதிர்வினையைத் தூண்டிவிட்டது. “பிரச்சினையை சிக்கலாக்கும் எந்தவொரு முறைமையையும்" இந்தியா எடுக்க வேண்டாமென வலியுறுத்திய சீன வெளியுறவு விவகார செய்தி தொடர்பாளர் கின் தொடர்ந்து கூறுகையில், “எல்லையோர பகுதிகளின் அமைதியையும், பாதுகாப்பையும் நாம் ஒன்றாக சேர்ந்து பாதுகாக்க முடியும்,” என்றார். இந்திய அரசியலமைப்பின் கணிசமான பிரிவுகள் சீனாவை நோக்கி ஒரு கடுமையான அடியை முன்னெடுக்குமாறு புது டெல்லிக்கு அழுத்தம் அளித்து வருகின்றன. பாதுகாப்புத்துறையின் ஒரு முன்னணி சிந்தனைகூடமான இந்திய பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்விற்கான பயிலகத்தின் ஒரு பகுப்பாய்வாளர் அர்விந்த் குப்தா எழுதினார்: “சர்ச்சைக்குரிய எல்லையோரத்தில் எங்காவது சீனா ஒரு வான் பாதுகாப்பு மண்டலத்தை அறிவித்தால் அந்த சூழ்நிலையை இந்தியா எவ்வாறு கையாளும்? என்பதே இந்தியாவின் முன்னால் நிறுத்தப்பட்டிருக்கும் கடினமான கேள்வி. இந்த தவிர்க்கவியலா நிலைமையின் மீது இந்திய கொள்கை வகுப்பாளர்கள் குழம்பிக் கொண்டிருக்க வேண்டும்.” "சீனாவின் ஆக்ரோஷம் ஓர் உலகளாவிய அச்சுறுத்தல்,” என்ற தலைப்பில், புது டெல்லியில் உள்ள Observer Research Foundationஇன் சமீர் சரண் மற்றும் அபீஜித் ஐயர்-மித்ராவால் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை வலதுசாரி இதழான இந்தியா டுடே பிரசுரித்தது. அவர்கள் அறிவித்தனர்: “இது [ADIZ] இந்தியாவிற்கான பிரச்சினைக்கு அறிகுறியாக நிற்கிறது. சீனா இன்று கிழக்கில் ஒரு வான் பாதுகாப்பு மண்டலத்தை அறிவிக்கிறதென்றால், அருணாச்சல், சிக்கிம் அல்லது லடாக் மீது அதுபோன்ற ஒன்றை அறிவிக்க அதை எது தடுத்து நிறுத்தும்?” சீன வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அமெரிக்க விமான படையால் சமீபத்தில் பறக்கவிடப்பட்ட குண்டுவீசும் B-52 விமானங்களுக்கு களம் அமைக்க உரிமையை வழங்கும் விதமாக, அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்காததற்காக அந்த கட்டுரை ஆசிரியர்கள் இந்தியாவை விமர்சித்தனர். இந்தியா அதன் பொருளாதார வலிமையை விஸ்தரித்தும், அதன் விமானப்படையை அபிவிருத்தி செய்தும் மற்றும் ஜப்பானுடன் நெருக்கமாக இணைந்து நின்றும், “சீனாவை நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் திறனை மீட்டெடுக்க அனைத்து வாய்ப்புகளையும் அது உடனடியாக பயன்படுத்த வேண்டும்,” என்று அவர்கள் குறிப்பிட்டனர். எக்ஸ்பிரஸ் நியூஸ் இதழுக்கு அளித்த கருத்துக்களில், இந்திய கடற்படை தளபதி அட்மிரல் D. K. ஜோஷி, "அது கடற்படையை பெரிதாக சங்கடத்திற்கு உள்ளாக்கவில்லை," என்று கூறி, ஒரு வான் பாதுகாப்பு மண்டலம் மீதான சீனாவின் "ஒருதலைப்பட்சமான அறிவிப்பை" குறைத்து மதிப்பிட்டு காட்டினார். இருந்தபோதினும், அந்த பாதுகாப்பு மண்டலம் தெற்கு சீன கடல் பகுதிக்கும் விரிவாக்கப் படலாம் என்ற குறிப்பிட்ட கவலையை வெளியிட்டார். வியட்நாம் மற்றும் சீனா இரண்டினாலும் உரிமை கோரப்படும் தெற்கு சீன கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க, இந்திய நிறுவனமான ONGC விதேஷ் லிமிடெட், வியட்நாம் எண்ணெய் மற்றும் எரிவாயு குழுமத்தோடு கூட்டு ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளது. அதிலிருந்து இந்தியா அதன் தலையீட்டை விலக்கிக் கொள்ள வேண்டுமென சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீனக் கடல் ரோந்து படையிடமிருந்து எண்ணெய் வாகனங்களைப் பாதுகாக்க, அப்பகுதியில் இந்திய யுத்தக்கப்பல்கள் நிறுத்தப்படுமென கடந்த டிசம்பரில் அட்மிரல் ஜோஷி அச்சுறுத்தி இருந்தார். இந்த மாதம் கருத்து தெரிவிக்கையில், ஜோஷி கூறினார்: “ஒருங்கிணைந்த வான்வழி உட்கூறுகளில் நாமும் யூனிட்களைக் கொண்டிருக்கிறோம், சிலவேளைகளில் அவையும் [தெற்கு சீன கடலில்] செயல்படும். ஆகவே, இந்த குறிப்பிட்ட விவகாரம் [கிழக்கு சீன கடலில் சீனாவின் ADIZ விவகாரம்] தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ளது." இந்தியா மற்றும் ஜப்பானும் நெருக்கமான உறவுகளை உண்டாக்கி வருகின்றன, இது ஜப்பானிய பேரரசர் அகிடோ மற்றும் அவரது மனைவியார் நவம்பர் 30இல் இருந்து ஆறு-நாட்கள் இந்தியா விஜயம் செய்திருந்ததன் மூலமாக உயர்த்திக் காட்டப்பட்டது. இந்தியாவுடன் மூலோபாய உறவுகளை பலப்படுத்தும் விதமாக ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே அந்த விஜயத்திற்கு அழுத்தம் அளித்தார். ஊடக செய்திகளின்படி, அகிடோ இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டுமென்ற “ஜப்பானிய பிரதம மந்திரியிடமிருந்து வந்த ஓர் அழுத்தமான முறையீட்டைத்" தொடர்ந்து அந்த பேரரசர் விஜயம் செய்தார். சீனாவால் முன்னிறுத்தப்படுவதாக கருதப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, ஒரு வலதுசாரி தேசியவாதியான அபே, ஒரு "ஜனநாயக பாதுகாப்பு வைர-வலயத்தை" ஸ்தாபிக்க அழைப்புவிடுத்து வருகிறார், அதில் ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை இடம் பெற்றிருக்கக்கூடும். இந்தியா அந்த "பாதுகாப்பு வைர-வலயத்தில்" சேரவில்லை என்ற போதினும், புது டெல்லி இந்திய பொருளாதாரத்தையும், இராணுவ திறன்களையும் மேம்படுத்த அபே அரசாங்கத்துடன் உடன்படிக்கைகளில் நுழைந்துள்ளது. அருணாச்சல பிரதேசம் மீதான சீனா உடனான இந்தியாவின் எல்லை சர்ச்சையில் உருவான கூர்மையான பதட்டங்களுக்கு இடையில், மே மாதத்தில், இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் டோக்கியோவிற்கு விஜயம் செய்தார். ஜனவரியில் புது டெல்லியில் நடந்த குடியரசு தின கொண்டாட்டங்களில் அபே சிறப்பு விருந்தினராக இந்தியாவால் அழைக்கப்பட்டிருந்தார். இந்தியா மற்றும் ஜப்பானுக்கு இடையில், குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்புகளில், ஏற்படக்கூடிய வலுவான உறவுகள், புது டெல்லியை நோக்கி பெய்ஜிங்கிடம் அவநம்பிக்கைகளை மட்டுமே உயர்த்தும் என்பதோடு, அவற்றின் உறவுகளில் விரிசல் ஏற்படவும் வழிவகுக்கும். அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" கிழக்கு சீன கடலில் ஒரு அபாயகரமான வெடிப்பு புள்ளியை உருவாக்கி உள்ளதைப் போலவே, இது அதிகளவிலான கொந்தளிப்பையும் மற்றும் ஆசியா முழுவதிலும் மோதலுக்கான அபாயத்தையும் உயர்த்து வருகிறது. |
|