World Socialist Web Site www.wsws.org |
The EU and the attack on European workers’ wages ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய தொழிலாளர்களின் ஊதியங்கள் மீதான தாக்குதலும்
Julie Hyland செப்டம்பர் 2008 ஆண்டு, வோல் ஸ்ட்ரீட் சரிவிற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பிரித்தானியாவின் பாராளுமன்ற கீழ் சபை நூலகமானது 27 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊதிய விகிதங்களைப் பற்றி சேகரித்துள்ள புள்ளிவிவரங்கள், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் தீவிர பின்னடைவிற்கு உட்பட்டுவிட்டன என்பதை காட்டுகின்றன. கடந்த காலாண்டில்தான் வளர்ச்சியில் மிகச் சுமாரான ஏற்றத்துடன், யூரோப் பகுதி “முனையை கடந்துவிட்டது” என்ற கூற்றுக்களை இப்புள்ளிவிவரங்கள் பொய்யாக்குகின்றன. நிலைமையானது “முக்கூட்டு” (ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம்) இன் ஆணைகளுக்கு ஏற்ப செயல்பட்ட நாடுகளில் நிலைமை குறிப்பிடத்தக்க வகையில் மோசமாகியுள்ளது; சர்வதேச வங்கிகள் கோரிய சமூகநலச் செலவுகளில் பெரும் வெட்டுக்களை இவைதான் மேற்பார்வையிட்டன. கிரேக்கத்தில் ஊதியங்கள் 11.3 சதவிகிதம் 2010 இலையுதிர் காலத்திலிருந்து சரிந்துவிட்டன. ஐக்கிய இராச்சியத்தின் நிதிய ஆய்வு கூடம் இச்சரிவை “முன்னோடியில்லாதது” என விவரித்துள்ளது. சிக்கன உந்துதல் பல மில்லியன் மக்களை வறுமையில் தள்ளி, உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதத்தை மிக அதிக 27.6 சதவிகிதமாக ஏற்படுத்தியுள்ளது. 15 முதல் 24 வயதிற்குள் இருப்போருக்கு உத்தியோகபூர்வ விகிதம் அதிர்ச்சி தரும் 64.9 சதவிகிதமாகும். அப்படியிருந்தும், நாடு இன்னும் அதிக வெட்டுக்களுக்கான இடையறா கோரிக்கைகளுக்கு உட்படுகிறது. கடந்த மாதம்தான் கிரேக்க பாராளுமன்றம் புதிய சுற்று வெட்டுக்களுக்கு ஒப்புதல் கொடுத்தது. இவற்றில் மீண்டும் ஊதிய வெட்டுக்கள் உள்ளன, 2015ஐ ஒட்டி இன்னும் 15,000 பொதுத்துறைப் பணிகள் அகற்றப்பட உள்ளன. 25 வயதிற்குட்பட்டோருக்கு குறைந்தப்பட்ச ஊதியத்தை 32 சதவிகிதமாக குறைத்து மாதம் ஒன்றிற்கு 500 யூரோக்கள் என ஏற்படுத்தியபின், ஏதென்ஸ் மேலும் குறைப்புக்களை பரிசீலிப்பதாக அறிவிக்கிறது. போர்த்துக்கல் இதே காலத்தில் இரண்டாவது மிகப் பெரிய ஊதியச் சரிவுகளை 8.1 சதவிகிதமாக கண்டது. 2008ம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 13 பில்லியன் யூரோக்களை வெட்டுக்களில் கண்டபின், லிஸ்பன் கிரேக்கப் பாதையான வறுமையை உயர்த்துதல், சமூக நலன்களை குறைத்தல் என்பதை பின்பற்றுகிறது. நிதிப் பற்றாக்குறையால், மக்கள் சுகாதாரப் பாதுகாப்பு இல்லாமல் இருப்பது, இருப்புக்களை அதிகப்படுத்தவும் மருந்தகங்களால் இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கூட்டின் சிக்கன “மருந்தைப்” பெறுமிடத்திலிருக்கும் ஸ்பெயினும் சைப்ரசும், ஊதிய விகிதங்கள் 3.3% மற்றும் 3% முறையே உள்ளன. ஸ்பெயினில் வேலையின்மை விகிதம் 27 சதவிகிதம் என்று இருக்கையில், அதுவும் இளைஞரிடையே 50 சதவிகிதத்திற்கும் மேல் என இருக்கையில், மத்திய வங்கி குறைந்தபட்ச ஊதியத்திற்கான அழைப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. IMF இன் கோரிக்கைகளின்படி இந்த 10 சதவீத கூடுதல் ஊதிய வெட்டு, தொழிலாளர்களின் சட்டபூர்வ பாதுகாப்புக்களை அகற்றும் உந்துதலின் ஒரு பகுதியாகும். சைப்ரசை பொறுத்தவரை, சைப்ரஸ் ஏயர்வேஸை “பாதுகாத்தல்” திட்டத்தில் கிட்டத்தட்ட தேசிய விமான நிறுவனத்தின் 1,000 தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தை அகற்றுவதும், ஊதியங்களில் 17 சதவிகிதத்தை குறைப்பதும் அடங்கும். இப்படி தொழிலாளர்கள் மீதான தாக்குதல் என்பது “சுற்று வட்டத்தில்” உள்ள நாடுகள் என அழைக்கப்படுபவற்றில் மட்டும் நின்றுவிடவில்லை. நெதர்லாந்து, பிரித்தானியா என “பணக்கார” நாடுகளும், சரியும் ஊதியங்கள் அட்டவணையில் மூன்றாவது, நான்காவது இடத்தில் உள்ளன. ஊதியங்கள் நெதர்லாந்தில் 5.8 சதவிகிதமாக 2010 லிருந்து சரிந்துவிட்டன. உயரும் வேலையின்மை மற்றும் தகுதிக்கு தக்க வேலையில்லா நிலை இரண்டும் தொழிலாளர் செலவுகளையும் சமூக நலன்கள் செலவுகளையும் குறைக்க உதவியுள்ளன. ஜூன் மாதம் வேலையற்றோர் விகிதம் 30 ஆண்டு இல்லாத அளவிற்கு 8.1 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது. ஐக்கிய இராஜ்ஜியத்தில் சராசரி மணிநேர ஊதியம் 5.5 சதவிகிதம் குறைந்துவிட்டது. பெயரளவு ஊதிய விகிதங்கள் பெருமந்த காலத்தில் இருந்த்தைவிட மிக அதிகமாக 35 வது தொடர்ச்சியான மாதங்களில் கன்சர்வேடிவ்/லிபரல் ஜனநாயக அரசாங்கத்தின் கீழ் சரிந்துவிட்டன. மற்ற இடங்களைப் போல், ஊதியங்கள் மீதான தாக்குதல்கள் அரசாங்கத்தின் சிக்க நடவடிக்கைகளிலிருந்து பிரிக்க முடியாத அளவிற்கு பிணைந்துள்ளன; இப்பொழுது அது 166 பில்லியன் பவுண்டுகள் ($248 பில்லியன்) என உள்ளன. கிட்டத்தட்ட 700,000 வேலைகள் ஏற்கனவே ஐக்கிய இராச்சியத்தின் பொதுத்துறையில் இழக்கப்பட்டுவிட்டன; இது இன்னும் அதிகமாக 2018 ஐ ஒட்டி மில்லியன் என ஆகலாம். சரியும் ஊதிய விகிதங்களுடன் தற்காலிக, பூஜ்ய மணித்தியால ஒப்பந்தங்களும் ஏற்படுகின்றன; இவைகள் கிட்டத்தட்ட 2010ல் இருந்து அனைத்து புதிய வேலைகளில் பாதியளவுக்கு உள்ளன. இவை 2015ல் உண்மை நிலையில் தொழிலாளர்களின் ஆண்டு வருமானங்களை 1,520 பவுண்டுகள் ($2357) எனக் குறைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்புள்ளிவிவரங்கள் சாதாரணமான புறநிலைப் பொருளாதார சக்திகளின் விளைவு அல்ல. ஐரோப்பாவில் ஆளும் வர்க்கங்கள், அமெரிக்க ஆளும் உயரடுக்கைப் போல், பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி வர்க்க உறவுகளை தங்கள் நலன்களுக்கு ஏற்ப மறுகட்டமைக்க முயல்கின்றன. கிரேக்கத்திற்கான ஐரோப்பிய ஆணையர் மரியா டமனகி, ஏப்ரல் மாதம் சைப்ரஸ் நெருக்கடியின் போது கூறியது போல், “கடந்த ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகளாக ஐரோப்பிய ஆணையத்தின் மூலோபாயம் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலாளர் செலவுகளைக் குறைத்தல் என்று உள்ளது; இது ஐரோப்பிய நிறுவனங்கள் கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவிலுள்ள போட்டி நிறுவனங்களுடன் தங்களுடைய போட்டித்தன்மையை அதிகரித்துக்கொள்ள உதவும்.” ஆனால் இதுவரை நடந்துள்ளது ஆரம்பம்தான். கோல்ட்மன் சாஷ்ஸின் ஐரோப்பிய பொருளாதாரக் குழுவின் தலைவர் ஹவ் பில் சமீபத்தில் “உள் மதிப்பு குறைப்பு” கொள்கை என்று ஐரோப்பிய பகுதியில் செயல்படுத்துவது, இதை “நீடித்திருப்பதற்காக” என்று கூறுவதற்கு கிரேக்கத்திலும் போர்த்துக்கல்லிலும் “இன்னமும் ஊதியங்கள் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் ஜேர்மனியுடன் ஒப்பிடுகையில் சரிய வேண்டும் (அவற்றின் 2011 தொடக்கத்தில் இருந்த நிலையைக் காட்டிலும்)”. ஒப்புமை ஊதியக் குறைப்புக்களான 30 சதவிகிதம் இன்னும் அதிகம் என்பது ஸ்பெயின், பிரான்சில் தேவைப்படுகின்றன என்று அவர் சேர்த்துக் கொண்டார். ஜேர்மனிய ஊதிய மட்டங்கள் பற்றிய குறிப்பு தவறான கருத்துகளுக்கு இட்டு செல்கிறது. பாராளுமன்ற கீழ் சபையின் அறிக்கையின்படி, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனி மணிநேர விகிதங்களில் 2.7% அதிகரிப்பு என பதிவு செய்துள்ளது. ஜேர்மனியில் அனைத்து ஊழியர்களிலும் கிட்டத்தட்ட கால் பகுதியினர் குறைவூதிய வேலைகளில் இருக்கையில், அவர்களில் பாதிப் பேர் 7 யூரோக்கள்தான் ($9.30) ஒரு மணி நேரத்திற்கு பெறுகின்றனர் என இருக்கிறது. ஜேர்மனியில் செல்வப் பகிர்வு சமத்துவமின்மை ஐரோப்பாவிலேயே மிக அதிகம் ஆகும். பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம்தான் உள்ளது என்ற நிலையில், ஜேர்மனிய ஆளும் வர்க்கத்திடமிருந்து, உத்தியோகபூர்வக் கட்சிகள் கிரேக்கத்தில் செயல்படுத்தப்பட்ட செல்வாக்கற்ற நடவடிக்கைகள் போல் இங்கும் செயல்படுத்த தாங்கள் தயார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. தெற்கு ஐரோப்பாவில் கடுமையான வெட்டுக்கள் வேண்டும் என பேர்லின் வலியுறுத்தியிருக்கையில், ஜேர்மனியே இதே போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்த தான் தயார் என்றால் இன்னும் நம்பகத்தன்மை பெறும் என்று Der Spiegel ஏடு சமீபத்தில் கூறியுள்ளது. எங்கு கிரேக்கம் செல்லுகிறதோ, ஐரோப்பாவின் மற்ற பகுதிகளும் முடிவிலா கீழ்நிலைக்கு செல்லும் போட்டியில் ஈடுபடும். மூலதனத்திற்கும் தொழிலாளருக்கும் இடையேயுள்ள உறவுகளில் ஏற்பட்டிருக்கும் வரலாற்று ரீதியான மாற்றம், தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் நெருக்கடியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொழிற்சங்கங்களும் பழைய “தொழிலாளர்” அமைப்புக்களும் சர்வதேச மூலதனத்தின் ஆணைகளை செயல்படுத்தும் முக்கிய கருவிகளாக செயல்படுகின்றன. கிரேக்கம், பிரான்ஸ், ஸ்பெயின் அல்லது ஐக்கிய இராச்சியம், எதுவாக இருந்தாலும், தொழிற்சங்கங்கள் பயனற்ற எதிர்ப்புக்களுக்குத்தான் அதிகப்பட்சம் ஏற்பாடு செய்கின்றன; அதே நேரத்தில் முதலாளிகளிடமும் அந்த நாட்டு அரசாங்கங்களுடனும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களைக் குறைக்க உடன்பாடு கொள்கின்றனர்; அதையொட்டி “போட்டித்தன்மை” அதிகப்படுத்தப்படுகிறது. —அதாவது இலாபங்கள்; நிறுவனங்களுடையதும் பெரும் செல்வக் கொழிப்புடையவர்களது செல்வங்கள். எல்லா இடங்களிலும் சமூக ஜனநாயகக் கட்சிகள் உத்தியோகபூர்வமாக சிக்கனத்திற்கு உறுதி பூண்டுள்ளன. தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களுக்கு எதிராக ஒன்றிணைதல், என்னும் மையப் பாத்திரம் போலி இடது அமைப்புக்களான கிரேக்கத்தின் சிரிசா, பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, ஜேர்மனியில் இடது கட்சி (Die Linke) ஆகியவைகளால் மேற்கொள்ளப்படுகின்றன. அவைகள் ஐரோப்பாவில் தொழிற்சங்க கருவிகளில் அதிக ஊழியர்களை கொண்டுள்ளன. அவர்களின் அரசியல் பாதை மற்றும் நடைமுறையில், இந்த அமைப்புக்கள் வர்க்கப் போராட்டத்தை நசுக்கி முதலாளித்துவத்திற்கு எதிர்ப்பாக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கம் வெளிப்படுவதை தடுக்கின்றன. தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கு அவசியமாக இருப்பது, இந்த அழுகிய அமைப்புக்களிலிருந்து ஒரு உடைவைச் செய்து கொண்டு, முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்காக ஒரு கண்டம் தழுவிய வெகுஜன இயக்கத்தை ஆரம்பித்து, தொழிலாளர் அரசாங்கங்களை ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளின் வடிவமைப்புக்குள் ஸ்தாபிப்பதாகும். |
|