World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : எகிப்து

Mounting toll of dead, injured from crackdown by Egyptian junta

எகிப்திய இராணுவ ஆட்சிக்குழுவின் ஒடுக்குமுறையினால் இறந்தவர், காயமுற்றவர் எண்ணிக்கை பெருகுகிறது

By Alex Lantier 
29 July 2013

Back to screen version

வாஷிங்டன் இராணுவ ஆட்சியின் குருதி கொட்டும் ஒடுக்குமுறைக்கு ஆதரவு சமிக்ஞை செய்தபோது, அகற்றப்பட்ட இஸ்லாமியவாத ஜனாதிபதி மகம்மது முர்சியின் ஆதரவாளர்கள் மீது எகிப்திய இராணுவம் இயக்கிய வன்முறையில் இருந்து இறப்பு எண்ணிக்கை வார இறுதியில் பெருகியது.

அதிக ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் பிரிவுகள், ஆட்சிக்கு ஆதரவான குண்டர்களுடன் சனிக்கிழமையன்று காலை முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ (MB) ஆதரவாளர்களின் உள்ளிருப்பு போராட்டத்தை நசுக்கச் செயல்பட்டனர்; இவற்றுள் சில, முர்சியை அகற்றிய ஜூலை 3 ஆட்சி சதியை தொடர்ந்தே தொடங்கிவிட்டன. வன்முறையைக் காட்டும் YouTube காணொளிகள், பொலிஸ் கலகப்பிரிவினரும் ஸ்னைப்பர்களும் எதிர்ப்புக் கூட்டத்தினர் மீது துப்பாக்கியால் சுடுவதையும், கூட்டத்தினர் மரங்கள் அல்லது சாலைத் தடுப்புக்களுக்குப் பின் மறைந்து கொள்ள முற்படுவதையும் காட்டுகின்றன.

 நேற்று எகிப்திய சுகாதார அமைச்சரக அதிகாரிகள் வன்முறையை ஒட்டி இறந்தவர்கள் எண்ணிக்கை 80 என்றும் காயமுற்றோர் 792 என நாடு முழுவதும் இருந்தன என்றும் உறுதிப்படுத்தினர். பல காயமுற்றோர் அல்லது இறந்தவர்கள், தற்காலிக கள மருத்துவனைகள் அல்லது பிண அறைகளில் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் போரிட்ட இடங்களுக்கு அருகே அமைந்திருந்தன, ஆனால் சுகாதார அமைச்சரகத்தின் எண்ணிக்கை அராசங்க மருத்துவ மனைகள் அல்லது பிரேதக் கூடங்களில் வரும் சடலங்களை மட்டும் கணக்கில் கொள்கிறது. முஸ்லிம் சகோதரத்துவ (MB) அதிகாரிகள் இறந்தோர் எண்ணிக்கை 200 வரை இருக்கலாம் என்றும் காயமுற்றோர் கிட்டத்தட்ட 5,000 என்றும் கூறுகின்றனர்.

கெய்ரோக்கு அருகே ஒரு எதிர்ப்புத் தளத்தில் தன்னார்வத்துடன் பணிபுரிந்த அறுவை சிகிச்சை டாக்டர் இஸ்மெயில் ஹசீஷ், அல் அஹ்ரத்திடம் மருத்துவமனைகளில் எல்லா இடங்களிலும் சடலங்கள் உள்ளன; நமக்கு வந்தவை அனைத்துமே கிட்டத்தட்ட மோசமான நிலையில்தான் வந்தன; சிலர் ஏற்கனவே இறந்து விட்டனர்; சிலர் கடைசி மூச்சுக்குப் பிரயாசைப் பட்டுக் கொண்டிருந்தனர் என்றார்.

மற்றொரு கெய்ரோ தள மருத்துவமனையில் மருத்துவ பொருட்களுக்கு பொறுப்பான டாக்டர் மகம்மத் லோப்டி: காயங்கள் மிகத் துல்லியமாக இருந்தன; இது ஸ்னைப்பர்களால் சுடப்பட்டவை என்பதைத் தெரிவித்தன. நெற்றியின் நடுவே சில தோட்டாத்துளைகள் இருந்தன; மண்டையோட்டின் பின் புறமும் வலது பக்கமும் அவ்வாறே இருந்தன. இது காயப்படுத்துவதற்குச் சுடப்படவில்லை; கொலை செய்வதற்குத்தான் சுடப்பட்டது எனக் கூறினார்.

பொலிஸ் ஸ்னைப்பர்கள் காயமுற்றோரை எதிர்ப்புத் தளத்தில் இருந்து அகற்ற உதவிய மருத்துவ உதவியாளர்களையும் இலக்கு கொண்டனர் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். நாங்கள் இன்று பார்த்ததை எவரும் காணக்கூடாது. இது ஒரு போர்ப்பகுதி போல் இருந்தது. இடம் முழுவதும் இரத்தம் இருந்தது, எங்களால் நகரக்கூட முடியவில்லை என்றார் டாக்டர் அமர் கமல்.

நேற்று இராணுவ ஆட்சிக்குழு, வன்முறையை தீவிரப்படுத்த அது தயாரிக்கிறது என்றும் இராணுவத்திற்கு குடிமக்களை கைதுசெய்யும் அதிகாரம் கொடுப்பது அறிவிக்கப்பட உள்ளது என்றும் குறிப்புக்காட்டியது. பெயரிட விரும்பாத அரச அதிகாரிகள் அல் அஹ்ரத்திடம் இது முகம்மது முர்சியின் ஆதரவாளர்கள் மீது ஒரு பெரிய வன்முறைக்கு முன்னோடியாக இருக்கலாம் என்றனர்.

எகிப்தில் நடக்கும் படுகொலை, ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவுடன் நடக்கிறது; அது வெள்ளியன்று வன்முறைக்கு ஆதரவு கொடுக்கும் என சமிக்ஞை செய்தது. அமெரிக்க வெளிவிவகார செய்தித் தொடர்பாளர் ஜேன் சாகி, இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது, இராணுவச் சட்டத்தை சுமத்தியது ஆகியவற்றை இராணுவ ஆட்சி சதி என்னும் சொற்றொடரை பாவிப்பதை வாஷிங்டன் தொடர்ந்து தவிர்க்கும் என்றார். இப்படி சொல்லாட்சி மாற்றாமல் இருந்தால்தான், ஒபாமா நிர்வாகம் அமெரிக்கச் சட்டங்களான, ஆட்சி சதி மூலம் அதிகாரத்திற்கு வந்த அதிகாரங்களுக்கு உதவி செய்வதை தடுப்பவற்றை தவிர்க்க முடியும்; இதையொட்டி எகிப்திய இராணுவத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து கொடுக்கும் 1.3 பில்லியன் டாலர்கள் ஆண்டிற்கான உதவியைத் தொடர முடியும்.

எகிப்திற்கு உதவும் கொள்கை, எமது தேசிய பாதுகாப்பு நலன்களோடு செல்வாக்கு கொண்டவை. எங்கள் சட்டத்துடன் இசைவாக, எகிப்திற்கு உதவிகளை தொடர்ந்து வழங்குவது நம் இலக்கிற்கு முக்கியம்; அதாவது ஜனநாயக ஆட்சிக்கு மாறுவதற்கு பொறுப்பாக முன்னேற வேண்டும்; நம் தேசிய பாதுகாப்பு நலன்களுடனும் அவை இயைந்துள்ளன. எகிப்து, பிராந்திய அமைதி பாதுகாப்பில் உறுதிப்படுத்தும் தூணாக உள்ளது, எகிப்தில் உறுதியான மற்றும் வெற்றிகரமான ஜனநாயக மாற்றத்தில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நலனும் உள்ளது என்றார் சாகி.

சாகியின் அறிக்கைஒபாமா நிர்வாகம் அதன் புவியியல் நலன்களுக்கு அடிப்படையாக இருக்கும், எகிப்திய இராணுவக் குழுவிற்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது; இது இராணுவம் வன்முறையை தொடர பச்சை விளக்கு காட்டுகிறது.

எகிப்திய இராணுவ ஆட்சி, மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு முக்கிய தூணாகும். இது தொழிலாள வர்க்கத்தையும் உள்நாட்டில் பிற அரசியல் எதிர்ப்பு வெளிப்பாடுகளையும் நசுக்கவதோடு, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா காசப்பகுதியில் பாலஸ்தீனியர்களை தனிமைப்படுத்துவதற்கும் உதவுகிறது; அமெரிக்காவிற்கு சூயஸ் கால்வாயின் முழு மூலோபாய பயன்பாட்டை அளிக்கிறது, வாஷிங்டனின் மத்திய கிழக்குப் போர்களுக்கு ஆதரவு கொடுக்கிறது.

வன்முறையைத் தொடர்ந்து தன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி அறிக்கையை வெளியிடுகையில், அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி, சில முதலைக் கண்ணீர்த்துளிகளை வாஷிங்டன் ஆதரிக்கும் அடக்குமுறை கொள்கை பற்றி விட்டார்.

அனைத்து எகிப்தியத் தலைவர்களும் விளிம்பில் இருந்து பின்வாங்க வேண்டும் என்றும் கெர்ரி அழைப்புவிடுத்தார்; இது ஒபாமா நிர்வாகத்தின், எதிர்ப்புக்களை முடிவிற்கு கொண்டுவரவேண்டுமென விருப்புவதை, முஸ்லிம் சகோதரத்துவத்தை புதிய ஆட்சிக்குழுவிற்கு ஆதரவு கொடுக்கும் சக்தியாக இணைக்க வேண்டும் என்பதைப் பிரதிபலிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு உயர் பிரதிநிதி காத்தரின் ஆஷ்டன் ஞாயின்று இரவு கெய்ரோவிற்கு பேச்சுக்களுக்காக வந்துள்ளார்; முஸ்லிம் சகோதரத்துவம் அதன் எதிர்ப்புக்களை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும், இராணுவ ஆட்சிக்குள் பதவிகளை ஏற்க வேண்டும் என்று கருதுகிறார். அவர் உயர்மட்ட எகிப்திய அதிகாரிகளை இன்று சந்திப்பார்.

எகிப்திய ஒடுக்குமுறைக்கு அமெரிக்க ஆதரவு, மத்திய கிழக்கில் அது ஜனநாயக மாற்றத்திற்கு ஆதரவு கொடுக்கிறது என்னும் பிரச்சாரத்தை அம்பலப்படுத்துகிறது. இது எகிப்தில் எதிர்ப்புரட்சி சர்வாதிகாரம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்னும் நோக்கத்தைக் கொண்டுள்ளது; தேவையானால் முஸ்லிம் சகோதரத்துவ எதிர்ப்பாளர்களை படுகொலை செய்தாவது முஸ்லிம் சகோதரத்துவத்தை முடிந்தால் இராணு ஆட்சிக்குழுவுடன் ஒருங்கிணைக்க முற்படுகிறது. இத்தகைய ஆட்சி, பின் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நசுக்குவதோடு தடையற்ற சந்தை செயல்த்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்; எரிபொருள், உணவு ஆகியவற்றிற்குக் கொடுக்கப்படும் உதவித் தொகைகளை நிறுத்தும்; பிராந்தியத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்ளையுடன் நேரடியாகப் பிணைந்து கொள்ளும்.

எகிப்திய ஒடுக்முறைக்கு அமெரிக்க ஆதரவு என்பது, 2011ல் எகிப்திய சர்வாதிகாரி ஹொஸ்னி முபாராக் தொழிலாள வர்க்கத்தால் அகற்றப்பட்டபின், லிபியா மற்றும் சிரியாவில் வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய நட்புநாடுகளும் நடத்திய ஏகாதிபத்திய போருக்களுக்கு கொடுத்த போலித்தன பாசாங்குகளையும் சிதைத்துள்ளது. நேட்டோ சக்திகள் இந்நாடுகளை தாக்கின; இவை நீண்டகாலமாக ஆட்சிமாற்றத்திற்காக அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நடைமுறையின் கூறுபாடுகளால் இலக்கு கொள்ளப்பட்டவை. அதே நேரத்தில் போர்கள், மக்களை தீமையில் இருந்து காக்கும் மனிதாபிமான முயற்சிகளை மற்றும் ஜனநாயகத்தை வளர்க்கும் என்றும் கூறப்பட்டது.

வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் அவர்கள் ஆதரிக்கும் இராணுவ ஆட்சி, ஆயுதமற்ற ஆர்ப்பாட்டக்காரர்களை ஆயிரக்கணக்கில் கொன்றுகுவிக்கும்போது பறக்கக்கூடாது பகுதிகள் அல்லது மனிதாபிமானத் தலையீடு என எகிப்திற்கு திட்டம் எதையும் முன்வைக்கவில்லை.

இக்கொலைகள், தமரோட் (எழுச்சி) கூட்டணியை ஆதரித்த எகிப்தில் உள்ள முதலாளித்துவ தாராளவாத, போலி இடது கட்சிகளையும் அம்பலப்படுத்துகிறது, இவை ஆட்சி சதிக்கு உதவின. இந்த அமைப்புக்களில் முகம்மது எல்பரடேயின் தேசிய மீட்பு முன்னணி (NSF), மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்களும் உள்ளனர்.

தமரோட், தொழிலாள வர்க்கத்தையும் முர்சிக்கு எதிரான மக்கள் எதிர்ப்பையும் திசைதிருப்ப பயன்படுத்தப்பட்டது; அது, வலதுசாரிக் கொள்கைகளை செயல்படுத்தி, அதிகாரத்தில் இருந்தபோது தன்னை அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இணைத்திருந்தது. எகிப்திய ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள் அதனுடன் இருந்தன; இதில் முபாரக்கின் பழைய கருவியும் இருந்தது; இது முஸ்லிம் சகோதரத்துவ-ஆதரவு மற்றும் முதலாளித்துவத்தின் இஸ்லாமியவாதப் பிரிவுகளுடன் முரண்பட்டுள்ளது.

இப்பொழுது இராணுவ ஆட்சிக் குழுவின் துணை ஜனாதிபதியாக செயல்படும் எல்பரடேய் இழிந்த முறையில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அதிக வன்முறை பயன்படுத்தப்படுவதை குறைகூறினார். முன்னாள் ஐ.நா. ஆயுத ஆய்வு நிறுவனத்தின் தலைவர் இராணுவம் ஜூலை 3 ஆட்சி மாற்றம் நடத்த ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவைப் பெற சர்வதேச பேச்சுக்களை நடத்துவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார் இப்பொழுது அவர் ஒரு பகுதியாக இருக்கும் அரசாங்கம் நூற்றுக்கணக்கானவர்களை கொன்றபின், எல்பரடேய், நான் கடுமையாக உழைக்கிறேன், ஒவ்வொரு திசையிலும் மோதலை சமாதானமாக தீர்க்க வேண்டும். என்றார்.

ஓர் அறிக்கையில், கொலைகள் குறித்து NSF அதன் ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளது, ஆனால் முஸ்லிம் சகோதரத்துவ (MB) எதிர்பாளர்கள்தான் இராணுவம் கொலை செய்வதற்கு காரணம் என முஸ்லிம் சகோதரத்துவத்தை குற்றஞ்சாட்டி, முஸ்லிம் சகோதரத்துவம் மோதல்கள் பெருகுவதையும் இன்னும் நிரபராதிகள் இறப்பதையும் நாடுகிறது என்று கூறியுள்ளது.