World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி The German elections and the threat of dictatorship ஜேர்மனிய தேர்தல்களும் சர்வாதிகார அச்சறுத்தலும்
By Ulrich
Rippert ஜேர்மனிய வாராந்திர ஏடு Der Spiegel உடைய சமீபத்திய பதிப்பு ஜேர்மனியின் “சோம்பேறித்தனமான தேர்தலைப் பற்றி” புகார் கூறி, அரசியல்வாதிகள் இன்னும் தைரியத்தை வெளிப்படுத்தி “செல்வாக்கற்ற முடிவுகளை” எடுக்கும் தைரியத்தைக் காட்ட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. “பணிந்து செல்லும் குடியரசு” என்னும் தலைப்பில் Der Spiegel உடைய ஆசிரியர்கள் கட்சிகளையும் அரசியல் வாதிகளையும் அவற்றின் “அரசியல் கோழைத்தனத்திற்காகவும்”, “சீர்திருத்தங்களுக்கு விருப்பமற்ற” ஜேர்மன் குடிமக்களுக்கு ஏற்ப செயல்படுவதற்காகவும் விமர்சித்துள்ளது. இந்த ஏடு, 84 வயது மெய்யியலாளர் Jürgen Habermas ஐ மேற்கோளிட்டுள்ளது; அவர் வாசகர்களுக்கு “உயரடுக்கின் தோல்வி” குறித்து உரையாற்றுகிறார். ஹேபர்மாஸ் இந்த வினாவை எழுப்புகிறார்: “செல்வாக்கற்ற” என்பதற்கு உண்மையில் என்ன பொருள்? தன் சொந்த வினாவிற்கு விடையிறுக்கும் வகையில், வாக்காளர்கள் தேவையான, நியாயமான அரசியல் தீர்வுகளுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். ஐரோப்பாவின் பிற நாடுகள் அனைத்தையும் வேதனைதரும் சிக்கன நடவடிக்கைகளை ஜேர்மன் அரசாங்கம் கோருகிறது ஆனால் அத்தகைய நடவடிக்கைகளை உள்நாட்டில் செயல்படுத்தும் நோக்கத்தைக் கண்டு நடுங்குகிறது, இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்கிறார். ஹேபர்மாஸ் கருத்துப்படி “அதிகாரத்தை சந்தர்ப்பவாதரீதியாக பராமரிக்கும்” நடவடிக்கை ஐரோப்பாவில் அதன் தலைமைப் பொறுப்புக்களுக்கு ஜேர்மனி காட்டும் பொருட்படுத்தா தன்மையை விளைவிக்கிறது. ஐரோப்பா அவசரகால நிலையில் இருந்தாலும், ஜேர்மனி சமூக நெருக்கடி என்னும் எரிமலையில் நடனம் ஆடாமல் உறங்கிக் கொண்டிருக்கிறது. பேர்லினில் இருக்கும் அரசாங்கம் பிறருக்கு சமூக வெட்டுக்கள் என்று வரும்போதுதான் வலுவாகவும் விட்டுக் கொடுக்காமலும் உள்ளது என்று Der Spiegel எழுதுகிறது. “பாரிய சமூக மற்றும் அரசியல் கொந்தளிப்பை” பல நாடுகளில் ஏற்படுத்தியுள்ள தெற்கு ஐரோப்பிய நாடுகள் சிக்கன நடவடிக்கைகளை ஏற்க வேண்டும் என ஊக்குவிக்கின்றது. இவற்றில் “30% வரை ஒய்வூதியக் குறைப்புக்கள், சமூக நலன்புரி அமைப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பில் கடுமையான வெட்டுக்கள், அரசதுறையிலும் பாரிய பணிநீக்கங்கள்” அடங்கும். இதை எழுதியவர்கள் அத்தகைய நடவடிக்கைகள் அவசியம் என்று நம்பினாலும், “ஜேர்மனி தானே அத்தகைய நடவடிக்கைகளில் ஒரு பகுதியையேனும் செயல்படுத்தினால்தான் தெற்கு நாட்டவர்களும் கடுமையான சமூகக் கொள்கைகளை நம்பிக்கையுடன் செயல்படுத்துவதை கோரமுடியும்” என்றும் கூறுகின்றனர். வேறுவிதமாகக் கூறினால், அடுத்த அரசாங்கம் சமூக எதிர்ப்புரட்சியை ஐரோப்பாவில் தீவிரப்படுத்த வேண்டும்; அதே நேரத்தில் ஜேர்மனியிலும் அதை முன்னெடுக்கவேண்டும். இவ்வாறு செய்கையில் அது வாக்காளர் கொடுக்கும் தீர்ப்பைக் கண்டு அஞ்சவும்கூடாது, மக்களுடைய எதிர்ப்புக்களால் பின்னடிக்கவும் கூடாது. இது சர்வாதிகார வடிவங்கள், சர்வாதிகார நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கான அழைப்பாகும். Der Spiegel உடைய தலையங்கத்தின் கருத்து இத்தகைய நடவடிக்கையை செயல்படுத்தும் திறனுடைய அரசியல் பிரிவு சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஆகும். ஹெகார்ட் ஷ்ரோடரின் கீழ் சமூக ஜனநாயக கட்சி-பசுமை கூட்டணி, “2010 செயற்பட்டியல் கொள்கைகளின் சமூக துன்பங்களையும்” மக்கள் அழுத்தத்திற்கு அடிபணியாது ஏற்க எதிர்பார்த்தது. முன்னாள் சமூக ஜனநாயகக் கட்சி பாராளுமன்றப் பிரிவுத் தலைவராக ஷ்ரோடரின் கீழ் இருந்த “தோழர் (பிரன்ஸ்) முன்டபெயரிங்க்” பற்றி எழுதும்போது ஆசிரியர்கள் பெரும் உவகை அடைகின்றனர். அவர் “தற்போதைய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் செய்ய அச்சப்படுவதை தைரியமாக செய்தார். இவ்வம்மையார் அப்பொழுதும் செய்திருக்க மாட்டார், இப்பொழுதும் செய்யவில்லை. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஒரு பொழுதும் செய்ய தைரியம் கொண்டிராததை செய்தார்.” செல்வாக்கற்ற கொள்கைகளுடன் நாட்டை எதிர்கொள்ளும் தைரியம் அவருக்கு இருந்தது. பெரும்பான்மை கருத்தை அவர் குழப்பத்தில் ஆழ்த்தி நாட்டை “வருங்காலத்திற்கு தயார் எனத் தகுதி செய்த” சீர்திருத்தங்களை தொடக்கினார். இக்கட்டுரை, முன்டபெயரிங்க்கின் அறிவிப்பான ஜனநாயகம் சிறந்ததுதான், “ஆனால் துரதிருஷ்டவசமாக சட்டமன்ற காலகட்டத்திற்கு மிகவும் கட்டுப்பட்டுள்ளது” என்பதை ஒப்புதலுடன் மேற்கோளிடுகிறது. வேறுவிதமாகக் கூறினால்: ஜனநாயகங்களுக்கு அவ்வப்பொழுது தேர்தல்கள் தேவைப்படுகின்றன என்பதும் அரசாங்கங்கள் அகற்றப்பட்டுவிட முடியும் என்பதும் துரதிருஷ்டம். இவருடைய சிந்தனைவழியை பின்பற்றினால், இந்த “ஜனநாயகப் பற்றாக்குறைக்கு” எளிய தீர்வு, முற்றிலும் தேர்தல்களை அகற்றுதல் அல்லது அவற்றை எதற்கும் வாக்களிக்கா முறையில் நடத்துவதுதான். Der Spiegel இன் ஆசிரியர்கள், இப்பிற்போக்குத்தன, ஜனநாயக விரோத நிலைப்பாட்டை நியாயப்படுத்த அரசியல் அரசியல் விஞ்ஞானி ஹெர்பிரைட் முங்கிளரின் உதவியை நாடுகின்றனர். முங்கிளர் பேர்லினில் ஹம்போல்ட் பல்கலை கழகத்தில் சமூக அறிவியல் கூடத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு அரசியல் கோட்பாடு கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர். முன்பு அவர் சர்வாதிகார வழிவகை ஆட்சிகளின் நலன்களைப்பற்றியும், “போனபார்ட்டிச தீர்வுகளின் தேவை” பற்றியும் எழுதியுள்ளார். இவர் Der Spiegel இடம் கோருகிறார்: “சவால்களை எடுக்கும் விருப்பமுடைய முக்கிய அரசியல்வாதிகள் குழு இருக்க வேண்டும் [இதன் பொருள் சமூக எதிர்ப்புக்கள், தேர்தல் தோல்விகளைச் சந்திக்கத்தயாராக]. இது வருங்கால நலனுக்கு உகந்தது.” ஆனால் அவர் இவ்வாறு நடக்கவில்லை என்றும் நீண்டகால சிந்தனைத் திறனுடைய அரசியல்வாதி இல்லை என்கிறார். “செல்வாக்கற்ற நடவடிக்கைகளை துவக்கும் தைரியம் இல்லை” என்பதுடன் அரசியல்வாதிகளிடையே மூலோபாய சிந்தனையில் ஈடுபடத் தயக்கமும் உள்ளது என்கிறார் முங்கிளர். “மூலோபாயரீதியாக இல்லாது அறநெறிரீதியாக” சிந்திப்பவர்கள் இலாபமடைகின்றனர். இது சமூகத்திற்கு “நீண்டகால தீவிர சேதத்தை ஏற்படுத்தும்.” தன்னுடைய திட்டங்கள் பற்றிய விவரங்களை முங்கிளர் கோடிட்டுக் காட்டவில்லை; ஆனால் உட்குறிப்புக்கள் தெளிவாக உள்ளன. மில்லியன் கணக்கான மக்களை Hartz IV மூலம் முறையாக வறியவர்களாக்கியது, சுகாதார நலன்களைப் பெற முடியாமல் செய்தது, குறைவூதியத் தொழிலாளர்கள் அறநெறிரீதியாக இழிவாகக் கருதப்பட்டது ஆகியவை அதன் விளைவு ஆகும். ஆளும் நிதியப் பிரபுத்துவத்தின் நலனை வளர்க்க, ஒரு மிருகத்தன சிக்கனப் போக்கு வங்கிகள் பிணையெடுப்புக்களுக்கு 700 பில்லியன் யூரோக்கள் (அமெரிக்க $933 பில்லியன்) கொடுத்தது போல் “மூலோபாயரீதியாக” தவிர்க்க முடியாததும், தேவையானதும் ஆகும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, SPD யின் ஆதரவாளராக இருந்த முங்கிளர் “நொண்டிவாத்து ஜனநாயகம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார்; அதில் “ஒரு புதிய, ஜனநாயகம், சர்வாதிகாரம் பற்றிய தடையற்ற பார்வை தேவை” என அழைப்பு விடுத்தார். இப்படி சர்வாதிகார ஆட்சி வழிவகைகளுக்கான அழைப்பு சமூக நெருக்கடி தீவிரமாவதுடன் நேரடித் தொடர்பு கொண்டது. மேர்க்கெல் அரசாங்கத்தின் ஆக்கிரோஷ சிக்கன நடவடிக்கை உந்துதல் தெற்கு ஐரோப்பிய நாடுகளை பேரழிவு தரும் சமூக, அரசியல் நெருக்கடியில் ஆழ்த்திவிட்டது. இது ஜேர்மனி மீதும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இங்கு சமூக நெருக்கடி பற்றி எதிரெதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும் சமூகப் பிளவு ஜேர்மனியில் பல ஐரோப்பிய நாடுகளைவிட அதிகம் முன்னேறிவிட்டது. அனைத்து பணிபுரிபவர்களிலும் கிட்டத்தட்ட கால் பகுதியினர், அல்லது 8 மில்லியன் மக்கள் குறைவூதியப் பணி புரிகின்றனர். அதில் பாதிபேர் 4.1 மில்லியன் நாள் ஒன்றிற்கு மணிக்கு 7 யூரோக்களையும் விட (9.30 அமெரிக்க டாலர்கள்) குறைவாக வேலை பார்க்கின்றனர். திட்டமிட்ட ஊதிய வெட்டுக்கள் என்பது ஆலைகளிலும் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. பல ஆண்டுகளாக வேலை கொடுக்கும் நிறுவனங்களால் சுரண்டப்படும் தற்காலிக தொழிலாளர்கள் தவிர, “ஒப்பந்தத் தொழிலாளர்கள்” எண்ணிக்கையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது; இவர்கள் எந்தவித சமூகப்பாதுகாப்பும் இன்றி சில்லறைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட 4.5 மில்லியன் மக்கள் ஹார்ட்ஸ் IV நலன்களில், அதாவது மாதம் ஒன்றிற்கு 374 யூரோக்கள் (500 அமெரிக்க டாலர்கள்) ஊதியத்தில், அத்துடன் வாடகை, சூடேற்றும் செலவுகளும் பெற்று வாழ்கின்றனர். ஆனால் சமூகத்தின் மறுபுறமோ செல்வம் அதிகரிக்கிறது. சலுகை பெற்ற அடுக்கின் ஆடம்பரத்திற்கு வரம்புகள் இல்லை. ஜேர்மனியில் வசிக்கும் மில்லியனர்களின் எண்ணிக்கை முதல் தடவையாக மில்லியனை கடந்துள்ளது. “சரியாக 1.015 மில்லியன் மில்லியனர்கள் உள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 6.7% அதிகம் ஆகும்” என்று Tageszitung நாளேடு கூறுகிறது. “மில்லியர்களின் சொத்துக்கள் அவர்களுடைய உண்மை எண்ணிக்கையைவிட அதிகம் வளர்கிறது. அவை அமெரிக்க 3.4 டிரில்லியன் டாலரில் இருந்து 3.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் என, ஒரு 7.7% அதிகமாக வளர்ச்சியைக் காட்டியுள்ளன.” வேறுவிதமாகக் கூறினால், மில்லியன் கணக்கான குடும்பங்களில் பேரழிவு விளைவுகளைக் கொடுத்திருக்கும் சமூகத் தாக்குதல்கள், செல்வந்தர், பெரும் செல்வந்தர்களின் கரங்களை நோக்கி சமூகச் செல்வம் திருப்பப்பட்டுள்ளது. சமூக எதிர்ப் புரட்சி என்னும் இக்கொள்கைக்கு பெருகிய எதிர்ப்பு இருப்பதால், அரசியலில், செய்தி ஊடகத்தில், பல்கலைக்கழகங்களில் ஆளும் வர்க்கத்தின் செய்தித் தொடர்பாளர்கள் சர்வாதிகார கட்டமைப்புக்கள் கொண்ட அரசாங்க வழிவகைகளுக்கு குரல் கொடுக்கின்றனர். தகவல் தெரிவிப்பவரும், முன்னாள் அமெரிக்க தேசியப் பாதுகாப்புத்துறை (NSA) ஊழியருமான எட்வார்ட் ஸ்னோவ்டென், எந்த அளவிற்கு மக்கள் ஜேர்மனி உட்பட எல்லா இடங்களிலும் கண்காணிக்கப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு ஜனநாயக முகப்பிற்குப்பின் பொலிஸ் அரச கட்டமைப்பு ஏற்கனவே நன்கு முன்னேறியுள்ளது. முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் இப்போக்கின் வளர்ச்சிக்கு ஆதரவைக் கொடுத்துள்ளன. சமூக நெருக்கடி பெருகுவதை முகங்கொடுக்கும் இவை தம்மிடையே உள்ள வேறுபாடுகளைக் களைகின்றன. சான்ஸ்லர் தன் பிற்போக்குத்தன சிக்கன வேலைத்திட்டத்தை பாதுகாக்கையில், SPD மேர்க்கெலின் முன்னாள் நிதி மந்திரி பீர் ஸ்டைன்புறூக்கை அதன் முக்கிய வேட்பாளராக சான்ஸ்லர் பதவிக்கு நியமித்துள்ளமை அரசாங்கத்துடன் அனைத்து முக்கிய விவகாரங்களிலும் அதன் உடன்பாட்டை அடிக்கோடிட்டுக்காட்டுகின்றது. பசுமைவாதிகள் SPD உடன் கூட்டை நாடுகின்றனர், ஆனால் மேர்க்கெலின் அது கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்துடனான (CDU) கூட்டிற்கும் தயாராக உள்ளனர். அனைத்து போலி இடது குழுக்களினதும் ஆதரவைப் பெற்றுள்ள இடது கட்சி, SPD க்கும் பசுமைவாதிகளுக்கும் அதன் ஆதரவைக் கொடுக்கிறது. அனைத்து முதலாளித்துவக் கட்சிகளின் இந்த “பெருங்கூட்டணி” வலதுசாரி கிறிஸ்துவ சமூக ஒன்றிய (CSU) த்திடம் இருந்து இடது கட்சியின் இடது கன்னை வரை விரிந்துள்ளது; இது ஒரே ஒரு கட்சியினால்தான் எதிர்க்கப்படுகிறது. அதுதான் PSG எனப்படும் சோசலிச சமத்துவக் கட்சியாகும். PSG தொழிலாள வர்க்கத்தை ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்ட போராடுகிறது. ஆளும் வர்க்கம் அதன் இலாப நோக்கு அமைப்பு முறையை பாதுகாக்க 1930களில் இருந்ததைப் போலவே சர்வாதிகாரம், பாசிசம் ஆகியவற்றை நாடத் தயங்காது. |