World Socialist Web Site www.wsws.org |
உக்ரேனுக்கான போராட்டம்Peter
Schwarz உக்ரேனிய போராட்டங்களின் நடப்பு அலை, “ஜேர்மனி தயாரிப்பு," “ஐரோப்பிய ஒன்றிய தயாரிப்பு" மற்றும் "அமெரிக்க தயாரிப்பு" என்ற முத்திரையைத் தாங்கி உள்ளது. கீவில் நடந்துவரும் ஆர்ப்பாட்டங்களை ஜனநாயகத்திற்கான மற்றும் சட்டத்தின் ஆட்சிக்காக நடந்துவரும் ஒரு போராட்டம் என்றரீதியில் சித்தரிக்க மேற்கத்திய ஊடகங்கள் இன்னும் ஒருபடி மேலே சென்றுள்ளன. உண்மையில், அவை புவிமூலோபாய பிரச்சினைகள் மீதான ஒரு மோதலின் பாகமாக உள்ளன. ரஷ்ய செல்வாக்கை எதிர்ப்பதும், ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் மேலாதிக்கத்திற்கு உக்ரேனை உட்படுத்துவதுமே நோக்கமாகும். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்க பில்லினியர் ஜோர்ஜ் சோரோஸின் கட்டுப்பாடற்ற சமூக அமைப்பு (Open Society Institute) போன்ற அமெரிக்க அரசு-சாரா நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க அரசிடமிருந்து பெற்ற பாரிய அரசியல் மற்றும் நிதிய ஆதரவுடன் ஆரஞ்ச் புரட்சி ஒழுங்கமைக்கப்பட்டது. இத்தகைய சக்திகளால் ஜனாதிபதி தேர்தலை செல்லுபடியற்றதாக ஆக்க முடிந்ததோடு, ரஷ்யாவின் கைப்பிடியில் இருந்தவராக கருதப்பட்ட விக்டொர் யானுகோவிச் (Viktor Yanukovich) இருந்த இடத்தில் ஐரோப்பிய ஒன்றிய சார்புடைய மற்றும் அமெரிக்க சார்புடைய விக்டொர் யூஷ்சென்கோ (Viktor Yushchenko) மற்றும் ஜூலியா தீமோஷென்கோவை (Julia Tymoshenko) ஒருவர்பின் ஒருவராக அரசு தலைவராகவும், அரசாங்க தலைவராகவும் அவற்றால் பதவியேற்க செய்ய முடிந்தது. இருந்த போதினும் அவ்விருவருமே விரைவிலேயே பதவி இழந்தனர், 2010இல் யானுகோவிச் ஜனாதிபதியாக பதவியாக ஏற்றார். தற்போது அந்த முன்னாள் சோவியத் குடியரசை மற்றும் ரஷ்ய சாம்ராஜ்ஜியத்தின் அந்த தானியக் களஞ்சியத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அடிபணியும் ஓர் ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டு வர மற்றொரு முயற்சி செய்யப்பட்டு வருகிறது. போராட்டங்களின் அரசியல் தலைமையைக் குறித்த ஓர் ஆய்வு அவற்றின் பிற்போக்குத்தனமான சுபாவத்தை அம்பலப்படுத்துவதாக உள்ளது. அந்த போராட்டங்கள் மூன்று கட்சிகளால் தலைமை வகிக்கப்படுகின்றன, அவற்றில் இரண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் பழமைவாத முகாமுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளன, அதேவேளையில் மூன்றாவது வெளிப்படையாக பாசிச அமைப்பாகவும் உள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட ஜூலியா தீமோஷென்கோவின் தலைமையிலான தந்தை நாடு கட்சி (Batkivshchyna party), ஐரோப்பாவின் கிறிஸ்துவ-ஜனநாயக ஒன்றியம் மற்றும் பழமைவாத கட்சிகளின் கூட்டான ஐரோப்பிய மக்கள் கட்சியில் பார்வையாளர் அந்தஸ்தைக் கொண்டுள்ளது. ஜேர்மனியில் வசிக்கும் குத்துச்சண்டை சாம்பியன் விட்டாலி கிளிட்ஸ்கோவின் தலைமையிலான UDAR (Punch), ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் அதன் சிந்தனை கூடமான Konrad Adenauer Foundationஇன் ஓர் உருவாக்கமாகும். பிந்தைய அமைப்பு UDAR அங்கத்தவர்களின் அரசியல் கல்விக்காக அர்பணிக்கப்பட்டுள்ள கருத்தரங்குகளை அதன் இணைய தளத்தில் வெளிப்படையாக விளம்பரப்படுத்துகிறது. "உக்ரேனில் அதிதீவிர வலது" என்ற தலைப்பில் ஜேர்மன் பிறீட்ரிஷ் ஏபேர்ட் அமைப்பால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, மூன்றாவது கட்சியான ஸ்வோபோடா கட்சி (Svoboda-சுதந்திரம்) “அதிதீவிர வலது சித்தாந்தத்தின் மையக்கருவின் முன்னோடியாக" உள்ளது. அந்த கட்சியின் நிஜ பெயர் உக்ரேனின் சமூக-தேசிய கட்சி என்பதாகும். அது நாஜி ஸ்வாஸ்திகா சின்னத்தை நினைவூட்டும் ஒரு முத்திரையை அதன் கட்சி சின்னமாக பயன்படுத்தியது. அதனோடு நெருங்கி வேலை செய்து வருகின்ற பிரெஞ்சு தேசிய முன்னணியின் (FN) ஆலோசனையின் கீழ், குறைவாக ஆத்திரமூட்டும் ஒரு பெயரை அது தேர்ந்தெடுத்தது. ஆர்சேனி யட்சேனுக் (தந்தை நாடு கட்சி) மற்றும் விட்டாலி கிளிட்ஸ்கோ இருவரும் ஸ்வோபோடாவின் ஓலேக் டியானிபோக் உடன் இணைந்து பத்திரிகை கூட்டங்களில் தோன்றுகின்றனர். டியானிபோக் அவரது அதிதீவிர தேசியவாதம், வெளிநாட்டவருக்கு எதிரான தேசியவெறி மற்றும் யூத-விரோத கிளர்ச்சிகளுக்காக இழிபெயர் பெற்ற ஒரு நவ-நாஜி ஆவார். பிரதான ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகள் உக்ரேனிய போராட்டங்களுக்கு அவர்களின் ஆதரவை வெளியிட்டுள்ளனர். ஏதென்ஸ், மட்ரிட் மற்றும் ஏனைய இடங்களிலும் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன கொள்கைகளை எதிர்த்தவர்களை இரக்கமின்றி அடித்து விரட்டிய பொலிஸின் காட்டுமிராண்டித்தனத்தை மௌனமாக ஆதரித்த அதே சக்திகள், உக்ரேனிய பொலிஸின் காட்டுமிராண்டித்தனத்திற்கு அவற்றின் கோபத்தைக் காட்டுகின்றன. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி உக்ரேனிய அரசாங்கம் "அதன் மக்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டுமென" வலியுறுத்தினார், அதேபோல் அவரது ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் கீடோ வெஸ்டர்வெல்ல தனிப்பட்டரீதியில் கீவின் ஆர்ப்பாட்டக்காரர்களோடு சேர்ந்து நின்று புதனன்று தலையீடு செய்தார். நேட்டோவின் செயலாளர் ஆண்டர்ஸ் போக் ராஸ்முஸ்சென், வெளிப்பாட்டைக் காட்டுவதற்கும் ஒன்று கூடுவதற்குமான உரிமைக்கு உக்ரேனிய அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டுமென கோரி உள்ளார். ஜேர்மனியின் நவ-பாசிச தேசிய ஜனநாயக கட்சிக்கு எதிராக வெகு சமீபத்தில் புதிய நடவடிக்கைகளை செயல்படுத்தி இருந்த ஜேர்மன் அரசு, ஆர்ப்பாட்டங்களில் இறங்குவதற்கான உக்ரேனிய பாசிஸ்டுகளின் உரிமையைப் பாதுகாக்கின்றது. எதிர்கட்சிகள் ஜனாதிபதியின் இராஜினாமா மற்றும் புதிய தேர்தல்களுக்கு அழைப்புவிடுக்கின்ற போதினும், அவற்றிற்கு பெரும்பான்மை உக்ரேனியர்களின் ஆதரவு இல்லை. செவ்வாயன்று அரசிற்கு எதிரான ஒரு கண்டன தீர்மானம் பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்தது. எதிர்கட்சிகள் நடைமுறைப்படுத்த விரும்பும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஐக்கியம் மற்றும் கட்டுப்பாடற்ற வர்த்தக உடன்படிக்கையானது உக்ரேனிய மக்களின் பெரும் பிரிவுகளின் மீது ஒரு நாசகரமான தாக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கையானது ஒரேசமயத்தில் ரஷ்ய தலைமையிலான சுங்க வரிவிலக்கு ஒன்றியத்தில் (customs union) அங்கத்துவம் வகிப்பதை நிராகரிக்கிறது, இவ்விதத்தில் அந்த உடன்படிக்கை உக்ரேனின் தொழில்துறை மற்றும் போக்குவரத்து பாதைகள் எதனோடு மிக நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதோ உக்ரேனின் அதன் அந்த பிரதான வியாபார பங்காளியிடம் இருந்து வெட்டி விடும். ஐரோப்பிய பண்டங்களின் மீதான சுங்கவரிகளின் வெட்டானது, பல உக்ரேனிய தொழில்துறைகள் திவாலாகும் என்பதைக் குறிக்கிறது. தொழிலாளர் சந்தையின் கட்டுப்பாடுகள் அகற்றப்படுதல், அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் மற்றும் பொதுக் கடனைக் குறைப்பது ஆகியவற்றிற்கான ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளைச் சேர்த்து கொண்டிருக்கும் அந்த உடன்படிக்கையின் நிபந்தனைகள், கிரீஸ், ருமேனியா மற்றும் ஏனைய நாடுகளின் மீது திணிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய சிக்கன திட்டங்களால் ஏற்பட்ட ஒரு சமூக தாக்கத்தைப் போன்ற அதேமாதிரியான தாக்கத்தைக் கொண்டிருக்கும். உக்ரேனிய அரசு 40 சதவீத அளவிற்கு எரிவாயு விலையை உயர்த்த மறுப்பதால், சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே உக்ரேனுக்கு வெகுவாக அவசியப்படும் கடன்களை மறுத்து வருகிறது—எரிவாயு விலை உயர்த்தப்பட்டால் பல வேலையில்லாதவர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் வெப்பமூட்டி செலவு கட்டணங்களைச் செலுத்தவியலாமல், தவிர்க்க முடியாதபடிக்கு மரணமடையும் ஒரு விளைவு ஏற்படும். கூட்டமைப்பின் உடன்படிக்கை அந்நாட்டை ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கான ஒரு விஸ்தரிக்கப்பட்ட உற்பத்திமேடையாக மாற்றும், அது சீனாவை விட குறைந்த கூலி விகிதங்களை உண்டாக்கும். அதேநேரத்தில், அந்நாட்டின் இயற்கை வளங்கள், அதன் பரந்த மற்றும் விவசாய நிலங்கள், மற்றும் 46 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட அதன் உள்நாட்டு சந்தை ஆகியவை ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய வணிகங்களுக்கு hஎச்சில்ஊறச் செய்யும் ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது. அந்த உடன்படிக்கை ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் கரங்களையும் பலப்படுத்தும். ரஷ்யா மற்றும் உக்ரேனை இணைத்துக் கொண்டிருக்கும் சுங்க வரிவிலக்கு ஒன்றியம் அல்லது யூரேசிய ஒன்றியமானது வியாபார பேரங்களில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட ரஷ்யாவை விட ஐரோப்பிய ஒன்றியத்துடன் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஒரு வலுவான நிலையைக் கொண்டிருக்கக்கூடும். ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா வெறுமனே உக்ரேனில் பொருளாதார நோக்கங்களை மட்டுமல்ல, புவி-அரசியல் நோக்கங்களையும் பின்தொடர்கின்றன. சோவியத் ஒன்றிய சிதைவிற்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவின் செல்வாக்கு குறைந்திருக்கின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உக்ரேன் சேர்க்கப்படுவதென்பது ரஷ்யாவை ஐரோப்பாவின் விளிம்பிற்கு தள்ளிவிடும். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து, ரஷ்யா மற்றும் சோவியத் அரசின் ஒரு முக்கிய பாகமாக உக்ரேன் உருவாகி இருந்தது. அனைத்திற்கும் மேலாக, உக்ரேனால் ரஷ்யாவிற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்ட க்ரீமியாவில் (Crimea) உள்ள அதன் ஒரு துறைமுகத்தில் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை தளம் அமைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டுமே, சீனாவின் ஒரு பிரதான பங்காளியாக கருதப்படும் ரஷ்யாவை பலவீனப்படுத்தும் ஓர் ஆர்வத்தைக் கொண்டுள்ளன. மார்ச்சில் சீன ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான "மூலோபாய கூட்டணியைப்" பலப்படுத்த, அவர் உடனடியாக மாஸ்கோவிற்கு பயணம் செய்தார். இரண்டு நாடுகளுமே ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் தீவிர பாய்ச்சலால் பொருளாதாரரீதியிலும் மூலோபாயரீதியிலும் அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருப்பதாக உணர்கின்றன. சீனாவும் உக்ரேனுடன் அதன் பொருளாதார உறவுகளை விரிவாக்கி வருகிறது, உக்ரேன் தற்போது அதன் வெளிநாட்டு வர்த்தகத்தில் 5 சதவீதத்தை சீனாவுடன் நடத்தி வருகிறது. சீனாவிற்கான உணவு உற்பத்திக்காக 100,000 ஹெக்டேர் வேளாண்மை நிலங்களைப் பெற சீன அரசுக்கு சொந்தமான XPCC நிறுவனம் உக்ரேனின் KSG Agro நிறுவனத்துடன் ஓர் உடன்படிக்கையை செய்திருப்பதாக அக்டோபரில் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் குறிப்பிட்டது. அந்த நிலப்பகுதி—பெல்ஜியம் அல்லது மாசசூசெட்ஸ் அளவுக்கு—மூன்று மில்லியன் ஹெக்டேராக விரிவாக்கப்பட உள்ளது. சீனா ஏற்கனவே அந்த நாட்டிற்கு 10 பில்லியன் டாலர் கடன்களை வழங்கி உள்ளது. நடந்துவரும் அரசியல் நெருக்கடிக்கு இடையிலும், உக்ரேனிய ஜனாதிபதி யானுகோவிச் செவ்வாயன்று பெய்ஜிங்கிற்கு நான்கு நாள் விஜயம் புறப்படும் அளவிற்கு சீனாவுடனான அதன் பொருளாதார உறவுகளை மிக முக்கியமாக உக்ரேன் கருதுகிறது. இது தான் கீவ்வில் நடந்துவரும் போராட்டங்களைப் பயன்படுத்தி உக்ரேன் அரசாங்கத்தின் ஸ்திரதன்மையைக் குலைக்க ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தால் செய்யப்படும் முயற்சிகளின் பின்புலமாக உள்ளது. சீனாவை சுற்றி வளைக்கவும் அப்பிராந்தியத்தில் அதன் செல்வாக்கிற்கு குழிபறிக்கவும் ஆசியாவில் தனது இராணுவ பிரசன்னத்தை படிப்படியாக விஸ்தரித்து வரும் அமெரிக்காவுடன் சேர்ந்து அவற்றின் முனைவு ஒன்றன்பின் ஒன்றாக தொடங்கப்பட்டுள்ளன. இதுவரையில், அமெரிக்கா சமீபத்திய வாரங்களில் சீனாவின் மீது அதன் அழுத்தங்களைப் பாரியளவில் தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரேனுக்கு எதிரான தாக்குதல் ஆழ்ந்த வரலாற்று கேள்விகளை எழுப்புகின்றன. இரண்டு உலக யுத்தங்களில், ஜேர்மனி உக்ரேனை அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றதோடு, அந்த முயற்சிகளில் மிகவும் வெறுக்கத்தக்க குற்றங்களையும் செய்தது. ஜேர்மன் அரசாங்கத்தின் தற்போதைய திமிர்தனம் புதிய ஆபத்துக்களோடு நிரம்பி உள்ளது. அதிகரித்துவரும் சர்வதேச பதட்டங்கள் மிக விரைவாக ஆயுதமேந்திய மோதலுக்குள் திரும்பக்கூடும். இந்த ஆபத்தை, ஓர் ஐக்கிய சோசலிச ஐரோப்பாவிற்காக போராடும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தால் மட்டுமே எதிர்த்து நிற்க முடியும். |
|