World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Protests at Greek detention camp highlight state violence against immigrants in Europe

கிரேக்கத்தின் தடுப்பு முகாமில் நடந்த எதிர்ப்புக்கள் ஐரோப்பாவில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான அரச வன்முறையை உயர்த்திக்காட்டுகின்றன

By Stefan Steinberg 
13 August 2013

Back to screen version

ஐரோப்பா முழுவதும் புலம்பெயர்வோருக்கு எதிராக வளர்ந்து வரும் அரச வன்முறையை, கடந்த வார இறுதியில் கிரேக்கத்தில் குடியேறிய தொழிலாளர்களின் எதிர்ப்புக்கள் உயர்த்திக் காட்டுகின்றன.

சனிக்கிழமை மாலை, ஏதென்ஸுக்கு அருகேயுள்ள அமிக்டேல்ஜா தடுப்பு மையத்தில் டஜன் கணக்கான குடியேறுவோர் தங்கள் உறங்குமிடத்திற்குச் சென்று தங்கள் மெத்தைகளுக்கு தீ வைத்தனர். புலம்பெயர்ந்தோர்களின் முகாமிலுள்ள மனிதத் தன்மையற்ற சூழலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்; அதேபோல் அவர்கள் தடுப்பில் 12 முதல் 18 மாதங்கள் நீட்டிக்க அனுமதிக்கும் முடிவையும் எதிர்த்தனர்.

ஒரு செய்தி ஊடக தகவலின்படி, முகாமில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது, இது பல நாட்களுக்கு முன்பே வெட்டப்பட்டுவிட்டது. இது அரச அதிகாரிகளின் வேண்டுமென்ற ஆத்திரமூட்டலைத்தான் வெளிப்படுத்துகிறது.

உள்ளிருப்போர் தண்ணீர் போத்தல்களையும், கற்களையும் பொலிஸ் மீது வீசி எறிந்தனர்; பொலிசார் கண்ணீர் புகைக்குண்டுகளையும், அதிர்ச்சியுண்டாக்கும் கையெறி குண்டுகளையும் பயன்படுத்தி முகாமிற்குள் நுழைந்தனர். நீடித்த மோதல்களுக்குப் பின், பொலிசார் முகாமில் இருந்த 1,620 குடியேறியவர்களில் 50க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

அமிக்டேலெஜா தடுப்புக் காவல் மையம், பமிதா மலைக்குக் கீழே ஒரு பொலிஸ் கல்விக் கூடத்திற்கு அருகே உள்ளது; அங்குள்ள இழிந்த நிலை, அகதிகளை மோசமாக நடத்துதல் ஆகியவற்றிற்காக மனித உரிமைகள் அமைப்புக்களால் குறைகூறப்பட்டுள்ளது. முகாம் குறித்த புகைப்படங்கள், இளம் காவலில் உள்ளவர்கள் இரண்டு மீட்டர் உயரமான வேலிக்கு அருகே நிற்பதைக் காட்டுகின்றன; வேலியோ நிறைய முட்களைக் கொண்டுள்ளது.

சமீபத்திய மோதல்களை தொடர்ந்து, இப்பிராந்தியத்தின் மேயர் சோடிரிஸ் டௌரோஸ் செய்தி ஊடகத்திடம் இந்தக் கலகத்தை தவிர்க்க முடியாதது எனத் தான் கருதுவதாகவும் நகரசபை அரசாங்கம் நீண்டகாலத்திற்கு முன்பே இத்தகைய நிகழ்வின் இடர் குறித்து எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்தார். முகாமிலுள்ள நிலமைகள் பொறுத்துக் கொள்ள முடியாதவை என்றும் அவர் விளக்கினார். கிரேக்க தொலைக்காட்சியில் பேசிய உள்ளூர் பொலிஸ் கூட்டமைப்பு தலைவர், இத்தகைய நிகழ்வுகள் இனி தொடரும் என்றும் எச்சரித்தார்.

அமிக்டேலெஜா முகாமிலுள்ள காவலில் இருப்பவர்கள் பட்டினிப் போராட்டத்தை ஏப்ரல் மாதம் நடத்தி தங்கள் தடுப்புக் காவல் நிலைமைகளுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்த போராட்டத்தில் கிட்டத்தட்ட மற்றும் ஒரு 2,000 புலம்பெயர்ந்தோர்கள் நாடெங்கிலுமுள்ள மையங்களில் சேர்ந்தனர்.

பட்டினிப் போராட்டத்தை தொடர்ந்து பல குடியேறுவோர் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் மே மாதம் அமிக்டலேஜா முகாமிற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தை நடத்தின. 10 பேர் கொண்ட குழு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டபின், பாதுகாப்புக் குழுக்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டன: தடுப்புக் காவல் நிலைமைகள் இழிந்துள்ளன. கூட்ட நெரிசல், மிகவும் குறைந்த சுகாதார நிலைமை, முற்றுப்பெறா அல்லது இல்லாத முற்றங்கள், குறைந்த அல்லது மருத்துவ வசதியே அற்ற நிலை, மற்றும் பொலிஸ் மிருகத்தனம். ஆயிரக்கணக்கான மக்கள் மையத்தின் அறைகளில் அவர்களுடைய நலன்களைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தப்படாத நிலைமையில், கைதிகளுக்குரிய உரிமைகள்கூட இல்லாத நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதிநிதிகள் குழுவானது தடுப்பு நிலையம் ஒரு சிறை என்ற முடிவிற்கு வந்ததோடு, இது அடிப்படை உரிமைகளை அழிக்கிறது, மூடப்பட வேண்டும் என்றும் கூறியது.

மே மாத இறுதியில் மனித உரிமைகள் மீறப்படல் குறித்த ஆண்டு அறிக்கையில் மனித உரிமைகள் அமைப்பு (AI) கிரேக்கத்தை புலம்பெயர்ந்தோரை அது நடத்தும் விதத்திற்காக கடுமையாக கண்டித்தது. அறிக்கை எல்லிநிகோவிலுள்ள கிரேக்க புலம்பெயர்ந்தோர் மையத்தில் இருக்கும் நிலைமைகள் “மனிதத்தன்மை அற்றவை, இழிந்தவை” எனக் குறிப்பிட்டுள்ளது.

இதே அறிக்கை  கிரேக்க-துருக்கிய எல்லையில் சமீபத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு சுவரையும் கண்டித்துள்ளது; இது கிரேக்கத்திற்கு குடியேறுவோர் நுழைவதை தடுப்பதற்கு உள்ளது. மனித உரிமைகள் அமைப்பின் (AI) அறிக்கையானது 24 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி உட்பட அவைகள் அகதிகள், புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு எதிராக நடத்தப்படும் தவறுகளுக்கு குறைகூறியுள்ளது.

புலம்பெயர்ந்தோர், மற்றும் அகதிகள் கிரேக்கத்தில் மிருகத்தனமாக நடத்தப்படுவது ஐரோப்பிய கோட்டை கொள்கை என்று ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுள்ளதின் விளைவு ஆகும்; இது போரினால் தப்பியோடி வருவோர், அரசியல் துன்புறத்தல் மற்றும் வறுமை இவற்றில் இருந்து தப்புவதற்கு ஐரோப்பாவில் குடியேற விரும்பும் அனைவரையும் இலக்கு கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய எல்லைகளைப் பாதுகாக்கும் அமைப்பான Frontex கிரேக்க அரசுடனும் பொலிசுடனும் நெருக்கமாக உழைத்து நெரிசலுள்ள மையங்களை நிறுவியுள்ளது; அவைகள் மனித தரத்திற்கும் குறைந்த தரத்தில் உள்ளன. கிரேக்கத்தில் அகதி அந்தஸ்து நாட முற்படுவபவர்களில் ஒரு மிகச்சிறிய சதவிகிதத்தினர்தான் பின்னர் நாட்டில் இருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

2006 முதல் Frontex, கிரேக்கத்திற்கு மிக அதிக உதவியை அதன் நில எல்லையை பாதுகாக்கவும் கடல் எல்லைகளை பாதுகாக்கவும் கொடுத்துள்ளது. எல்லையில் விரைவில் தலையிடும் குழுக்களுடைய (RABIT-Rapid Border Intervention Teams) இரண்டு செயற்பாடுகள் நூற்றுக்கணக்கான ஐரோப்பிய பொலிசை நாட்டிற்குள் கிரேக்க பொலிசுக்குப் பயிற்சி அளிக்க, உதவியளிக்க அனுப்பி வைத்தது. அதேபோல் துருக்கிப் புறம் இருக்கும் அதன் எல்லைக்கும் அனுப்பி வைத்தது.

Frontex Operational Office என்ற அதன் முதல் சிறப்புக் கிளை அலுவலகத்தை Frontex, 1, அக்டோபர் 2010ல் பிரேயஸில் நிறுவியது. கிரேக்கம் முழுவதும் தடுப்புக் காவல் நிலைய வலையமைப்புக்களை கட்ட ஐரோப்பிய ஒன்றியம் நிதியையும் அளித்துள்ளது.

2007 முதல் 2011 வரை கிரேக்கம் 119 மில்லியன் யூரோக்கள் ($158 மில்லயன்கள்) வெளிபுற எல்லைகள் நிதியில் இருந்தும், 52 மில்லியன் யூரோக்கள் ($69 மில்லியன்) ஐரோப்பிய ஒன்றிய Return Fund இல் இருந்தும் பெற்றுள்ளது. ஐரோப்பிய புகலிட ஆதரவு அலுவலகம் (EASO), நாட்டில் நுழைய முயலும் அகதிகளை விரைவில் தாயகத்திற்கு அனுப்புவதற்கு, அதன் “அதிரடிச் செயல்திட்டத்தை” நடைமுறைப்படுத்த கிரேக்கத்துடன் நெருக்கமாக பணியாற்றுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதி பெறும் கிரேக்கம் முழுவதுமுள்ள முகாம்களில் காணப்படும் இழிந்த நிலைமைகள், புலம்பெயர்ந்தோர் எதிர்ப்புக்களை தோற்றுவித்திருக்கிறது, அவை, கிரேக்க அரசாங்கம் மற்றும் செய்தி ஊடகத்தால் இனவெறியைத் தூண்டவும், நாட்டின் சமூக நெருக்கடியில் இருந்து கவனத்தை திசைதிருப்பவும் பயன்படுத்தப்படுகிறது; நாட்டின் சமூக நிலை ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச வங்கிகளின் சார்பில் ஆணையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளால் நான்கு ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுவிட்டது.

ஐரோப்பாவில் நுழையும் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் இழிந்த நிலைமையின் மற்றொரு அடையாளமாக, 6 இளம் எகிப்தியர்கள் வார இறுதியில் அவர்கள் படகு தரைதட்டியதை அடுத்து சிசிலி கடலோரப் பகுதியில் மூழ்கி உயிரிழந்தனர். ஆபத்தான மீன்பிடி படகோ 100க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை எகிப்து, சிரியாவில் இருந்து ஏற்றி வந்துள்ளது.

United Against Racisim என்ற வலைத் தளத்தின் படி, அகதி தஞ்சம் கோருவோர்கள், அகதிகள் மற்றும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்கள் என மொத்தம் 17,306 பேர் ஐரோப்பாவில் காலடி எடுத்து வைக்கும் முயற்சியில் 1993 க்கும் கடந்த ஆண்டு இறுதிக்கும் இடையே இறந்து போயுள்ளனர்.