World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா India: NLC contract worker and WSWS supporter Sivakumar dies at 42 இந்தியா: என்எல்சி ஒப்பந்த தொழிலாளியும் உலக சோசலிச வலைத் தள ஆதரவாளருமான சிவகுமார் 42 வயதில் காலமானார்
By Arun Kumar ஜூலை 26 மதியத்தில், உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) ஆதரவாளரும் மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான நெய்வேலி பழுப்புக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) ஒப்பந்த தொழிலாளியுமான சிவா என்று அழைக்கப்படும் சிவகுமார் நெய்வேலியுள்ள அவரது குடிசை வீட்டில் திடீரென்று இறந்தார். தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் என்எல்சி, பழுப்புக்கரி அகழ்வு மற்றும் மின்சார உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது, அது மின்சாரத்தை தமிழ்நாடு மற்றும் இதர மூன்று தென்னிந்திய மாநிலங்களுக்கும் வழங்குகிறது. 42 வயதே ஆன சிவகுமார் கடுமையான சிறுநீரக நோய், மற்றும் எலும்பு தேய்வு நோய் உட்பட பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் தனது மனைவி ராணி, மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகளை விட்டுச் சென்றுள்ளார். அவர் என்எல்சியில் 20 வருடங்கள் வேலை செய்தார். அவரது மறைந்த தந்தை வேலு கூட என்எல்சியில் ஒரு நிரந்தர தொழிலாளியாக பணியாற்றியிருக்கிறார். நூற்றுக்கணக்கான உறவினர்கள் மற்றும் சக தொழிலாளர்கள் அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக வந்தனர். சென்னையிலிருந்து சென்ற உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்கள் ஜூலை 27ல் அவரது இறுதி சடங்கில் பங்கெடுத்தனர். மற்றும் அவர்கள் இறுதி சடங்கில் பங்கெடுத்த தொழிலாளர்கள் மத்தியில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (SEP) அனுப்பிய அனுதாப செய்தியின் தமிழ் மொழிபெயர்ப்பு பிரதிகளை விநியோகித்தனர். பிரான்சில் உள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஆதரவாளர்களும் கூட ஒரு அனுதாபச் செய்தியை அனுப்பியிருந்தார்கள். சிவகுமார், பல்லாயிரக்கணக்கான என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களைப் போல இந்தியாவில் மிகவும் சுரண்டப்படும் தொழிலாள வர்க்க பிரிவை சேர்ந்தவர். அவர் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் மோசமான வேலை மற்றும் வாழ்கை நிலைமைகளுக்கு பலியானவர்களில் ஒருவர், அவர்கள் தகுந்த சுகாதார வசதிகளும் இல்லாமல் இருக்கின்றனர். அவர் நெய்வேலியிலிருந்து 73 கிமீ தொலைவில் பாண்டிச்சேரியிலுள்ள ஒரு மருத்துவ மனையில் சிறுநீர் கலவைப் பிரிப்புக்காக (டயாலிசிசிற்காக) அனுமதிக்கப்பட்டார், ஆனால் படுக்கைகள் இல்லாத காரணத்தினால் அவர் சிகிச்சை பூர்த்தியாவதற்கு முன்னதாகவே அங்கிருந்து வெளியே அனுப்பப்பட்டார். அவரது சகாக்கள் உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்களுக்கு கூறியவை இப்படியான நிலைமைகளை வெளிச்சத்தில் காட்டுகின்றன. ராஜி வயது 35: “என்எல்சியில் ஒப்பந்த தொழிலாளராக 15 வருடங்களாக பணிபுகிறேன். எனக்கு சிவாவைப் போன்று நோய்வரவில்லை, ஏனென்றால் நான் சுரங்கத்திற்கு வெளியில் பணிபுரிகிறேன். ஆனால் சுமார் 5000 சுரங்க தொழிலாளர்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலபேர் சிவாவைப்போல் இறந்துள்ளனர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. பாதுகாப்பு கருவிகளோ அல்லது தகுந்த மருத்துவ வசதிகளோ கிடையாது. அதேநேரத்தில் நிரந்தர தொழிலாளர்களுக்கு உயர்தர அப்போலோ ஆஸ்பத்திரியில் மருத்துவம் பார்க்கும் வசதி உள்ளது. சிவாவை அப்போலா ஆஸ்பத்திரியில் பார்த்திருந்தால் அவர் அதிக நாட்கள் உயிருடன் இருந்திருப்பார். ‘’மேலும் பணியில் இருக்கும்பொழுது தொழிலாளி இறந்தால் அவருடைய மனைவிக்கு வேலைக்கிடைக்கும். ஆனால் அந்த வேலையினால் ஏற்படும் நோயின் காரணமாக தொழிலாளி இறந்தால் அவருக்கு வேலை கிடையாது. வைப்பு நிதியைத்தவிர வேறெதுவும் இறந்த ஒரு ஒப்பந்த தொழிலாளியின் உறவினருக்கு கிடைக்காது. நிரந்தர தொழிலாளர்கள் அனுபவித்து வரும் சலுகைகள் இம்மியளவும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கிடையாது. பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஒப்பந்த தொழிலாளி குறிப்பிடும்பொழுது: “சிவாவைப்போன்று அகால மரணம் அடையும் தொழிலாளர்களுக்கு எந்தவித நிதி உதவியும் என்எல்சி நிர்வாகம் செய்யாது. தொழிற்சங்கங்களும் எந்தவித நிதி உதவியும் வழங்காது. சிவாவை போன்று இறந்த தொழிலாளர்களின் ஒரு குடும்பத்திற்கு கிடைக்க கூடிய ஒரே உதவி அவர் வேலை செய்த குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் சக தொழிலாளர்களிடம் வசூலிக்கப்படும் நிதி மட்டும் தான். என்எல்சியில் வேலைக்கு எடுக்கும்பொழுது மருத்துவ பரிசோதனை செய்துதான் எடுக்கின்றனர். அப்பொழுது உடல்நல தகுதி இருந்தால் தான் எடுப்பார்கள். அப்படிதான் சிவாவை எடுத்தார்கள். ஆனால் அவர் சுரங்கத்தில் பணிபுரிந்ததால்தான் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்”. என்எல்சி ஒப்பந்த தொழிலார்களின் மோசமான நிலைமைகள் பற்றி அவர் மேலும் விளக்கினார்; ‘’நிரந்தர தொழிலார்களுக்கு என்எல்சி நிர்வாகம் தரமான வீடுகள் வழங்குகிறது. ஆனால் ஒப்பந்தொழிலாளர்களுக்கோ நிலம் மட்டும் கொடுக்கப்படுகிறது, வீட்டை அவர்கள் தான் சொந்தமாக கட்ட வேண்டும். அவர்கள் தரை வாடகை நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களாகிய நாங்கள் நிரந்தர தொழிலார்கள் செய்யும் அதே வேலையை செய்தாலும் கூட மிகவும் குறைந்த சம்பளம் தான் வழங்கப்படுகிறது, அது நிரந்தர தொழிலார்களுக்கு வழங்கப்படுவதில் சுமார் பத்தில் ஒன்று தான். அத்துடன் நாங்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ வேண்டியுள்ளது. பெரும்பாலான ஒப்பந்த தொழிலாளர்கள் குடிசைகளில் வாழ்கிறோம். நீண்ட காலமாக மின்சார வசதி கூட இல்லாமல் வாழ்ந்து வந்தோம். சமீபத்தில் மின்சாரம் வழங்கப்பட்டாலும் மின் உற்பத்தியில் ஈடுபட்ட எங்களுக்கு இலவச மின்சாரம் கிடையாது”. சிவகுமாரின் அரசியல் பரிணாமம் சிக்கலான ஒன்றாகும், அது இந்திய அரசியலின் சீரழிவு மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மாவோயிச அமைப்புகளினால் ஏற்படுத்தப்பட்ட நோக்குநிலை தவறலை பகுதியாக பிரதிபலித்தது. மாநில தலைநகரான சென்னையிலிருந்து 180 கிலோமீட்டர் தூரத்திலுள்ள நெய்வேலியில் அனைத்து தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. என்எல்சி தொழிலாளர்கள் மத்தியில் இயங்கும் அனைத்து தொழிற்சங்கங்களும் இப்படியான அரசியல் கட்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. என்எல்சியில் நடந்த பெரும் வேலைநிறுத்தங்களின் காட்டிக்கொடுப்புக்கு இப்படியான சங்கங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொறுப்பாளிகளாக இருக்கின்றனர். சிவகுமார் பல வருடங்களாக ஒரு மாவோயிச குழுவில் செயலூக்கமான ஆதரவாளராக இருந்திருக்கிறார், அவர் ஒரு சோசலிச இயக்கத்தில் சேர்ந்ததாக அதை கருதினார், அது முதலாளித்துவ அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு பிராந்திய முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்த ஸ்ராலினிச கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஐ) எதிரானது என்று கருதினார். எவ்வாறாயினும் அவர் செயலூக்கத்துடன் ஈடுபட்டு வந்த மாவோயிச அமைப்பானது ஏனைய முதலாளித்துவ கட்சிகளிருந்து வேறுபட்டது அல்ல என்பதை அவர் பின்னர் உணர்ந்துக்கொண்டார். இதனால் விரக்தி மற்றும் நோக்குநிலை தவறிப்போய் இருந்த சிவகுமார், ஆனாலும் இன்னும் ஒரு மாவோயிச முத்திரையுடன் தான் இருந்தார், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான ஒரு அரசு வேட்டையாடலை முகம் கொடுத்த நிலையில் அவர் தற்காலிகமாக ஒரு ஜாதிவாத கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் போர்வையின் கீழ் “பாதுகாப்பை’’ நாடினார். கடந்த வருடம் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காட்டிக்கொடுக்கப்பட்ட பின்னர் உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்களை அவர் சந்தித்ததலிருந்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ட்ரொட்ஸ்கிச சர்வதேசிய சோசலிச முன்னோக்கின் மீது மிகவும் ஆர்வம் காட்டினார். அத்துடன் உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்களுடன் அரசியல் மற்றும் தத்துவார்த்த கலந்துரையாடல்களில் பங்கெடுத்தார். மூன்று மாத கலந்துரையாடல்களின் பின்னர் “தனி ஒரு நாட்டில் சோசலிசம்’’ என்ற ஸ்ராலினிச தத்துவம் உட்பட பல்வேறுவிதமான தேசியவாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய நிலைப்பாட்டில் அவர் நம்பிக்கை கொண்டார். தமிழ் தேசியவாதம் மற்றும் ஜாதிவாதம் பற்றிய அவரது குழப்பமான நிலைப்பாடு ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி தத்துவத்தின் அடிப்படையில் தெளிவுபடுத்தப்பட்டது, அது இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளில் ஜனநாயகப் புரட்சியின் தீர்க்கப்படாத கடமைகள் தொழிலாள வர்க்கத்தினால் மட்டுமே தீர்க்கப்படும் என்று வலியுறுத்தியது, அது (தொழிலாள வர்க்கம்) சர்வதேசிய சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் இதர ஒடுக்கப்படும் மக்களின் தலைவனாக ஆட்சியை கைப்பற்றும். உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்களுடன் அரசியல் கலந்துரையாடல்களில் ஈடுபட அவரது சகாக்கள் மற்றும் அவரது மனைவி ராணியையும் சிவகுமார் ஊக்குவித்தார். அவரது வீடு எப்பொழுதுமே குழுவிற்கு திறக்கப்பட்டு இருந்தது. எவ்வாறாயினும் அவரது கடுமையான உடல் நலக்குறைவானது உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர் குழுவின் அரசியல் வேலைகளில் செயலூக்கத்துடன் பங்கெடுப்பதிலிருந்து அவரைத் தடுத்தது. காலம் தவறிய அவரது மரணத்திற்கு ஒருவாரத்திற்கு முன்பு அவர் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேசிய அடித்தளம் என்ற முன்னோக்கு விவாதத்தில் பேரார்வத்துடன் கலந்து கொண்டார். இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) அனுதாப செய்தியில் சுட்டிக்காட்டியது போல “நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) பக்கம் சிவகுமார் திரும்பியது, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வேலைத்திட்டமான உலக சோசலிசப் புரட்சியை நோக்கி வரும் காலத்தில் இந்தியா மற்றும் தென் ஆசியாவில் முன்னேறிய தொழிலாளர்கள் இளைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் ஒரு திருப்பத்தை எடுத்துக்காட்டுகிறது”. |
|