World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US vice-president to lay down law to China

அமெரிக்க துணை ஜனாதிபதி சீனாவிற்கான விதிகளை வரையறுக்க உள்ளார்

Peter Symonds
3 December 2013

Back to screen version

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பேடெனின் ஆசியாவிற்கான இந்த வார விஜயம், அப்பிராந்தியத்தில் அமெரிக்கா காய்களை நகர்த்த உள்ளதென்ற சந்தேகத்திற்கு இடமில்லாத ஒரு சேதியை சீனாவிற்கு அனுப்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் நடந்த பிரதான ஆசிய கூட்டங்களில் ஜனாதிபதி ஒபாமா காட்சிக்கு முன் வராததைத் தொடர்ந்து, பேடெனின் பிரசன்னம், சீனாவை சுற்றி வளைக்கும் மற்றும் அதன் பிராந்திய செல்வாக்கிற்கு குழிபறிக்கும் நோக்கில், "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பிற்கு" ஒபாமா நிர்வாகம் முற்றிலுமாக பொறுப்பேற்றுள்ளது என்பதை அமெரிக்க பங்காளிகளுக்கு எடுத்துக்காட்டுவதற்காக உள்ளது.

கிழக்கு சீனக்கடலில் ஒரு வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை (ADIZ) பெய்ஜிங் அறிவித்தமைக்கு வாஷிங்டனின் ஆக்ரோஷமான கடந்த வார விடையிறுப்பானது, ஆசியாவில் அதன் மேலாதிக்க இடத்தை உறுதிபடுத்த அமெரிக்கா சீனாவுடன் மோதலில் இறங்க தயங்காது என்பதை தெளிவுபடுத்துகிறது. சீனாவின் அறிவிப்புக்கு ஒருசில நாட்களுக்குப் பின்னர், அமெரிக்க விமானப்படையின் அணுகுண்டு ஏந்தக்கூடிய B-52 விமானங்கள் நேரடியாக பெய்ஜிங்கின் அதிகாரத்திற்கு சவால் விடுக்க அந்த மண்டலத்திற்குள் பறந்தன. பெய்ஜிங்கின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் சேர்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய சென்காகூ/தியாகூ தீவுகளை ஒட்டி எழும் எந்தவொரு யுத்தத்திலும் அமெரிக்கா ஜப்பானை ஆதரிக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் சக் ஹெகல் சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்தார்.

கிழக்கு ஆசியாவில் எழுந்துள்ள திடீர் பதட்டங்களுக்கு அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள் முழுமையாக சீனாவையும், அதன் ADIZ பிரகடனத்தையும் குற்றஞ்சாட்டின. இருந்த போதினும், அதன் பிரதான பொறுப்பு ஒபாமா நிர்வாகத்தையே சாரும். அது கடந்த நான்கு ஆண்டுகளாக ஓர் இரக்கமற்ற இராஜதந்திர தாக்குதலில் ஈடுபட்டுள்ளதோடு, அமெரிக்க நலன்களுக்கு சீனா ஒரு சவாலாக உருவாகிவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆசியாவில் இராணுவ ஆயத்தங்களையும் செய்து வருகிறது. ஒரு முன்னணி ஏகாதிபத்திய சிந்தனை கூடமான மூலோபாய ஆய்வுகளுக்கான சர்வதேச பயிலகத்தால் பிரசுரிக்கப்படும் Survival இதழின் மிக சமீபத்திய வெளியீட்டில், ஒபாமா நிர்வாகத்தின் மூர்க்கமான கொள்கைகளின் அடித்தளம் மிக தெளிவாக பேசப்பட்டது.

அது எழுதுகிறது: “யூரேசியாவின் முக்கிய இராணுவ மற்றும் பொருளாதார சக்திகளின் தொழில்துறை மையங்களில் மேலாதிக்கம் செலுத்த திறன் படைத்த ஓர் ஆத்திரமூட்டும் "நேரடி போட்டியாளரின்" எழுச்சியைத் தடுப்பதற்காக, மேலோங்கிய அதிகாரங்களோடு அமெரிக்காவின் பெரும் மூலோபாயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இருந்துள்ள, மற்றும் இருக்கின்ற மேலாதிக்கத்திற்கு சவால் விடுக்க அதன் நலன்களுக்கு விரோதமான ஒரு சக்தி எழுந்துவிடாமல் உறுதிபடுத்தி வைப்பதே, ஆசியாவில் அமெரிக்காவின் பிரதான நலனாகும்."

Center for a New American Security என்ற அமைப்பால் அக்டோபரில் பிரசுரிக்கப்பட்ட அமெரிக்க "பாரிய மூலோபாயம்" மீதான மற்றொரு அறிக்கை அறிவித்தது, “தென்கிழக்கு ஆசிய மற்றும் ஆஸ்திரேலியாவில் அதன் இராணுவ இருப்பை விரிவாக்கவும், அதன் கூட்டுறவுகளை மற்றும் கூட்டணிகளைப் பலப்படுத்தவும், மற்றும் அப்பிராந்தியத்தில் அமெரிக்க தலைமையை கூடுதலாக வலுப்படுத்தவும் அமெரிக்கா மூலோபாய பாதையை ஒரு வாய்ப்பாக காண்கிறது." “கிழக்கு ஆசியாவில் முக்கிய விரோதிகளைத் தோற்கடிக்க அமெரிக்க இராணுவத்தின் பிரசன்னமும் அப்பிராந்தியத்தை அணுகுவதும் அமெரிக்காவின் ஆற்றலை விரிவாக்குகிறது."

இந்த மூலோபாயம் எந்த "விரோதிக்கு" எதிராக திருப்பி விடப்பட்டுள்ளதென்றால், நிச்சயம், அது சீனாவாக உள்ளது. சுற்றி வளைத்தல் மற்றும் அச்சுறுத்துதல் ஆகிய யுத்திகளைப் பயன்படுத்தியதோடு, சீனாவிற்கு எதிராக மேலதிக ஆத்திரமான நிலைப்பாட்டை எடுக்க ஜப்பான் போன்ற அதன் பங்காளிகளை அமெரிக்கா திட்டமிட்டு தூண்டிவிட்டுள்ளது, அது சென்காகூ/தியாவூ தீவுகள் போன்ற பிராந்திய வெடிப்பு புள்ளிகளை அபாயகரமாக எரியூட்டி உள்ளது.

சீனாவின் ADIZஐ கண்டிப்பதில் ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் உடனடியாக அமெரிக்காவுடன் சேர்ந்தது ஒன்றும் தற்செயலான நிகழ்வல்ல. அந்த இரண்டு நாடுகளுமே சீனாவுக்கு எதிரான பெண்டகனின் யுத்த தயாரிப்புகளுக்குள் ஆழமாக ஒருங்கிணைந்துள்ளன. ஒபாமாவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு", ஜப்பானில், பிரதம மந்திரி ஷின்ஜோ அபேயின் வலதுசாரி அரசாங்கம் அதிகாரத்திற்கு வர இட்டுச் சென்றது, அவர் பகிரங்கமாக ஜப்பானிய மீள்இராணுவமயமாக்கலை வலியுறுத்துகிறார், மேலும் 1940களின் ஜப்பானிய யுத்த குற்றவாளிகளைக் கௌரவிக்கும் இழிபெயர்பெற்ற யாஷூக்னி கல்லறையில் முன்னதாக அவர் அஞ்சலி செலுத்தி உள்ளார். சாத்தியக்கூறு உள்ள சீனாவுடனான ஒரு மோதலுக்காக, ஒரு பரந்த இராணுவத் தளமாக அந்த கண்டத்தை மாற்ற புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய அரசாங்கம் சமீபத்திய மந்திரிமார் கூட்டத்தில் அமெரிக்காவிற்கு நிபந்தனையற்ற அதிகாரம் வழங்கியது.

2009இல் ஒபாமா அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்டமையானது, முந்தைய புஷ் நிர்வாகம் அமெரிக்காவை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் மூழ்கடித்து, ஆசியாவில் சீனாவை சுதந்திரமாக அதிகாரம் செலுத்த விட்டுவிட்டதென்ற அமெரிக்க ஆளும் மேற்தட்டின் ஒரு சக்திவாய்ந்த பிரிவிற்குள் நிலவும் ஆழ்ந்த கவலைகளோடு பிணைந்திருந்தது. உலகின் ஆறாவது மிகப் பெரிய பொருளாதாரம் என்ற இடத்திலிருந்து இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் என்றான சீனாவின் கடந்த தசாப்த உருமாற்றம் அமெரிக்காவின் உலகளாவிய மேலாத்திக்கத்திற்கு ஓர் அச்சுறுத்தலை முன்நிறுத்துகிறது.

அதன் பொருளாதாரத்தை முதலாளித்துவ மறுகட்டமைப்பு செய்ததன் விளைவாக, சீனா உலகின் மிகப் பெரிய மலிவுத் தொழிலாளர் தளமாக செயல்பட்டு வருகிறது. எரிபொருள் மற்றும் ஆதாரவளங்களுக்கான சீனாவின் பாரிய தேவை உலகம் முழுவதிலும் அதை அமெரிக்காவுடன் போட்டிக்குள் இழுத்து வருவதோடு, அதன் வர்த்தகத்தையும் படிப்படியாக உயர்த்தியது. 2000 மற்றும் 2012க்கு இடையே கிழக்கு ஆசிய வர்த்தகத்தில் அமெரிக்காவின் பங்கு 19.5 சதவீதத்திலிருந்து 9.5 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்தது, அண்ணளவாக இது பாதியளவிற்கு சரிவாகும், அதேவேளையில் சீனாவின் பங்கு 10.2 சதவீதத்திலிருந்து 20 சதவீதத்திற்கு உயர்ந்தது, ஏறத்தாழ இது இரட்டிப்பாகும்.

சீனாவால் முன்னிறுத்தப்பட்ட சவால் குறிப்பாக 2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடியை ஒட்டி கூர்மைப்பட்டுள்ளது. ஆசியாவில் அதன் மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்த புதிதாக நிறுவப்பட்ட ஒபாமா நிர்வாகம் "முன்னெடுப்பை" நோக்கி திரும்பியது, அனைத்திற்கும் மேலாக அதன் இராணுவத்தின் மிதமிஞ்சிய பலத்தை உபயோகிப்பதன் மூலமாக அதன் பொருளாதார வீழ்ச்சியை சரிகட்ட திரும்பியது. சீனாவை கட்டுப்படுத்தி வைப்பதே அமெரிக்க வெளியுறவு கொள்கையை உந்தி செல்லும் மேலான முன்னுரிமையாக மாறி உள்ளது.

செப்டம்பரில் நிகழ இருந்த சிரியா மீதான ஓர் தாக்குதலில் இருந்து பின்வாங்கிய ஒபாமாவின் முடிவு, தெஹ்ரானுடன் கடந்த வாரத்தின் அணுசக்தி உடன்படிக்கை மூலமாக ஈரானுக்கு எதிரான ஒரு யுத்தத்தின் ஒத்தி வைப்போடு தொடர்ந்தது, இது அதன் சர்வதேச மூலோபாயத்தின் பின்வாங்கல் என்பதைவிட ஒரு மீள்குவிப்பாக இருந்தது. ஈரானுடன் இந்த கட்டத்தில் ஓர் இராணுவ மோதலை தவிர்ப்பதன் மூலமாக, ஒபாமா நிர்வாகம் ஆசியாவில் அதன் முக்கிய மூலோபாய நலன்களின் மீது அதன் சக்தியை ஒன்றுகுவிக்க முடியுமென நம்புகிறது. அனைத்திற்கும் மேலாக, ஈரானை சமரசப்படுதல்குறைந்தபட்ச விட்டுகொடுப்புகளோடு அதை எட்ட முடிந்தால் கூடசீனாவை சுற்றி வளைப்பதில் மற்றொரு மூலோபாய உடைமையாக ஈரான் மாறக்கூடிய சாத்தியக்கூறை திறந்துவிடுகிறது.

இத்தகைய அபிவிருத்திகள் முதலாளித்துவ அடித்தளங்களின் மீது ஒரு "சமாதானமான எழுச்சியின்" மூலமாக ஓர் உலக சக்தியாக நாட்டை மாற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரவார திட்டங்களின் முக்கிய மூலோபாய குறைபாட்டை அம்பலப்படுத்தி உள்ளது. அதன் பாரிய பொருளாதார வளர்ச்சிக்கு இடையில், அமெரிக்காவின் மேலாதிக்கத்தில் உள்ள ஓர் உலக ஏகாதிபத்திய அமைப்புமுறையின் இந்த வசப்படாத தர்க்கத்தை தட்டிக்கழிக்க முடியவில்லைதவிர்க்கவும் முடியாது.

ஆளும் முதலாளித்துவ மேற்தட்டின் அரசியல் கருவியாக உள்ளசீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி திடீர் பதட்டங்களால் நெருக்கடிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது. மூர்க்கமான அமெரிக்க "முன்னெடுப்பை" எதிர்கொள்ளும் சீனாவின் முயற்சிகள், உலக முதலாளித்துவத்திற்குள் இன்னும் முற்றிலுமாக சீனாவை ஒருமிக்கும் வெறிபிடித்த முயற்சிகளோடு, மற்றும் சாகசவாதத்தை நுகரும் ஆசியாவில் அதன் நலன்களின் ஓர் இரக்கமற்ற வலியுறுத்தல்களோடு, அமெரிக்க இராணுவ பிடிக்குள் வருவதை நோக்கி இணைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் மற்றும் தென்கொரியாவுடன் சர்ச்சைக்குரிய பிராந்தியங்களை உள்ளடக்கி உள்ள ADIZஇன் பெய்ஜிங்கின் அறிவிப்பானது, நேரடியாக வாஷிங்டனின் கைகளுக்குள் விழுந்தது, மேலும் அமெரிக்கா இராணுவ அழுத்தத்தை அதிகரிக்கின்ற நிலையில் சீனா தனித்து விடப்பட்டுள்ளது.

சீன அரசு சொத்துக்களை கொள்ளையடித்தும், சீனாவை உலகின் கொத்தடிமை நிலைமைக்குள் உருமாற்றியும் தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து தன்னைத்தானே செழிப்பாக்கி கொண்ட ஒரு செல்வ செழிப்பான செல்வந்த தட்டின் நலன்களைப் பாதுகாக்க சீன ஆட்சியின் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சீனா, குறிப்பாக ஜப்பானுக்கு எதிராக நோக்கங் கொண்டு, சீன தேசியவாதத்தை தூண்டி வருவதானது, உள்நாட்டில் கூர்மை அடைந்துவரும் சமூக பதட்டங்களை வெளிப்புறமாக திருப்புவதற்காகும். அதன் நடவடிக்கைகளின் தர்க்கம், சீனாவை ஒரு மோதல் போக்கினூடாக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு யுத்தத்திற்குள் தள்ளுவதாகும், அது சீனா, ஆசியா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்திற்கான பேரழிவாக மட்டுமே விளங்கும்.

முதலாம் உலக யுத்தத்தின் நூறாவது வருடம் மனிதயினத்தை நெருங்கி கொண்டிருக்கையில், தீவிரப்பட்ட ஆயுத போட்டாபோட்டி மற்றும் கூர்மையடைந்து வரும் விரோதங்களோடு சேர்ந்து, கிழக்கு ஆசியாவில் எழுந்துவரும் புவி-அரசியல் பதட்டங்கள் ஐரோப்பாவில் தலைகீழாக திருப்பி போட்ட அச்சமூட்டும் யுத்த மோதல்களைப் போன்ற ஒன்றை தாங்கி உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான ஒரு மோதல் தவிர்க்க முடியாமல் அனைத்து பிரதான சக்திகளையும் ஈடுபடுத்தும் என்பதோடு அது பெரும் போரின் பயங்கரங்களை உள்ளடக்கிய ஓர் அணுகுண்டு யுத்தத்தின் அபாயத்தையும் உயர்த்துகிறது.

திவால்நிலை இலாப அமைப்புமுறையையும், உலகை போட்டாபோட்டி மிக்க தேசிய அரசுகளுக்குள் வழக்கொழிந்த முறையில் பிரிப்பதையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து, யுத்த அபாயங்களைத் தடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தியாக சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே உள்ளது. யுத்தம், சுரண்டல் மற்றும் சமூக அவலங்களில் இருந்து விடுபட்ட ஒரு சோசலிச உலகிற்காக போராடுவதில் சீன, அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாளர்கள் ஒரே பொதுவான வர்க்க நலன்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.