World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை கொழும்பு அரசாங்கத்துடனான சமரசமே தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனின் குறிக்கோள்
By Paramu Thirugnanasampanthar பின்வரும் கட்டுரை, இலங்கையின் வடமாகாண சபை தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் முதன்மை வேட்பாளர் பரமு திருஞானசம்பந்தரால் எழுதப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ வடக்கு மாகாண சபை தேர்தலை செப்டெம்பர் மாதம் நடத்துவது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான அக்கறையினால் அன்றி, பிரதானமாக இந்தியா மற்றும் அமெரிக்காவின் அழுத்தத்தினாலேயே ஆகும். இந்தியாவும் அமெரிக்காவும் வெறுமனே தமது பூகோள அரசியல் தேவையின் நிமித்தமே இத்தகைய நெருக்குவாரங்களை திணிக்கின்றன. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவத் தோல்வியடைந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வறியவர்களும், யுத்த அழிவினால் மேலும் மோசமாக்கப்பட்ட சமூக-பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு பதில் தேடும் பெரும் அவசியத்தில் உள்ளனர். ஆயினும், பிரதான உலக வல்லரசுகள், கொழும்பு அரசாங்கம் மற்றும் தமிழ் முதலாளித்துவ கட்சிகளின் சூழ்ச்சி நடவடிக்கைகளின் பெறுபேறான இந்த தேர்தல், தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு தரப்போவதில்லை. வடக்கு மாகாண தேர்தல், தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதான அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிற்போக்கு பாத்திரத்தின் புதிய திருப்பத்தை தீர்க்கமாக அம்பலப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாகும். மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது உள்ள கடும் அதிருப்தியை சுரண்டிக்கொண்டு, மாகாண சபையில் அதிகாரத்தைக் கைப்பற்ற கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. இலங்கையின் தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் அவசியத்திற்காக இராஜபக்க்ஷ அரசாங்கத்துடனும் இந்தியா மற்றும் அமெரிக்கத் தலைமையிலான மேற்கத்தைய சக்திகளுடனும் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு மிகவும் பொருத்தமான ஒரு பிரதிநிதியாகவே, எந்தவகையிலும் தனது உறுப்பினர் அல்லாத முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி. விக்னேஸ்வரனை கூட்டமைப்பு தனது முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்துகொண்டுள்ளது. முன்னாள் நீதிபதி, முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட முன்வந்த உடனேயே, தனது பாத்திரம் என்னவென்பதை பின்வருமாறு பகிரங்கமாக: “என்னைப் பொறுத்தளவில் முதலமைச்சர் என்பது அரசியல் பதவி அல்ல. இந்த விசேட சந்தர்ப்பத்தில், அரசாங்கம் மற்றும் இந்தியாவுடனும் ஏனைய வெளிநாடுகளுடனும் பிரச்சினைகளைப் பேசக்கூடிய ஒருவர் அவசியம்”. என தெரிவித்தார். இங்கு ஏனைய வெளிநாட்டு சக்திகள் என அவர் குறிப்படுபவை அமெரிக்காவும் ஏனைய மேற்கத்தைய சக்திகளுமே ஆகும். தமிழ் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அதன் செயலாளர் மாவை சேனாதிராஜாவே போட்டியிடவுள்ளார் என ஊடக செய்திகள் தெரிவித்திருந்தன. ஆயினும், கட்சிக்குள்ளான நீண்ட நெருக்கடி மிக்க கலந்துரயாடல்களின் பின்னர், கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தனின் பரிந்துரையின் பேரில் இறுதியில் விக்னேஸ்வரனே வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். முதலமைச்சர் பதவிக்கு அவரை முன்நிறுத்துவதன் மூலம், கூட்டமைப்பு பல இலக்குகளை குறிவைத்துள்ளது. அதிகாரத்துக்கு வந்தால் ஏகாதிபத்தியவாதிகளின் உதவியுடன் கொழும்பு அரசாங்கத்துடன் சமரசத்துக்கு பெரும் பேரம் பேசுவது அதில் ஒன்று. முதலாளித்துவ ஸ்தாபனத்துடன் தொடர்புடைய, சட்டத்தின் அதிகாரத்தை பாதுகாக்க அர்ப்பணித்துக்கொண்ட அவரை முன்நிறுத்துவதன் மூலம், புலி “பயங்கரவாதிகளுக்கும்” பிரிவினைவாதத்துக்கும் உதவி செய்தமை தொடர்பாக தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் இருந்து தலைதப்ப முடியும் என கூட்டமைப்பு தலைவர்கள் கணக்கிடுகின்றனர். இராணுவத் தோல்வியடையும் வரை புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்டு, அதன் பின்னர் நான்கு ஆண்டுகளாக கொழும்பு அரசாங்கத்துடன் சமரசத்துக்கு முயற்சிக்கும் அதேவேளை, தமிழ் வெகுஜனங்களின் பிரச்சினை பற்றி போலி அனுதாபம் காட்டுகின்ற கூட்டமைப்பு, தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வறியவர்கள் மத்தியில் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. அதனால் புலிகளுடன் தொடர்பற்ற ஒரு “புதிய” நபராக விக்னேஸ்வரனை முன்நிறுத்தி, மக்களின் கண்களில் மண் தூவுவதற்கு கூட்டமைப்பு எதிர்பார்த்துள்ளது. கொழும்பு வெகுஜன ஊடகங்கள் பலவும், விக்னேஸ்வரனுடனான பேட்டிகளுக்கு பக்கங்களை ஒதுக்கியும் கட்டுரைகளை வெளியிட்டும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது சம்பந்தமாக அரசியல் ஸ்தாபனத்தில் உடன்பாடு இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன. முன்னாள் ரடிகல்வாதியான, அரசாங்கத்தின் தூதர் பதவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தயான் ஜயதிலக, ஊடகங்களுக்கு எழுதிய பல கட்டுரைகளிலும், “வடக்கு மற்றும் தெற்குக்கும் இடையில் மிகவும் பொருத்தமான உறவை ஏற்படுத்துவதற்கு ஏற்புடைய மனிதராக” சுட்டிக் காட்டி விக்னேஸ்வரனின் தெரிவை ஏற்றுக்கொண்டுள்ளார். இவை அனைத்துக்கும் மேலாக, “பேய் என்று சொல்லுமளவு கறுப்பு அல்ல” எனக் கூறி இராஜபக்ஷவும் விக்னேஸ்வரனுக்கு சமிக்ஞை செய்துள்ளார். தான் விக்னேஸ்வரனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும் இராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்கா அதன் ஆசியாவுக்குத் திரும்புதல் என்ற பெயரில், சீனாவுக்கு எதிராக தயார் செய்கின்ற யுத்தத்தில் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் யுத்த கூட்டணிகளை ஒழுங்குபடுத்துவதில் இலங்கையையும் இணைத்துக்கொள்வதற்கே கொழும்பு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றது. யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் கொழும்பு அரசாங்கம் சீனாவுடன் நெருக்கமாகியமையே, புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்த இந்த நாடுகளுக்கு பிரதான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதனால், சீனாவுடனான உறவை கீழறுப்பதற்காக, புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் கடைசி வாரங்களில் அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை சுட்டிக் காட்டி, இத்தகைய அழுத்தங்கள் திணிக்கப்படுகின்றன. இந்து சமுத்திர பிராந்தியத்துள் சீனா உறவுகளை வளர்த்துக்கொள்வதை புது டில்லி எந்தவகையிலும் விரும்பவில்லை. அதேபோல், தமக்கு மிகவும் நெருக்கமான வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுவது பற்றி தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் எழுத்துள்ள எதிர்ப்பின் காரணமாக, அந்த பகுதியில் அரசியல் ஸ்திரமின்மை உருவாவதையிட்டும் இந்தியா கவலை கொண்டுள்ளது. அமெரிக்காவும் இந்தியாவும், கொழும்பின் மீது அழுத்தத்தை திணிக்கும்போது, கூட்டமைப்பை ஒரு நெம்புகோலாகப் பயன்படுத்தும் முயற்சியில், அதனுடன் சமரசத்துக்கு செல்லுமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றன. கூட்டமைப்பானது அந்த நாடுகளின் ஆசீர்வாதத்தை எதிர்பார்த்து சுயவிருப்புடன் இந்தியாவினதும், குறிப்பாக அமெரிக்காவினதும் மூலோபாய சூழ்ச்சிகளை அண்டி, அதன் யுத்த முயற்சியுடன் இணைந்து, தமிழ் மக்களை அழிவுகளுக்குள் தள்ளிவிடும் சதியில் ஈடுபட்டுள்ளது. அது யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாகவும் வட கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு சம்பந்தமாகவும் எடுத்துள்ள நிலைப்பாடுகளில், சாதாரண தமிழ் வெகுஜனங்களின் உரிமைகள் பற்றி எந்தவொரு அக்கறையும் கூட்டமைப்புக்கு இல்லை என்பது தெளிவாக வெளிப்பட்டுள்ளது. இராஜபக்ஷ அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் யுத்தக் குற்றங்கள் பற்றிய கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தாலும், விக்னேஸ்வரன் தனது பேட்டிகளில் அவை பற்றி எதுவும் குறிப்பிடாதது தற்செயலானது அல்ல. தாம் “பழைய விடயங்களை” –யுத்தக் குற்றங்களை- இழுக்காமல் சமரசத்துக்கு வரத் தாயர் என்பதையே விக்னேஸ்வரனும் கூட்டமைப்பினரும் அரசாங்கத்துக்கு சமிக்ஞை செய்கின்றனர். வடக்கு மக்களுக்கு தீர்க்கமான பிரச்சினையாக உள்ள வடக்கை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தை வெளியேற்றுவதும் அவர்களுடைய கோரிக்கை பட்டியலில் அடங்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இராணுவத்தை குறைக்க வேண்டும் என்றே விக்னேஸ்வரன் கூறியுள்ளார். “குறுகிய கால பிரச்சினைகளுக்கு” தீர்வு காண்பதிலேயே தான் அக்கறை காட்டுவதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார். யுத்தத்தில் காணாமல் போன உறவினர்களை கண்டுபிடித்தல், இராணுவம் கைப்பற்றிக்கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான சொத்துக்கள், பெரும் எண்ணிக்கையிலான விதவைகள் மற்றும் வேலையின்மை பற்றி ஆராய்தல் போன்றவையே அவற்றில் அடங்குகின்றன. காணாமல் போனவர்களுக்கும் விதவைகளுக்கும் அற்ப நட்ட ஈட்டை வழங்குவது போன்ற பேச்சுக்களின் மூலம், இந்த குறுகிய காலம் என சொல்லப்படுகின்ற பிரச்சினைகளின் கீழ் மிக அடிப்படையான பிரச்சினைகளை மூடி மறைப்பதன் மூலம், கொழும்பு ஆளும் வர்க்கத்தை திருப்திப்படுத்த முடியும் என்ற கொடூரமான கணக்கீட்டில் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. புலிகளை நிராயுதபாணிகளாக்குவதற்காக இந்திய இராணுவத்தை அனுப்புவதற்கு, 1987 ஜூலை மாதம் டில்லியும் கொழும்பு அரசாங்கமும் கைச்சாத்திட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கையில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தின் படி, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பெற்றுக்கொள்வதில் கூட்டமைப்பு மிகவும் அக்கறை காட்டுகின்றது. இராஜபக்ஷவும் சிங்களப் பேரினவாதிகளும் இந்த அதிகாரங்கள் கொடுக்கப்படுவதை எதிர்ப்பது, அந்தப் பிரதேசங்களை தமது சுரண்டல் பகுதியாக தொடர்ந்தும் வைத்துக்கொள்வதற்கே ஆகும். அந்தப் பிரதேசத்தை தமது சுரண்டல் தளமாக ஆக்கிக்கொள்வதே தமிழ் முதலாளிகளின் தேவையாகும். தமது சுரண்டல் உரிமைக்காக சிங்கள மற்றும் தமிழ் முதலாளிகளுடன் சேர்ந்து செயற்பட வேண்டிய தேவையை பற்றி, டெயிலி மிரர் பத்திரிகைக்கு கூறிய கருத்துக்களில் விக்னேஸ்வரன் கூறிய விடயங்கள், இந்த ஆளும் வர்க்கத்துக்குள் வளர்ச்சியடையும் பீதியையே வெளிப்படுத்தியுள்ளன. அவர் தெரிவித்திருப்பதாவது: “அங்கு –வடக்கில்- முன்னெடுக்கப்படும் கொடூரமான ஒடுக்குமுறை, நெருக்கடியை மேலும் மோசமான நிலைமைக்கு திருப்புவதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், இந்த நிலைமை தொடர்ந்தும் காணப்படுமெனில், இன்னொரு ஆயுத மோதல் தோன்றுவது நிச்சயமானதாக இருக்கும்... நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்காக தலைவர்கள் என்ற முறையில் செயற்பட முடியுமாயின் எங்களால் முன் செல்ல முடியும்.” விக்னேஸ்வரன் வெறும் ஆயுத மோதல் பற்றி மட்டும் எச்சரிக்கை செய்யவில்லை. தெற்கில் போலவே வடக்கிலும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சியினால் தோன்றவுள்ள அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி, அந்த “பொது விரோதிக்கு” எதிராக, முதலாளித்துவ வர்க்கம் ஒன்றிணைய வேண்டும் என்பதையே அவர் சுட்டிக் காட்டுகின்றார். கொழும்பு அராசங்கத்தைப் போலவே, தமிழ் முதலாளித்துவமும் சிங்கள தமிழ் தொழிலாளர்களின் போராட்டங்கள் எழுச்சிபெறுவது குறித்து பீதியடைந்திருப்பது, அவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சிக்கு எதிராக ஐக்கியப்படக் கூடிய நிலைமைகள் உருவாவதனாலேயே ஆகும். கூட்டமைப்பின் இழிவான சூழ்ச்சிகளை தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வறியவர்களும் முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும். புலிகள் மற்றும் கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் சகல தரப்பினரும், தாம் தமிழ் மக்களின் எந்தவொரு ஜனநயாக உரிமையையும் உறுதிசெய்யும் மாற்று வேலைத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு இலாயக்கற்றவர்கள் என்பதை வரலாற்று ரீதியாக நிரூபித்துள்ளனர். தமிழ் மக்கள் முகங்கொடுத்த அழிவுகளுக்கு, கொழும்பு ஆளும் வர்க்கம் பிரதான பொறுப்பாளியாக இருக்கும் அதேவேளை, கூட்டமைப்பு, புலிகள் உட்பட முதலாளித்துவ குழுக்களும் இதற்குப் பொறுப்பாளிகளாவர். அதேபோல், தாம் அக்கறை காட்டும் தமிழ் உழைக்கும் மக்களையே சுரண்டுவதற்கான நிலைமைகளை உருவாக்கிக்கொள்வதன் பேரில் ஏகாதிபத்திய நாடுகளுக்கு சேவை செய்ய கூட்டமைப்பு தயாராக உள்ளது. போலி இடதுகளான நவசமசமாஜக் கட்சியும் ஐக்கிய சோசலிசக் கட்சியும், முதலாளித்துவ தமிழ் கூட்டமைப்பை தூக்கி நிறுத்தி அதன் பிற்போக்கு வேலைத் திட்டத்துக்கு சுண்ணாம்பு பூசுகின்றன. முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் அதன் வர்க்க ஆட்சியிலேயே தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத பாகுபாட்டின் வேர்கள் உள்ளன. சிங்கள மற்றும் தமிழ் உழைக்கும் மக்கள் ஐக்கியப்பட்டு, பிராந்தியத்திலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் ஒத்துழைப்பை வெற்றிகொண்டு, இளைஞர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்டவர்களையும் அணிதிரட்டி, சோசலிச வேலைத் திட்டத்தை அமுல்படுத்தவும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தவும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டுவருவதே ஒரே மாற்றீடாகும் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து நிபந்தனை இன்றி இலங்கை இராணுவத்தை வெளியேற்றக் கோரும் ஒரே கட்சி எமது சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே ஆகும். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தயார்செய்யும் யுத்தத்தை நாம் எதிர்க்கும் அதே வேளை, தனது மூலோபாய நலன்களை தக்கவைத்துக்கொள்ள சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் நாம் ஆதரிக்கவில்லை. அமெரிக்கா மற்றும் இந்தியாவை நோக்கி கூட்டமைப்பு திரும்புவதற்கு எதிராக, நாம் அந்த நாடுகளிலும் அயல் நாடுகளிலும் உள்ள தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியத்தை ஏற்படுத்துவதை நோக்கித் திரும்ப வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று மட்டும் நான் உங்களிடம் கேட்கவில்லை. மேற்குறிப்பிடப்பட்ட முன்னோக்குக்காக போராடும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து, வரவிருக்கும் போராட்டங்களில் அதை தொழிலாள வர்க்கத்துக்கு தலைமை கொடுக்கக்கூடிய பரந்த கட்சியாக கட்டியெழுப்ப போராட முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன். |
|