World Socialist Web Site www.wsws.org |
US officials cite deadly drone strike in Yemen to defend NSA spying operations NSA உளவு நடவடிக்கைகளை பாதுகாக்க, அமெரிக்க அதிகாரிகள் யேமனில் நடத்திய கொடூர டிரோன் தாக்குதல்களை மேற்கோளிடுகின்றனர்By Thomas Gaist அரேபிய தீபகற்பத்திலுள்ள யேமனின் மரிப் மாகாணத்தில் செவ்வாய் அதிகாலையில் அல் கெய்டா உறுப்பினர்கள் எனக் கருதப்பட்ட நான்கு பேர்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மீது, அமெரிக்க டிரோன்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் கடந்த வெள்ளியன்று ஒபாமா நிர்வாகம் அறிவித்துள்ள உலக பயங்கரவாத எச்சரிக்கையில் சமீபத்திய அபிவிருத்தியாகும். திங்களன்று நிர்வாகம் பயங்கரவாத சதித்திட்டம் எனக் கூறப்படுவது யேமனை மையம் கொண்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது. செவ்வாயன்றே யேமனில் இருக்கும் அமெரிக்க அரசாங்க அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டு, நாட்டில் இருக்கும் அனைத்து அமெரிக்கர்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என்றும் நிர்வாகம் வலியுறுத்தியது. பிரித்தானியாவும் அதன் உத்தியோகபூர்வ ஊழியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த அபிவிருத்திகள் வெள்ளியன்று அறிவிக்கப்பட்டு, ஞாயிறன்று வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் ஒரு வாரம் காலத்திற்கு அமெரிக்க தூதரக நிலையங்களை மூடுதல் என்பது உலக பயங்கரவாத எச்சரிக்கையானது விரிவாக்கம் பெற்று தீவிரமாகியிருப்பதைக் குறிக்கின்றன. அமெரிக்கா அதனுடைய தூதரக நிலையங்களை அபு தாபி, அம்மான், அல்ஜீயர்ஸ், பஸ்ரோ, பாக்தாத், கெய்ரோ, ரியத், தெஹ்ரான், டாக்கா, ஜெட்டா, டோஹா, டுபாய், காபூல், குவைத் நகரம், மனாமா, மஸ்கட், சானா, திரிப்போலி மற்றும் ஒன்பது பிற நகரங்களிலும் மூடியுள்ளது. அமெரிக்க அரச அலுவலகத்தின் உலக பயண எச்சரிக்கை ஆகஸ்ட் இறுதிவரை நடைமுறையில் இருக்கும். மரிப் தாக்குதல், ஜூலை 28ல் இருந்து யேமனுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய குறைந்தப்பட்ச நான்கு டிரோன் தாக்குல்களில் சமீபத்தியதாகும். அமெரிக்கா, 2012ல் மொத்தம் 40 தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த ஆண்டில் இதுவரை 12 டிரோன் ஏவுகணைத் தாக்குதல்களை யேமன் இலக்குகள் மீது நடத்தியுள்ளதாக அறியப்பட்டுள்ளது. குறைந்தப்பட்சம் 18 வயதிற்கு உட்பட்ட 24 சிறுவர்கள் யேமனுக்கு எதிரான அமெரிக்க தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். செவ்வாயன்று மாலை யேமன் தலைநகரான சானாவிற்கு மேலே ஒரு கடற்படைக் கண்காணிப்பு விமானம் அநேகமாக நாள் முழுவதும் சுற்றி வந்தது என CBS News தகவல் கொடுத்துள்ளது; இது வாஷிங்டன் அந்நாட்டின் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தும் திட்டத்தைக் கொண்டுள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. பொனிக்ஸிற்கு விமானத்தில் செல்கையில் செய்தியாளரிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித்துறை மந்திரி ஜே கார்னே நிருபர்கள் கேள்விகளுக்கு விடையிறுத்தார்; ஆனால் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்த வெள்ளை மாளிகையின் கூற்றுக்களுக்கு எத்தகைய சான்றுகளையும் கொடுக்க தொடர்ந்து மறுத்துவிட்டார். அமெரிக்க வெளிநாட்டு நிலையங்கள், ஒருவேளை அமெரிக்காவிற்குள்ளும் அல் கெய்டா தொடர்புடைய சக்திகளால் தவிர்க்க முடியாத அச்சுறுத்தல் தாக்குதல்களை எதிர்கொள்கின்றன என்னும் அரசாங்கக் கூற்றுக்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் ஒரு உருப்படியான சான்று கூட இதுவரை அளிக்கப்படவில்லை. அச்சுறுத்தல் எனக் கூறப்படுவதின் பொருளுரையும் முற்றிலும் தெளிவற்றதாக உள்ளது; அரசாங்க ஆதாரங்கள் குறிப்பிட்ட இலக்கு அல்லது தாக்குதல் நேரம் குறித்து தகவல் இல்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளன. ஆயினும்கூட, அரசாங்கத்தின் கூற்றுக்கள் செய்தி ஊடகத்தால் சவாலுக்கு இடமில்லாத உண்மைபோல் தெரிவிக்கப்படுகின்றன; இரு கட்சி அரசியல்வாதிகளும் அவற்றை பயன்படுத்தி தேசிய பாதுகாப்பு அமைப்பின் (NSA) பாரிய, சட்டவிரோத உளவு நடவடிக்கைகளை, அதாவது இரண்டு மாதம் முன்பு NSA ஒப்பந்தக்காரர் எட்வார்ட் ஸ்னோவ்டென் அம்பலப்படுத்திய உளவு பார்த்தலை நியாப்படுத்துகின்றனர். மிகச்சிறந்த வெறுப்பு மனப்பான்மையில், சட்டமியற்றுபவர்கள் பயங்கரவாத அச்சுறுத்தல் என்று கூறப்படுபவற்றை வாதிட்டு, அமெரிக்க மக்கள் மீது எங்கும் படர்ந்திருக்கும் உளவு பார்த்தல் வேலை, மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்கத் தேவையென வாதிடுகின்றனர். இது அமெரிக்காவில் ஒரு போலீஸ் அரச உள்கட்டமைப்பை நிறுவுவதை நியாயப்படுத்த, செப்டெம்பர் 2011 க்கு (9/11) பின்னர் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என பயன்படுத்தப்பட்டு வருவது வாடிக்கையான போலிக் காரணமாக உள்ளது. செவ்வாயன்று வெளியிடப்பட்ட தலையங்கம் ஒன்றில் நியூ யோர்க் டைம்ஸ் பயங்கரவாத பயமுறுத்தல் குறித்து அதனுடைய ஒப்புதல் முத்திரையை கொடுத்து, உலக பயங்கரவாத அச்சுறுத்தலை தொடக்கும் முடிவு “நியாயமானது”, “இதனுடன் சண்டையிடுவது கடினம்” என்று கூறியுள்ளது. பிற செய்தி ஊடகங்களுடன் டைம்ஸும் நேர்மையற்ற தன்மையில், பாசாங்குத்தனமாக, ஈராக் படையெடுப்பை நியாயப்படுத்த அரசாங்கப் பொய்கள் பயன்படுத்தப்பட்டது, NSA உளவுத் திட்டங்கள் ஆகியவைகள் நடக்கவில்லை என்பது போல் செயல்படுகிறது. அரசியல்வாதிகளும், பயங்கரவாத “வல்லுனர்களும்” செவ்வாயன்று யேமனில் நடைபெற்றுள்ள டிரோன் கொலைகளை பயன்படுத்தி, இவை பெரும் கண்காணிப்புத் திட்டங்களின் திறமை, தேவைக்கு உதாரணம் என்று கூறியுள்ளனர். அரிஜோனாவின் குடியரசுக் கட்சி செனட்டர் ஜோன் மெக்கெயின் CBS NEWS இன் ஒரு பேட்டியின்போது, “அல் கெய்டாவை எதிர்கொள்வதில் வெற்றி அடைந்துள்ளது என நிரூபிக்கப்பட்ட சில நடைமுறைகளை கைவிடுவது என்பது தீவிரமான தவறாகிவிடும்” என்று கூறியுள்ளார். Johns Hopkins முன்னேறிய சர்வதேச கல்விக்கான பயிலகத்திலுள்ள ஜோன் மக்லாலின், யேமனில் நடக்கும் அல் கெய்டா செயற்பாடுகளைப் பற்றி உளவுத்துறை பெற்றுள்ளமையானது, கண்காணிப்புத் திட்டங்களின் மதிப்பை காட்டுகின்றது. “இது ஒன்றும் எளிதல் நடப்பது அல்ல. அனைத்து தந்திரங்களும் கையாளப்பட வேண்டும்” என்றார். மேற்கத்தைய செய்தி ஊடகம் பயங்கரவாத எச்சரிக்கை உயர்மட்ட அல் கெய்டா தலைவர்கள் பாக்கிஸ்தானிலிருக்கும் அய்மன் அல் ஜவஹிரிக்கும் அரேபியத் தீபகத்தின் அல் கெய்டா உறுப்பினர் நசிர் அல் வுஹய்ஷிக்கும் இடையே நடந்த உரையாடல்களில் தலையீடு செய்து கேட்டதற்கு விடையிறுப்பு எனத் தொடர்ந்து கூறுகின்றன. BBC உயர்மட்ட பாதுகாப்பு ஆதாரத்தை மேற்கோளிட்டு, யேமன் உளவுத்துறைப் பிரிவுகள் அல் கெய்டா போராளிகள் மேற்கத்தைய, அமெரிக்க இலக்குகளுக்கு எதிரான பெரும் தாக்குதல்களுக்கு தயாரிப்புக்களை கண்டறிந்துள்ளன எனக் கூறியது. அரசியல் ஸ்தாபனத்தில் உள்ள கூறுகள் சிலவற்றிடமிருந்து பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்த விமர்சனங்கள், வினாவிற்கு உட்படுத்துதல் என்பவைகள் அங்குமிங்குமாக வந்துள்ளன. அமெரிக்காவின் முன்னாள் மாரிஷியஸ், சேஷல்ஸ் மற்றும் காமோரோஸ் தூதர் ஜோன் பிரைஸ் பாக்ஸ்நியூஸ் டொட்காமிடம் யேமனில் தெரியவந்துள்ள அச்சறுத்தல், “பகிரங்கப் பார்வையில் இத்தனை இடம் பெற்றுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றார். “நமக்கு பல அச்சுறுத்தல்கள் வந்துள்ளன; ஆனால் நாம் செய்தி ஊடகத்திடம் அவற்றைப் பற்றிக் கூறியதில்லை, இப்பொழுது அது நடத்தப்படுவது போல் நாம் அதை நடத்தவும் இல்லை” என்றார் பிரைஸ். “ஆபிரிக்காவில் ஆங்காங்கு மூடப்பட்டுவிட்ட தூதரகங்கள் எனக்கு சரியெனப்படவில்லை.” மின்னணு தனியுரிமை தகவல் மையத்தின் (Electronic Privacy Information Center) அமி ஸ்டீபனோவிச்சும் இதே போன்ற கருத்துக்களை கார்டியனிடம் கூறியுள்ளார்; NSA இன் முடிவான இக்குறிப்பிட்ட அச்சுறுத்தல் தகவலை பகிரங்கமாக்குவது குறித்து சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார். “இப்பொழுது இந்த அச்சறுத்தல்களை NSA வெளியிடும் முடிவு, அமெரிக்காவில் கண்காணிப்பு அச்சக் கலாச்சாரத்திற்கு, வினா எழுப்பாத மரியாதையை எப்பொழுதும் கொடுக்க வேண்டும் என்பதை நிலைநிறுத்துகிறது.... ஒவ்வொரு நாளும் NSA எத்தனையோ அச்சுறுத்தல்களை அறிகிறது. ஏன் இப்பொழுது? எப்படி இத்தகவல் வேறுபட்டது? என்பதை நாம் கேட்க வேண்டும்.” பயங்கரவாத அச்சுறுத்தல் என்பது, NSA உடைய பெரிய சகோதரர் உறவுத் திட்டங்களுக்கு (Big Brother spy programs) மக்கள் எதிர்ப்பையும் ஸ்னோவ்டெனுக்கு மக்கள் ஆதரவையும் சிதைத்து, மிரட்டத்தான் பயன்படுகிறது என்பது வெளிப்படை. வாஷிங்டன் அவரைக் கைப்பற்றி அமெரிக்காவிற்கு மீண்டும் கொண்டு வருவதற்கு, ஸ்னோவ்டென் அரசாங்கத்தால் துரோகி, உளவாளி என்று முத்திரையிடப்பட்டுள்ளார், உளவு பார்த்தல் குற்றவழக்கை எதிர்கொள்கிறார். பல வாரங்கள் ஸ்னோவ்டென் மீது தாக்குதல்கள் நடத்தியும், இடைவிடா உத்தியோகபூர்வ அறிக்கைகள் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் பற்றி வெளியிடப்பட்டும், ஒவ்வொரு அமெரிக்கரின் தொலைபேசி, மின்னஞ்சல் ஆகியவைகள் கண்காணிக்கப்படுவதற்கு ஒற்றுத் திட்டங்கள் தேவை என்றும் அறிக்கைகளும் இருந்தபோதிலும், கருத்துக் கணிப்புக்கள் NSA செயற்பாடுகளுக்கு பெரும்பாலான எதிர்ப்பையும் ஸ்னோவ்டெனுக்கு பெரும் ஆதரவையும்தான் காட்டுகின்றன. முக்கிய ஜனநாயக அரசியல்வாதி எவரிடமிருந்தும் அரசாங்கத்தின் இழிந்த கூற்றுக்கள் பற்றி வினா எழுப்புதலோ, தற்போதைய பயங்கரவாதம் குறித்த குறைகூறலோ இல்லாதது பிரத்தியேகமாக வெளிப்பட்டு நிற்கிறது. இது இரு கட்சிகளும் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு கொடுக்கும் ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அமெரிக்காவின் மீது எத்தகைய புதிய பயங்கரவாதத் தாக்குதலும் நடக்காது எனத் புறந்தள்ளிவிட முடியாது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கை, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், சோமாலியா மற்றும் யேமனில் டிரோன் மூலமான கொலைகள் உட்பட, இம்மக்களிடையே சீற்றத்தையும் இகழ்வுணர்வையும் தூண்டுகின்றன, பயங்கரவாதிகள் தேர்ந்தெடுப்பதற்கு வளமான தளங்களையும் கொடுக்கின்றன. அக்டோபர் 2012ல் கொலம்பியா சட்டக் கூடம் நடத்திய ஆய்வு ஒன்று, பாக்கிஸ்தானில் டிரோன் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் 98 சதவிகிதமானவர்கள் சாதாரண குடிமக்கள் என்று கண்டறிந்துள்ளது. யேமனில் இன்னும் அதிக ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்துவது என்பது மக்கள் சீற்றம், வெறுப்பு இவற்றை எரியூட்டத்தான் பயன்படும்; மேலும் அவை அமெரிக்கர்கள் ஆபத்தான நிலையில் இருத்தப்படும் சூழ்நிலையையும் தோற்றுவிக்கின்றன. எழுப்பப்பட வேண்டிய வினா இதுதான்: அமெரிக்க அரசாங்கம் என்ன திட்டமிடுகிறது? அரசிற்குள் இருக்கும் சக்திகள் ஒரு ஆத்திரமூட்டலை தயாரிக்கின்றன என்னும் தெளிவான ஆபத்து உள்ளது; இது மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பை விரிவாக்குவதற்கு அல்லது அமெரிக்காவிற்குள் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை தீவிரமாக்குவதற்கு போலிக்காரணத்தை கொடுக்கும், அல்லது இரண்டுமே நடத்தப்படும். அரசாங்கமே ஜனநாயக உரிமைகள் மீதான புதிய தாக்குதலுக்கான போலிக் காரணத்திற்காக ஒரு பயங்கரவாத நிகழ்வை தயாரிக்கிறது என்னும் கருத்தை ஒதுக்கிவிட முடியாது. செப்டம்பர் 11, 2001 நிகழ்வுகள், CIA, FBI ஆனது நடத்தியவர்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்த வேண்டும் என்று வந்த முன் எச்சரிக்கைகளை, அதுவும் அவர்களை உளவுத்துறை அமைப்புக்கள் நன்கு தெரிந்திருந்த நிலையிலும் செவிமடுக்காதது பற்றி இன்னமும் விளக்கப்படவில்லை. அதன்பின் அமெரிக்க மண்ணில் நடைபெற்றுள்ள தாக்குதல் முயற்சி, அல்லது தாக்குதல், Tsamaev சகோதரர்கள் ஏப்ரல் மாதம் மூன்று பேரைக் கொன்று 264 பேரை காயப்படுத்திய போஸ்டன் மரதன் ஓட்டத்தின்போது நடந்ததற்கு குற்றஞ் சாட்டப்பட்டது உட்பட, அவர்கள் கண்காணிப்பில்தான் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வன்முறைத் தாக்குதல், போஸ்டன் மற்றும் சுற்றியுள்ள இடங்களை இராணுவ-பொலிஸ் மூடிவிடுவதற்கும் நடைமுறை இராணுவச் சட்டத்தின் கீழ் ஜனநாயக உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததற்கும் போலிக்காரணமாயிற்று. |
|