தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Obama and the Egyptian massacre ஒபாமாவும் எகிப்தியப் படுகொலையும்
Johannes Stern use this version to print | Send feedback புதன்கிழமை அமெரிக்க ஆதரவுடைய எகிப்திய இராணுவ ஆட்சிக் குழு நிராயுதபாணியான நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களைப் படுகொலை செய்தமையானது, வாஷிங்டனின் பாசாங்குத்தனமாக கூறுகின்ற அதனுடைய மத்தியக் கிழக்கின் கொள்கையான ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை அடிப்படையாக கொண்டது என்பதை சிதைத்துவிட்டது. நேற்று ஒரு பெருநிறுவன நிதிய மேலாளருக்கு சொந்தமான மார்த்தா வைன்யார்ட் என்னும் பல மில்லியன் டாலர்கள் பெறுமதியான மாளிகையில் தனது விடுமுறை காலத்தை கொண்டாடுகையில் எகிப்து குறித்துப் பேசியபோது ஒபாமா சங்கடத்தை எதிர்கொண்டார். இராணுவத்திற்கும் பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதி முகம்மது முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவத்திற்கும் இடையே வாஷிங்டன் சமரசத்தை ஏற்படுத்த விரும்பியது. ஆனால் ஜூலையில் எழுச்சி பெற்ற வெகுஜன எதிர்ப்புக்களுக்கிடையே, இது இறுதியில் தன்னுடைய ஆசியை இராணுவ ஆட்சிக் சதிக்கு கொடுத்து, தொழிலாள வர்க்கத்தினால் புதுப்பிக்கப்பட்ட புரட்சிகர போராட்டங்களை முன்கூட்டியே தவிர்க்கும் வகையில் முர்சியை இது அகற்றியது. இராணுவமும் அதனுடைய ஆதரவாளர்களான தாராளவாத முதலாளித்துவமும் முஸ்லிம் சகோதரத்துவத்துடன் கணக்கைத் தீர்த்துக்கொள்ள அனுமதிப்பதன் தாக்கங்களை வாஷிங்டன் முன்கூட்டி காணத்தவறிவிட்டதுபோல் தெரிகின்றது. இப்பொழுது சமீபத்திய படுகொலையினால் இராணுவம் தன்னை மீறி நடந்து கொண்டுவிட்டதுடன், தவிர்க்க முடியாமல் எகிப்தை ஸ்திரமற்றதாக்கிவிட்டது என்றும், அமெரிக்காவின் மத்திய கிழக்குக் கொள்கையையும் நிலைகுலைத்துவிட்டது என்றும் அஞ்சுகிறது. ஒபாமாவின் மழுப்பல் விடையிறுப்பு இதற்கான விளக்கமாகிறது. அந்த உரை இராணுவத்திற்குத் தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் என்னும் குறிப்பையும் காட்டுகையில் அவருடைய நிர்வாகம் படுகொலையிலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொள்ளும் முயற்சியைக் கொண்டிருந்தது. தன்னுடைய நிர்வாகம் “எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வலுவாகக் கண்டிக்கிறது” என்றார் அவர். எவ்வாறாயினும் இராணுவக் குழுவினை அவருடைய கடுமையாகச் சாடலின் மையக்கருத்து “அடுத்த மாதம் நடாத்தப்படவிருந்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் எங்களுடைய இருதரப்பு இராணுவப் பயிற்சியை” ஒத்திப்போடுதலாக இருந்தது. இது சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்தவும், எகிப்திய புரட்சியை இரத்தத்தில் மூழ்கடிக்கவும் முயற்சிக்கும் இராணுவ ஆட்சிக் குழுவிற்கு தொடரும் அமெரிக்க ஆதரவினை மூடிமறைப்பதாகும். வெள்ளை மாளிகை இன்னும் முர்சி ஜூலை 3ல் ஆட்சிசதி மூலம் அகற்றப்பட்டதை அங்கீகரிக்கவில்லை. அவர் பதவியிலிருப்பதன் மூலம்தான் அது தன்னுடைய பல தசாப்தங்கள் கொள்கையான எகிப்திய இராணுவத்திற்கு பில்லியன் கணக்கான டாலர்களை ஒவ்வொரு ஆண்டும் நிதியளிப்பதைத் தொடரமுடியும். எகிப்தில் தன்னுடைய நிர்வாகத்தின் வரலாற்றை ஒபாமா மறைக்க முற்படும் வகையில், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்கா எகிப்திய மக்களின் மாற்றத்திற்கான விருப்பத்தினால் உந்துதல் பெற்றது. மில்லியன் கணக்கான எகிப்தியர்கள் தெருக்களுக்கு வந்து தங்கள் கௌரவத்தை பாதுகாத்து, தங்களுடைய அரசியல் சுதந்திரம், பொருளாதார வாய்ப்பிற்கான விருப்புகளுக்கு சாதகமான ஒரு அரசாங்கத்தைக் கோரினர்” என்றார். எகிப்திய புரட்சி அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு உத்வேகமளித்தது. விஸ்கான்சினில் சிக்கனத்திற்கு எதிராக நடைபெற்ற பரந்த மக்கள் எதிர்ப்புக்களும் இதில் அடங்கும். வாஷிங்டன் அதை அச்சத்துடனும் பெரும் கலக்கத்துடனும் கண்டது. நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களை கொலை செய்த முபாரக் ஆட்சியை கடைசிவரை ஒபாமா ஆதரித்தார். முபாரக்கிற்கான அவருடைய சிறப்புத் தூதர் பிராங்க் விஸ்னர் “இந்த மாற்றங்களை செயல்படுத்துவதற்கு முபாரக் ஆட்சியில் தொடர வேண்டும்,” என வலியுறுத்தியிருந்தார். மார்த்தா வைன்யார்டில் ஒபாமா உரையில் இருந்த குரலின் தன்மை, அவருடைய நிர்வாகம் லிபியா மற்றும் சிரியாவிற்கு எதிரான ஆக்கிரோஷ வார்த்தை பிரயோகங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருந்தது. நீண்டகாலமாக வாஷிங்டனால் ஆட்சி மாற்றத்திற்கு இலக்கான அந்நாடுகளில், ஒபாமா நிர்வாகமும் குட்டி முதலாளித்துவ “மனித உரிமைகள்” சமூகத்திலுள்ள அதனுடைய கூட்டாளிகளும் எதிர்ப்பாளர்கள் கொலைசெய்யப்படக்கூடும் என்பதனால் போர் உட்பட உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுவதை நியாயப்படுத்தியது. 2011ல் லிபியாவில், வாஷிங்டனில், லண்டனில் மற்றும் பாரிசிலும் ஏராளமான மனித உரிமை ஆர்வலர்களின் ஒரு கும்பல் “பெங்காசியில் படுகொலையைத் தடுக்க” ஏதேனும் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர். அங்கு தளபதி முயம்மர் அல் கடாபியின் எதிர்ப்பாளர்கள் கிளர்ச்சி செய்திருந்தனர். இந்த அடிப்படையில் அவர்கள் “மனிதாபிமானத் போக்குவரத்துபாதை” மற்றும் லிபியாவில் ஒரு “பறக்கக்கூடாது பகுதி” நிறுவுதல் என்பதற்கு ஆதரவு கொடுத்திருந்தனர். இது ஒரு நேட்டோ போருக்கு வழிவகுத்தது, இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், நகரங்கள் முற்றுமுழுதான குண்டுவீச்சிற்கு இலக்காயதுடன், லிபியாவின் எண்ணெய் வருமானங்கள் மேற்கத்தைய வங்கிகளால் கைப்பற்றப்பட்டன. சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சி “தன்னுடைய மக்களையே கொல்லுகிறது” என்னும் தகவல்கள் பயன்படுத்தப்பட்டு அசாத்தை கவிழ்க்கும் நடவடிக்கைக்காக நியாயப்படுத்தி இஸ்லாமியவாத சக்திகள், அல் குவைதா உட்பட மற்றும் சிரியாவின் முஸ்லிம் சகோதரத்துவத்திற்கு ஆயுதங்கள் வழங்கும் ஒரு அமெரிக்க கொள்கை நியாயப்படுத்தப்படுகின்றது. இதே மாதிரியான அரசியல் இரட்டைக் கணக்குமுறையை “மனிதாபிமானப்” போருக்கு ஆதரவு கொடுக்கும் கல்வித்துறைசார்ந்த ஆதாரவாளர்களிடையே காணமுடியும். எகிப்திய இராணுவ ஆட்சிக் குழுவின் அதனுடைய “மக்களுக்கு எதிரான” படுகொலை நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ள போதிலும்கூட, அவைகள் செய்தித்தாள் கட்டுரைகளில், இணைய தள பதிப்புகளிலும் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தவில்லை. அதேபோல் இராணுவ ஆட்சி அகற்றப்பட ஹெலிகாப்டர்கள் கெய்ரோ மீது பறக்க முடியாது இருக்க பறக்கக்கூடாது பகுதி நிறுவப்பட வேண்டும் என்றும் கோரப்படவும் இல்லை. கெய்ரோவில் எதிர்ப்பாளர்கள் படுகொலை பற்றிய அமெரிக்கக் கொள்கை ஒன்றும் அறநெறிசார்ந்த கருத்தியல்களால் நிர்ணயிக்கப்படுவது இல்லை, மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள அரசியல் நலன்கள் இரக்கமின்றி கணக்கிடப்பட்டு அவற்றினாலேயே நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன என்பதை உறுதிபடுத்துகின்றன. ஏகாதிபத்திய கொள்கைகளுக்கான மத்தியதர வர்க்கத்தின் வசதியான அடுக்குகளின் ஆதரவைப் பாதுகாப்பற்கு ஊழல் மிகுந்த செய்தி ஊடக நடைமுறையின் ஆதரவுடன் பல “மனித உரிமை” வாதங்கள், பொதுமக்கள் கருத்துக்களைத் திரிக்கப் பயன்படுத்தப்பட்டன. பெரும்திரளான தொழிலாளர்களும் இளைஞர்களும் ஒபாமாவின் அறநெறி உபதேசங்கள் ஏன் உபதேசிக்கப்படுகின்றன என்பதை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். அவைகள் ஏகாதிபத்தியத்தின் பூகோளமூலோபாய நலன்களை நடைமுறைப்படுத்துவதற்கான பிரச்சாரங்கள்தான். |
|
|