World Socialist Web Site www.wsws.org |
Australia’s integration into US war plans against China சீனாவிற்கு எதிரான அமெரிக்க யுத்த திட்டங்களுக்குள் ஆஸ்திரேலியாவின் ஒருங்கிணைவுPeter Symonds ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்புக்குள்" ஆஸ்திரேலியாவின் ஆழ்ந்த ஒருங்கிணைவானது, சீனாவுடன் ஒரு யுத்தத்திற்காக இந்தோ-பசிபிக் முழுவதிலும் செய்யப்படும் அமெரிக்க தயாரிப்புகளின் புதிய குணாம்சத்தை எடுத்துக்காட்டுகிறது. ஆஸ்திரேலியா, ஜப்பானுடன் சேர்ந்து, அப்பிராந்தியத்தில் எதிர்கால அமெரிக்க நடவடிக்கைகளுக்கான மிகப் பெரிய தளமாக வேகமாக மாற்றப்பட்டு வருகிறது. கடந்த மாதத்தின் ஆஸ்திரேலிய-அமெரிக்க மந்திரிமார் (AUSMIN—Australia-US Ministerial) கூட்டத்தில், ஆஸ்திரேலியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு மந்திரிகள் "வடக்கு ஆஸ்திரேலியாவில் அமெரிக்க விமானப்படையின் விமான சுழற்சிமுறையை அதிகரிக்க" உடன்பட்டனர், அத்தோடு அவர்கள் "ஆஸ்திரேலியாவில் மேலும் கூடுதலாக கடற்படை ஒத்துழைப்பை" ஏற்படுத்தவும் மற்றும் "ஆஸ்திரேலியாவில் கூடுதலாக ஒருங்கிணைந்த இராணுவ ஒத்திகைகள் மற்றும் அப்பிராந்தியத்தில் பரந்தரீதியில் பன்முக நடவடிக்கைகளை" மேற்கொள்ளவும் பொறுப்பேற்றனர். அமெரிக்காவின் சுழற்சிமுறை நிலைநிறுத்தல்களை (US rotational deployments) ஆதரிக்க ஒரு "பிணைப்பு உடன்படிக்கையின்" மீது பேச்சுவார்த்தைகள் தொடங்க உள்ளன. AUSMIN அறிக்கையானது பெண்டகனின் யுத்த திட்டங்களில் ஆஸ்திரேலியாவின் வியத்தகு வேகத்துடனான ஈடுபாட்டை பிரதிநிதித்துவம் செய்கிறது. நடைமுறையில் அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் என்பதைக் குறிக்கும் சுழற்சிமுறை நிலைநிறுத்தல்கள் என்றழைக்கப்படுபவை, பின்புலத்தில் சிறப்பாக நடந்து வருகின்றன. 2017 வாக்கில், வடக்கு நகரமான டார்வினில் அமெரிக்க கடற்படையின் பிரசன்னம் 2,500ஐ எட்டும்—இது விமானங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களோடு கூடிய ஒரு முழுமையான கப்பல் விமான தரை நடவடிக்கை படையாக இருக்கும். அணுஆயுதம் ஏந்தக்கூடிய குண்டுவீசும் B-52 ரக விமானங்கள் ஏற்கனவே டார்வினுக்கு அருகில் ஆஸ்திரேலிய விமானத்தளங்களுக்குள், பயிற்சி ஓட்டங்களாக அல்ல, முழு நடவடிக்கைகளாக நடத்தப்பட்டு வருகின்றன. AUSMIN அறிக்கையின் மொழி திட்டமிட்டு மௌனமாக்கப்பட்டு உள்ள நிலையில், பல அமெரிக்க சிந்தனைக்கூட அறிக்கைகள் சீனாவிற்கு எதிரான அமெரிக்க யுத்த தயாரிப்புகளில் ஆஸ்திரேலியாவின் மைய முக்கியத்துவத்தை உயர்த்திக் காட்டி உள்ளன. "இந்தோ-பசிபிக்கின் நுழைவாயில்: ஆஸ்திரேலிய பாதுகாப்பு மூலோபாயம் மற்றும் ஆஸ்திரேலிய-அமெரிக்க கூட்டுறவின் எதிர்காலம்" என்ற தலைப்பில் மூலோபாய மற்றும் வரவு-செலவு மதிப்பீட்டு மையம் (CBSA) சென்ற மாதம் ஓர் அறிக்கை வெளியிட்டது, அது விளக்கியதாவது: “அமெரிக்க மூலோபாயத்திற்கான புவிஅரசியல் உட்பொருளில், ஆஸ்திரேலியா 'கீழே' இருந்து 'மேலே மையத்திற்கு' நகர்ந்திருந்தது." பென்டகனுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ள CBSA, சீனாவுடனான ஒரு அமெரிக்க யுத்தத்தில் ஆஸ்திரேலிய இராணுவமும் அதன் இராணுவ தளங்களும் வகிக்கும் பாத்திரத்தைப் போதியளவிற்கு விரிவாக விளக்கி இருந்தது. தென் கிழக்கு ஆசியா முழுவதிலும் முக்கிய கடல்வழி பாதைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமாகவும் மற்றும் இந்திய பெருங்கடலில் சீன கப்பல்களின் மீது தாக்குதல்களை நடத்துவதன் மூலமாகவும் சீனாவிற்கான ஓர் அமெரிக்க முற்றுகையை தாங்கி நிற்க ஒரு பரந்த இராணுவத் தளமாக அந்த தீவு கண்டம் மாற்றப்படும். சீன நிலப்பரப்பை நாசப்படுத்த அது அதன் வான்கடல் யுத்த திட்டத்தை (AirSea Battle plan) தொடங்கியுள்ள நிலையில், அது அமெரிக்க இராணுவத்திற்கான ஒரு பாதுகாக்கப்பட்ட பின்புற பகுதியாகவும் செயல்படும். வடக்கு ஆஸ்திரேலிய விமான தளங்களை மற்றும் மேற்கத்திய ஆஸ்திரேலியாவில் ஸ்டேர்லிங் கடற்படை தளத்தை மேம்படுத்த என்ன அவசியப்படுகிறது என்பதையும், அத்தோடு ஆஸ்திரேலிய இராணுவத்திற்கு வாங்க வேண்டிய தேவைகள் குறித்தும் அந்த அறிக்கை விவரிக்கிறது. மேற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு "விண்வெளி பாதுகாப்பு" தளங்களைக் கட்டுவது மற்றும் இணைய போர்முறை திறமைகளை விரிவாக்குவது உட்பட இராணுவ ஒத்துழைப்பின் ஏனைய பகுதிகளையும் அந்த AUSMIN அறிக்கை முன்வைத்தது. எட்வார்ட் ஸ்னோவ்டெனால் கசிய விடப்பட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையின் (NSA) ஆவணங்கள் அம்பலப்படுத்தியதைப் போல, ஆசியாவில் ஏற்கனவே—யுத்தத்தின் ஓர் இன்றியமையா உட்கூறாக விளங்கும்—NSA'இன் பாரிய ஒற்றுவேலை நடவடிக்கைகளின் மையமாக ஆஸ்திரேலியா இணைந்திருந்தது. அத்தோடு Pine Gap போன்ற பிரதான உளவு தளங்களால் சேகரிக்கப்பட்ட உளவு தகவல்களோடு, ஆஸ்திரேலிய முகமைகள் கடலுக்கடியில் செல்லும் கேபிள்களுக்குள் இருந்து தகவல்களை உருவியும் மற்றும் அப்பிராந்தியம் முழுவதிலும் ஆஸ்திரேலிய இராஜதந்திர நடவடிக்கைகளில் செவியுறு மையங்களைச் (listening posts) செயல்படுத்தியும் பாரியளவிலான தரவுகளை NSAக்கு வழங்குகின்றன. வாஷிங்டன், சீனாவின் மீது யுத்த பிரகடனம் செய்வதென்றால் அமெரிக்கப் படைகளோடு ஆஸ்திரேலிய இராணுவத்தின் நெருங்கிய ஒருங்கிணைப்பானது, ஆஸ்திரேலியா தானாகவே அந்த யுத்தத்தில் ஈடுபடுமளவிற்கு இருக்கும். யுத்த அறிவிப்பிற்கும் கூட தயங்கும் ஒரு அரசாங்கத்தை கான்பெர்ராவில் கொண்டிருக்க வாஷிங்டனால் இயலாது. புதிய அமெரிக்க பாதுகாப்பிற்கான மையம் (CNAS) எனும் மற்றொரு அமெரிக்க சிந்தனைக்கூடம், "தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் அரசியல்ரீதியாக நிலையான அமெரிக்க இராணுவ பிரசன்னத்தைக் கட்டியெழுப்பும்" பிரச்சினையின் மீது, அக்டோபரில் பிரசுரிக்கப்பட்ட, ஓர் ஒட்டுமொத்த அறிக்கையையும் அர்பணித்திருந்தது. அமெரிக்க இராணுவ தளங்களுக்கு அப்பிராந்தியத்தில் நிலவும் பரந்த பொதுமக்களின் எதிர்ப்பை துல்லியமாக அறிந்துள்ள நிலையில், CNAS அறிக்கை ஒரு மூலோபாயத்தை விவரித்தது. "முக்கிய அரசியல் சவால்களில் இருந்து இந்த பிரசன்னத்தைப் பிரித்து வைக்கும் கொள்கைகளை முன்மொழிந்த அதேவேளையில் அந்த அறிக்கை பரந்த அமெரிக்க இராணுவ பிரசன்னத்திற்கான ஓர் உறுதியான காரணத்தையும் அபிவிருத்தி செய்வதை நோக்கமாக கொள்கிறது." ஆசியாவில் அமெரிக்க இராணுவ ஆயத்தங்களை மூடிமறைக்க மற்றும் அரசியல் எதிர்ப்புகளை சரிக்கட்ட வடிவமைக்கப்பட்ட CNASஇன் மிதமான யோசனைகளை ஏற்கனவே ஒபாமா நிர்வாகம் கடந்து சென்றுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் நவம்பர் 20இல் எதை குறிப்பிட்டாரோ அந்த "முன்னோக்கி-நிலைநிறுத்தும் அரசியல் தந்திரத்தை" (forward-deployed diplomacy) நிலைநிறுத்தி உள்ளது. “ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் ஒவ்வொரு தலைநகருக்கும் மற்றும் ஒவ்வொரு மூலைக்கும்... நம்முடைய உடைமைகளை" அனுப்புவதென்பதை அது உள்ளடக்கி இருந்தது. ஒபாமா நிர்வாகத்தின் "முன்னெடுப்பின்" இரண்டு அச்சாணிகளான—ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான்—சிறப்பு கவனிப்பின் கீழ் ஒருமுகப்படுத்தப்பட்டு இருந்தன. ஜூன் 2010இல், ஜப்பானிய பிரதம மந்திரி யூகியோ ஹட்டோயாமா, அதற்கு வெகு சில வாரங்களுக்கு பின்னர், ஆஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் ரூட் இருவரும் வாஷிங்டனின் பின்புலத்தோடு பதவியிலிருந்து உந்தி வெளியேற்றப்பட்டனர். ஒபாமாவின் பார்வையில் ஹட்டோயாமா மற்றும் ரூட் இருவருமே ஒரே "குற்றத்தை" செய்தனர். பெய்ஜிங்கின் மீது ஒபாமா அழுத்தத்தை அதிகரித்திருந்த அந்த சமயத்தில், அவர்கள் அமெரிக்க கூட்டணிகளுக்கு உடன்பட்ட அதேவேளையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பதட்டங்களைத் தணிக்கும் முயற்சிகளையும் முன்மொழிந்தனர். ஆஸ்திரேலியா விஷயத்தில், பிரதான தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க தரகர்கள், பின்னர் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் இவர்களை அமெரிக்க தூதரகத்தின் "பாதுகாக்கப்பட்ட ஆதாரங்களாக" அம்பலப்படுத்தியது, உடனடியாக வாஷிங்டனுக்கு விசுவாசமாக உறுதியளித்த ஜூலியா கில்லார்டைக் கொண்டு ஒரேயிரவில் ரூட்டை மாற்றிய ஓர் உள்கட்சி அரசியல் சதிக்கு ஒத்து ஊதினர். ஆஸ்திரேலியாவின் பிரதான முக்கியத்துவமானது, நவம்பர் 2011இல் "முன்னெடுப்பை" உத்தியோகபூர்வமாக அறிவிக்க, வாஷிங்டனில் அல்ல, மாறாக கில்லார்டின் உபயத்தோடு ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் அறிவிக்க ஒபாமா எடுத்த முடிவால் அடிக்கோடிடப்படுகிறது. தற்போது, வெறுமனே மூன்று மாதங்களாக பதவியில் இருந்துவரும், தாராளவாத-தேசிய கூட்டணி அரசாங்கம், அதற்கு முன்னர் இருந்த தொழிற்கட்சியைப் போலவே, சீனாவை நோக்கிய வாஷிங்டனின் வலியத்தாக்கும் மூலோபாயத்திற்கு தயக்கமின்றி அதன் ஆதரவை உடனடியாக எடுத்துக்காட்டி உள்ளது. கடந்த மாதம் கிழக்கு சீன கடலில் ஒரு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை சீனா அறிவித்தபோது, அந்த நகர்வை கண்டிக்க ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி ஜூலி பிஷப் வாஷிங்டன் மற்றும் டோக்கியோவுடன் உடனடியாக சேர்ந்து கொண்டார். நியூசிலாந்தைப் போல ஆஸ்திரேலியாவும் எந்த தரப்பையும் சார்ந்து நிற்பதைத் தவிர்த்திருக்கலாம், ஆனால் அதற்கு மாறாக பிஷப் கண்டனம் தெரிவிக்க சீனத் தூதரை அழைத்தார். கிழக்கு சீன கடலில் பதட்டங்களின் திடீர் சீற்றம், ஆசியா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கம் யுத்தத்திற்குள் செல்லும் மிக நிஜமான ஒரு ஆபத்தை முகங்கொடுத்திருக்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இருந்த போதினும் சீனாவிற்கு எதிராக நவீன அமெரிக்க யுத்த தயாரிப்புகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் கொண்டுள்ள பொறுப்புணர்வு குறித்து தொழிலாளர்களும், இளைஞர்களும் வேண்டுமென்றே இருட்டில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் நீண்டநெடிய ஆஸ்திரேலிய தேர்தல் பிரச்சாரம் முழுவதும், வாஷிங்டன் மற்றும் கான்பெர்ராவின் மூலோபாய வட்டாரங்களில் நிகழும் விவாதங்களின் மீது ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும், பொதுவிவாதம் நடத்தவில்லை என்பது கூட அல்ல, அவற்றைக் குறித்து எதையும் குறிப்பிடாமலேயே இருட்டடிப்பு செய்தன. ஆழமடைந்துவரும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியானது, ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் நடுநடுங்க செய்த புவி-அரசியல் பதட்டங்களை போன்று அதேவிதத்தில் இருக்கும் அவற்றை எரியூட்டி வருகிறது. ஆசியாவிலும் உலகம் முழுவதிலும் அதன் பொருளாதார மற்றும் மூலோபாய மேலாதிக்கத்தை தக்கவைப்பதற்காக இராணுவ பலத்தை உபயோகிக்க விரும்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதல், முதலாம் உலக யுத்தத்தின் பேரழிவுகளை முற்றிலுமாக விஞ்சிநிற்கும் ஒரு மோதலை விரைவுபடுத்த அச்சுறுத்தி வருகிறது. ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் உலகளாவிய முதலாளித்துவத்தை மற்றும் அதன் காலங்கடந்த தேசிய-அரசு அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான—ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா மற்றும் ஆசியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள—தொழிலாளர்களின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டம் மட்டுமே இந்த யுத்த உந்துதலை நிறுத்துவதற்கான ஒரே கருவியாகும். |
|