World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greece’s 2014 budget lays out more social attacks

கிரேக்கத்தின் 2014 வரவு-செலவுத் திட்டம் இன்னும் சமூகத் தாக்குதல்களை முன்வைக்கிறது

By Christoph Dreier 
11 December 2013

Back to screen version

கடந்த சனிக்கிழமை மாலை, கிரேக்க பாராளுமன்றம் 2014 க்கான வரவு-செலவுத் திட்டத்தை ஏற்றது; இது இன்னும் சமூக வெட்டுக்கள், பெரும் பணிநீக்கங்களை முன்வைக்கிறது.

இத்திட்டங்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் பெருகியுள்ளன. எதேன்ஸ் பல்கலைக்கழக ஊழியர்கள், தொழிற்சங்கத் தலைமையை எதிர்த்துள்ளதோடு, 14 வாரமாக தங்கள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து நடத்துகின்றனர்.

153-142 என்று ஏற்கப்பட்ட வரவு-செலவுத் திட்டம், வரி அதிகரிப்புக்களில் 2.1 பில்லியன் யூரோக்களையும், செலவு வெட்டுக்களில் 3.2 பில்லியன் யூரோக்களை வெட்டவும் திட்டமிட்டுள்ளது. வெட்டுக்கள் முக்கியமாக சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பில் உள்ளன; இது ஏற்கனவே பேரழிவு நிலையில் உள்ளது; சமூக காப்புறுதி துறையிலும் உள்ளது. பல சாதாரண தொழிலாளர்களை பாதிக்கும் சொத்து வரியை, அதிகரிப்பதின் மூலமும் பெறப்படவுள்ளது.

நெருக்கடி வெடித்ததில் இருந்து ஒவ்வொரு ஆண்டும், வரவு-செலவுத் திட்டம் பொருளாதார வளர்ச்சி குறித்த சாதகமான கணிப்புக்களை அடிப்படையாக கொண்டுள்ளது. வல்லுனர்கள், பொருளாதாரம் அடுத்த ஆண்டு 0.6% வளர்ச்சி அடையும் என்னும் வாய்ப்பை கிட்டத்தட்ட இல்லை என்று கூறிவிட்டனர்; 6 ஆண்டுகள் மந்தநிலைக்கு பின்னும் இந்நிலைதான் உள்ளது. நடப்பு ஆண்டின் சமூக வெட்டுக்கள் தற்போது மதிப்பிட்டுள்ளதை விட மிகவும் மோசமாகத்தான் போகும்.

பாராளுமன்றத்தில் இந்த வாரம், சொத்து வரி மீது அவசர வாக்களிப்பு ஒன்றை நடத்தும். இதைத்தவிர சிறு வீடுகள், அடுக்கு மாளிகை வீடுகளையும் மீண்டும் எளிதாக எடுத்துக் கொள்ளும் வகையில் ஒரு சட்டவரைவும் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் (EU), சர்வதேச நாணய நிதியம் (IMF), ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) எனும் “முக்கூட்டு” இரு சட்டங்களையும் நீண்ட காலமாக தாமதிக்கப்படும் 1 பில்லியன் யூரோ பிணை எடுப்புப் பணத்தை வெளியிட முன்னிபந்தனையாக வைத்துள்ளது.

கடன் கொடுக்கப்படுவதற்கு முன்பு, தொடர்ச்சியான அரசாங்க நிறுவனங்கள் மூடப்படும் அல்லது பெருமளவில் குறைக்கப்படும்; இதில் EAS என்னும் ஆயுதங்கள் மற்றும் பொறியியல் நிறுவனமும் உள்ளது. இந்த ஆண்டு கூடுதல் வருகைகளை முக்கூட்டு இரத்து செய்துவிட்டது; ஜனவரி மாதம்தான் ஏதென்ஸுக்கு வெட்டுக்களின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யத் திரும்பும்.

இந்த புதிய வரவு-செலவுத் திட்டத்தில், வெட்டுக்கள் மட்டும் இருக்கப்போவதில்லை, 2014 வரவு-செலவுத் திட்டத்தின் மத்திய கூறுபாடாக முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட பரந்த பணிநீக்கங்களும் இருக்கும். முக்கூட்டுடன் அடையப்பட்ட உடன்பாடுகளின்படி, கிரேக்க அரசாங்கம் 25,000 பொதுத் தொழிலாளர்களை, இந்த ஆண்டு இருப்பு நகர்வு (mobility reserve) தொகுப்பு என்பதற்கு மாற்ற வேண்டும், உடனடியாக 4,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

இன்னும் 1,000 முதல் 1,500 பணிநீக்கங்கள் நிலுவையில் உள்ளன; இருப்பு நகர்வு குறித்த எதிர்ப்பு தீவிரமாகிறது; ஏனெனில் அது பெரும்பாலும் வேலையின்மைக்கான மாற்றம்தான்.

பல்கலைக்கழகங்களில் நிர்வாகத்துறைத் தொழிலாளர்கள், பணியாளர்கள் பாதியாக்கப்பட வேண்டும் என்பதற்கும் இருப்பில் 1,400 தொழிலாளர்களை மாற்ற வேண்டும் என்பதற்கும் எதிராகப் போராடுகின்றனர்.

ஏதென்ஸ் பல்கலைக்கழக நிர்வாகத்துறைத் தொழிலாளர்கள், மற்றும் சிறிய தொழில்நுட்ப பல்கலைக்கழக தொழிலாளர்கள் கடந்த 13 வாரமாக தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். பல்கலைக்கழகங்களின் பணி தொடர முடியாதபடி; மாணவர்களும் ஆசிரியர்களும் நிர்வாகத் துறை ஊழியர்களுக்கு ஆதரவைக் கொடுக்கின்றனர்.

கல்வி அமைச்சரகம் பல சந்தர்ப்பங்களில் நிர்வாகத்துறைத் தொழிலாளர்களை  இராணுவச்சட்டத்தின்  கீழ் இருத்தப் போவதாக அச்சுறுத்தி, வேலைநிறுத்த மறியல்களைக் கலைக்குமாறும் பொலிசுக்கு உத்திரவிட்டுள்ளது. நீதிமன்றங்கள் வேலைநிறுத்தத்தை சட்டவிரோதம் என அறிவித்துள்ளன. பல்கலைக்கழகத் தலைவர் Theodosis Pelegrinis மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடக்கப்பட்டுள்ளன, ஏனெனில் அவர் வேலைநிறுத்த தொழிலாளர்களுடன் ஒற்றுமையாக உள்ளார். ஆயினும்கூட தொழிலாளர்கள் தொடர்ந்து உறுதியாக வேலைநிறுத்தத்தில் உள்ளனர்.

இதற்கு மாறாக, பல்கலைக்கழக ஊழியர்கள் தொழிற்சங்கம் (ODPTE) தொடக்கத்தில் இருந்தே வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தி ஏனைய தொழிலாளர்களின் ஒற்றுமை நடவடிக்கைகளையும் வரம்பிற்கு உட்படுத்தியுள்ளது. கடந்த வாரம், தொழிற்சங்கத் தலைமை வேலைநிறுத்தத்தை இறுதியாக முடிக்க முயன்றது. கல்வி அமைச்சரகம் பேச்சுக்களுக்கு முன்வந்தது, ஆனால் இழிந்த முறையில் அது சில தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் என்றும், செலவுகளை ஈடுகட்ட அனைத்துத் தொழிலாளர்களின் ஊதியங்களையும் குறைக்கும் என்றும் கூறியுள்ளது.

கடந்த வியாழன் தொழில்நுட்ப பல்கலைக்கழக கூட்டம் ஒன்றில் தொழிற்சங்கத் தலைமை வேலைநிறுத்தத்தை முடிக்கவும் அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்தவும் பெரும்பான்மையை வெல்ல முடிந்தது. பின்னர், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வேலைநிறுத்த நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும் என்று ODPTE அழைப்பு விடுத்துள்ளது.

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் தொழிற்சங்கத்தின் அழுத்தம் இருந்தபோதிலும்கூட, ஏதென்ஸ் பல்கலைக்கழகத் தொழிலாளர்கள் திங்களன்று புதன்வரை வேலைநிறுத்தத்தை தொடர்வது என்றும் அதன்பின் அதைத் தொடர்வது குறித்து முடிவெடுக்கவும் உறுதியாயுள்ளனர். பல்கலைக்கழகத்தின் சட்டப்பிரிவு, மாணவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது.

பல்கலைக்கழகங்களின் சமூக மோதல் என்பது பொதுவான வளர்ச்சியின் கூர்மையான வெளிப்பாடாகும். தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் போராட்டங்களை அடக்குவதில் பெருகிய முறையில் திறனற்று உள்ளன, அரசாங்கம் பெருகிய மிருகத்தனமான முறையில் எதிர்கொள்ள விரும்புகிறது.

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் பணிநீக்கங்களுக்கு எதிராக இரண்டு வாரங்களாக வேலைநிறுத்தத்தில் உள்ளதோடு, டிசம்பர் 13 வரை வேலைநிறுத்தத்தை தொடர்வது என்றும் முடிவெடுத்துள்ளனர். சுகாதார மந்திரி அடோனிஸ் ஜோர்ஜியடிஸ், டாக்டர்கள் தங்கள் எதிர்ப்பை நிறுத்தவில்லை என்றால் இன்னும் அதிக விரைவில் வேலை வெட்டுக்களை தான் செயல்படுத்தப்போவதாக அச்சறுத்தியுள்ளார். நூற்றுக்கணக்கான டாக்டர்கள் சுகாதார அமைச்சரகத்திற்குமுன் கடந்த வெள்ளியன்று கூடினர். வியாழன், வெள்ளியன்று கலாச்சார அமைச்சரக தொழிலாளர்களும்அரசாங்க அருங்காட்சியகங்கள், அகழ்வாராய்ச்சி நிலையங்களுக்குப் பொறுப்பானவர்கள்— வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.

கடந்த வாரம் நிர்வாக சீர்திருத்த அமைச்சரகத்திற்கு வெளியே தமது வேலை இழப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த பள்ளிக் காவலர்கள் மற்றும் சுத்தப்படுத்துவோர் எதிர்ப்புக்களை பொலிசார் தாக்கினர். இந்த ஆர்ப்பாட்டங்கள் 2008ல் பொலிசாரால் கொலைசெய்யப்பட்ட Alexis Grigoropoulos நினைவுகூர நடந்தன; இவையும் பொலிசின் வன்முறைக்கு இலக்காயின.

அரசின் அதிகரிக்கும் மிருகத்தனம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கிரேகம் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள சமூகப் பேரழிவின் நேரடி விளைவாகும். இந்நிலைமைகள் மக்களின் ஜனநாயக உரிமைகளுடன் இயைந்திருக்க முடியாது.

கடந்த வாரம் ஒரு 13 வயதுப் பெண், கார்பன் மொனோக்சைட் நச்சினால் இறந்துபோனார். அவரது வேலையற்ற தாயின் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது, மற்றும் அதிக வரியால் சூடேற்றும் எண்ணெயைக் கூட அவரால் வாங்க முடியவில்லை. எனவே அவர் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட நிலக்கரி அடுப்பு ஒன்றால் வீட்டை சூடுபடுத்த முயன்றார். அதே வாரம் ஒரு 86 வயதுப் பெண்மணியும் ஒரு தற்காலிக அடுப்பைக் கட்ட முயன்ற இதே காரணத்தால் இறந்துபோனார்.

கடந்த வியாழன் தங்கள் வீட்டில் ஏற்பட்ட ஒரு மெழுகுவர்த்தி தீயினால் இருவர் கடுமையான காயமுற்றனர். அவர்களுடைய மின்வசதியும் துண்டிக்கப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக்கான கிரேக்கர்கள் தற்பொழுது இதே விதியைப் பகிர்ந்து கொள்கின்றனர், ஏனெனில் அவர்களால் கட்டணம் கொடுக்க முடியவில்லை. எரிசக்தி அளிக்கும் DEI ஐ எப்படித் தனியார்மயம் ஆக்கலாம் என்னும் வழிவகையை அரசாங்கம் விவாதிக்கிறது; அதே நேரத்தில் வணிகத்திற்கான எரிசக்தி செலவுகளைக் குறைக்கிறது.

27%க்கும் மேலான கொடூரமான வேலையின்மை விகிதம், வேலை நிலைமைகளை மோசமாக்கி, பொதுவாக அடிமைத்தனமான பணிநிலைமைகளுக்கு வகை செய்துள்ளது. ஓர் அறிக்கையின்படி, கிரீட் என்ற இடத்தில் மிட்டாய் தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர், எரியுண்டனர், அவமானப்படுத்தப்பட்டனர். அவர்கள் மணி ஒன்றிற்கு 3 யூரோக்கள்தான் ஊதியம் பெற்றனர்; பணிநேரங்களோ 15 மணிக்கும் மேலாக நீடித்தது.

பெருகிய வேலைகள் தன்னார்வ அடிப்படையில் கொடுக்கப்படுகின்றன; தொழிலாளர்கள் உணவும் தங்குமிடமும்தான் பெறுகின்றனர், ஊதியமோ கிடையாது. மற்றும் ஒரு 700,000 ஊழியர்கள் உரிய நேரத்தில் ஊதியம் பெறுவதில்லை. துணை ஒப்பந்தக்காரர்கள் பெருகியுள்ளனர்; ஒப்பந்தப்படி, இவர்கள் குறிப்பிட்ட ஊதியம் கொடுக்க வேண்டும்; ஆனால் பணிநேரம் முடிந்தபின் தங்கள் தொழிலாளர்களிடம் இவர்கள் சென்று ஊதியத்தின் ஒரு பகுதியை பணமாக கோருகின்றனர்.