World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German election: The Left Party pledges its allegiance to the ruling class

ஜேர்மன் தேர்தல்: இடது கட்சி ஆளும் வர்க்கத்திற்குத் தனது விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறது

By Peter Schwarz 
10 August 2013

Back to screen version

செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் மத்திய தேர்தலில் இடது கட்சியின் பிரச்சாரத்தின் கவனம் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்திற்கு அதன் நம்பகத்தன்மையை வலியுறுத்தி, அடுத்த சுற்று சமூகத் தாக்குதல்களை செயல்படுத்துவதில் அதன் தவிர்க்க முடியாத பங்கை வலியுறுத்துவதாக உள்ளது. சமீபத்திய நாட்களில், கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைமை வேட்பாளர் பீர் ஸ்ரைன்புரூக் தலைமையிலான வருங்கால கூட்டாட்சியில் தாம் பங்குபெறுவதற்கான வாக்குறுதிகளை அதற்கு வாரி வழங்குகின்றனர்.

இடது கட்சித் தலைவர் கட்யா கிப்ளிங் Abendzeitung பத்திரிகையிடம் மூனிச் நகரில் பின்வருமாறு கூறினார்: “தமது கொள்கையில் மாற்றம் வேண்டுமா அல்லது அங்கேலா மேர்க்கெல் சான்ஸ்லராக இருப்பதைத் தொடர வேண்டுமா என்பதை SPD கட்டாயம் முடிவு செய்ய வேண்டும்”. கிப்ளிங்கும் அவருடைய இணைத்தலைவர் பேர்ன்ட் ரைக்சிங்கரும்ஆரம்பத்திலிருந்தே நாங்கள் ஒரு இடதுசாரி அரசாங்கம் பற்றிய பேச்சுக்களில் ஆர்வம் கொண்டுள்ளோம் என அடையாளம் காட்டியுள்ளனர்.”

இதன் பின் கிப்பிங் குறைந்தப்பட்ச ஊதியத்தை வரையறுப்பது உட்பட பல தெளிவற்ற குறைந்த கோரிக்கைகளை முன்வைத்தார். இது குறித்து இடது கட்சி அரசாங்கத்தில் சேருவதற்கு முன் பேச்சுக்களை நடத்த விரும்புகிறது. என அவர் வலியுறுத்தி,இவை அனைத்தும் கற்பனையல்ல. முதலாளித்துவத்தை இல்லாதொழிக்கவேண்டும் என்று நாங்கள் கோரிக்கைவிடவில்லை.” என்றார்.

இடது கட்சியின் முக்கிய வேட்பாளாரான கிரிகோர் கீசி இன்னும் வெளிப்படையாக பேசினார். அவர் Bild am Sonntag பத்திரிகையிடம் SPD க்கும் இடது கட்சிக்கும் இடையேகூடுதலான பொதுவான கருத்துக்கள் உள்ளனஎன்றார். “சிறப்பாக எங்களுடன் அதன் தேர்தல் வேலைத்திட்டத்தை SPD திறமையாக நடைமுறைப்படுத்தலாம்என்றார் அவர். “நாங்கள் இல்லாவிட்டால் SPD சான்ஸ்லர் பதவியை அடையமுடியாது. கூட்டரசாங்கம் பற்றிய பேச்சுக்கள் எங்களால் தோல்வியுறாது.”

ஜேர்மனிய அரசியலுடன் கடந்த 15 ஆண்டுகளாக அறிமுகமான  எவருக்கும் இத்தகவல் என்னவென்பது தெளிவாக உள்ளது. இடது கட்சி, SPDக்கும் பசுமைவாதிகளுக்கும் அவற்றின் வலதுசாரிக் கொள்கைகளுக்கும் தடையற்ற ஆதரவைத் தரும் என்பதே அதன் பொருளாகும்.

SPD மற்றும் பசுமைவாதிகள் சமூகநலன்களை தாக்குதல், தொழிலாளர்கள் உரிமைகளைத் தாக்குதல் ஆகியவற்றில் முக்கிய பங்கை வகித்தனர். அதே நேரத்தில் அரச அமைப்புகளை வலுப்படுத்தி SPD-பசுமைவாதிகளின் கூட்டணி அரசாங்கம் ஹெகார்ட் ஷ்ரோடரினதும் (SPD) ஜோஷ்கா பிஷ்ஷரினதும் (பசுமைவாதிகள்) தலைமையில் 15 வருடத்திற்கு முன்னர் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து போரில் பங்கு பெறுவதையும் தீவிரப்படுத்தியுள்ளது.

முதல் மேர்க்கெல் அரசாங்கத்தில் (2005-2009) நிதி மந்திரியாக இருந்த SPD யின் முக்கிய வேட்பாளரான பீர் ஸ்ரைன்புரூக் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கு கொடுப்பதற்குப் பொறுப்பாக இருந்தார். இப்பணம்தான் இப்பொழுது கடுமையான சமூக வெட்டுக்கள் மூலம் திரும்பப் பெறப்படுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில், மேர்க்கெல் அரசாங்கம் மிகப்பெரிய  குறைவூதியத் துறையினாலும், SPD-பசுமைக்கட்சி தோற்றுவித்த சமூக நலன் சரிவுகளினாலும் பெரும் ஆதாயத்தை அடைந்துள்ளது. அதே நேரத்தில், மேர்க்கெல் இரக்கமின்றி யூரோ நெருக்கடியை கிரேக்க, ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் பிற தெற்கு, கிழக்கு ஐரோப்பிய நாட்டு ஜனத்தொகையின் மீதான சுமையாக மாற்றியுள்ளார். இதற்கு SPD மற்றும் பசுமைவாதிகளால் முழு ஆதரவு கொடுக்கப்பட்டது.

தற்போதைய நிதிய, பொருளாதார நெருக்கடியால், மற்றொரு சுற்று சமூக தாக்குதல்கள் தேர்தலுக்குப்  பின் செயற்பட்டியலில் இருக்கும் என்பது ஒரு வெளிப்படையான இரகசியமாக உள்ளது. மேர்க்கெல், ஸ்ரைன்புரூக் அல்லது எவர் அரசாங்கத்திற்கு தலைமை தாங்கினாலும் இதுதான் நிகழ இருப்பது. இந்த இலக்கை ஒட்டித்தான் இடது கட்சி ஆளும் வர்க்கத்திற்கு தன் ஆதரவை வழங்குகின்றது.

கட்சியின் தேர்தல் கோஷங்களில் காட்டப்படும் குறைந்தப்பட்ச கோரிக்கைகளான, ஒரு குறைந்தப்பட்ச ஊதியத்தை வரையறுத்தல், குறைந்தப்பட்ச ஓய்வூதியம், செல்வந்தர் மீதான வரி, போர்களில் தலையீடு கூடாது என்பவை அதன் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான கொள்கைகளை மூடிமறைக்க முற்படும் நோக்கம் கொண்டவையாகும். இடது கட்சி அல்லது அதன் முன்னோடி ஜனநாயக சோசலிசக் கட்சி (PDS) சாக்சனி-அன்ஹால்ட், பேர்லின், மெக்லன்பேர்க்-பொமரேனியா, தற்பொழுது பிராண்டன்பேர்க் என மாநில அரசாங்கங்களில் பங்கு பெற்ற போதெல்லாம் அதன் தற்போதைய தேர்தல் பிரச்சாரத்திற்கு முற்றிலும் எதிரான கொள்கைகளைத்தான்  செயல்படுத்தியுள்ளது.

2002-2011 காலகட்டத்தில் SPD கூட்டணியுடன் பேர்லின் மாநிலத்தை இடது கட்சி ஆட்சி செய்தபோது, அது பொதுத்துறை வேலைகள் மற்றும் ஊதியங்கள், சமூகநலச் செலவுகளில் வெட்டுக்கள் ஆகியவற்றில் முன்னோடிப் பங்கை கொண்டிருந்தது. Deutschlandfunk  வானொலியில் இது பற்றி கேட்கப்பட்டபோது, கீசி தன்னுடைய வழமையான இழிந்த முறையில், இடது கட்சி எப்போதும் வறுமை நிலவும் இடத்திலிருந்து தேர்தலில் ஆதரவைப் பெறுவதுஅற்பத்தனம்என்று புகார் கூறியுள்ளார். “நான் ஒரு செல்வம் படைத்த நாட்டையும் ஆளவிரும்புகிறேன்என்றார் அவர்.

இடது கட்சி, ஒரு SPD-பசுமைக் கட்சிக் கூட்டணி அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதுடன் தனது பங்கை மட்டுப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என்பதை தெளிவாக்கியுள்ளது. அவ்வாறுதான் அது 2010ல் இருந்து 2012 வரை வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்திலும் செய்தது. அது மந்திரிப் பதவிகளையும் வகிக்க விரும்புகிறது.

நீங்கள் ஒன்றில் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் இல்லாவிடின் எதிர்க்கட்சியில் இருக்க வேண்டும்என கீசி ஜேர்மானிய தொலைக்காட்சி நிலையமான ZDF இடம் கூறினார். Süddeutsche Zeitung பத்திரிகையின் ஒரு அறிக்கையின்படி, இடது கட்சியின் நிர்வாகக் குழு தன் ஆகஸ்ட் 17-18 கூட்டத்தில் மத்திய மட்டத்தில் வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதை வெளிப்படையாக ஒதுக்கி அரசாங்கத்தில் நேரடிப் பங்கிற்கு ஆதரவைக் குறிக்கும் தீர்மானத்தை இயற்ற உள்ளது என தெரிவித்துள்ளது.

Bild am Sonntag பத்திரிகையில் கீசி, தான் எதிர்கால ஜேர்மனிய வெளியுறவு மந்திரிப் பதவியை வகிக்கும் வாய்ப்புக் குறித்து பேசினார். இதற்கு உடனடி சாத்தியக்கூறு இல்லை என்பது கீசிக்கு தெரியும். SPD சமீபத்தில்தான் தேர்தலுக்குப்பின் இடது கட்சியுடன் கூட்டணி அமைக்கும் விருப்பத்தை நிராகரித்துள்ளது. ஆனால் கீசி வருங்காலத்தில் அத்தகைய வாய்ப்பை மறுக்கவில்லை.

கீசி தன் திட்டத்தின் மூலம் இன்னும் முக்கியமான அரசியல் செய்தி ஒன்றை தெரிவிக்கின்றார். அது பசுமைக் கட்சி தலைவர் ஜோஷ்கா பிஷர் 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியுறவு மந்திரியாக நியமிக்கப்பட்டதை நினைவு கூர்கிறது. அந்நேரத்தில் எவரும், முன்னர் தெருவில் நின்று சண்டையிட்ட, பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய, வாடகைக்கார் ஓட்டியாக இருந்த ஒவருக்கு இந்த மதிப்புமிக்க பதவி வழங்கப்படும் என்று எவரும் கற்பனைகூட செய்யவில்லை. இப்பதவி முன்னதாக ஆளும் உயரடுக்கினால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மிக அதிகம் படித்துள்ள உறுப்பினர்களால்தான் வகிக்கப்பட்டு வந்துள்ளது.

பிஷ்ஷரின் நியமனம், 1968 இன் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட தலைமுறை முதலாளித்துவ அரசாங்கத்துடன் முற்றாக ஒருங்கிணைந்துகொண்டதுடன், பசுமைவாதிகள் ஒரு வலதுசாரி, ஏகாதிபத்திய சார்பு கட்சியாக முற்றாக மாறியதையும் அடையாளப்படுத்தி காட்டுகிறது. பிஷ்ஷரின் பதவியேற்பு, நேரடியாக பசுமைக் கட்சி ஜேர்மனிய இராணுவம் இரண்டாம் உலகப் போருக்குப்பின் முதல் தடவையாக ஒரு ஏகாதிபத்தியப் போரில் பங்கு பெறுவதற்கு ஆதரவு கொடுத்ததுடன் பிணைந்துள்ளது. அப்பொழுதுதான் நேட்டோ சேர்பியா மீது குண்டுத்தாக்குதலை நடத்தியது.

பசுமைவாதக் கட்சியின் மற்றொரு ஸ்தாபக உறுப்பினராக இருந்து SPDக்கு மாறியவர் ஒட்டோ ஷில்லி ஆவார். இவர்தான் மத்திய குடியரசு நிறுவப்பட்டதில் இருந்து, அரச பாதுகாப்பு அமைப்புக்களை மிகப்பெரியவில் கட்டமைக்க பொறுப்பாக இருந்தவர்.

எதிர்கால வெளியுறவு மந்திரியாக தன் சேவையை வழங்க  முன்வந்துள்ள வகையில் கீசி, பசுமைவாதிகள் அப்போது வகித்த இதேபோன்ற பங்கை இன்னும் கடுமையான பொருளாதார நெருக்கடியும் இன்னும் ஆழ்ந்த சமூக, சர்வதேச அழுத்தங்கள் உள்ள சூழ்நிலைகளின்போது தாமும் வகிக்கத் தயார் என்பதைத்தான் அடையாளம் காட்டியுள்ளார்.

இடது கட்சியின் தலைவர்கள், எதிர்வரவுள்ள காலம் கூர்மையான வர்க்க மோதல்களால் குறிக்கப்படும் என்பதை நன்கு அறிவர். கட்சி நாளேடான Neues Deutschland இல் இடது கட்சியின் லோயர் சாக்சனித் தலைவர் மன்பிரெட் சோன் எழுதினார்: “தனித்தனியான அடையாளங்கள் மட்டும் இன்றி, ஒரு கவனமான ஆய்வு கூட எதிர்வரவிருக்கும் தசாப்தங்களில் இந்த அமைப்புமுறை தனது சொந்த உள்ளக மட்டுப்படுத்தல்களால் முறியும் கட்டத்தை அணுகுகிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.”

ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார வல்லுனர் யூர்கென் ஸ்ரார்க்கை, சோன் மேற்கோள் காட்டி அறிவித்தார்: “இலையுதிர்கால கடைசியில் இந்த நெருக்கடி உச்சகட்டத்தை அடையும் என நான் நம்புகிறேன். ஒரு புதிய நெருக்கடியை சமாளிக்கவேண்டிய காலத்தில் நாம் நுழைகிறோம்.”

இடது கட்சி, SPD இன் செயற்பட்டியல் 2020க்கு ஆதரவு கொடுக்கத் தயார் என்பது மட்டும் இன்றி, “இந்தப் புதிய நெருக்கடியை சமாளிப்பதற்கும்ஆதரவைக் கொடுக்கும். அது சமூக வெட்டுக்களுக்கான எதிர்ப்பை வன்முறை மூலம் அடக்குவதற்கும் மற்றும் ஜேர்மனிய ஏகாதிபத்திய நலன்களுக்கான போர்களை நடத்துவதற்கும் தன்னுடைய சேவைகளை கொடுக்கிறது.

இடது கட்சி, சொல்லின் சரியான பொருளில் எதிர்ப்புரட்சி பங்கிற்கு தயாரிக்கிறது. நாடு முழுவதும் முதல் பெரிய தேர்தல் சுவரொட்டியின் அமைப்பு இதை வெளிப்படுத்துகிறது. பெரிய எழுத்துக்களில்புரட்சி?” என்ற சொல்லை எழுதி ஒரு வினாக்குறியையும் பதித்துள்ளது. அதன் கீழே, மிகத் தெளிவான பதிலாக ஆனால் சிறிய எழுத்தில்இல்லைஎன்பது உள்ளது.

உண்மையில் சமூகப் புரட்சிதான் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இன்றைய சமூக வாழ்வின்மீது ஒரு சிறிய நிதிய உயரடுக்கு கொண்டிருக்கும் இரும்புப் பிடியை உடைக்க ஒரேயொரு வழியாகும். அது இன்றி, ஒரு சமூகப் பிரச்சினைகூட தீர்க்கப்பட முடியாது. இடது கட்சி அத்தகைய புரட்சியை உறுதியாக நிராகரிக்கிறது. அதை அடக்குவதற்கு தேவையான அனைத்தையும் செய்யும். இதுதான் அவர்களின் தேர்தல் சுவரொட்டியின் மையச் செய்தி ஆகும்.

இதன் நிலைப்பாடு முன்னாள் SPDயின் தலைவர் பிரெட்ரிக் ஏபேர்ட் அறிக்கையை நினைவுபடுத்துகிறது: “புரட்சியை பாவம் போல் நான் வெறுக்கிறேன்.” ஜேர்மனிய சான்ஸ்லராக ஏபேர்ட் இருந்தபோது, தன்னுடைய கட்சி கூட்டாளி குஸ்டாவ் நோஸ்கேயுடன், முதல் உலகப் போரின் படுகொலையைத் தொடர்ந்து முதலாளித்துவத்திற்கு எதிராக எழுச்சி செய்த தொழிலாளர்கள் எழுச்சியை குருதிகொட்டி நசுக்கினார்.

தேர்தலில் சோசலிச வேலைத் திட்டத்துடன் பங்கு பெறும் ஒரேயொரு கட்சியும், தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு எதிராக போரிட உதவும் கட்சியும் சோசலிச சமத்துவக் கட்சியே ஆகும். PSG தேர்தல் பிரச்சாரத்தின்போது, இடது கட்சி மற்றும் அதனை சுற்றியும் இருக்கும் போலி இடது குழுக்களுக்கு எதிரான, விட்டுக்கொடுப்பில்லாத அரசியல் போராட்டத்தை நடத்தும்.