சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Socialist Equality Party manifesto for Northern Province election

சோசலிச சமத்துவக் கட்சியின் வட மாகாணசபை தேர்தலுக்கான விஞ்ஞாபனம்

By Socialist Equality Party (Sri Lanka)
21 August 2013

 use this version to print | Send feedback

சோசலிச சமத்துவக் கட்சி (சோ...), செப்டெம்பர் 21 நடக்கவுள்ள வட மாகாணசபை தேர்தலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசியல் குழு உறுப்பினர் திருஞானசம்பந்தர் தலைமையில் 19 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. எமது வேட்பாளர்களில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம்களுமாக தீவின் மூன்று சமூகங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள், மீனவர்கள், குடும்ப பெண்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களும் அடங்குவர்.

இந்து-பசுபிக் பிராந்தியத்தில் வளர்ச்சியடைந்து வரும் யுத்த ஆபத்துக்கு எதிராகவும், அரசாங்கத்தின் கொடூரமான சிக்கன திட்டங்களுக்கும் மற்றும் அதை திணிக்க இராணுவ பொலிஸ் வழிமுறைகளைப் பயன்படுத்துவதற்கு எதிராகவும், ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்துக்காகப் போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். நாம், வடக்கில் தற்போது தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பையும் அரசியல் ஸ்தாபனத்தின் சகல கட்சிகளதும் பிரிவினையான இனவாத அரசியலையும் எதிர்க்கின்றோம்.

1930களின் பின்னர் ஏற்பட்டுள்ள முதலாளித்துவத்தின் மோசமான பூகோள நெருக்கடியின் தாக்கத்தில் இருந்து இலங்கை விலக்கப்பட்ட ஒன்றல்ல. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கமானது தொழில், அத்தியாவசிய சேவைகள் மற்றும் விலை மானியங்களை வெட்டக் கோரும் சர்வதேச நாணய நிதியத்தின் வேண்டுகோள்களை ஏற்கனவே திணித்துள்ளதோடு வாழ்க்கைத் தரத்தை மேலும் சீரழிக்கவுள்ளது. தமக்கு கிடைக்கும் தண்ணீர் மாசுபடுத்தப்பட்டதற்கு எதிராக வெலிவேரியவில் அண்மையில் ஆர்ப்பாட்டம் செய்த மூன்று கிராமத்தவர்களை இராணுவம் கொன்றமை, இந்த சிக்கன திட்டங்கள் அமைதியாக திணிக்கப்பட போவதில்லை என்பதற்கான எச்சரிக்கையாகும்.

இந்த மாகாண சபை தேர்தலே, இலங்கையையும் உள்ளிழுக்கும் பிராந்தியப் பகைமை நீர்ச்சுழியின் விளைவாகும். பிராந்தியம் முழுவதிலும் உள்ள தமது சமதரப்பினர்களைப் போலவே, இராஜபக்ஷவும், தனது அரசாங்கம் பொருளாதார ரீதியில் சீனாவில் தங்கியிருப்பதற்கும், பெய்ஜிங்கிற்கு எதிரான அமெரிக்காவின்ஆசியாவுக்குத் மீண்டும் திரும்புதல்என்ற ஆக்கிரமிப்புத் திட்டத்துடன் அணிசேர வேண்டும் என்ற வாஷிங்டனின் கோரிக்கைக்கும் இடையில் முன்னெச்சரிக்கையான சமநிலை பேணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலம் கடந்த பின்னர் முதல் தடவையாக இராஜபக்ஷ தயக்கத்துடன் இந்த தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளது, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் அழுத்தத்தின் கீழேயே ஆகும். அவர், தீவின் தமிழ் தட்டினருக்கு எந்தவொரு சலுகையும் வழங்குவதை கசப்புடன் எதிர்க்கும் சிங்கள அதி தீவிரவாதிகளை அமைதிப்படுத்துவதற்கும் மற்றும் நாட்டின் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்துக்கு ஒருஅரசியல் தீர்வைகாணுவதற்கான முயற்சியின் ஒரு பாகமாக, தமிழர்கள் செறிந்து வாழும் மாகாணத்தில் தேர்தல் நடத்த வாஷிங்டனும் புது டில்லியும் விடுக்கும் கோரிக்கைகளுக்கும் இடையில் சிக்கிக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு தீவில் உள்ள தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பாக கொஞ்சமும் அக்கறை கிடையாது. வாஷிங்டன் இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரித்ததோடு 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக இலங்கை இராணுவத்துக்கும் உதவியது. அதன் பின்னரே, சீனாவிடம் இருந்து தன்னை தூர விலக்கிக்கொள்ளுமாறு இராஜபக்ஷவை நெருக்குவதன் பேரில் கொழும்பின் யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக அமெரிக்கா தனது மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியது.

இலங்கையில் அமெரிக்காவின் இராஜதந்திர தலையீடுகள், சீனாவின் செல்வாக்கை கீழறுப்பதற்கும் யுத்தத்திற்கான தயாரிப்பிற்கும் அது இந்து-பசுபிக் பூராவும் முன்னெடுக்கும் மூலோபாயத்தின் பாகமாகும். கடந்த நான்கு ஆண்டுகளாக, அமெரிக்க கூட்டணிகளை பலப்படுத்தியுள்ள ஒபாமா நிர்வாகம், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்சுடனும் புதிய இராணுவ நிலைகொள்ளும் ஒழுங்குகளை ஸ்தாபித்துள்ளதோடு இந்து-பசுபிக் பிராந்தியம் பூராவும் பதட்டங்களை பெருமளவில் உக்கிரமாக்கியுள்ளது. பாகிஸ்தானுக்குள் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்களுடன் சேர்த்து, அமெரிக்க தலைமையிலான ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு தொடர்கின்றது. அமெரிக்காவினால் ஊக்குவிக்கப்பட்டுள்ள இந்தியா, சீனா தொடர்பாக மிகவும் மூர்க்கமான நிலைப்பாட்டை எடுத்து, சீன-இந்திய எல்லை முரண்பாட்டுக்கு எரியூட்டியுள்ளது.

நவ சம சமாஜ கட்சி (ந.ச.ச.க.) மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி (யூ.எஸ்.பீ) போன்ற போலி-இடது அமைப்புகள் உட்பட முழு கொழும்பு அரசியல் ஸ்தாபனமும், சீனாவுக்கு எதிரான அமெரிக்க யுத்த திட்டங்கள் பற்றி முற்றிலும் அமைதியாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற பல்வேறு தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், அமெரிக்காவை ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலனாக போலியாக முன்னிலைப்படுத்துகின்றன. அதன் மூலம் அவை ஒரு அரசியல் தீர்வுக்கான, அதாவது கொழும்புடன் ஒரு அதிகாரப் பரவலாக்கல் உடன்பாட்டுக்கான, தமது சொந்த இழிந்த சூழ்ச்சிகளுக்கு ஆதரவு பெற முடியும் என எதிர்பார்க்கின்றன.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரமானது இந்த மௌனச் சதியை உடைப்பதையும் தெற்காசியா மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கத்துடனான ஐக்கியத்தில், ஏகாதிபத்திய யுத்தத்துக்கும் இராணுவவாதத்துக்கும் எதிராக உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டுவதையும் இலக்காக் கொண்டது.

மாகாணசபை தேர்தல்

பேரழிவுகரமான விளைவை ஏற்படுத்திய இலங்கை உள்நாட்டு யுத்தம் சம்பந்தமாகவும் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் முழு மௌனம் காணப்படுகிறது. அரைவாசிக்கும் அதிகமான இலங்கை இராணுவம் வடக்கில் நிலைகொண்டுள்ளதோடு, மாகாணசபை தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் அதை பொருட்படுத்தாமல் மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் இறுக்கமான பிடியை தொடர்ந்தும் பேணும். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னமும் இடம்பெயர்ந்த நிலையிலேயே இருப்பதோடு எந்தவொரு நிரந்தரமான இருப்பிடமோ அல்லது வாழ்வாதாரமோ இன்றி வாழத் தள்ளப்பட்டுள்ளன. 4,000 க்கும் அதிகமான குடும்பங்கள் இராணுவக் கட்டுப்பாட்டிலான அகதி முகாம்களில் போதுமான உணவு, சுகாதார வசதி அல்லது தமது பிள்ளைகளுக்கு பாடசாலை வசதிகள் இன்றி வாழ்கின்றன. இராணுவத்தின் பயன்பாட்டுக்காகவும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காவும் பத்தாயிரக்கணக்கான நிலங்கள் வேலியிடப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினதும் அதன் கூட்டணி பங்காளிகளதும் பிரச்சாரம் பொய்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இராணுவம் எந்தவொரு யுத்தக் குற்றத்தையோ அல்லது ஜனநாயக உரிமை மீறலையோ செய்யவில்லை என இராஜபக்ஷ முழுமையாக மறுக்கின்றார். யுத்தம் முடிந்த பின்னர் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் கொண்டுவருவதாக அவர் கொடுத்த வாக்குறுதிகள் முற்றிலும் மோசடியானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வணிக உயரடுக்கினர், குறிப்பாக ஊகவாணிபர்களும் அரசாங்கத்தின் கூட்டாளிகளும் இலாபத்தை குவித்துக்கொண்டுள்ள போதிலும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக பரந்த பெரும்பான்மை உழைக்கும் மக்கள் தமது வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியுறுவதையே கண்டுள்ளனர். வாழ்க்கைச் செலவு ராக்கட் வேகத்தில் உயர்ந்துள்ள நிலையிலும் கூட, அரசாங்கம் சம்பள அதிகரிப்பு நிறுத்தத்துக்கு சமமான ஒன்றை அமுல்படுத்தியுள்ளது.

எதிர் கட்சிகளான யூ.என்.பீ. மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பீ.) அரசாங்கத்தின் சந்தை-சார்பு நிகழ்ச்சித் திட்டத்துடன் எந்தவொரு அடிப்படை முரண்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. இரு கட்சிகளும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் யுத்தத்தை கடைசிவரை ஆதரித்ததுடன் அதன் யுத்தக் குற்றங்களையும் தொடர்ந்தும் மூடி மறைக்கின்றன. யூ.என்.பீ. தன்னை ஜனநாயகத்தின் பாதுகாவலனாக காட்டிக்கொள்வதை போலி இடதுகளான நவ சம சமாஜ கட்சியும், ஐக்கிய சோசலிசக் கட்சியும் களைப்பின்றி முன்னிலைப்படுத்துகின்றன. இந்தக் கூற்றை தொழிலாளர்களும் இளைஞர்களும் ஏளனமாக நிராகரிக்க வேண்டும். அரசாங்கத்தைப் போலவே, யூ.என்.பீ.யும் சிங்கள மேலாதிக்கவாதத்தில் ஊறிப்போயுள்ளதோடு யுத்தத்தை தொடங்கி முன்னெடுத்தமைக்கு அது முழு பொறுப்பாளியாகும். அரசியல் அதிகாரத்துக்கான போராட்டத்தில், தொழிலாள வர்க்கமும் அதற்குப் பின்னால் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களும் சுயாதீனமாக அணிதிரள்வதை தடுப்பதில் இந்த போலி இடதுகள் நீண்டகாலமாக பங்கெடுத்து வந்துள்ளன. 

பல்வேறு தமிழ் முதலாளித்துவக் கட்சிகளில் எதுவும் எந்தவொரு மாற்றீட்டையும் முன்வைக்கவில்லை. அவர்கள் அனைவரும், தொழிலாள வர்க்கத்துக்கு மாபெரும் அழிவை நிரூபித்த தமிழ் இனவாத அரசியலிலேயே தொடர்ந்தும் காலூன்றிக்கொண்டுள்ளனர். அவர்கள், மாகாண சுயாட்சியானது உழைக்கும் மக்களின் நிலைமைகளை மேம்படுத்துவதோடு திட்டமிட்ட ஜனநாயக உரிமை மீறல்களுக்கு முடிவுகட்டும் என்ற பொய்யை ஏதாவதொரு வகையில் தூக்கிப் பிடிக்கின்றனர். யதார்த்தத்தில் இந்தக் கட்சிகள், கொழும்பு ஸ்தாபனத்துடன் ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கின் ஊடாக மறு சிறப்புரிமைகளை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கும் கைக்கூலி தமிழ் முதலாளித்துவத் தட்டின் நலன்களையே பிரதிந்தித்துவம் செய்கின்றன.

யுத்தத்தின் கடைசி ஆண்டுகளின் போது, புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இப்போது சலுகைகள் வழங்குமாறு இராஜபக்ஷ அரசாங்கத்தை நெருக்குவதற்காக அமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய சக்திகளிடம் கெஞ்சுகின்றது. சர்வதேச ஆதரவை பெறும் ஒரு முயற்சியாக, கூட்டமைப்பு முதலமைச்சருக்கான தனது வேட்பாளராக கொழும்பு ஸ்தாபனத்தின் ஒரு உறுப்பினரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.வி. விக்னேஸ்வரனை தேர்வு செய்துள்ளது. சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த அவர், இந்த குறிப்பிட்ட காலத்தில், அரசாங்கத்துடன் இந்தியாவுடன் மற்றும் வெளிநாடுகளுடனும் விவகாரங்களை கலந்துரையாடக் கூடிய ஒரு நபர் [முதலமைச்சராக] அங்கிருப்பது அவசியம்,என்றார்.

உள்நாட்டு யுத்தத்தின் படிப்பினைகள்

சுமார் மூன்று தசாப்தங்களாக தீவை நாசம் செய்த யுத்தம் பற்றிய ஒரு அரசியல் இருப்புநிலை ஏட்டை வரைந்துகொள்வது அவசியமாகும். இந்த மோதல் துன்பகரமான அதேவேளை, உழைக்கும் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை திருப்திபடுத்துவதில் பின்தங்கிய நாடுகளில் உள்ள முதலாளித்துவம் முற்றிலும் இலாயக்கற்றது, என்ற லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படை கருத்தை மறுக்க முடியாமல் நிரூபித்துள்ளது. ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு, சோசலிசத்துக்கும் தொழிலாளர் ஆட்சிக்குமான ஒரு சுயாதீன புரட்சிகர போராட்டத்தின் பாகமாக, தொழிலாள வர்க்கத்திடமே விடப்படுகிறது.

பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், உழைக்கும் மக்களை பிளவுபடுத்தவும் தமது ஆட்சிக்கு எதிரான எந்தவொரு சவாலையும் திசை திருப்பவும் தமிழர்-விரோத பாரபட்சங்களையும் படுகொலைகளையுமே நாடி வந்துள்ளன. ஆனால் போருக்கான பாதை தவிர்த்திருக்க முடியாதது அல்ல. இலங்கை முதலாளித்துவத்தின் பிரிவினை இனவாதத்தை எதிர்த்த ட்ரொட்ஸ்கிச இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (பி.எல்.பீ.ஐ.), சர்வதேசிய சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இலங்கையிலும் இந்திய துணைக் கண்டம் பூராவும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துக்காகப் போராடியது. லங்கா சமசமாஜக் கட்சிக்குள் பி.எல்.பீ.ஐ. கரைத்து விடப்பட்டமையும், அதன் பின்னர் சமசமாஜக் கட்சி சீரழிந்து 1964ல் சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) அரசாங்கத்தில் இணைந்து காட்டிக்கொடுத்தமையும், தொழிலாள வர்க்கத்தினுள் பெரும் குழப்ப நிலையை உருவாக்கி விட்டதோடு இனவாத அரசியல் தலைநீட்ட அனுமதித்தது.

இரண்டாவது ஸ்ரீ..சு..-சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சி கூட்டரசாங்கம், 1972 அரசியலமைப்பை அமுல்படுத்தி பௌத்தத்தை அரச மதமாக்கியதோடு தொழில், கல்வி மற்றும் வர்த்தகத்திலும் தமிழ் மக்களுக்கு எதிராக பாரபட்சங்களை செய்ததன் மூலம், இனவாத பதட்டங்களுக்கு எண்ணெய் வார்த்தது. தனது பிற்போக்கு சந்தை-சார்பு நிகழ்ச்சி நிரல் மீதான எதிர்ப்பை பிளவுபடுத்துவதற்கு திக்கற்றிருந்த அடுத்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) அரசாங்கம், அடுத்தடுத்து தமிழர்-விரோத ஆத்திரமூட்டல்களை நாடியதோடு, மோதலின் ஆரம்பத்தைக் குறித்த 1983 இனப் படுகொலையில் உச்சகட்டத்தை அடைந்தது. பத்தாயிரக்கணக்கான பொது மக்களின் உயிர்களைப் பலிகொண்ட இரத்தக் களரியுடன் 2009ல் முடிவுக்கு வந்த யுத்தத்தை ஸ்ரீ.ல.சு.க. மற்றும் யூ.என்.பீ.யும் ஈவிரக்கமற்று முன்னெடுத்தன.

புலிகளின் தோல்வியானது அடிப்படையில் இராணுவ பலவீனத்தால் ஏற்பட்டதல்ல, மாறாக, அதன் தமிழ் பிரிவினைவாத வேலைத்திட்டத்திலேயே உள்ள குறைபாட்டில் இருந்து தோன்றியதாகும். ஆரம்பத்தில் இருந்தே, இந்தியா அல்லது ஏனைய சக்திகளின் ஆதரவுடன் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு முதலாளித்துவ அரசை உருவாக்கிக்கொள்வதே அதன் இலக்காக இருந்தது. மாகாணசபை முறையை ஸ்தாபித்த 1987 இந்திய-இலங்கை உடன்படிக்கையே, இந்திய அரசாங்கம் மற்றும் அதன் அமைதிப் படைமீதும் நம்பிக்கை வைத்த புலிகளையும் மற்றும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுகளையும் அழிவுகரமாக அம்பலப்படுத்திவிட்டது. புது டில்லி ஆரம்பத்தில் இருந்தே, இந்தியாவில் அமைதியின்மையை தூண்டிவிட அச்சுறுத்திய தமிழ் கிளர்ச்சியை நசுக்குவதை இலக்காக் கொண்டிருந்தது. ஆயினும், இந்த கசப்பான அனுபவங்களில் இருந்து புலிகள் எதையும் கற்றுக்கொள்ளாததோடு தொடர்ந்தும் இந்திய முதலாளித்துவத்திடம் ஆதரவை எதிர்பார்த்தது.

புலிகள், ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் இயலுமை கொண்ட ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தை நோக்கி திசையமைவுகொள்ளவில்லை. தமிழ் மற்றும் சிங்கள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் கசப்புடன் எதிர்த்த புலிகள், கொழும்பு அரசாங்கங்களின் குற்றங்கள் அனைத்துக்கும் சிங்கள மக்களைகுற்றம் சாட்டினர். சிங்கள பொது மக்கள் மீதான அவர்களின் கண்மூடித்தனமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், கொழும்பு ஸ்தாபனத்தின் கைகளில் நேரடியாகப் பயன்பட்டதோடு இனவாத பிளவை ஆழப்படுத்தின. தமது கட்டுப்பாட்டில் இருந்த பிராந்தியத்துள், புலிகள் மேலும் மேலும் ஜனநாயக-விரோத ஆட்சி முறையை நாடினர். இதன் விளைவாக, 2009ல் தமக்கிருந்த தற்பாதுகாப்பு நொருங்கிய நிலையில், தீவிலும் உலகம் பூராவும் உள்ள தொழிலாள வர்க்கம் ஒரு புறம் இருக்க, புலிகள் தமிழ் வெகுஜனங்களுக்கு எந்தவொரு அறைகூவலும் விடுக்க இலாயக்கற்றவர்கள் ஆயினர். அவர்கள், இலங்கை இராணுவத்துக்கு ஆதவளித்து, உதவி செய்து, ஆயுதமும் வழங்கிய அதே சக்திகளுக்கு, அதாவது சர்வதேச சமூகத்துக்குபயனற்ற வேண்டுகோள் விடுக்கத் தள்ளப்பட்டனர்.

ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் முன்னெடுத்த இரத்தக்களரி மிக்க யுத்தத்தை உறுதியாக எதிர்த்ததோடு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்த துருப்புக்களை நிபந்தனையின்றி உடனடியாக வெளியேற்றக் கோரும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். தெற்காசியா மற்றும் சர்வதேச ரீதியிலும் சோசலிச குடியரசு ஒன்றியங்களின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டத்தில், சகலவிதமான தேசியவாதம் மற்றும் பேரினவாதங்களுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த நாம் இடைவிடாமல் போராடியுள்ளோம்.

சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரத்துக்கு ஆதரவளியுங்கள்

எமது வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. எவ்வாறெனினும், எல்லாவற்றுக்கும் மேலாக, சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றுக்கான போராட்டத்தில், சகல முதலாளித்துவ கன்னைகளிலும் இருந்து சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்டுவதே எமது பிரச்சாரத்தின் இலக்காகும்.

ஏற்கனவே வர்க்கப் போராட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. பொதுத் துறை தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரியும், மானியங்கள் வெட்டுக்கு எதிராக விவசாயிகளும் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக மீனவர்களுமாக வெகுஜனங்கள் மேலும் மேலும் எதிர்ப்புக்களிலும் வேலை நிறுத்தங்களிலும் மற்றும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடும் நிலைமையை அரசாங்கம் ஏற்கனவே எதிர்கொண்டுள்ளது. இலவசக் கல்வி மீதான தாக்குதல்களுக்கு எதிராக பல்கலைக் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அரசாங்கம் தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத பேரினவாதத்தை கிளறிவிடுவதன் மூலமே இந்த எதிர்ப்பை பிளவுபடுத்தவும் திசை திருப்பவும் முயற்சிப்பதோடு, எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்காக தசாப்தகால யுத்தத்தின்போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ் அரச வழிமுறைகளை நாடுகிறது.

தமது அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக இலங்கை உழைக்கும் மக்கள் முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கையானது வளர்ச்சிகண்டுவரும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச எதிர்ப்புக்கள், வேலை நிறுத்தங்கள் மற்றும் புரட்சிகர போராட்டங்களதும், எல்லாவற்றுக்கும் மேலாக எகிப்திய போராட்டங்களதும் பாகமாகும். ஆயினும், அவை எவ்வளவு உறுதியானவையாகவும் பெரிதானவையாகவும் இருந்தாலும், இத்தகைய ஆரம்ப வர்க்கப் போராட்டங்கள் தொழிலாள வர்க்கத்தினுள் ஆழமான அரசியல் முன்னோக்கு நெருக்கடியை வெளிப்படுத்தியுள்ளது. நனவுபூர்வமான புரட்சிகர தலைமைத்துவம் இன்மையால், தொழிலாள வர்க்கம் பின் தள்ளப்பட்டுள்ள அதேவேளை, கிரேக்கத்தில் சிரிசா, எகிப்தில் புரட்சிகர சோசலிஸ்ட் போன்ற பல்வேறு போலி இடதுகளின் ஒத்துழைப்புடன் ஆளும் வர்க்கங்களாலும் அவற்றின் அரசியல் கட்சிகளாலும் தொடர்ந்தும் நிலைத்திருக்க முடிவதோடு அவை தமது ஆட்சியையும் பேணிக்கொள்கின்றன.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம், சோசலிச புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சகோதரக் கட்சிகள் முன்னெடுத்துவரும் கூட்டுப் போராட்டத்தின் பாகமாகும். அதன் இலக்கு, எல்லாவற்றுக்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகர தலைமையை கட்டியெழுப்பப்பட வேண்டிய சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதே ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி, சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக, 1968ல் ஸ்தாபிக்கப்பட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஆகும். அது, ஸ்ராலினிசம் மற்றும் சகல வடிவிலான தேசிய சந்தர்ப்பவாதங்களுக்கும் எதிராக, ட்ரொட்ஸ்கிசத்தின், அதாவது புரட்சிகர மார்க்சிசத்தின் விஞ்ஞானபூர்வமான வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்குக்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக ஸ்தாபிக்கப்பட்டது.

எல்லா வழிகளிலும் எமது பிரச்சாரத்துக்கு ஆதரவளிக்குமாறு நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் அழைப்புவிடுக்கின்றோம்.

சோசலிச சமத்துவக் கட்சியின் கோரிக்கைகள்:

வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்று!

ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிக்க ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டுவதற்கு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை முன்னெடு!

அமெரிக்க யுத்த உந்துதலை நிறுத்து! தெற்காசியாவிலும் உலகம் பூராவும் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்துக்காக முன்நோக்கி செல்!

சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிப்பதோடு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை சோசலிச புரட்சிக்கான உலகக் கட்சியாக கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ளுங்கள்!