தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The German election: The calm before the storm ஜேர்மன் தேர்தல்: புயலுக்கு முந்திய அமைதி
Peter Schwarz use this version to print | Send feedback செப்டம்பர் 22 ஜேர்மன் மத்திய தேர்தல் உண்மையிலேயே ஜனநாயக ரீதியான தேர்தல் என்றால், ஐரோப்பாவில் வசிப்பவர்கள் அனைவரும் பங்கு பெற அனுமதிக்கப்பட வேண்டும். பேர்லினின் எடுக்கப்படும் முடிவுகள், மில்லியன் கணக்கான ஐரோப்பியர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது, ஐரோப்பா முழுவதும் பரந்த மக்கள் அடுக்குகளை வறுமையில் தள்ளி, வேலையின்மையை மிக அதிக மட்டத்திற்கு உயரச்செய்த சிக்கன திட்டங்களின் பின்னால் உள்ள உந்துசக்தியாக ஜேர்மனிய அரசாங்கம் உள்ளது. ஆனால் இருக்கும் நிலைமையில், ஐரோப்பியர்கள் மட்டுமல்லாது ஜேர்மன் வாக்காளர்களும் தேர்தலில் எவ்விதமான முக்கியமான பங்கு வகிப்பதில் இருந்து ஒதுக்கப்படுவர். முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து எந்த தீவிர பிரச்சினையையும் ஒதுக்கிவிட ஒன்றாக சதி செய்து விட்டனர். தீர்க்கப்படாத யூரோ நெருக்கடி, மத்திய கிழக்கில் மற்றொரு போருக்கான தயாரிப்புக்கள், அரசாங்க அமைப்புகளை திட்டமிட்டு வலுப்படுத்துதல், வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக நலன்கள் மீதான இடைவிடா தாக்குதல்கள் பற்றி எந்த விவாதமும் கிடையாது. செயற்கையாக தோற்றுவிக்கப்பட்டுள்ள வாக்களிப்பிற்கு முந்தைய அமைதியான நிலைமையை குழப்பக்கூடிய எந்த அரசியல் முடிவும் தேர்தலில் வாக்குகள் போடப்படும்வரை நிறுத்தி வைக்கப்படும். நீண்டகாலத்திற்கு முன்னரே சமூக தாக்குதல்கள் மீதான அடுத்த சுற்றுத்திட்டங்கள் தயார் என்ற நிலையில் இவ்வாறு உள்ளது. எஃகு, கார்த்துறை, ஏற்றுமதித் தொழில்களின் பல்லாயிரணக்கணக்கான பணிநீக்கங்கள் காத்திருக்கின்றன. வணிகக் கூட்டமைப்புக்கள் தொழிலாளர் சந்தையில் இன்னும் கட்டுப்பாடுகளை அகற்ற அழுத்தம் கொடுக்கின்றன. இன்னும் பல பில்லியன் யூரோக்கள் கல்வி, சமூக நலனுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து வெட்டப்பட்டு நலிவுற்றிருக்கும் வங்கிகள் மற்றும் கடன்பட்டுள்ள நாடுகளுக்கு பிணையெடுப்பிற்காக ஒதுக்கப்படும். செப்டம்பர் தேர்தல் முடிவுற்றபின், அடுத்த அரசாங்கத்தை எந்தக் கட்சிகள் அமைத்தாலும், சான்ஸ்லர் பதவியை உத்தியோகபூர்வ வேட்பாளர்களில் எவர் வகித்தாலும் இந்த திட்டங்கள் உடனடியாகச் செயல்படுத்தப்படும். அரசியல் நடைமுறையில் அதிக “இடது” எனக் கூறப்படும் கட்சிகளான சமூக ஜனநாயக வாதிகள், பசுமை வாதிகள் மற்றும் இடது கட்சி அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் நம்பிக்கைக்கு உகந்த முகவர்கள் என நிரூபித்துவிட்டன. ஜேர்மனியிலும் ஐரோப்பா முழுவதும் உள்ள நிலைமை வழமையாக கூறப்படும் புயலுக்கு முன் அமைதி என்பதுபோல்தான் உள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார வல்லுனர் யூர்கென் ஸ்ரார்க் இன் கூற்றுப்படி, இந்த நெருக்கடி “இலையுதிர்கால கடைசியில் உச்சகட்டத்தை அடையும்.” நிதியச் செய்தித்தாள் Handelsblatt இடம் ஸ்ரார்க் கூறியுள்ளபடி, “ஒரு நெருக்கடியை சமாளிக்கவேண்டிய புதிய காலத்தில் நாம் நுழைகிறோம்.” கடுமையான வர்க்கப் போர்களை எதிர்பார்த்து, கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளிடம் இருந்து இடது கட்சி வரை அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் தங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக களைந்து வருகின்றன. இவை எகிப்தின் மாதிரியை பின்பற்றுகின்றன; அங்கு தாராளவாத மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முபாரக்கிற்கு எதிரான புரட்சியில் பங்கு பெற்ற போலி இடது சக்திகளும் இப்பொழுது இராணுவத்தின் மூலமான ஆட்சி சதிக்கு ஆதரவைக் கொடுக்கின்றன. ஆளும் உயரடுக்கின் வரவிருக்கும் போராட்டங்களுக்கான தயாரிப்புக்களுக்கு திறவுகோல் அரசாங்க அமைப்புகளை திட்டமிட்டு வலுப்படுத்தப்படுவதும், ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவதும் ஆகும். ஜேர்மனியின் உள்நாட்டு உளவுத்துறைப்பிரிவுகளுக்கும் 10 இனவெறிக் கொலைகளை நடத்தியுள்ள நவ நாஜிக்குழுக்கும் இடையே உள்ள நெருக்கமான பிணைப்புக்கள் பற்றிய பேச்சு தேர்தல் பிரச்சாரங்களில் மறைந்துவிட்டது. ஜேர்மனிய உளவுத்துறை மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் இரண்டும் மக்களைப் பெரிதும் கண்காணிப்பது குறித்த எட்வார்ட் ஸ்னோவ்டென் பகிரங்கமாக்கிய வெளிப்படுத்தல்களும் இதே நிலையில்தான் பேசப்படவில்லை. ஜனநாயகம் பயனுடைய இலக்கிற்கு உதவிபுரிகிறதா என்பது பற்றிய வெளிப்படையான விவாதம் உயர்கல்வி வட்டங்களில் தற்பொழுது நடைபெறுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசியல்துறை விஞ்ஞானி ஹெர்பிரைட் முங்கிளர் பகிரங்கமாக, “ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையே உள்ள உறவு பற்றி ஒரு புதிய, தடையற்ற பார்வை தேவை” என அழைப்பு விடுத்தார். விவாதம் வைமார் குடியரசின் கடைசி ஆண்டுகளை நினைவு கூர்கிறது. அப்பொழுது அரசியலமைப்பு வக்கீல் கார்ல் ஷ்மிட் நாஜி சர்வாதிகாரத்தை நியாயப்படுத்த சட்டபூர்வ வாதங்களை முன்வைத்தார். ஆளும் வர்க்கம் மீண்டும் சர்வாதிகார ஆட்சி வகைகளுக்கு தயாரிப்புக்களை நடத்துகிறது. தன் பங்கிற்கு தொழிலாள வர்க்கமும் எதிர்வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களுக்கு தயாராக இருக்க வேண்டும். இதற்கு மிக முக்கிய முன்னிபந்தனை ஒரு புதிய கட்சியை கட்டமைப்பதாகும். அது தொழிலாள வர்க்கத்தை அரசியல் நிகழ்வுகளில் சுயாதீனமாக தலையிட உதவும். எகிப்தில் நடைபெறும் வியத்தகு நிகழ்வுகள், தொழிலாள வர்க்கம் அதன் நலன்களை தன் சொந்த புரட்சிகர கட்சிமூலம்தான் சாதிக்க முடியும் எனக் காட்டுகின்றன. சோசலிச சமத்துவக் கட்சி (PSG, Germany) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவு பொதுத் தேர்தலில் அத்தகைய கட்சியைக் கட்டமைக்கத்தான் முக்கியமாக பங்கு பெறுகிறது. ஒரு புதிய தொழிலாளர் கட்சியை கட்டமைப்பதற்கு இருபதாம் நூற்றாண்டின் வரலாற்று அனுபவங்களைப் பற்றிய முழுமையான புரிதல் அவசியமாகிறது. இது, ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், அனைத்துவகை மார்க்சிச எதிர்ப்பு வகைகள், 1960களின் போலி மார்க்சிச மாணவர் இயக்கம் உட்பட அனைத்து இயக்கங்களுக்கும் எதிரான நான்காம் அகிலத்தின் போராட்டங்களில் உறைந்துள்ளன. இதற்கு இடது கட்சி மற்றும் அதன் போலி இடது தொங்குதசைகளான, மார்க்ஸ் 21, சோசலிச மாற்றீடு (SAV) போற்றவற்றிற்கு எதிரான அரசியல் எதிர்ப்பு தேவை. இக் கட்சிகள் இடதுசாரி வார்த்தைஜாலங்களை பயன்படுத்தி தமது வலதுசாரி, முதலாளித்துவ சார்பு அரசியலை மறைப்பதில் கைதேர்ந்தவை. ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக PSG நிற்கின்றது. வங்கிகள் பெருநிறுவனங்கள் ஆகியவற்றின் சக்தியை முறித்து அவற்றை பொது ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் வைக்காவிட்டால் ஒரு தனி சமூகப் பிரச்சினையை தீர்ப்பதும் இயலாததாகும். PSG அனைத்துவகை தேசியவாதங்களையும் நிராகரித்து, ஐரோப்பிய, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக போராடுகிறது. PSG பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஒரு கருவியாக உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கிறது. PSG இன் நோக்கம் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தை நிறுவுவதாகும். “ஐரோப்பாவை சோசலிச அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதின் மூலம்தான், தொழிலாள வர்க்கம் அதன் நலன்களை பாதுகாக்கவும், ஐரோப்பா மீண்டும் தேசியவாதம், போர் இவற்றில் ஆழ்ந்துபோவதை தடுக்கவும் முடியும். கண்டத்தின் மகத்தான செல்வம், உற்பத்திச் சக்திகளை சமூகம் முழுவதற்குமாக பயன்படுத்த முடியும் என்று PSG இன் தேர்தல் அறிக்கை கூறுகிறது. உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களை அனைவரையும் PSG பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுக்குமாறும், நம் வலைத் தளத்திற்கு வருகை தருமாறும், நம் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறும் நாங்கள் அழைக்கிறோம். பல நிகழ்ச்சிக்கள் குறித்தும் இணையத்தில் தகவல்கள் வரும். |
|
|