World Socialist Web Site www.wsws.org |
The detention of David Miranda and the “war on terror” டேவிட் மிராண்டா காவலில் வைக்கப்படுதலும் “பயங்கரவாதத்தின் மீதான போரும்”
Joseph Kishore ஐக்கிய இராச்சியத்தின் அதிகாரிகள் கார்டியன் செய்தியாளர் கிளென் கிரீன்வால்ட் உடன் இணைந்து பணியாற்றும் டேவிட் மிராண்டாவை கைது செய்து காவலில் வைத்து விசாரிப்பது அரசியல் மிரட்டலின் உறையவைக்கும் செயலாகும். மிராண்டா காவலில் வைக்கப்பட்டு ஒன்பது மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் -- இது பிரித்தானிய பயங்கரவாத சட்டம் 2000 த்தின் பொருத்தமான பிரிவின் படி மிக அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நேரமாகும். ஒரு வக்கீலை வைத்துக் கொள்ளும் உரிமையும், பேசாமல் இருக்கும் உரிமையும் அவருக்கு மறுக்கப்பட்டது. அவருடைய தனிப்பட்ட உடைமைகள் கைப்பற்றப்பட்டு திருப்பிக் கொடுக்கப்படவில்லை. அவற்றுள் அவருடைய கணினி, கைபேசி, புகைப்படக்கருவி, முன்னாள் தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தின் (NSA) ஒப்பந்ததாரர் எட்வார்ட் ஸ்னோவ்டென் கசியவிட்டிருந்த ஆவணங்கள், மெமரி கார்டுகளும் அடங்கும். “அவர்கள் என்னை, என் கணினி, கைபேசியின் கடவுச் சொற்களை கொடுக்குமாறு கட்டாயப்படுத்தினர்” என்று கார்டியனிடம் மிராண்டா கூறினார். “அவர்களின் கேள்விகள் அனைத்திற்கும் நான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் என்றனர்.... எல்லா நேரத்திலும் என்னை மிரட்டினர், ஒத்துழைக்காவிடின் சிறையில் தள்ளுவதாகவும் கூறினர்.” இவை, அனைத்து சட்டபூர்வ கட்டுப்பாடுகளுக்கும் வெளியே செயல்படும் அரசியல் குண்டர்களின் செயல்களாகும். ஒரு பிரிட்டிஷ் குடிமகனில்லாத மிராண்டா காவலில் வைக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, வினாக்களுக்கு உட்படுத்தப்பட்டு, அவருடைய சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன – ஒரே காரணம், கிரீன்வால்ட் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் லோரா புவத்ராவுடன் அவருக்கு உள்ள உறவே, பிந்தையவரை மிராண்டா பேர்லினுக்குச் செல்லும்போதெல்லாம் சந்தித்திருக்கிறார். கிரீன்வால்டும், புவத்ராவும் ஸ்னோவ்டெனுடன் ஒத்துழைத்து அமெரிக்காவும் அதன் சர்வதேச ஒத்துழைப்பாளர்களும், பிரித்தானிய அரசாங்க தொலைத்தொடர்பு தலைமையகம் (CCHQ) உட்பட, இரகசிய, சட்டவிரோத ஒற்றுத் திட்டங்களை அம்பலப்படுத்தினர். மிராண்டா பிரித்தானியாவில் தடுப்புக்காவலில் இருக்கையில், முக்கிய பிரச்சாரக அமைப்பாகச் செயல்பட்டது; ஜூன் மாதம் ஸ்னோவ்டென் தன்னை வெளிப்படுத்திக் கொண்டபோது, அவருக்கு எதிரான இழிவுபடுத்தும், துன்புறுத்தும் கருத்துக்களை கூறி ஒரு சர்வதேச பிரச்சாரத்தை மேற்கொண்ட ஒபாமா நிர்வாகம்தான். திங்களன்று ஒரு வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், பிரித்தானியாவின் நடவடிக்கை குறித்து அது நடக்குமுன்னரே அமெரிக்காவுக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் அமெரிக்கா, பிரித்தானிய உளவுத்துறை அமைப்புக்கள் பரந்த விவாதங்களை கொண்டிருந்தன என்றும் கூறினார். மிராண்டாவை கைப்பற்றுமாறு தான் பிரித்தானியாவை கேட்கவில்லை என்று நிர்வாகம் கூறினாலும், ஒரு முறையான வேண்டுகோள் ஒன்றும் அவசியமாக இருக்கவில்லை. இரு நாடுகளின் பொலிசும் ஒற்று நிறுவனங்களும் ஒரே அலைவரிசையில்தான் செயல்படுகின்றன. ஸ்னோவ்டெனையும் க்ரீன்வால்டையும் இலக்கு வைக்க உதவுவதற்கு மிராண்டாவிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அனைத்தையும் ஒபாமா நிர்வாகம் அணுக முடியும். எப்படி NSA, GCHQ இரண்டும் தம் நாட்டுக் குடிமக்கள் குறித்து சட்டவிரோதமாக சேகரித்த தகவல்களை பறிமாறிக் கொண்டனவோ, அவ்வகையில். பிரித்தானிய பொலிசின் நடவடிக்கைகளுக்கு ஸ்காட்லாந்து யார்ட் ஆதரவு கொடுத்து, “இந்த ஆய்வு சட்டபூர்வமாகவும், முறைப்படியும் சரியானதுதான்” என்றது. இப்பொழுது எவரும் நேர்மையான முகத்துடன், கடந்த 13 ஆண்டுகளில் நிறுவப்பட்ட ஒற்று மற்றும் அடக்குமுறைக் கருவிகள் “பயங்கரவாதிகளை” இலக்கு கொண்டது எனக்கூற முடியாது. மிராண்டாவை தடுப்புக்காவலில் வைத்தது ஐக்கிய இராச்சியத்தின் பயங்கரவாத சட்டத்தின்படி “தவறான பயன்பாடு” அல்ல. மாறாக, இது இதையும் இதேபோன்ற அமெரிக்க, பிரித்தானிய மற்றும் உலகெங்கிலும் இருக்கும் சட்டங்களின் அடிப்படை நோக்கத்தை நிரூபிக்கிறது. அதாவது ஆளும் வர்க்கத்தின் பிற்போக்குத்தனக் கொள்கைகளுக்கு அரசியல் எதிர்ப்பு வந்தால் அவற்றை மிரட்டுதல் அடக்குதல் என்பதாகும். “பயங்கரவாதத்தின் மீதான போர்” இப்பொழுது மக்களுடைய ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான போராகிவிட்டது. ஒவ்வொரு தொலைப்பேசி அழைப்பு மற்றும் இணைய தள தொடர்பையும் சேகரித்துக் கண்காணிக்கும் இணைய தள ஒற்றுத் திட்டங்கள் அனைத்தையும் ஸ்னோவ்டென் அம்பலப்படுத்த உதவியுள்ளார். இதில் NSA உடைய XKeyscore திட்டமும் அடங்கும். அது பகுப்பாய்வாளர்களை பிடி ஆணை இல்லாமல் ஒற்றுக் கேட்க அனுமதிக்கிறது; இது அமெரிக்க அரசியலமைப்பின் நான்காம் திருத்தத்தை அப்பட்டமாக மீறுவதாகும். மிராண்டா கைது நிரூபிப்பது போல், அரசாங்கம் கவனமாக அரசியல் எதிரிகளின், அவர்களுடைய உறவினர்களின் மற்றும் அவர்களுடன் தொடர்பு உடையவர்களின் பயணங்களையும், செயற்பாடுகளையும் பின்பற்றுகிறது. மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த முற்படும் செய்தியாளர்களை தேடி அச்சுறுத்தும் நோக்கில், செய்தி ஊடகத்தின் சுதந்திரத்தின் மீதும் வெளிப்படையான தாக்குதல் பெருகுகிறது, அதிகரிக்கிறது. அரசாங்கத்தின் குற்றங்களை அம்பலப்படுத்துவது, “ஒற்றாடல்”, “எதிரிக்கு உதவுதல்” என்பவற்றுடன் சமப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது; இதுதான் அமெரிக்க இராணுவ வீரர் பிராட்லி மானிங், அமெரிக்க போர்க் கொடுமைகளை வெளிப்படுத்திய அவரின் பங்கிற்காக தண்டனை பெற்றதில் வெளிப்படுகிறது. மிராண்டா காவலில் இருப்பது, ஒபாமாவின் செய்தியாளர் கூட்டத்தின் ஒரு வாரத்திற்குள் வருகிறது; அக்கூட்டத்தில் அவர் அவருடைய நிர்வாகம், அமெரிக்க மக்கள் பொலிஸ் அரச ஒற்றுத் திட்டங்களை “வசதியுடன்” ஏற்க வேண்டும் என விரும்புகிறது என்றார். ஒபாமாவின் தேன்சொட்டும் சொற்றொடர்களுக்குப்பின் இத்திட்டங்கள் தொடரும் என்பதின் இரக்கமற்ற உறுதி உள்ளது; அம்பலப்படுத்துவோர் அமைதிப்படுத்தப்படுவர் என்று கூறப்படுகிறது. அரசியல் எதிர்ப்பு மற்றும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அதன் தாக்குதலுக்கு, செய்தி ஊடகத்தின் பெரும் பிரிவுகளுடைய ஆதரவை அமெரிக்க அரசாங்கம் கொண்டுள்ளது. சென்ற வார இறுதியில் தன் ட்வீட்டர் தகவலில், “ஜூலியன் அசாஞ்சை தாக்கும் டிரோன் தாக்குதலை பாதுகாக்கும் வகையில் எழுதுவதற்காக காத்திருக்க பொறுமை இல்லை” என்று, ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளரும் டைம் ஏட்டின் மூத்த தேசிய நிருபருமான மைக்கேல் குருன்வால்ட், எழுதியுள்ளார். இது செய்தி ஊடகம் முழுவதிலும் நிலவும் உணர்வின் குறிப்பிடத்தக்க அப்பட்டமான வடிவத்தின் வெளிப்பாடாகும். பெருநிறுவனக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் செய்தி ஊடகம், —முன்னாள் நியூ யோர்க் டைம்ஸின் நிர்வாக ஆசிரியர், பில் கெல்லர், NBC NEWS ன் டேவிட் கிரிகோரி, CNN உடைய வுல்ப் பிளிட்சர் உட்பட—ஸ்னோவ்டென், கிரீன்வால்ட், மானிங், மற்றும் அசாஞ்சை வெறுக்கிறது; ஏனெனில் அவர்கள் முக்கிய செய்தி ஊடகத்தை மீறினர், முக்கிய ஊடகம் அரசாங்கத்தின் ஒரு கருவிபோல் செயல்படுகிறது; இவர்களோ அமெரிக்க மக்களுக்கும் உலகத்தினருக்கும் உண்மைகளை வெளிப்படுத்தினர். அமெரிக்க செய்தி ஊடகம் அரசாங்கத்தின் குற்றங்களை மூடி மறைப்பதில் பங்கு கொண்டுள்ளதுடன், அவற்றை அம்பலப்படுத்தியவர்களின் பாதிப்புக்களையும் மூடிமறைக்கிறது. குருன்வால்ட் போன்ற நபர்கள் இரண்டாம் உலகப் போருக்குப்பின் இருந்த நாஜி பிரச்சாரகர்கள் மீது நடத்தப்பட்ட குற்றவிசாரணைகளை நினைவு கூர்வது நல்லது. “மோசடியை வழிவகையாகக் கொள்வதில் நம்பிக்கையுடைய சதியில், அமெரிக்க தலைமையிலான நூரெம்பேர்க் நீதிமன்றம் குறிப்பிட்டது: “சதித்திட்டக் குழுவின் விற்பனையாளர்கள் முக்கிய திட்டமிட்டவர்களை போலவே அடிப்படையில் குற்றம் இயற்றியவர்கள், அவர்கள் அனைத்து அடிப்படை மூலோபாயத்தையும் இயற்றியதில் பங்கு பெறாவிட்டாலும்; மாறாக இம்மூலோபாயம் செயல்படுத்தப்பட குவிப்புக்காட்டினர் என்பதால்.” மிராண்டா காவலில் வைக்கப்பட்டது, குருன்வால்டின் அறிக்கைகள் ஆகியவை ஜனநாயகத்தின் இழிவு, ஆளும் வர்க்கதிற்குள் இருக்கும் அச்சம் இரண்டையும் புலப்படுத்துகின்றன. ஸ்னோவ்டெனுடைய வெளிப்பாடுகள், அதாவது பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற வகையில் ஆளும் வர்க்கத்தின் நம்பகத் தன்மை மற்றும் அதை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நியாயப்படுத்திய மத்திய கருத்தியல் ஆகியவற்றை சேதப்படுத்திவிட்டன. இந்த வெளிப்பாடுகள் அதிகரித்த வகையில் சர்வதேச எதிர்ப்புடன் ஒரே நேரத்தில் வந்துள்ளன; எதிர்ப்புக்கள் இராணுவ வாதம் மற்றும் சமூக எதிர்ப்புரட்சிக் கொள்கைகளுக்கு எதிராக வந்துள்ளன. பேசி நம்ப வைக்க முடியாத நிலையில், பெருநிறுவன, நிதிய உயரடுக்கு பயங்கரவாதம், மிரட்டல் என்னும் வழிவகைகளை கடைபிடிக்கிறது. ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு ஆளும் நடைமுறையின் எந்தப் பிரிவிடமும் ஒப்படைக்கப்பட முடியாது. இது தொழிலாள வர்க்கம், இளைஞர்களை அமெரிக்காவிலும் உலகெங்கிலும் முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்தில் அணிதிரட்டுவதுடன் தொடர்பு கொண்டது, ஏனெனில் முதலாளித்துவம்தான் போர், சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய உந்துதல் இவற்றின் ஆதாரமாக உள்ளது. |
|