World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Mass abstention in Detroit mayoral primary election

டெட்ரோயிட் மேயர் ஆரம்பத் தேர்தலில் ஏராளமானோர் வாக்களிக்கவில்லை

By Eric London 
8 August 2013


Back to screen version

செவ்வாயன்று நடைபெற்ற டெட்ரோயின் மேயர் ஆரம்ப தேர்தல், பரந்த வாக்காளர்கள் வாக்களிக்காத  நிலையைக் காட்டியது. பதிவு செய்யப்பட்டவர்களில் 18%க்கும் குறைந்தவர்கள் மட்டுமே வாக்களிக்கையில், டெட்ரோயிட் மருத்துவ மையத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மைக் டுக்கன், எழுதப்பட்ட வேட்பாளர் என்னும் முறையில் நின்றவர் முதலாவதாக 45.9% வாக்குகளை பெற்றார். டெட்ரோயிட்டின் முன்னாள் பொலிஸ் தலைவரும் தற்போதைய வேன் தொகுதி ஷெரிப்புமான பென்னி நெப்போலியன் இரண்டாம் இடத்திற்கு 29.3% வாக்குகளுடன் வந்தார்.

இன்னும் கூடுதலான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அவற்றை செயல்படுத்த கூட்டாட்சி திவால் நீதிமன்ற அழுத்தத்தைப் பயன்படுத்த விரும்பும் டுக்கன், நெப்போலியன் இருவரும் நவம்பர் 5 நடக்க இருக்கும் பொது மேயர் தேரத்லில் ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்பர்.

பொதுத் தேர்தலில் எவர் வெற்றிபெற்றாலும், தேர்ந்தெடுக்கப்படாத அவசரகால நிர்வாகியும் நடைமுறை நிதியச் சர்வாதிகாரியுமான கெவின் ஓர் பதவியில் இருக்கும் வரை உண்மையான அதிகாரத்தை செலுத்தமுடியாது. வோல் ஸ்ட்ரீட்டிற்கு நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ள, ஒரு செல்வம் கொழித்த திவால் பிரிவு வக்கீலான ஓர், நகரத்தின் பொது ஊழியர் ஊதியத் தொகை நிதிகளை 90% குறைக்க இருப்பதாகவும், நகரசபை தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் சுகாதார நலன்களை இழக்குமாறு செய்யப்போவதாகவும், அவர்களை மருத்துவப் பாதுகாப்பில் தள்ளுதல் அல்லது சுகாதாரக் காப்பீட்டை தனியார் நிறுவனங்களில் இருந்து வாங்கும் கட்டாயத்திற்கு உட்படுத்த இருப்பதாகவும் கூறியுள்ளார். பிந்தையது ஜனாதிபதி ஒபாமாவின் சுகாதார பாதுகாப்பு “சீர்திருத்தத்தின் கீழ்” நிறுவப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களில் உள்ளது.

இவர் அடிப்படை நகரப் பணிகளான மின்விசை அளித்தல், துப்புரவு ஆகியவற்றை தனியார் மயமாக்குவதாகவும், நகரத்தின் சொத்துக்களை விற்கவும் திட்டங்களை கொண்டுள்ளார்; இதில் உலகப் புகழ் பெற்ற டெட்ரோயின் கலைக்கூடத்தில் கலைச் சேகரிப்புக்களும் அடங்கும்; இப்பணம் வங்கிகள், ஒதுக்கு நிதியங்களிடம் (hedge funds) இருக்கும் தீர்க்கப்படாத கடன்களை தீர்க்க எடுத்துக் கொள்ளப்படும்.

இத்தகைய நெருக்கடி நிறைந்த நிலைமையில், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் டெட்ரோயிட் மக்கள் வாக்களிக்க முன்வந்தனர் என்பது முழு அரசியல் அமைப்புமுறையுடன் தொழிலாள வர்க்கம் கொண்டிருக்கும் தீவிர எதிர்ப்போக்கின் வெளிப்பாடாகும்.

டெட்ரோயிட்டில் பதிவு செய்திருந்த வாக்காளர்களில் 8.3% தான் டுக்கனுக்கு வாக்களித்தனர். நெப்போலியனுக்கு இந்த எண்ணிக்கை 5.3% என இருந்தது.

டுக்கன் முடிவுகளில் ஒரு எதிர்ப்பு வாக்குக் கூறுபாடு காணப்பட்டது. அவருக்குப் போடப்பட்ட வாக்குகளின் விகிதம், எழுதப்பட்ட வேட்பாளருக்கு மிகவும் அதிகம் என்றாலும், வாக்குச் சீட்டில் இருந்து அவர் ஒதுக்கப்பட்டது தொழில்நுட்ப வகையில் அவருக்கு சாதகமாக மாறியுள்ளது. அது அவருக்கு மக்களிடையே தன்னை “வெளியாள்”, “கட்டுப்பாடற்று இருப்பவர்” என்று காட்டிக் கொள்ள உதவிற்று; டெட்ரோயிட்டின் அரசியல் நடைமுறையில் அதிகம் உள்ள ஆபிரிக்க அமெரிக்க அரசியல்வாதிகளுடைய ஆதரவு கிடைத்துள்ளது.

நல்லதுக்கு ஒரு மாற்றம் வரும் என நம்பி, மில்லியனர் பெருநிறுவன நிர்வாகிக்கு வாக்களித்த அத் தொழிலாளர்கள், நவம்பர் மாதம் அவர் வெற்றி பெற்றால் விரைவில் தங்கள் போலி நம்பிக்கைகளில் இருந்து விடுபடுவர்.

டெட்ரோயின் மருத்துவமனை, Vanguard Health Systems க்கு விற்கப்பட்டு தனியார்மயமாக்கப்பட்டபோது டுக்கன் அதனை மேற்பார்வையிட்டார். பிந்தையது பிளாக்ஸ்டோன் குழுவிற்குச் சொந்தமானது, அது உலகில் தனியார் பங்குகள்/முதலீட்டு வங்கி நிறுவனங்களில் மிகப் பெரியவற்றுள் ஒன்று. இந்த விற்பனையை ஒட்டி நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்தனர்.

இவர் சக்தி வாய்ந்த பெருநிறுவன, நிதிய உயரடுக்கின் பிரிவுகின் ஆதரவைக் கொண்டு, Detroit Free Press  மற்றும் Detroit News இன் ஒப்புதலைப் பெற்றார். Quicken Loans இன் தலைமை நிர்வாகியும் பில்லியனருமான டான் ஜில்பேர்ட் ஆதரவையும் பெற்றார்; ஜில்பேர்ட் டெட்ரோயிட் நகரத்தில் ஏராளமான இடங்களை வாங்கியுள்ளார், நகர மையப்பகுதியை வசதியுடையவர்களுக்கான புகலிடமாக மாற்ற முற்படுகிறார்; தொழிலாள வர்க்கப் பகுதிகளுக்கு பணிகள் குறைக்கப்படுகின்றன.

டெட்ரோயின் ஜனநாயகக் கட்சி நடைமுறையில் நீண்ட காலமாக இருக்கும் பென்னி நெப்போலியன், 2001ல் டெட்ரோயிட் பொலிஸ் தலைவர் பதவியில் இருந்து, துறைக்குள் ஊழல் பற்றிய FBI விசாரணைக்கும், பல இறப்புக்களுக்குக் காரணமான பொலிஸ் துப்பாக்கிச் சூடுகளுக்கும் நடுவே இராஜிநாமா செய்தார்.

முன்னணியில் இருப்பதாக நெப்போலியன் கூறப்பட்டார்; இதற்குக் காரணம் அவர் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஆதரவைக் கொண்டிருந்தார். AFL-CLO மற்றும் ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆதரவு ஒரு வலதுசாரி பொலிஸ் அதிகாரிக்கு என்பது அவர்களின் கூட்டு எப்படி ஜனநாயகக் கட்சியுடன் உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தொழிலாள வர்க்கத்திற்காக பேசிய ஒரே வேட்பாளர், அவசரகால நிர்வாகி, திவாலை எதிர்த்தவர் டார்ட்டாக்னன் கோலியர், சோசலிச சமத்துவக் கட்சியின் மேயருக்கான வேட்பாளர் ஆவார். கோலியரின் பிரச்சாரம் டெட்ரோயிட்டில் தொழிலாளர்களின் ஒய்வூதியங்கள், சுகாதார நலன்கள், ஊதியங்கள், வேலைகள் அடிப்படை சமூக, ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்பிற்கு ஒரு சுயாதீன இயக்கத்தை ஆரம்பிப்பதில் ஈடுபட்டது.

தொழிலாளர்கள், திவாலை நிராகரிக்க வேண்டும், வெட்டுக்கள், சலுகைக் குறைப்புக்களுக்கான அனைத்து கோரிக்கைகளையும் எதிர்க்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். மக்களின் சமூகத் தேவைகளுக்கு “பணம் இல்லை” என்ற கூற்றை அவர் நிராகரித்து, தொழிலாளர்களின் அற்ப ஓய்வூதியங்களும் சுகாதார நலன்களும்தான் நிதிய நெருக்கடிக்குக் காரணம் என்று கூறப்படுவதையும் நிராகரித்தார். மிக அதிக அளவில் பங்கு விலைகள் வோல் ஸ்ட்ரீட்டில் இருக்கையில், பெருநிறுவன இலாபங்கள் மிக உயர்ந்த அளவு இருக்கையில், உயரும் தலைமை நிர்வாக அதிகாரியின் ஊதியத்திற்கு இடையே, இப்பொய் அனைத்து வேட்பாளர்களாலும், முழு அரசியல் செய்தி ஊடகத்தாலும் கூறப்பட்டன. ஒபாமா நிர்வாகம் டெட்ரோயிட்டிற்கு எந்தக் கூட்டாட்சி நிதியமும் இல்லை என்கையில், டிரில்லியன் கணக்கான பொது நிதிகளை வங்கிகளுக்கும் கார் நிறுவனங்களுக்கும் கொடுத்துள்ளதை கோலியர் சுட்டிக்காட்டினார்.

சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்களை நடவடிக்கை குழுக்களை நிறுவுமாறும், அவை ஜனநாயகக் கட்சி, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக இருக்க வேண்டும் என்றும், அவை பணியிடங்கள், பள்ளிகள் மற்றும் புறநகர்ப்பகதிகளில் நிறுவப்பட்டு ஒரு பொது வேலை நிறுத்த்திற்கு செயல்பட வேண்டும், அவசரகால நிர்வாகியை அகற்றுக என்றும், திவாலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், நகரக்குழுவிற்கு பதிலாக தொழிலாளர் குழு நிறுவகப்பட வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்தது.

வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் தேசியமயமாக்கப்படல் உட்பட சோசலிச கொள்கைகளுக்கான அவசியத்தை கோலியர் விளக்கினார், அவை பொது நிறுவனங்களாக தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் மாற்றப்பட வேண்டும். அவருடைய பிரச்சாரம், வங்கியாளர்கள் கார்நிறுவன முதலாளிகளுடைய நலனுக்கு மாறாக வங்கிகளுக்கு திருப்பிக் கொடுக்கப்பட வேண்டிய நகரத்தின் கடன்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்றும், பொதுப் பணிகளுக்கு பல மில்லியன் டாலர் திட்டம் கொண்டுவந்து வேலையற்றோருக்கு வேலை கொடுக்கவும் டெட்ரோயிட்டை மறுகட்டமைத்து மக்களின் நலன்களைக் காக்க வேண்டும் என்று இருந்தது.

பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள், கோலியரின் சோசலிச வேலைத்திட்டத்தை தொழிலாள வர்க்கத்தின் பல பிரிவுகளுக்கும் எடுத்துச் சென்றனர். அவை உளமார வரவேற்கப்பட்டன, குறிப்பாக தீயணைக்கும் பிரிவினரால், அவர்கள் தொடர்ச்சியான எதிர்ப்புக்களை தொடக்கி, குடியிருப்போர் போராடும் முயற்சிகளை, அவர்களை வெளியேற்றுவதற்கு எதிராக தொடக்கியிருந்தனர்; ஜில்பேர்ட் போன்ற சொத்து ஊகக்காரர்களுக்கு பெரும் நிலங்களை அளிக்க அத்தகைய நடவடிக்கைகள் இருந்தன.

ஏராளமானோர் வாக்களிக்காத நிலையிலும், கோலியர் பிரச்சாரத்தை செய்தி ஊடகம் இருட்டடிப்பு செய்ததாலும், சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரத்திற்குக் கிடைத்த ஆதரவு வாக்கு, முடிவுகளில் தெளிவான வெளிப்பாட்டைக் காணவில்லை. ஆனால் கோலியருக்கு வாக்களித்தவர்கள், அரசியல் நடைமுறைக்கு ஒரு வர்க்க நனவுள்ள எதிர்ப்பையும், சோசலிச மாற்றீட்டிற்கான ஆதரவையும் கொடுத்துள்ளனர்.

தேர்தலைத் தொடர்ந்து கோலியர், டெட்ரோயிட், மிச்சிகன் மற்றும் தேசிய அளவில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பெருகும் தாக்குதலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் அதன் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த சோசலிச சமத்துவக் கட்சி உறுதி கொண்டுள்ளது என உலக சோசலிச வலைத் தளத்திடம்  கூறினார்:

“டெட்ரோயிட் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் அவசரக்கால நெருக்கடியை தீர்க்க, என்னுடைய பிரச்சாரத்திற்கு வெளியே மாற்றீடு ஏதும் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. எமது இயக்கத்தை பொறுத்தவரை, இத் தேர்தல், சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் ஒரு சுயாதீன வெகுஜன இயக்கம் கட்டமைக்கப்படுவதற்கான ஒரு புதிய போராட்டக் கட்டத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. வங்கியாளர்களும், இரு கட்சிகளிலும் உள்ள அவற்றின் அரசியல் எடுபிடிகளும் டெட்ரோயிட்டை, தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கான ஒரு முன்மாதிரியாக அமெரிக்காவில் உள்ள நகரங்கள் அனைத்திற்கும் இருத்த விரும்புகின்றனர். நாம் ஒரு தொழிலாள வர்க்க எதிர்த்தாக்குதலை வளர்க்க முற்படுகிறோம், டெட்ரோயிட்டின் போராட்டத்தை உத்வேகம் அளிப்பதாகவும், நாடெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் அமைக்க விரும்புகிறோம்.”