World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Defying police repression, Maruti Suzuki workers in India continue fight

இந்தியாவில் மாருதி சுசுகி தொழிலாளர்கள் போலிஸ் அடக்குமுறையை மீறி போராட்டத்தைத் தொடர்கின்றனர்

By Arun Kumar
1 August 2013

Back to screen version

சென்ற மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா (MSI) நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அமைதியான முறையில் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆயிரக்கணக்கான கலகத் தடுப்பு போலிசாரை கன ஆயுதங்கள் சகிதம் களமிறக்கியது. 2012 ஜூலை 18 அன்று தொழிற்சாலையின் ஒரு மேலாளர் மரணமடைந்ததை தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்துவந்த தொழிலாளர்கள் மீது இட்டுக்கட்டி குற்றங்கள் பதிந்து அரசாங்கம் பழிவாங்கிய சம்பவத்தின் முதலாம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் விதமாக சுமார் 500 தொழிலாளர்களும் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் ஒன்றுதிரண்டனர்.

ஜப்பானின் நாடுகடந்த நிறுவனமான சுசுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்தியத் துணைநிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தில் நிலவும் மிருகத்தனமான கொத்தடிமை நிலைமைகளுக்கும் மற்றும் அரசு ஒடுக்குமுறைக்கும் எதிராக இத்தொழிலாளர்கள் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக ஒரு தீரம்மிக்க போராட்டத்தை நடத்தி வந்திருக்கின்றனர்.

தொழிலாளர்கள் மானேசர் தொழிற் பேட்டைப் பகுதியில் தாங்கள் விரும்பிய இடத்தில் ஒரு அமைதி ஊர்வலத்தை நடத்துவதற்கு முடியாமல் அவர்களை தடுப்பதற்கும் அவர்களை அச்சுறுத்துவதற்குமாய் போலிசார் அமர்த்தப்பட்டனர். இதன் காரணமாக தொழிலாளர்கள் தமது பேரணியை குர்கான் மாவட்டத்தில் சுமார் 20 கிமீ வடக்கே அமைந்திருக்கும் ஒரு திறந்தவெளி மைதானத்திற்கு மாற்றும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

ஜூலை 18 அன்று நடந்த போலிஸ்-அரசு வகை நடவடிக்கைகளை விவரித்த மாருதி சுசுகி தொழிலாளர் சங்கம் கூறியது: “நாங்கள் கூடிய இடத்தில் மட்டும் சுமார் 2,000 போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். மானேசரில் சுமார் 10,000க்கும் அதிகமான போலிசார் லத்திகள், தண்ணீர் பீரங்கிகள், கண்ணீர்புகை வாகனங்கள் ஆகியவற்றுடன் குவிக்கப்பட்டு அந்த மொத்த தொழிற்பேட்டைப் பகுதியிலும் ஒரு அச்சுறுத்தும் சூழல் உருவாக்கப்பட்டிருந்தது. பல தொழிலாளர்கள் எங்களது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள முடியாதபடிக்கு நேரடியாகவே தடுக்கப்பட்டனர். எங்கள் சங்கத்தின் தொழிலாளர்களுக்கே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) இருந்து மிரட்டல் அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் மொத்த தொழிற்சங்க அங்கமுமே குர்கானில் உள்ள கேர்கி தவுலா கிராமத்தில் ஒரு போலிஸ் நிலையத்தில் நிலைய இல்ல அதிகாரியால் (SHO) கைது செய்து வைக்கப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்டவர்களின் அலைபேசிகள் அணைத்து விடப்பட்டு விட்டதால், அவர்களால் எங்களது போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.”

மாருதி சுசுகி மேலாளரின் மரணத்தைத் தொடர்ந்து MSI நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்படும் போலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் 147 தொழிலாளர்களை  உடனடியாகவும் எந்தவித நிபந்தனைகள் இன்றியும் விடுதலை செய்ய வேண்டும் என்று தொழிலாளர்கள் கோருகின்றனர். (காணவும்: “இந்தியா: கைது செய்யப்பட்ட மாருதி சுசுகி தொழிலாளர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.”)

சித்திரவதை செய்து பெறப்பட்ட “வாக்குமூல”ங்களைக் கொண்டு முற்றிலும் இட்டுக்கட்டப்பட்டதான குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் இத்தொழிலாளர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். நிர்வாகம் வழங்கியிருக்கும் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு இன்னும் ஒரு 66 தொழிலாளர்களையும் தேடி போலிசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் நிறுவனமானது பதிலடியாக சுமார் 2,000 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் 546 நிரந்தரத் தொழிலாளர்களையும் வேலையை விட்டு நீக்கியிருக்கிறது. இந்த அனைத்துத் தொழிலாளர்களையும் மீண்டும் பணியிலமர்த்த வேண்டும் என்பதும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையாகும்.

சிறையிலிருக்கும் தொழிலாளர்களை பிணையில் விடுவிக்கவும் கூட சமீபத்தில் நீதிமன்றங்கள் மறுத்திருக்கின்றன. அப்படிச் செய்தால் அந்நிய முதலீடு பாதிக்கப்படும் என்று நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். மே மாதத்தில் பிணை விண்ணப்பங்களை நிராகரித்த ஹரியானா உயர் நீதிமன்றம், “தொழிலாளர்கள் போராட்டத்தினால் உருவாகும் அச்சத்தால் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்குவார்கள்” என்று கூறியதாக MSWU கூறுகிறது.

நிறுவனத்தின் மனித வள மேலாளரான அஸ்வனிஷ் குமார் தேவ் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்பதும் இத்தொழிலாளர்களின் கோரிக்கை ஆகும். சென்ற ஜூலையில் தொழிற்சாலையில் தொழிலாளர்களுடனான ஒரு மோதலை நிறுவனம் தூண்டியதன் பின்னர் அவர் கொல்லப்பட்டார். மாருதி சுசுகி நிர்வாகமும் மாநில அரசாங்கமும், மாருதி சுசுகி தொழிலாளர்களின் போராட்டம் இந்தியாவில் கொத்தடிமை உழைப்புச் சூழலுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த போராட்டத்தைத் தூண்டி விட்டு விடாமல் தடுப்பதற்கான தங்களது முயற்சிகளை அதிகப்படுத்துவதற்கு தேவின் மரணத்தை தோதாகப் பற்றிக் கொண்டன.

ஹரியானா அரசாங்கம் மத்தியிலிருக்கும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டு, மாருதி சுசுகி உதாரணத்தை கொண்டு, உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு, அவர்களின் இலாப நலன்களை உறுதி செய்வதற்கு அரசாங்கம் எத்தனை தூரத்திற்கும் செல்லும் என்ற செய்தியை அனுப்புவதற்கு நோக்கம் கொண்டிருக்கின்றது.

ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும், ஊதிய உயர்வு வேண்டும் மற்றும் அடக்குமுறையை நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மாருதி சுசுகி நிறுவனத்தின் நிரந்தரத் தொழிலாளர்களும் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் தமது போராட்டத்தை 2011 ஆம் ஆண்டில் தொடக்கினர். இந்தக் கோரிக்கைகளுக்காக போராடுவதற்காக நிறுவனத்தின் எடுபிடி தொழிற்சங்கத்திற்கு எதிராக ஒரு சுயேச்சையான தொழிற்சங்கத்தை அவர்கள் ஸ்தாபித்தனர். 2011 ஜூன் முதலாகவே, அவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிதாக உருவாக்கப்பட்ட சுயேச்சையான தொழிற்சங்கமான MSWU ஐ அங்கீகரிக்க மறுத்தும், நிறுவனத்தின் உத்தரவுகளை அமல்படுத்துவதற்காய் தொடர்ந்து போலிசைக் குவித்தும், முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி அரசாங்கம், மாருதி சுசுகி நிர்வாகத்தின் பக்கம் பகிரங்கமாக சாய்ந்து செயல்படுகிறது. அரசாங்கம், தொழிலாளர்களுக்கு எந்த உரிமைகளும் இல்லாமல் செய்யும் ஒரு “நன்னடத்தைப் பத்திரத்தில்” தொழிலாளர்கள் கையெழுத்திட வேண்டும் என்று கோரியதோடு, “அரசியல் நோக்கத்துடனான வெளிப்புறத் தூண்டுதல்கள்” தான் போராட்டத்திற்கு காரணம் என்று கூறியது; அத்துடன் நிர்வாகம் தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்வதையும் முழுமையாக ஆதரித்தது.

அத்துடன் MSWU இன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒட்டுமொத்தத் தலைமையையுமே அரசாங்கம் சிறையில் தள்ளி விட்டது. அதன்பின் தொழிலாளர்களின் ஒரு குழு MSWU க்கு தற்காலிகமாக தலைமை கொடுத்து போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த தற்காலிகத் தலைவர்களில் ஒருவரும் ஜனவரியில் திடீரென்று கைது செய்யப்பட்டார்.

MSWU இன் தற்காலிகத் தலைமையுடனான ஒரு சந்திப்பின் போது ஹூடா தொழிலாளர்களை “கிரிமினல்கள்” என்று கூறினார்.

மாருதி சுசுகி தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் இந்த ஆபத்தான சூழலுக்கு முக்கிய அரசியல் பொறுப்பு, குர்கான் தொழிற்பேட்டைப் பகுதியில் இருக்கும் மிகப் பெரும் தொழிற்சங்கக் கூட்டமைப்புகளுக்கு உரியதாகும். இத்தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI - M) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகிய ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளுடன் இணைந்தவை ஆகும்.

2011 இல் மானேசர் தொழிலாளர்கள் பல மாத காலம் நடத்திய இந்த போர்க்குணமிக்க போராட்டத்தின் சமயத்தில், இந்த தொழிற்சங்கங்கள் எல்லாம் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை திட்டமிட்டு தனிமைப்படுத்தியதோடு, நிறுவனத்திற்கும் அரசுக்கும் பின்னால் அணிவகுத்து நிற்கும் எடுபிடித் தொழிற்சங்கத்தின் மூலமாக மாநில காங்கிரஸ் அரசாங்கத்திற்கும் தொழிலாளர் நல அதிகாரிகளுக்கும் விண்ணப்பம் செய்யுமாறு அவர்களுக்கு அறிவுரையும் அளித்தன.

தொழிற்சங்கங்களின் இப்பாத்திரம் அவை இணைந்திருக்கும் ஸ்ராலினிசக் கட்சிகளின் அரசியலில் இருந்து பிறக்கிறது. இக்கட்சிகள் இந்திய அரசியல் ஸ்தாபகத்தின் கட்சிகளாக மாறி விட்டிருப்பதோடு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான மலிவு-உழைப்புக் களமாக இந்தியாவை மாற்றுகின்ற ஆளும் உயரடுக்கின் பொருளாதார “சீர்திருத்த”க் கொள்கைக்கு முழு உறுதி பூண்டவையாகயும் ஆகியிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் எதுவொன்றிற்கும் ஸ்ராலினிஸ்டுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏனென்றால் அது இந்தியாவின் முதலாளித்துவ ஆட்சியுடன் நேருக்கு நேர் மோதலாக அபிவிருத்தியுறக் கூடும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.

மாவோயிச திசைவழி கொண்ட குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட இப்போது மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு போலி-இடது அமைப்புகளும் ஹரியானா மாநில காங்கிரஸ் அரசாங்கத்திடமும் மத்தியில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திடமும் விண்ணப்பிக்கும்படி மாருதி சுசுகி தொழிலாளர்களிடம் கூறியிருக்கின்றன.

மானேசர் தொழிலாளர்களுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஸ்ராலினிச தொழிற்சங்கங்கள் மற்றும் மற்ற பிற அமைப்புகளின் அரசியல் செல்வாக்கின் கீழ், MSWUவும் கூட காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்களுக்கு விண்ணப்பிப்பதான அதே பாதையையே மேற்கொண்டிருக்கிறது.

இப்போராட்டத்திற்கு நிச்சயம் தோல்வியைத் தர அச்சுறுத்துகின்ற இந்த அரசியல் முட்டுச் சந்தினை மாருதி சுசுகி தொழிலாளர்களும் மற்றும் அவர்களது அத்தனை ஆதரவாளர்களும் கட்டாயம் எதிர்க்க வேண்டும்.

சந்தையின் உத்தரவுகளையும் நிறுவனமும் அரசாங்கமும் சேர்ந்து நடத்தும் சூழ்ச்சி வேட்டையையும் முறியடிக்க வேண்டுமென்றால், மாருதி சுசுகி தொழிலாளர்கள் இந்தியாவெங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் இருக்கின்ற தமது வர்க்க சகோதர சகோதரிகளை நோக்கித் திரும்ப வேண்டும். பழிவாங்கலுக்கு எதிரான அவர்களது எதிர்ப்புப் போராட்டத்தினை, வேலை வெட்டுகள் மற்றும் கொத்தடிமை வேலைச் சூழல் ஆகியவற்றுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு பதில்தாக்குதலை அபிவிருத்தி செய்வதற்கான போராட்டத்துடன் நனவுடன் பிணைக்க வேண்டும். இந்தப் போராட்டம் அடிப்படையாக ஒட்டுமொத்த முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டம் ஆகும், ஏனென்றால் அரசாங்கம், அரசு எந்திரம் மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகள் உள்ளிட்ட அத்தனை அரசியல் கட்சிகள் எல்லாமே இந்த கொத்தடிமை நிலைமைகளை திணிப்பதற்கே சேவை செய்கின்றன.