World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

David Edward Hyland: March 7, 1947—December 8, 2013

டேவிட் எட்வார்ட் ஹைலண்ட்: மார்ச் 7,1947 – டிசம்பர் 8, 2013

By Chris Marsden 
10 December 2013

Back to screen version

66 வயதே ஆன எமது தோழர் டேவ் ஹைலண்ட் மரணமடைந்து விட்டார் என்ற செய்தியை உலக சோசலிச வலைத் தளம் தனது வாசகர்களுக்கு மிகவும் துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறது

1985-1986ல் தொழிலாளர் புரட்சிகரக் கட்சியுடனான (WRP) பிளவின் போது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கு தனது ஆதரவை அறிவித்த பிரிவுக்கு அவர் தலைமை கொடுத்திருந்தார் என்பதும், பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கலைத்து விடும் கட்சியின் மத்திய தலைமையின் முயற்சிகளை, அதாவது ஜெர்ரி ஹீலி, கிளிஃவ் சுலோட்டர் மற்றும் மைக் பண்டா ஆகியோரது முயற்சிகளை அவர் எதிர்த்தார் என்பதும் டேவின் மறக்கவியலாத அரசியல் சிறப்பாகும்

சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலராகவும், அதனைத் தொடர்ந்து சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலராக சிறிது காலமும் இருந்த பின், அவர் மோசமான உடல்நிலையின் காரணத்தால் ஓய்வுற்றிருந்தார்.

டேவ் மான்செஸ்டரின் ஸ்ட்ரெட்ஃபோர்டில், ஃபிரெடா மற்றும் ஜாக் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். ஃபிரெடா செவிலியாக இருந்தார். ஜாக் லிவர்பூலில் முன்னாளில் கப்பலோட்டும் ஊழியராகப் பணிபுரிந்து பின்னர் ரயில்வே உதவியாளர் ஆகியிருந்தார். தொழிற்கட்சியில் இடதின் பக்கத்திலும் அத்துடன் ஒரு செயலூக்கத்துடனான தொழிற்சங்கவாதியாகவும், 1959 அக்டோபரில் ரயில் உணவகப் பெட்டி தொழிலாளர்களின் தேசிய அளவிலான ஒரு வேலைநிறுத்தத்தில் பங்குபெற்றவராகவும் இருந்த ஜாக்கின் பாதிப்பு டேவ் மீது மிகவும் ஆதிக்கம் செலுத்தியிருந்தது.  

டேவுக்கு 11 வயதான போது அவரது குடும்பம் இலண்டனில் வெஸ்ட் ஹரோ பகுதிக்கு இடம்பெயர்ந்தது. தனது 15வது பிறந்த நாள் வருவதற்கு கொஞ்சம் முன்னதாக டேவ் தனது பள்ளிப்படிப்பை விட்டு விட்டு அசோசியேடட் எலெக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் வேலைக்குச் செல்லத் தொடங்கினார். அந்த ஆண்டில் தான் அவர் தனது மனைவியும் வாழ்க்கைத் துணையுமான எய்லீனை சந்தித்தார். அவர்கள் இருவரும் விரைவிலேயே திருமணம் செய்து கொண்டனர்.

டேவ் ஏராளமான இடங்களில் வேலை செய்திருக்கிறார், பேருந்துகளில் நடத்துநராக வேலை செய்திருக்கிறார், ஐபிஎம் நிறுவனத்தில் வேலை செய்திருக்கிறார், பின் 1971 ஆம் ஆண்டில் கோடக் நிறுவனத்தில் வேலை செய்திருக்கிறார். தொழிலாள வர்க்கத்தின் ஒரு போராளியான அவர் தொழிற்சங்கம் இல்லாத ஐபிஎம் நிறுவனத்தில் ஒரு வேலைநிறுத்தத்திற்கு தலைமை கொடுத்தார். அத்துடன் கோடக் நிறுவனத்தில் ACTT (சினிமாட்டோகிராப் தொலைக்காட்சி மற்றும் அதுசார்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டமைப்பு) அமைப்பின் வேலையிட வழிகாட்டியாகவும் அத்துடன் அதன் பொதுக்குழுவின் பிரதிநிதியாகவும் இருந்தார்.  

அங்கேயிருக்கும் சமயத்தில் தான் WRP இன் முன்னோடியான சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL) உறுப்பினர்களுடன் அவருக்கு முதன்முதலாய் தொடர்புகள் உருவாயின. ACTT இல் SLL கணிசமான செல்வாக்கை வென்றிருந்தது என்ற போதிலும் ஸ்ராலினிசம் குறித்த அதன் பகுப்பாய்வு தான் டேவுக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக இருந்தது. தொழிற்சங்க நிர்வாகிகளுடனான அவரது கடந்த கால மோதல்களை எல்லாம் அவரால் இறுதியில் ஒரு வரலாற்று மற்றும் சர்வதேச உள்ளடக்கத்திற்குள் பொருத்திக் காண முடிந்தது

டேவ் SLL இல் 1972 ஆம் ஆண்டில் இணைந்தார். வெகுவிரைவிலேயே SLL இன் கொடாக் கிளை செயலராகவும் மற்றும் வடமேற்கு இலண்டன் பிரிவுச் செயலராகவும் அவர் ஆகிவிட்டார். வேலையிடத்தில் கொடாக்கின் நிறுவனத் தொழிற்சங்கத்தை எதிர்த்துப் போராடி நிறுவனத்திற்குள்ளாக WRP இன் கிளையை கட்டியெழுப்ப நடந்த போராட்டத்திற்கு அவர் தலைமை நடத்தினார். அவரது அரசியல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக பழிவாங்கப்பட்ட அவர் 1976 இல் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

அடுத்துவந்த ஆண்டுகளில் WRP தலைமையுடன் பல அரசியல் மோதல்கள் வந்தன என்றபோதிலும் இத்தகைய மோதல்களின் அடிப்படை ஒருபோதும் தெளிவுபடுத்தப்படாத நிலையே இருந்தது. 1983 இல் மத்தியக் குழுவில் டேவ் இடம்பெற்றிருந்த நிலையில், அவர் யோர்க்ஷயர் பகுதிச் செயலராக ஆவதற்கு அனுப்பப்பட்டிருந்த காரணத்தினால் 1984-85 சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே கட்சிக்கு ஒரு கணிசமான அடித்தளத்தைக் கட்டியெழுப்புவதிலும் அவர் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார்.

WRP உறுப்பினர்கள் அறியா வண்ணம், கட்சி திட்டவட்டமான சந்தர்ப்பவாதப் பாதையை பின்பற்றியதானது அமெரிக்காவில் வேர்க்கர்ஸ் லீக்குடனான (Workers League) பிளவு அதிகரிப்பதற்கு இட்டுச் சென்றது. வேர்க்கர்ஸ் லீக்கின் தேசிய செயலரான டேவிட் நோர்த் 1982 ஆம் ஆண்டில், ஹீலியின் இயங்கியல் சடவாதத்திலான ஆய்வுகள் மீதும், கட்சி அதன் ட்ரொட்ஸ்கிச அச்சில் இருந்து விலகிச் செல்வதற்கும் இடையில் இருந்த தொடர்பு குறித்தும் ஒரு விரிவான விமர்சனத்தை வைத்து, அனைத்துலகக் குழுவுக்கு உள்ளாக ஒரு விவாதத்தை முன்னெடுப்பதற்கு முனைந்து கொண்டிருந்தார்.

நோர்த் எழுதிய ஆவணங்கள் எல்லாம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்து வேர்க்கர்ஸ் லீக்கை வெளியேற்றும் அச்சுறுத்தல்களைக் கொண்டு WRP தலைமையால் அமுக்கி வைக்கப்பட்டது. ஆனால் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தோற்கடிக்கப்பட்டதற்குப் பின்னர், WRP தலைமைக்குள் வெடித்த ஒரு கோட்பாடற்ற கன்னை போராட்டமானது இறுதியில் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் நோர்த்தின் விமர்சனத்தை அணுகுவதற்கு அனுமதிக்கவும் அவை அரசியல்ரீதியாகத் தலையீடு செய்யவும் வழிவகுத்துத் தந்தது.

1985 அக்டோபர் 23 அன்று இலண்டனில் கூடிய அனைத்துலகக் குழு, WRP இன் நெருக்கடியானது ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கில் இருந்து நெடுங்காலம் விலகிச் சென்றிருந்ததில் வேரூன்றியிருந்தது என்பதை வலியுறுத்தியதோடு திருத்தல்வாதத்திற்கு எதிராக WRP தலைமை நடத்தியிருந்த ஒரு கோட்பாட்டுடனான போராட்டத்திற்குத் திரும்புவதற்கும் வலியுறுத்தியது. அரசியல் தெளிவுபடுத்தல்களுக்கான மிகச் சிறந்த நிலைமைகளை வழங்கும் பொருட்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் ஆளுமையை வெளிப்படையாக அங்கீகரிப்பது மற்றும் அதன் முடிவுகளுக்கு பிரிட்டிஷ் பிரிவை கீழ்ப்படியச் செய்வது என்ற அடிப்படையில் WRP இன் உறுப்பினர்கள் மறுபதிவு செய்ய வேண்டும் என்று தீர்மானம் அழைப்பு விடுத்தது.  

நோர்த்தின் அரசியல் விமர்சனத்திற்கும் WRP இன் நெருக்கடியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தலையீடு செய்வதற்குமான மிக முக்கியமான பதிலிறுப்பு டேவ் ஹைலண்டிடம் இருந்து கிட்டியது.

WRP இல் கன்னை மோதல் வெடித்ததற்கு இடையே, ஹீலி தனது அரசியல் அதிகாரத்தை மிக மோசமான வகையில் துஷ்பிரயோகம் செய்திருந்தார் என்பதை டேவ் அறிந்து கொள்ளச் செய்யப்பட்டார். டேவ் கட்சியின் கட்டுப்பாட்டு குழுவின் விசாரணைக் கோரிக்கைக்கு தலைமை கொடுத்திருந்ததோடு நடந்த விடயங்களுக்கு அரசியல்ரீதியாக கணக்குக் கூறப்பட வேண்டும் என்றும் கோரினார்.

1985 செப்டம்பரின் மத்தியில் நோர்த்தின் விமர்சனத்தின் ஒரு பிரதி அவருக்குக் கிடைத்தது. அதைப் படித்த பின்னர் தான், WRP இன் அரசியல் சீரழிவை எதிர்த்த ஒரு கோட்பாடுமிக்க எதிர்ப்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்குள்ளாக ஏற்கனவே எழுந்து விட்டிருந்தது என்பதையும் WRP இன் அரசியல் நோக்குநிலையை மீள்சீரமைக்க அவசியமானதொரு போராட்டம் ஒரு சர்வதேச அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட முடியும் என்பதையும் முதன்முறையாக அவர் புரிந்து கொண்டார். வேர்க்கர்ஸ் லீக்கை தொடர்பு கொள்ளும் முடிவை அக்டோபர் 9 அன்று அவர் எடுத்தார்.

அதன்பின், பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேசிய அடித்தளங்கள் ஆவணத்தில் நாங்கள் எழுதியவாறாக, அனைத்துலகக் குழுவின் அரசியல் ஆளுமையை அங்கீகரிப்பதன் அடிப்படையில் WRP (சர்வதேசியவாதிகள்) பிரிவுக்கு சிறுபான்மை அந்தஸ்தை ஹைலண்டும் இன்னும் இரண்டு மத்திய குழு உறுப்பினர்களும் கோரினர். அவர்களது மனு 1985, நவம்பர் 9 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது WRP (I) அளித்த ஆதரவானது 1982 மற்றும் 1984 இல் ஹீலி/பண்டா/சுலோட்டர் கோஷ்டியால் ஒரு முதிர்ச்சியற்ற பிளவாக நெருக்கித் தள்ளப்படுவதற்கு நோர்த் மறுத்ததின் சரியான தன்மையை ஊர்ஜிதம் செய்தது. ஆண்டுக்கணக்கில் மையவாத பின்சரிவு இருந்தபோதிலும் கூட, WRPக்குள்ளாக ட்ரொட்ஸ்கிசத்துக்கு கணிசமான ஆதரவு அங்கு தொடர்ந்து இருந்தது என்பதை அது நிரூபணம் செய்தது.

நோர்த்துடன் தொடர்பு கொள்ளும் முடிவை டேவ் எடுத்ததானது பிரிட்டிஷ் அங்கத்தவர்களின் கணிசமானதொரு பிரிவை நனவான சர்வதேசியவாதிகளாக நோக்குநிலை சீரமைப்பதை சாத்தியமாக்கியது. அடுத்துவந்த மாதங்களில், WRP காரியாளர்களுக்கு தெளிவூட்டவும், கல்வியூட்டவும் மன உறுதி பெறச் செய்யவும் டேவ் ஆவேசமான தீர்க்கத்துடன் வேலை செய்தார். WRP இன் அங்கத்தவர்களில், அதிலும் குறிப்பாக தொழிலாள வர்க்கத்திலும் மற்றும் இளம் சோசலிஸ்டுகள் அமைப்பிலும், ஒரு திட்டவட்டமான பெரும்பான்மையை WRP (I) வென்றெடுத்தது.

1985 அக்டோபர் 23 இல் இலண்டனில் கூடிய ICFI, ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்டத்தில் இருந்தும் முன்னோக்கில் இருந்தும் WRP நீண்டகாலமாக விலகிச் சென்றிருந்ததில் தான் அதன் நெருக்கடி வேரூன்றியிருந்தது என்பதை வலியுறுத்தியதோடு பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராக WRP இன் தலைமை நடத்தியிருந்த ஒரு கோட்பாடான போராட்டத்திற்குத் திரும்பவும் வலியுறுத்தியது.

அக்டோபர் 25 அன்று, ஹீலியை உலகளாவிய இயக்கத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான ஒரு தீர்மானத்தை ICFI இன் பிரதிநிதிகள் நிறைவேற்றினர். அடுத்த நாளே ஹீலி ஸ்பானிய மற்றும் கிரேக்கப் பிரிவுகளின் ஆதரவினைப் பெற்று ஒரு பிளவைப் பொறியமைவு செய்ததன் மூலம் பதிலிறுப்பு செய்தார்.

WRP தலைவர்கள் சர்வதேச இயக்கத்தை தமது சொந்த சந்தர்ப்பவாத மற்றும் கன்னைவாத விடயங்களுக்காய் பயன்படுத்திக் கொள்ள முயன்றதை ICFI பிரதிநிதிகள் நிராகரித்தனர். இரண்டாவது தீர்மானம் ஒன்றில் ICFI, சர்வதேச இயக்கத்தின் ஒழுங்கிற்கு WRP தன்னை கீழ்ப்படியச் செய்ய மறுத்ததில் அதன் சீரழிவின் அடிப்படையான தன்மையை அடையாளம் கண்டதோடு ICFI இன் அரசியல் ஆளுமையை வெளிப்படையாக அங்கீகரிப்பதன் அடிப்படையிலும் அதன் முடிவுகளுக்கு பிரிட்டிஷ் பிரிவை கீழ்ப்படியச் செய்வதன் அடிப்படையிலும் WRP இன் உறுப்பினர்கள் மீண்டும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

WRP இன் நெருக்கடி குறித்து விசாரணை செய்த சர்வதேச கட்டுப்பாட்டு ஆணையம், 1985 டிசம்பர் 16 அன்று வழங்கிய ஒரு இடைக்கால அறிக்கையில், நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை கைவிட்டதன் மூலமாக WRP ICFI மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திற்கு  வரலாற்றுப் பெரும் காட்டிக் கொடுப்பை நிகழ்த்தியிருந்தது என்றும் இதற்கு அரசியல்ரீதியாக WRP இன் ஒட்டுமொத்த தலைமையுமே பொறுப்பாகும் என்றும் கூறியிருந்தது.

அனைத்துலகக் குழுவின் காங்கிரஸ் கூடுவதற்கு முன்பாக ICFI, அதன் பிரிட்டிஷ் பிரிவாக இருந்த WRP ஐ இடைநீக்கம் செய்து விட்டது. ஹீலியின் கீழான WRP இன் தேசியவாதச் சீரழிவின் மரபாக இருக்கக் கூடிய நடப்புப் பிரச்சினைகளை எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக வெல்வதற்கும், WRPக்குள்ளாக சர்வதேசியவாதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மீண்டும் உறுதிசெய்வதற்கும், அத்துடன் இந்த அடிப்படையில் அதன் முழு அங்கத்தவர்களையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் மீட்சி செய்வதற்கும் அனைத்துலகக் குழுவுடன் விசுவாசத்துடன் வேலைசெய்வதற்கு WRP தலைவர்களுக்கு ICFI அழைப்பு விடுத்தது.

இலண்டன் ICFI கூட்டத்தில் WRP இல் இருந்து நான்கு பிரதிநிதிகள் வந்திருந்தனர். இவர்களில் கிளிஃப் சுலோட்டர், டோம் கெம்ப் மற்றும் சைமன் பிரானி ஆகிய மூவரும் அப்பட்டமான சந்தர்ப்பவாத மற்றும் தேசியவாத நிலைப்பாடுகளின் அடிப்படையில் தீர்மானத்தை எதிர்த்தனர். ஸ்ராலினிச மற்றும் பப்லோவாத அமைப்புகளை நோக்கிய WRP இன் புதிய திறந்த மறுநோக்குநிலையின் மீது சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஏற்படுத்தக் கூடிய எந்தத் தடைகளையும் அவர்கள் ஏற்பதாக இல்லை.

டேவ் ஹைலண்ட் மட்டுமே, பிரிட்டனில் ட்ரொட்ஸ்கிசத்தைப் பாதுகாப்பதற்கு தேசிய சந்தர்ப்பவாதத்தை மறுதலிப்பதும் அனைத்துலகக் குழுவின் அரசியல் அதிகாரத்தை ஏற்பதும் அவசியமாக இருக்கிறது என்று வலியுறுத்தி, தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஒரே WRP பிரதிநிதி ஆவார்.

ICFI இன் கோட்பாட்டு ரீதியான நடவடிக்கைகளுக்கு கன்னை வெறியின் மூலமாக WRP இன் சுலோட்டர் தலைமையிலான கன்னை பதிலிறுப்பு செய்தது. ஆயினும் அதன் ICFI-விரோதப் பிரச்சாரத்தை டேவ் எதிர்த்தார். அவரது சர்வதேசியவாதக் கன்னை, குறிப்பாக யார்க்ஷயர் பகுதியில் இருந்த WRP இன் மையமான தொழிலாள வர்க்க காரியாளர்கள் இடையே, கொஞ்சம் கொஞ்சமாய் சீராக வலுப்பெற்றது.

தனது கட்டுப்பாட்டில் கட்சியின் பெரும்பான்மை இல்லை என்பதை உணர்ந்த WRP தலைமையானது 1986 பிப்ரவரி 8 அன்று, WRP (சர்வதேசியவாதிகள்) உறுப்பினர்களை கட்சியின் காங்கிரசில் கலந்துகொள்வதில் இருந்து தடை செய்ததோடு இந்த முடிவை செயல்படுத்துவதற்கு போலிசையும் நாடியது. அடுத்த மாதத்தில், ICFI இன் புதிய பிரிட்டிஷ் பிரிவாக சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது

அடுத்து வந்த பன்னிரண்டு ஆண்டுகள், பிரிட்டிஷ் மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்துள் ஒரு ட்ரொட்ஸ்கிச போக்கினைக் கட்டியெழுப்புவதற்காக அரசியல்ரீதியாக கொந்தளிப்பான நிலைமைகளின் கீழும் பல சமயங்களில் மிகவும் கடினமான நிலைமைகளின் கீழும் டேவ் உழைத்தார். எப்போதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்றுரீதியாக தேற்றம் செய்யப்பட்ட வேலைத்திட்டத்தின் துல்லியத்தின் மீது கொண்டிருந்த ஆழமான மன உறுதியால் இயக்கப்பட்டவராக அவர் இருந்தார்.

ஆயினும் டேவின் உடல்நிலை பெருமளவில் மோசமடைந்து விட்டது. 40 வயதில் அவருக்கு முடக்குவாதம் (Rheumatoid Arthritis) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்நோய் அசாதாரண தீவிரத்துடன் இருந்ததுடன் மருத்துவரீதியாக கவனிக்காமல் விட்டிருந்ததால் விளைந்த மற்ற சிக்கல்களும் உடனிருந்தன. இது அவரை கடுமையான ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு ஆட்படுத்தி உடல்ரீதியாக பலவீனப்படுத்தி இருந்தது. மும்முரமான அரசியலில் இருந்து அவர் சில ஆண்டுகள் ஓய்வு பெற்று இருந்தார், என்றபோதிலும் கட்சிக்கும் அகிலத்துக்கும் ஆதரவாக இருப்பதில் ஒருபோதும் அவர் சளைத்ததில்லை.

2010 அக்டோபரில் பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக மாநாட்டில் பங்குபெறுவதற்கு டேவ் எத்தகைய தீர்மானமான உறுதி கொண்டிருந்தார் என்பதை அவரது பிரிட்டன் தோழர்கள் எவரும் ஒருபோதும் மறக்க முடியாது. சக்கர நாற்காலியில் அமர்ந்து ஆக்சிஜன் விநியோகக் குழாய் சகிதமாக ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவர் வந்திருந்தார். பல வருடங்களுக்கு முன்பாகவே அவர் இறந்து விடுவார் என்று கணித்திருந்த மருத்துவத் துறையின் எதிர்பார்ப்புகளையும் மீறி, ஆரோக்கியரீதியான இத்தனை தடைகளின் கீழும் கூட அவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்ததையும் பிரிட்டன் தோழர்கள் குறிப்பிட்டுப் பாராட்ட தவறமாட்டார்கள்.

இச்சமயத்தில் எமது இரங்கல்களை எய்லீனுக்கும் அவர்களது பிள்ளைகள் ஜூலி, டோனி, கிளேய்ர் மற்றும் பவுலாவுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் ஆகச் சிறந்ததாக இருந்த, இன்னும் சொன்னால் ஆகப் புனிதமாக இருந்த, அத்தனை அம்சங்களையும் டேவ் பிரதிநிதித்துவம் செய்தார். விஞ்ச முடியாத தீரம் கொண்ட ஒரு மனிதராகவும் ஆழமான கோட்பாட்டு உறுதி கொண்ட மனிதராகவும் அவர் திகழ்ந்தார். சோசலிசத்துக்கான போராட்டத்தில் அத்தனையையும் கொடுக்கத் தயாராய் இருந்த அதேநேரத்தில் பிரதிபலனாக அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை. என்றென்றைக்கும் அவர் பெருமிதத்துடனும் மரியாதையுடனும் நினைவுகூரப்படுவார்.