World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Australian SEP election candidate addresses Colombo meeting ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் வேட்பாளர் கொழும்பு கூட்டத்தில் உரையாற்றினார்
By our
correspondents எதிர்வரவுள்ள ஆஸ்திரேலிய கூட்டாட்சித் தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) பத்து செனட் வேட்பாளர்களில் ஒருவரான, சோசலிச சமத்துவக் கட்சியின் துணைச் செயலாளர் ஜேம்ஸ் கோகனின் உரையைக் கேட்பதற்காக, நேற்று கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பப் பெண்களும் கூடினர். வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் மத்திய மலையக மாவட்டங்களின் தேயிலை பெருந்தோட்டங்களில் இருந்தும் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் வருகை தந்திருந்தனர். இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் ஏற்பாடு செய்துள்ள பொதுக் கூட்டங்களில் உரையாற்றுவதற்காகவே கோகன் இலங்கைக்கு பயணித்துள்ளார். அவர் இன்று கொழும்பில் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டிலும் சோ.ச.க. நாளை காலியில் ஏற்பாடு செய்துள்ள ஒரு பொதுக் கூட்டத்திலும் உரையாற்றுவார். சோசலிச சமத்துவக் கட்சி அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ் தலைமை தாங்கிய நேற்றைய கூட்டத்தில் ஐ.வை.எஸ்.எஸ்.இ. அழைப்பாளர் கபில பெர்ணான்டோவும் சோசலிச சமத்துவக் கட்சி அரசியல் குழு உறுப்பினர் கே. ரட்னாயக்கவும் உரையாற்றினர். கோகனின் உரை அதே இடத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. சோசலிச சமத்துவக் கட்சி சார்பில் கோகனை பீரிஸ் வரவேற்றார். ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரமானது சோசலிச சர்வதேசிய வாதத்தையும் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் யுத்தத் தயாரிப்புகளுக்கு எதிராக தொழிலாளர் மற்றும் இளைஞர்களின் ஒரு சர்வதேச இயக்கத்தை கட்டியெழுப்புவதையும் அடிப்படையாகக் கொண்டது என அவர் விளக்கினார். 2003ல் ஈராக் மீதான அமெரிக்க யுத்தத்துக்கு எதிராக தோன்றிய பூகோள எதிர்ப்புக்கள், இந்த யுத்த விரோத இயக்கங்களை பல்வேறு முதலாளித்துவ கட்சிகளுடன் முடிச்சுப் போடுவதற்கு உதவிய போலி இடது மற்றும் முன்னாள் தீவிரவாத குழுக்களால் தடம்புரளச் செய்யப்பட்டன, என அவர் தெரிவித்தார். முதலாம் உலக யுத்தத்திலும் இரண்டாம் உலக யுத்தத்திலும் மில்லியன் கணக்கானவர்கள் ஏகாதிபத்தியங்களால் கொன்று தள்ளப்பட்டதை சுட்டிக் காட்டிய ஐ.வை.எஸ்.எஸ்.இ. அழைப்பாளர் கபில பெர்ணான்டோ, புதிய உலக யுத்தமானது அதை விடப் பெரும் பேரழிவை மனித குலத்துக்கு ஏற்படுத்தும் என தெரிவித்தார். “அதிகரித்தளவிலான வேலையின்மையை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு முதலாளித்துவத்தின் கீழ் எதிர்காலம் கிடையாது. எந்தவொரு புதிய யுத்தமும் அவர்களுக்கு பேரழிவையே தரும்,” என அவர் கூறினார். முதலாளித்துவத்தை தூக்கி வீசவும் சோசலிசத்தை ஸ்தாபிக்கவும் சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கமொன்றை அமைப்பதன் மூலம் மட்டுமே உலக யுத்தத்தை தடுக்க முடியும், என அவர் விளக்கினார். பிரதான உரையாற்றிய கோகன், இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் உண்மையான மார்க்சிசத்துக்காக முன்னெடுத்த தசாப்த கால கொள்கைப் பிடிப்பான போராட்டத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார். “தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்கும் மற்றும் அதன் சுயாதீன நலன்களை முன்நிறுத்துவதற்குமான போராட்டம் எதை அர்த்தப்படுத்துகின்றது என்பதற்கு, உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாறும் கொள்கைகளும் ஒரு உதாரணமாகும்,” என அவர் கூட்டத்தினருக்குத் தெரிவித்தார். சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற உலக அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலையை தெளிவுபடுத்திய கோகன் தெரிவித்ததாவது: “உலக முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் மூன்று தசாப்தங்களாக நிலையாக வளர்ச்சியடைந்த முரண்பாடுகளின் பின்னர், இப்போது நாம் ஒரு முழுமையான பொறிவின் மத்தியிலும் மற்றும் ஒரு ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மையின் புதிய காலகட்டத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.” “ஒபாமா நிர்வாகத்தின் ‘ஆசியாவுக்குத் திரும்புதல்’ என்பதில் இருந்து தோன்றும் யுத்த ஆபத்தைப் பற்றி தொழிலாள வர்க்கத்துக்கு எச்சரிப்பதற்கும், இந்த விடயம் சம்பந்தமாக அரசியல் ஸ்தாபனமும் ஊடகங்களும் பின்பற்றும் மௌனம் காக்கும் சதியை அம்பலப்படுத்துவதற்குமே” ஆஸ்திரேலிய தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி தலையீடு செய்கின்றது என கோகன் விளக்கினார். சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் யுத்தத் தயாரிப்புகளும், தனது ஆசிய-பசுபிக் பங்காளிகளிடம் இருந்து அது ஆதரவை அணிதிரட்டுவதும், அவர்களுக்கு, குறிப்பாக சீனாவுடனான பொருளாதார உறவுகளுக்கும் அமெரிக்காவுடனான மூலோபாய உறவுகளுக்கும் இடையில் ஏதாவது ஒன்றை தெரிவுசெய்துகொள்ள தள்ளப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவுக்கு தாங்கமுடியாத ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. கெவின் ருட், முதல் தடவையாக ஆஸ்திரேலிய பிரதமராக பதவி வகித்துக்கொண்டிருந்த போது, 2010 ஜூனில் அவர் தொழிற் கட்சியின் உட்கட்சி சதியின் மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார் என கோகன் விளக்கினார். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வளர்ச்சியடைந்து வரும் பதட்டத்தை தணிப்பதற்காக, சீனாவுடன் இராஜதந்திர சமரசமொன்றை செய்துகொள்ளும் ருட்டின் யோசனையை வாஷங்டன் எதிர்ததன் காரணமாகவே, அவருக்குப் பதிலாக அவருக்கு துணையாக இருந்த ஜூலியா கில்லார்ட் பதவியில் அமர்த்தப்பட்டார். கில்லார்ட்டின் கீழ், ஆஸ்திரேலிய ஆயுதப் படைகள் சீனாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவத்தின் யுத்தத் தயாரிப்புகளுடன் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. “இந்திய மற்றும் பசுபிக் சமுத்திரங்களுக்கு இடையில் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறும் தென்கிழக்காசியாவின் பிரதான கடற் பாதைக்கு நெருக்கமாக அமைந்துள்ளதன் காரணமாக, ஆஸ்திரேலியாவானது அமெரிக்காவின் தளமாக தேர்வு செய்துகொள்ளப்பட்டுள்ளது,” என கோகன் தெரிவித்தார். பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான இராணுவ மோதல்கள், முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத முரண்பாடுகளின் விளைவே எனத் தெரிவித்த பேச்சாளர், யுத்தம் “தவிர்க்க முடியாதது அல்ல” என சுட்டிக் காட்டினார். “அதை தவிர்க்க வேண்டும், தவிர்க்க முடியும். ஏகாதிபத்தியத்தையும் விட சக்தியாவாய்ந்த, யுத்தத்தை தவிர்க்கக் கூடிய ஒரே சமூக சக்தி, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட ஒரு புரட்சிகர இயக்கமே,” என அவர் வலியுறுத்தினார். கூட்டத்தில் உரையாற்ற வாய்ப்பளித்தமைக்காக இலங்கை சோசலிச சமத்துவக் கட்சிக்கு நன்றி தெரிவித்து உரையை முடித்த கோகன், உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இணையுமாறு சபையில் இருந்தவர்களுக்கு அழைப்பு விடுத்தார். கூட்டத்தில் உரையாற்றிய சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் கே. ரட்னாயக்க, உலக ஆதிக்கத்துக்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதலானது உலக அரசியலை மிகவும் ஸ்திரமற்றதாக்கும் காரணியாகும் எனத் தெரிவித்ததோடு, இந்திய துணைக்கண்டத்துக்கு அதன் தாக்கத்தைப் பற்றி மீளாய்வு செய்தார். ஒபாமா நிர்வாகமானது சீனாவுக்கான ஒரு எதிர்சக்தியாக இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்க்கின்றது. வாஷிங்டனின் ஆதரவுடன் இந்தியா தன்னம்பிக்கையுடன் உள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எல்லைப் பதட்டங்கள் மீண்டும் வெடித்துள்ளன. இவை பெரும் விளைவுகளை கொண்ட யுத்தத்துக்குள் இழுத்துச் செல்லக் கூடும், என அவர் கூறினார். “பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களையும் அமெரிக்கா சுரண்டிக்கொள்கின்றது. கொழும்பு தானாகவே சீனாவிடம் இருந்து தூர விலக வேண்டும் என ஒபாமா நிர்வாகம் கோருகின்றது,” என ரட்னாயக்க தெரிவித்தார். இலங்கையில் யுத்தத்தை வாஷிங்டன் முழுமையாக ஆதரித்த போதிலும், ஜனாதிபதி இராஜபக்ஷ சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சமநிலையை பேண எடுக்கும் முயற்சிகளை அது பொறுத்துக்கொள்ளத் தயாராக இல்லை, என அவர் மேலும் கூறினார். வெகுஜனங்கள் மீது பொருளாதார நெருக்கடியின் சுமைகளைத் திணிப்பதன் பேரில், வெடிக்கும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை நசுக்குவதற்காக, இராஜபக்ஷ அரசாங்கம் யுத்த காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட இராணுவ வழிமுறைகளை பயன்படுத்துவதைப் பற்றி பேச்சாளர் விளக்கினார். “வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) உட்பட இலங்கை முதலாளித்துவத்தின் ஒரு பகுதி, அமெரிக்காவின் போலி மனித உரிமைகள் பிரச்சாரத்துடன் அணிசேர்ந்துள்ளது,” என அவர் கூறினார். “போலி இடதுகளான நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சியும், யூ.என்.பீ. உடன் அணிசேர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பக்கம் திரும்பியுள்ளன,” என ரட்னாயக்க சுட்டிக் காட்டினார். கூட்டம் முடிந்த பின்னரும், கோகனை சந்திக்கவும் பேச்சாளர்கள் எழுப்பிய விடயங்கள் பற்றி மேலும் கலந்துரையாடவும் பல இளைஞர்களும் தொழிலாளர்களும் நின்றிருந்தனர். சோசலிச சமத்துவக் கட்சியின் மாகாண சபை தேர்தல் நிதிக்காக சபையினர் 8,150 ரூபா வழங்கினர். இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி, செப்டெம்பரில் நடக்கவுள்ள மாகாணசபை தேர்தலில் வட மாகாணத்தில் போட்டியிடுகின்றது. |
|