தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
ஒபாமாவும் மண்டேலாவும்
Bill Van
Auken Use this version to print| Send feedback முன்னாள் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவரும் தென் ஆபிரிக்க ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலாவிற்கு அளிக்கப்பட்ட நினைவாஞ்சலியில் பராக் ஒபாமாவால் செவ்வாயன்று வழங்கப்பட்ட உரை, அந்நிகழ்வு நடவடிக்கைகளிலேயே உச்சநிலை என்றரீதியில் பரவலாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அந்நிகழ்வின் நடவடிக்கைகள் அவற்றின் வார்த்தைஜாலங்களுக்கும் மற்றும் அடங்காத பார்வையாளர்களுக்காகவும் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. ஜோஹனெஸ்பேர்க்கின் FNB மைதானத்தில் கூடியிருந்த கூட்டத்தில் உரையாற்ற இருந்த ஆறு வெளிநாட்டு அரசு தலைவர்களில் அமெரிக்க ஜனாதிபதி முதலாவதாக உரையாற்றினார். “போராட்டம்," “விடுதலை," “சுதந்திரம்" மற்றும் "புரட்சி" போன்ற வீராவேச வார்த்தைகளால் அந்த உரை நிரம்பி இருந்தது, மண்டேலாவின் ஆண்டுக்கணக்கான தியாகம், சிறைவாசம் மற்றும் இன்னல்களின் பாரம்பரியத்திற்குள் ஒபாமாவை மூடிமறைக்க முயன்ற அந்த உரையின் முயற்சியானது போலித்தனத்தின் ஓர் அருவருப்பூட்டும் நடைமுறையாகும். ஆபிரிக்க கண்டத்தின் ஒரு முக்கிய கூட்டாளியாக பல தசாப்தங்களாக இருந்து தென் ஆபிரிக்க நிறவெறி ஆட்சியை கணக்கிட்டு வந்த ஓர் அரசின் தலைவராக அவர் இருக்கிறார் என்பதையோ, அமெரிக்க கொள்கையின் எதிர்ப்பாளர்களாக கருதப்பட்டவர்களை வேட்டையாடும் டிரோன்களைக் கொண்டு படுகொலை செய்வதில் அவர் எதை ஒரு புத்தம்புதிய படுகொலை நிறுவனத்தைப் போல இப்போது பயன்படுத்துகிறாரோ அந்த CIA, மண்டேலாவை 27 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு இட்டுச் சென்ற 1962 கைது நடவடிக்கையில் ஒரு கருவியாக பாத்திரம் வகித்தது என்பதையோ, ஒபாமா உரையின் குறிப்புகளைக் கொண்டு ஒருவரால் ஒருபோதும் ஊகிக்க முடியாது. 2008 வரையில்—அதாவது தென் ஆபிரிக்க ஜனாதிபதியாக இருந்து மண்டேலா பதவியிறங்கி ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் வரையில்—வாஷிங்டன் அதன் வெளிநாட்டு பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து அவரை நீக்கி இருக்கவில்லை. சிடுமூஞ்சித்தனம் மற்றும் பாசாங்குத்தனத்தின் மீது ஒபாமா மட்டுமே ஏகபோகத்தைக் கொண்டிருக்கவில்லை. வாஷிங்டனின் நெருங்கிய பங்காளி பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூனும் மண்டேலாவை நினைவுகூரும் வாழ்த்துப்பாவில் அவரோடு சேர்ந்து கொண்டார், கேமரூன் 1989இல், நிறவெறி ஆட்சி அதன் இறுதி காலங்களில் நின்றிருந்தபோது, சர்வதேச தடைகளுக்கு எதிராக ஒரு தரகு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றும் அனைத்து செலவுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பயணமாக தென் ஆப்ரிக்கா சென்றார். அந்நாட்களில், அவருடன் இருந்த சக இளம் டோரிகள் "மண்டேலாவை தூக்கிலிடு" பொத்தான்களை அழுத்தி விளையாடுவதில் பெருமிதம் கொண்டிருந்தனர். ஒபாமா விஷயத்தில், அவரின் சொந்த சாதனைகள் குறித்து உருவாக்கப்பட்டுள்ள கட்டுக்கதைகளையும் மற்றும் மண்டேலாவின் சுயவாழ்க்கை இரண்டையும் இணைத்து நெய்ய அங்கே ஒரு முயற்சி இருந்தது. இது அவருடைய உரையின் முடிவில் வெளிப்படையாக வெளிப்பட்டது. “முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், அப்போது நான் ஒரு மாணவனாக இருந்த போது, நான் மண்டேலாவைக் குறித்தும் இந்த நிலத்தில் நடந்த போராட்டங்கள் குறித்தும் படித்தேன்," என்று அறிவித்த அவர், “அது எனக்குள் ஏதோவொரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அது எனது சொந்த பொறுப்புக்களையும் மற்றும் மற்றவர்களுக்கான பொறுப்புக்களையும் எடுக்க என்னை எழுப்பி விட்டது, அது நம்புதற்கரிய ஒரு பயணத்தை எனக்கு அமைத்து கொடுத்தது, அதனால் தான் என்னை இங்கே இன்று காணமுடிகிறது," என்றார். உண்மையிலேயே நம்புதற்கரிய பயணம் தான்! கல்லூரியிலிருந்து பட்டப்படிப்பு முடித்து வெளியே வந்த பின்னர், ஒபாமா—ஒருவேளை மண்டேலாவை முன்னுதாரணமாக கொண்டு உந்தப்பட்டிருந்தாலும் கூட—பிசினஸ் இன்டர்நேஷனல் கார்பரேஷனில் ஒரு "பகுப்பாய்வாளராக" (analyst) முதல்முதலில் வேலையில் சேர்ந்தார், அந்நிறுவனம் CIA முகவர்களுக்கான ஒரு மறைவிட முகாமாக சேவை செய்து கொண்டே அமெரிக்க பெருநிறுவனங்களுக்கான உளவுத் தகவல்களை வழங்கியது. விறுவிறுவென்று அமெரிக்க ஜனாதிபதியாக உயர்ந்த அவரின் வளர்ச்சி போக்கில் எந்த சமூக போராட்டங்களும் இணைந்திருக்கவில்லை, அவர் ஒரு வலதுசாரி இராணுவவாதியாகவும் மற்றும் வோல் ஸ்ட்ரீட் பாதுகாவலராகவும் மாற, பேரங்களில் மில்லியன்களை அவரால் சம்பாதிக்க முடிந்ததோடு, ஹார்வார்டு சட்ட பள்ளியிலும் பின்னர் சிகாகோவில் செல்வந்த நலன்களாலும் அலங்கரிக்கப்பட்டார். அமெரிக்காவில் சிவில் உரிமை இயக்கத்தை—அதனோடு அவருக்கு எந்த தொடர்பும் இல்லை—கையிலெடுத்த ஒபாமா, அதை தென் ஆபிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டங்களோடு ஒப்பிட்டார். “இங்கே முந்தைய நிலைமையில் இருந்த உண்மையைப் போல, அது, ஒரு புதிய நாளின் விடியலைப் பார்க்க—தெரிந்தும் தெரியாமலும்—எண்ணிக்கையில்லா மக்களின் உயிர்களைப் பறித்தது," என்றார். “அந்த போராட்டத்தில் மிஷேலும் (ஒபாமா மனைவி) நானும் ஆதாயமடைந்தோம்." இங்கே, குறைந்தபட்சமாக, உண்மையின் ஒரு குறிப்பு உள்ளது. அமெரிக்காவின் தெற்கில் ஜிம் கிரோவ்வின் நிறவெறி அமைப்புமுறைக்கு எதிரான சண்டையில் அடிப்படை உரிமைகளைப் பெற ஆபிரிக்க-அமெரிக்க தொழிலாளர்களின் பாரிய போராட்டங்கள், உறுதியான நடவடிக்கை கொள்கைகளை உபயோகிப்பதை விரிவாக்கவும் மற்றும் கறுப்பின மேற்தட்டு வர்க்கத்தின் தனிச்சலுகை படைத்த ஒரு அடுக்கை உருவாக்கவும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தால் ஒரு நனவுபூர்வமான கொள்கையை வகுக்க இட்டு சென்றது. அந்த கறுப்பின மத்திய-மேற்தட்டு வர்க்கத்தின் உட்கூறுகள் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புமுறைக்குள் கொண்டு வரப்பட்டன. இந்த கொள்கை, ஒபாமாவின் ஜனாதிபதி அபிலாஷைகளை ஊக்குவிக்க பெரிம் பண நலன்களின் முடிவுகளோடு அதன் உச்சத்தை அடைந்தது. அமெரிக்க அரசாங்கத்தால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பின்பற்றப்பட்ட பிற்போக்குத்தனமான கொள்கைகளை மூடிமறைக்க அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி என்றரீதியில் அவரது அந்தஸ்தை சுரண்டுவதே நோக்கமாக இருந்தது. மீண்டும், அமெரிக்காவிற்கும் தென் ஆபிரிக்காவிற்கும் இடையே சமாந்தரங்களை வரைந்து ஒபாமா அறிவித்தார்: "உத்தியோகபூர்வ சமத்துவம் மற்றும் அனைவருக்கும் வாக்குரிமைகளை வெற்றி" கொண்டதோடு "நம்முடைய வேலை முடிந்துவிடவில்லை." அவர் தொடர்ந்து கூறினார், “இன நல்லிணக்கத்தின் மடிபா மரபை நம்மில் பலர் மகிழ்ச்சியுடன் வலியுறுத்துகிறோம், ஆனால் நீடித்த வறுமை மற்றும் அதிகரித்துவரும் சமத்துவமின்மைக்கு சவால் விடுக்கும் சாதாரண சீர்திருத்தங்களைக் கூட தீவிரமாக எதிர்க்கிறோம். சுதந்திரத்திற்கான மடிபாவின் போராட்டத்தோடு உடன்படும் நிறைய தலைவர்கள் உள்ளனர், ஆனால் அவர்களால் தங்களின் சொந்த மக்களிடமிருந்து வரும் எதிர்ப்பை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை." யாரை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக அவர் நினைக்கிறார்? அமெரிக்க வரலாற்றில் சமூக சமத்துவமின்மையின் செங்குத்தான வளர்ச்சிக்கு இவர் தலைமை தாங்கி உள்ளார். 2008 நிதியியல் பிணையெடுப்பிலிருந்து, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறிஸ்லரின் மீட்சி வரையில், மற்றும் டெட்ராய்ட் திவால்நிலைமைக்கு அவரது அரசாங்கத்தின் ஆதரவு வரையில், அவரது கொள்கைகள் அமெரிக்க உழைக்கும் மக்களிடமிருந்து செல்வ வளத்தை ஒரு நிதியியல் மற்றும் பெருநிறுவன மேற்தட்டுக்கு பாரியளவில் திட்டமிட்டு கைமாற்றுவதில் ஈடுபட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் அவரது ஐந்து ஆண்டுகளில், மொத்த வருவாய் ஆதாயங்களின் 95 சதவீதம் 1 சதவீத பணக்காரர்களுக்கு போய் சேர்ந்துள்ளது, அதேவேளையில் தொழிலாள வர்க்கம் அதன் வாழ்க்கை தரங்களின் வீழ்ச்சி அடைவதைக் கண்டுள்ளது, அந்நாட்டின் பில்லியனர்கள் அவர்களின் செல்வ வளத்தை இரட்டிப்பாக்கி உள்ளனர். எதிர்ப்பை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை என்பதை பொறுத்த வரையில், இது வேலைக்காகாத ஜனநாயக வடிவங்களை வழங்கும் சமூக சமத்துவமின்மையின் அளவுகளோடு கைகோர்த்து செல்கிறது. தேசிய பாதுகாப்பு முகமையைக் கொண்டும் மற்றும் வாஷிங்டனின் பிரம்மாண்டமான உளவுத்துறை கருவியின் ஏனைய பகுதிகளைக் கொண்டும் உள்நாட்டு உளவுவேலையின் பாரிய வளர்ச்சியை ஒபாமா மேற்பார்வை செய்துள்ளார். இத்தகைய சட்டவிரோத மற்றும் அரசியலைப்பை மீறிய நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய எட்வார்ட் ஸ்னோவ்டெனை வெளிநாடுகள் ஒப்படைக்க செய்யவும் மற்றும் அவர்மீது வழக்குகள் தொடுக்கவும் முயன்றுள்ளார், அதேவேளையில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க யுத்த குற்றங்களை அம்பலப்படுத்தியதற்கு தண்டனையாக பிரைவேட் பிரட்லி மேனிங்கிற்கு 35 ஆண்டுகள் தீர்ப்பை வழங்குவதில் மற்றும் விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்ஜை பின்தொடர்வதில் முனைந்துள்ளார். ஒட்டுமொத்தமாக ஏனைய முந்தைய ஜனாதிபதிகள் அனைவரையும் விட, அம்பலப்படுத்தியவர்களை அதிக தடவை ஒடுக்க அவரது நிர்வாகம் முதலாம் உலக யுத்த சகாப்தத்தின் உளவுச் சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. செவ்வாயன்று நடந்த நினைவாஞ்சலி மேடையில் ஆதிக்கம் செலுத்திய பொய்கள் மற்றும் பாசாங்குத்தனங்களுக்கு மத்தியில், அந்த மைதானத்தில் உட்கார்ந்திருந்த ஒரு கூட்டத்திடம் இருந்து அரசியல் எதார்த்தத்தின் ஓர் உட்கூறு ஊடுருவி வெளிவந்தது. முடிவில்லா ஊழல் மோசடிகளின் ஒரு விஷயமாக இருந்த தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜூமா வந்தபோதும், பெரிய திரைகளில் அவர் முகம் தோன்றியபோதும், மற்றும் முக்கிய குறிப்புகளை வாசித்த பேச்சாளர் அவரை அறிமுகப்படுத்தியபோதும் அந்த கூட்டம் மீண்டும் மீண்டும் கண்டன கூச்சல்களை வெளிப்படுத்தியது. பல கோடி மில்லியன் முதலாளித்துவவாதியாக மாறிய, ஜூமாவின் சுரங்க தொழிலாளர்கள் சங்கத்தின் துணை மற்றும் முன்னாள் தலைவர் சிரில் ராமபோசா மீண்டும் மீண்டும் தலையிட நிர்பந்திக்கப்பட்டார். தென் ஆபிரிக்க இதழான Daily Maverick இன் செய்தியின்படி, ஒரு சமயம் அவர் ஜூலுவில் கூட்டத்திடம் முறையிட்டார்: “எங்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காதீர்கள், வெளிநாட்டு பார்வையாளர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். பார்வையாளர்கள் சென்ற பின்னர் தற்போதைய விஷயங்களை நாம் கையாளலாம்," என்றார். ANC மற்றும் அதனால் பாதுகாக்கப்படும் கறுப்பின மற்றும் வெள்ளையின பண நலன்களுக்கு எதிராக தென் ஆபிரிக்க தொழிலாள வர்க்கத்தில் உருவாகி வரும் வெடிப்பார்ந்த கோபத்தின் ஒரு மங்கலான பிரதிபலிப்பை அந்த அத்தியாயம் வழங்கியது. நிறவெறி ஆட்சியின் இரத்தந்தோய்ந்த ஒடுக்குமுறை திரும்பி வந்ததைப் போல, லோன்மினின் மாரிக்கானா பிளாட்டின சுரங்கத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 34 சுரங்க தொழிலாளர்கள் மண்டேலாவிற்கு பின்னர் பதவியேற்றவர்களால் அனுப்பப்பட்ட கலகம் ஒடுக்கும் பொலிஸால் சுடப்பட்டபோது, இந்த மோதல் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அதன் கூர்மையான வெளிப்பாட்டைக் கண்டது. ANCஉம்—அந்த விஷயத்தில் ஒபாமாவும்—மண்டேலாவின் மரணச்சடங்கில் பிரதிபலித்த மகிமையில் சுகமாய் குளிர்காய்ந்தார்கள் என்ற போதினும், உலகின் மிகவும் சமத்துவமற்ற அந்த நாட்டில் இவ்விஷயத்தில் நிலவும் சமூக பதட்டங்கள், ஆளும் கட்சிக்கு எவ்வித எந்த அவகாசத்தையும் வழங்க மிகவும் கூர்மையாக உள்ளன. வெள்ளை ஆளும் அரசியலமைப்பின் முதலாளித்துவ நலன்களையும் மற்றும் வெளிநாட்டு வங்கிகளை மற்றும் பெருநிறுவனங்களை சேதமுறாமல் காப்பாற்றி வைத்ததுமான, மண்டேலாவால் தரகு வேலை செய்து கொண்டு வரப்பட்ட, நிறவெறியின் ஓர் முடிவு நடந்தேறி ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், சமூகத்தில் நிலவும் அடிப்படை பிளவுக்கு காரணம் இனம் அல்ல வர்க்கமாகும் என்ற அடிப்படை எதார்த்தமானது, தென் ஆபிரிக்காவில் ஒரு பழிவாங்கும் உணர்வோடு அதனைஅதுவே மீண்டும் நிலைநிறுத்துகிறது. ஊழல் அதிகாரிகள் மற்றும் சூறையாடும் கறுப்பின முதலாளிமார்களின் ஒரு அடுக்கை பிரதிநிதித்துவம் செய்யும் ANC, உள்நாட்டு மற்றும் சர்வதேச மூலதனத்தின் இலாப நலன்களைப் பாதுகாக்கின்ற அதேவேளையில் தொழிலாள வர்க்கத்தின் கசப்பான எதிரியாக உருவாகியுள்ளது. செவ்வாயன்று ஒபாமா மற்றும் ஏனையவர்களால் பேசப்பட்ட எந்தவொரு வெற்றுரைகளாலும் இந்த உண்மையை மூடிமறைத்துவிட முடியாது, அல்லது தென் ஆபிரிக்காவிலும் மற்றும் அமெரிக்காவிலேயே கூட சமூக புரட்சி மற்றும் வர்க்க போராட்டத்தின் ஒரு மீள்எழுச்சியை தடுத்து நிறுத்தி வைக்க முடியாது. |
|
|