தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
அமெரிக்கா கிளப்பும் பயங்கரவாதப் பீதி
Patrick Martin use this version to print | Send feedback 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு பின்னர் அமெரிக்கா கையிலெடுத்து வந்திருக்கும் பயங்கரவாதப் பீதிகளின் நீண்ட நெடிய வரிசையில் சமீபத்தியது கடந்த மூன்று நாட்களில் ஒரு நன்கு தயாரித்த வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் தெளிவில்லாத பயமுறுத்துகின்ற எச்சரிக்கை அறிவிப்புகளை வழங்குகிறார்கள். உளவுத் துறை முகமைகளின் திரைமறைவு விளக்கங்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத் தலைவர்களும் இந்த எச்சரிக்கைகளை எதிரொலிக்கின்றனர். மக்களை பீதிநெரிசலுக்கு உள்ளாக்கும் வகையில் ஊடகங்களும் இந்த எச்சரிக்கைகளை ஊதிப்பெருக்குகின்றன. இந்த பீதிப் பிரச்சாரத்தின் கூற்றுகளையோ அல்லது அடிப்படையான முகாந்திரங்களையோ கேள்வி கேட்கின்ற ஒரு குரலும் எழவில்லை. உலகளாவ பயணம் மேற்கொள்பவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் உஷார்படுத்தல்களும், வெள்ளியன்று அறிவிக்கப்பட்டு மத்திய கிழக்கு முழுவதிலும் அமெரிக்காவின் தூதரக அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளமையும் ஏராளமான கேள்விகளை முன்வைக்கின்றன. முதல்கேள்வி இந்த நடவடிக்கைகளின் சமயசந்தர்ப்பம் குறித்தது. அமெரிக்காவின் ஏறக்குறைய ஒவ்வொரு மனிதரின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் மின்னஞ்சல்களின் உள்ளடக்கத்தை சேகரித்து வைத்தது உட்பட அமெரிக்க மக்கள் மீது அமெரிக்க அரசாங்கம் நடத்திய பாரிய வேவுபார்ப்பு நடவடிக்கை குறித்து இரண்டு மாதங்களாக இடைவிடாத அம்பலப்படுத்தல்கள் நடந்தேறியதற்கு பின்னர் இந்த உஷார்படுத்தல்கள் வருகின்றன. தேசிய பாதுகாப்பு முகமையின்(NSA)முன்னாள் ஒப்பந்ததாரரான எட்வார்ட் ஸ்னோவ்டென், கார்டியன் செய்தித்தாளின் பத்தியாளரான க்ளென் கிரீன்வால்டின் உதவியுடன் பகிரங்கப்படுத்திய தகவல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள ஒபாமா நிர்வாகம் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த உஷார்படுத்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, ரஷ்யா ஸ்னோவ்டெனுக்கு ஒருவருட கால தற்காலிக தஞ்சம் வழங்கியதில் வெள்ளை மாளிகை மூக்கறுபட்டது. இந்த தஞ்ச அனுமதி ஸ்னோவ்டென் மாஸ்கோவின் ஷெரிமெடியோவ் விமானநிலையத்தின் இடைப்பட்ட மண்டலப் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கும் ரஷ்யாவில் தங்குவதற்கும் அனுமதியளித்தது. இதன்மூலம் உடனடியாக அமெரிக்க சிறைவாசத்திற்கோ அல்லது சித்திரவதைக் கூடத்திற்கோ நாடுகடத்தப்படும் அச்சுறுத்தலில் இருந்து அவர் விடுபட முடிந்தது. அதேவேளையில், ஒபாமா நிர்வாகமும் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் தலைவர்களும் ஒரு அவதூறுப் பிரச்சாரத்தில் இறங்கிய போதும் கூட, அமெரிக்க மக்களைப் பொறுத்தவரை அவர்கள் ஸ்னோவ்டெனை அமெரிக்க அரசாங்கத்தின் குற்றங்களை ஒரு கோட்பாடான முறையின் அம்பலப்படுத்துவதில் ஈடுபட்ட ஒரு எச்சரிப்பாளராகத் தான் கருதுகிறார்களே தவிர ஒரு வேவுபார்ப்பவராகவோ அல்லது ஒரு துரோகியாகவோ கருதவில்லை என்பதை கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன. அதேபோன்றதொரு பெரும்பான்மையினர் தேசியப் பாதுகாப்பு முகமையின் பாரிய கண்காணிப்பை ஜனநாயக உரிமைகளுக்கான அச்சுறுத்தலாகவும் காண்கின்றனர். ஞாயிறன்று காலையில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்த நாடாளுமன்ற தலைவர்கள், NSA இன் கண்காணிப்பு வலையின் முக்கியத்துவத்திற்கான சான்றாக இந்த சமீபத்திய உஷார்படுத்தல்களை கூறினர். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டரான லிண்ட்சே கிரஹாம் CNN இடம் கூறினார்: “ NSA இன் முக்கியத்துவம் மீண்டுமொருமுறை நிரூபணம் ஆகிக் கொண்டிருக்கிறது... NSA ஐ இல்லாது செய்ய வேண்டும் என்று கோருவது நமது பாதுகாப்பைக் குறைத்து விடும் தேசத்தை அபாயத்தில் விடுவது போல் ஆகி விடும்.” செனட் நுண்ணறிவுக் கமிட்டியின் உயர்நிலையில் இருக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சாக்ஸ்பி சாம்பிளிஸ், 9/11 தாக்குதலில் இரத்தம் படிந்த ஒரு சட்டையை ஆட்டிக் காட்டி NBC இன் “ஊடக சந்திப்பு” நிகழ்ச்சியில் சொன்னார்: “உயர்நிலையில் நடைபெறும் திட்டங்கள் பற்றி பலபேர் ஏடாகூடமாகப் பேசுகிறார்கள், 9/11க்கு முன் நாம் கண்ட நிலையையே அது நினைவூட்டுகிறது.” NSA இன் வேவுபார்ப்பு குறித்து குறிப்பிட்ட அவர், “நம்மிடம் இந்த வேலைத்திட்டங்கள் இலலாதிருந்திருந்தால், கொடியவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவே முடியாத நிலை இருந்திருக்கும்” என்று கூறினார். அமெரிக்க ஊடகங்கள் வழக்கம்போல் அரசாங்கத்தின் கூற்றுகளை அலசி ஆராயாமல் உண்மை போல் செய்திகள் வெளியிடுவதற்கும் ஒரு பீதி நிறைந்த சூழலை ஊக்குவிப்பதற்கும் அணிவகுத்ததன் மூலம் கண்டிக்கத்தக்க பாத்திரத்தை ஆற்றின. இதற்கு முன்னர் இதேபோன்ற பல உஷார்படுத்தல்கள் ஆதாரமற்றவையாக இருந்தன என்பது பற்றியோ, அல்லது ஈராக் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட பொய்கள் முதல் NSA இன் வேவுபார்ப்பு குறித்து ஒபாமா நிர்வாக அதிகாரிகள் கூறிய பொய்கள் வரை அரசாங்கம் பலதரப்பட்ட பொய் கூறி வந்திருக்கும் வரலாறு பற்றிய ஒரு சிறிய குறிப்பு கூட இல்லை. நியூ யோர்க் டைம்ஸ் தனது செய்திகளில் அரசாங்கத்தின் எச்சரிக்கைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான அரசியல் நோக்கங்களை சூசகம் செய்திருக்கிறது. “ இத்தகைய ஒரு பயங்கரவாத அச்சுறுத்தல் மீதான கவனக்குவிப்பு, இந்த சமயத்தில் NSA இன் தகவல் சேகரிப்பு திட்டங்கள் தொடர்பாக எழுந்திருக்கும் அதிருப்தியில் இருந்து கவனத்தைத் திருப்ப ஒரு நல்ல வழி என்பதோடு, இச்சமயத்தில் ஏதேனும் ஒரு முறியடிக்கப்பட்ட சதித்திட்டம் குறித்த இடைமறித்த உரையாடல்கள் வெளியிடப்பட்டால் அது கூடுதல் உதவி செய்யும் என்று சில ஆய்வாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறியதாக” அது எழுதியது. ஒரு புதிய உடனடி பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றிய தங்களது பேச்சுகளுக்கு எந்த உறுதியான முகாந்திரத்தையும் ஒபாமா நிர்வாக அதிகாரிகள் வழங்கவில்லை. குறிப்பிட்ட எந்த இலக்குகளும் அடையாளம் காணப்படவில்லை என்று அவர்களே ஒப்புக் கொள்கின்றனர். பயங்கரவாதிகள் சுற்றுலாத் தலங்களையும், சப்வே, ரயில், விமானம் மற்றும் கடல்வழிச் சேவைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான “வாய்ப்புகளை” மட்டுமே வெள்ளியன்று வெளியான அரசுத் துறையின் செய்திக்குறிப்பு மேற்கோள்காட்டுகிறது. இப்படியான ஒரு எச்சரிக்கை அர்த்தமற்றது என்று சொல்லுமளவுக்கு மிகவும் மேலோட்டமாக இது இருக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் வசதிகளின் மீதோ அல்லது வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் அமெரிக்கக் குடிமக்களின் மீதோ பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பில்லை என்று நாம் சொல்லவில்லை. விரோதிகளாகக் கருதப்படும் நாடுகள் மீது இராணுவ வன்முறையைப் பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தப் போவதாக தொடர்ந்து மிரட்டல் அளிப்பது, அதேசமயத்தில் அரை டசன் நாடுகளில் ஆளில்லா விமானங்கள் மூலமான ஏவுகணை வீச்சின் மூலம் ஏராளமான படுகொலைகள் செய்யப்படுவது குறித்து எதுவும் பேசுவதில்லை என்ற அடிப்படையிலான அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும், அத்துடன் சேர்ந்து மிருகத்தனமான எண்ணெய் ஷேக் ஆட்சிகள் மற்றும் பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு ஆதரவளிப்பது என்பதும் சேர்ந்து தொடர்ச்சியாக பதிலடிக்குத் தூண்டுகிறது. அந்தப் பதிலடி பயங்கரவாதத்தின் வடிவத்தையும் கூட எடுக்க முடியும். இதுதவிர அமெரிக்க அரசு மற்றும் உளவுத் துறை எந்திரத்தில் சில பிரிவுகள் இருக்கின்றன. இவர்கள் இத்தகைய தாக்குதல்களை எல்லாம் தாயகத்திலும் வெளிநாடுகளிலும் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் முன்னெப்போதையும் விட அதிகமான வளங்களைத் திரட்டுவதற்குமான ஒரு சந்தர்ப்பமாகக் காண்கின்றனர். இத்தகையதொரு ஆத்திரமூட்டுதலுக்கு பொறி வைக்குமளவுக்கு அமெரிக்க அரசாங்கம் எண்ணற்ற வழிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 2001 செப்டம்பர் 11 தாக்குதல் தொடங்கி சென்ற ஏப்ரல் மாதத்தில் நடந்த போஸ்டன் நெடுந்தொலைவு ஓட்ட குண்டுவெடிப்பு வரை ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலும் அல்லது தாக்குதல் முயற்சியும் அமெரிக்க அரசாங்கத்தின் முகவர்கள் முன்பு தொடர்பு வைத்திருந்த தனிநபர்களாலோ அல்லது போலிஸ்/உளவுத் துறையின் கண்காணிப்பில் இருந்த தனிநபர்களாலோ தான் நடத்தப்பட்டிருக்கின்றன என்பது நன்கு நிலைநாட்டப்பட்டிருக்கக் கூடிய ஆனால் வெகுகுறைவாகவே பேசப்பட்டிருக்கக் கூடிய ஒரு உண்மையாகும். அரேபிய தீபகற்பத்தில் ஜேமனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அல்கெய்தாவை நோக்கி வெள்ளை மாளிகையும் ஊடகங்களும் கைகாட்டுகின்றன. ஆனால் சிரியாவின் உள்நாட்டுப் போரில் அமெரிக்கா ஓசையின்றி அல் கெய்தாவுடன் கூட்டணிவைத்திருப்பதையோ அல்லது லிபியாவில் முமார் கடாபி பதவியிறக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதில் தீவிர இஸ்லாமியவாதிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டதைப் பற்றியோ இந்த ஊடக ஆவேசங்களில் எந்தக் குறிப்பும் இருப்பதில்லை. ஒரு பெரிய புதிய பயங்கரவாதத் தாக்குதல், இராணுவ-உளவுத் துறை கூட்டின் பெருகும் சக்திக்கு வெகுஜனங்கள் காட்டும் விரோதத்தில் ஒரு தலைகீழ் மாற்றத்திற்கு வழிவகை செய்யலாம் என்பதான கருத்துகள் கடந்த பல மாதங்களாக அமெரிக்க ஊடகங்களில், அதிலும் குறிப்பாக NSA அம்பலப்படுத்தல்களை ஒட்டி, வெளியாகி வருகின்றன. இந்தக் கோணத்தில், அமெரிக்கா “இராணுவச் சட்டத்திற்கு ஒரேயொரு பயங்கரவாதத் தாக்குதல் தூரத்தில் தான் நின்று கொண்டிருக்கிறது.” அமெரிக்காவில் இராணுவம்-போலிஸ் அதிகாரம் கட்டியெழுப்பப்படுவதைப் பொறுத்தவரை இதற்கான மாதிரி ஹிட்லரின் ஜேர்மனி ஆகும். 1933 இல் நாடாளுமன்றத்தில் நெருப்புப் பற்றிய சம்பவம்(Reichstag Fire) - இது ஒரு கம்யூனிசத் தொழிலாளி நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது நடத்திய ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்பதாகக் கூறப்பட்டது - ஹிட்லர் சர்வாதிகாரங்களைக் கையிலெடுப்பதற்கான ஒரு சாக்காக பயன்பட்டது. உண்மையில் இந்தத் தாக்குதலை ஒழுங்கமைத்து நடத்தியது ஜேர்மன் இரகசியப் போலிசார் தான் என்பது பின்னர் நிரூபணமானது. 2013 இன் அமெரிக்காவுக்கும் 1933 இல் இருந்த ஜேர்மனிக்கும் இடையில் முக்கியமான வித்தியாசங்கள் இருக்கின்றன என்பது உண்மையே. என்றபோதிலும் தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்கு நாஜிக்களை களமிறக்குவதற்கு ஜேர்மன் முதலாளித்துவத்தை செலுத்திய அதே அதிதீவிரமான சமூகக் குரோதங்கள் தான் இன்று அமெரிக்காவிலும் மறு உற்பத்தியாகிக் கொண்டிருக்கின்றன. இன்று ஆளும் உயரடுக்கிற்கும் பரந்த எண்ணிக்கையிலான பெரும்பான்மை மக்களுக்கும் இடையிலான சமூகப் பிளவு என்பது அமெரிக்காவில் போல உலகில் வேறெங்கிலும் இல்லை. மேலும், தேசியப் பாதுகாப்பு எந்திரம் என்பது நாளுக்குநாள் அமெரிக்காவின் சுயேச்சையானதும் திட்டவட்டமானதுமான காரணியாக ஆகிக் கொண்டிருக்கிறது. கூட்டரசாங்கத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 90 சதவீதம் இராணுவம், போலிஸ் மற்றும் உளவுத் துறையினரே இருக்கின்றனர். சுமார் 3 மில்லியன் என்ற இந்த எண்ணிக்கை, இராணுவக் கையிருப்புப் படையினர் மற்றும் இராணுவ/உளவு/பாதுகாப்பு ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் எண்ணிக்கையையும் சேர்த்தால் 5.5 மில்லியனாக எகிறி விடுகிறது. சமூக ஏற்றத்தாழ்வின் பெருக்கம் அதேசமயத்தில் இராணுவவாதம் மற்றும் ஒடுக்குமுறையின் வளர்ச்சி இந்த இரண்டின் கூட்டுச்சேர்க்கை தான் அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு ஒரு பெரும் அபாயமாக நிற்கிறது. ஒபாமா நிர்வாகம், அதற்கு முன்பிருந்த புஷ் நிர்வாகத்தின் வழிமுறைகளுடன் முறித்துக் கொள்வதற்குப் பதிலாக, புஷ் நிர்வாகத்தின் ஒடுக்குமுறைக் கட்டமைப்பை முன்கண்டிராத பரிணாமங்களுக்கு வளர்த்து விட்டிருக்கிறது. ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலமாய், பயங்கரவாதத்தின் மீதான போர் என்று சொல்லப்படுவதான ஒன்று, தேசப்பற்று சட்டம், தாயகப் பாதுகாப்புத் துறை, பென்டகனின் வடக்குத் தலைமை, குவாண்டானமோ வளைகுடா சிறை முகாம், இராணுவ ஆணையங்கள், காலவரையற்ற கைதுகள், சட்டவரம்புக்கு மீறிய ஆளில்லா விமானப் படுகொலைகள் மற்றும் மக்கள் மீது வியாபகமான வேவுநடவடிக்கை ஆகியவை உட்பட ஒரு போலிஸ் அரசின் கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு சாக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தயாரிப்புகள் எல்லாம் அமெரிக்காவிலும் சரி சர்வதேசரீதியிலும் சரி உழைக்கும் மக்களிடம் இருந்து பெருகும் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. இது தனது ஆரம்ப வெளிப்பாட்டை அமெரிக்க அரசாங்கத்தின் குற்றங்களை அம்பலப்படுத்திய பிராட்லி மேனிங், ஜூலியன் அசாஞ் மற்றும் எட்வார்ட் ஸ்னோவ்டென் ஆகியோருக்குக் கிட்டியிருக்கும் வெகுஜன ஆதரவில் கண்டிருக்கிறது. இந்தத் துணிச்சலான தனிமனிதர்களைப் பாதுகாப்பது அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேசரீதியிலும் இருக்கும் உழைக்கும் மக்களின், இளைஞர்களின் மற்றும் மாணவர்களின் கடமையாகும். அமெரிக்க அரசாங்கத்தின் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் குறி வைக்கப்பட்டிருப்போரின் சுதந்திரத்திற்காகப் போராடுவது என்பது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து நடத்தப்படும் தாக்குதலின் தொடக்கப் புள்ளியாக ஆக வேண்டும். போர், சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றின் பிறப்பிடமாகத் திகழும் முதலாளித்துவத்திற்கு எதிரான அமெரிக்க மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் இயக்கத்தின் பகுதியாக இந்த இயக்கம் நனவுடன் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். |
|
|