World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Unemployment hits record highs in Spain, France

ஸ்பெயினிலும் பிரான்ஸிலும் வேலையின்மை மிக உயர்ந்த மட்டத்தை அடைந்துள்ளன

By Alex Lantier
26 April 2013

Back to screen version

நேற்று வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, ஸ்பெயினிலும் பிரான்ஸிலும் வேலையில்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை எப்பொழுதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துவிட்டன. உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் கண்டம் முழுவதும் சுமத்தப்படும் சிக்கன நடவடிக்கைகளின் பாதிப்பையடுத்து ஐரோப்பியப் பொருளாதாரத்தில் விரைவான சரிவு ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயினில், தேசியப் புள்ளிவிவரக் கூடம் (INE) நாட்டில் 6,202,700 வேலையில்லாத் தொழிலாளர்கள் இருப்பதாகத் தகவல் கொடுத்துள்ளது. வரலாற்றிலேயே முதல் தடவையாக 6 மில்லியன் ஸ்பெயின் தொழிலாளர்கள் வேலையற்று இருப்பது இதுதான் முதல் தடவையாகும். 237,400 வேலைகள் இழக்கப்பட்டுவிட்ட நிலையில், ஸ்பெயினின் வேலையின்மை விகிதமானது 1.14 சதவிகிதப் புள்ளிகளில் இருந்து 27.16 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. ஸ்பெயினின் இளைஞர் வேலையின்மை 57.22 சதவிகிதத்தை எட்டிவிட்டது.

ஸ்பெயினில் முற்றிலும் வேலையற்று உள்ள 3.5 மில்லியன் தொழிலாளிகள், குறைந்தப்பட்சம் ஓராண்டாவது வேலையற்றுள்ளனர். 2 மில்லியன் பேர் 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக வேலையற்றுள்ளனர். கிட்டத்தட்ட 280,000 இளம் ஸ்பானியர்கள் நாட்டை விட்டு 2012ல் வேலை தேடி வெளியேறி இருக்காவிட்டால் இன்னும் இது அதிகமாக இருந்திருக்கும்.

கிட்டத்தட்ட 2 மில்லியன் ஸ்பானிய குடும்பங்கள் வேலை செய்து பெறப்படும் வருமானங்களை பெறவில்லை. ஏனெனில் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் வேலையில்லை.

2008 ஆண்டு முதல் ஸ்பெயின் 4 மில்லியன் வேலைகளை இழுந்துள்ளது. வேலையின்மை விகிதம் 20 சதவிகிதப் புள்ளிகள் அதிகரித்துள்ளன. ஸ்பெயினின் வேலையின்மை விகிதம் இப்பொழுது யூரோப் பகுதி நாடுகளிடையே கிரேக்கத்திற்கு சற்றே அடுத்தாற்போல் இரண்டாம் நிலையில் உள்ளது.  கிரேக்கத்தில் வேலையின்மை விகிதம் 2008ம் ஆண்டில்  7.7 சதவிகிதத்தில் இருந்து இந்த ஆண்டு முற்பகுதியில் 27.2 சதவிகிதம் என உயர்ந்துள்ளது. இது 2009ல் நிகழ்ந்த அழிவு தந்த ஐரோப்பிய ஒன்றிய வங்கிப் பிணையெடுப்புக்கள் அலையைக்கு இடையே ஏற்பட்டது ஆகும். 

பிரான்ஸில் “ஏ பிரிவு” வேலை தேடுவோர் எண்ணிக்கை அதாவது கடந்த மாதம் வேலை செய்யவில்லை என்பவர்களுடையது வரலாற்றுத் தன்மை கொண்ட உயர்ந்த அளவான 3,224,600 க்குச் சென்றுவிட்டது. பிரான்ஸில் வேலை வாய்ப்பு நிலையங்களில் வேலை தேடுவோர் மொத்த எண்ணிக்கை விகிதம் இப்பொழுது 10,6 சதவிகிதம் என்று உள்ளது. இளைஞர்களின் வேலையின்மையானது 2012இன் இறுதியில் 25.4 சதவிகிதத்தை எட்டியது.

ஸ்பெயினிலும் பிரான்ஸிலும் மிக அதிக எண்ணிக்கை என்பது ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் வேலையின்மை விகிதத்தில் பரந்த உயர்வின் ஒரு பகுதிதான். இவை 2008 இல் உலகப் பொருளாதார நெருக்கடி வெடித்ததில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய வங்கிப் பிணையெடுப்புக்களை பெற்ற நாடுகளில் மையம் கொண்டுள்ளது.

ஐரோப்பியப் பொருளாதாரம் கிட்டத்தட்ட 1.8 மில்லியன் வேலைகளைக் கடந்த ஆண்டு இழந்துள்ளது. 26 மில்லியன் ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள், அதாவது தொழிலாளர் பிரிவில் 12 சதவிகிதத்தை வேலை ஏதும் இன்றி வெளியேற்றியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியப் பிணையெடுப்புக்களால் தாக்கப்பட்டுள்ள  மற்ற நாடுகளான போர்த்துக்கல்லின் வேலையின்மை விகிதம் 14.8 சதவிகிதத்திலிருந்து 17.5 சதவிகிதத்திற்கு உயர்ந்துள்ளது. இது சைப்ரசில் 10ல் இருந்து 14 சதவிகிதம் என உயர்ந்தள்ளது.

செவ்வாயன்று வெளியிடப்பட்ட Markit யூரோப் பகுதி வாங்கும் மேலாளர்கள் குறியீட்டின் (PMI) புள்ளிவிவரங்கள், ஐரோப்பாவில் பொருளாதாரச் சரிவு தொடர்வதைத்தான் காட்டியுள்ளன. PMI மற்றும் கூட்டு உற்பத்திக் குறியூடு மற்றும் உற்பத்தி (Composite Output Index and Manufacturing) புள்ளிவிவரங்கள் இரண்டும் 46.5 ஐ காட்டின. இது சுருக்கத்திற்கும் வளர்ச்சிக்கும்  நடுவே உள்ள 50 எல்லைக்கோட்டைவிடக் குறைவு ஆகும். சமீபத்திய மாதங்களில் முதல் தடவையாக PMI  புள்ளிவிவரங்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கியப் பொருளாதார சக்தியான ஜேர்மனியிலும் சுருக்கத்தைக் காட்டுகின்றன.

கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது, ஜேர்மனியிலும் இத்தாலியிலும் புதிய கார்கள் பதிவுசெய்யப்படுவது 2013ன் முதல் காலண்டில் 13 சதவிகிதம் குறைந்துவிட்டது. இது பிரான்ஸில் 14.5 சதவிகிதம் குறைந்துவிட்டது.

பாரிய வேலையின்மை பெருமந்த நிலைக் காலத்தில் இருந்த அளவுகளை அடைந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலான இளைஞர்களை கிரேக்கத்திலும், ஸ்பெயினிலும் பாதித்துள்ளது.  இது முக்கியமாக ஐரோப்பிய ஒன்றியம் 2008 ஆரம்ப பொருளாதாரச் சரிவிற்குப்பின் சுமத்திய பேரழிவு தரும் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களின் விளைவு ஆகும். அப்பொழுது முதல் கிரேக்கப் பொருளாதாரம் 20 சதவிகிதத்திற்கும் அதிகமாகச் சுருங்கிவிட்டது, ஸ்பெயினின்  பொருளாதாரம் 5 சதவிகிதம் சுருங்கிவிட்டது.

வேலைகள் குறைந்துவிட்டது கிரேக்கம், ஸ்பெயின், பிரான்ஸ் இன்னும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு வங்கிப் பிணையெடுப்புக்கள் மற்றும் சமூக வெட்டுக்களுக்காகக் செலவிழிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் பொருளாதாரத்தை திருத்துவதற்கு செல்லவில்லை என்பதற்கான மறுக்கமுடியாத குறிப்பு ஆகும். மாறாக அவை ஐரோப்பிய நிதியப் பிரபுத்துவத்திற்கு அதன் செல்வத்தைப் பாதுகாப்பதற்குப் பொருளாதாரத்தைக் கொள்ளையடிப்பதன் மூலம், தொழிலாளர் வர்க்கத்தின் ஊதியங்களையும், சமூகசேவைகளையும் குறைப்பதின் மூலமும் பாதுகாக்க உதவியுள்ளது.

ஒரு சமீபத்திய அறிக்கையில், பிரான்ஸின் INSEE தேசியப் புள்ளிவிவர அமைப்பானது பிரான்ஸில் வாழ்க்கைத் தரங்கள் 2009 முதல் 2010 வரை மொத்தத்தில் 0.5 சதவிகிதம் சரிந்துவிட்டது என்று கண்டிருக்கையில், உயர்மட்ட 5 சதவிகித மக்கள் அவர்களின் வருமானங்கள் உயர்வதைக் கண்டுகொண்டுள்ளனர். உயர்மட்ட 1 சதவிகிதத்தினருடைய அதிகரிப்பு மிக அதிகமாக 89,400 யூரோக்கள் ஆகும்.

முதலாளித்துவ சமூகத்தின் மேல்மட்டப் பகுதியினரின் செல்வக் குவிப்பிற்கு எதிர்முனையில் ஏராளமான உழைக்கும் வர்க்க மக்கள் இழிந்த நிலையிலும் ஆழ்ந்த ஏழ்மைக்கும் ஐரோப்பாவில் இதுவரை கேட்டிராத அளவிற்குத் தள்ளப்பட்டுள்ளதுதான். இலவச சமையலறைகள் மற்றும் இலவச மருத்துவ வசதிகளும் இப்பொழுது ஏராளமான கிரேக்க, ஸ்பெயின் மக்களுடைய பெரும் பகுதியினர் தப்பிப் பிழைக்க முக்கியமாகிவிட்டன.

ஒரு சமீபத்திய உரையில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) துணை நிர்வாக இயக்குனர் டேவிட் லிப்டன் தொடர்ந்து நீடிக்கும் சமூக வெட்டுக்கள் கிரேக்கத்தில் நடந்தது போல் ஐரோப்பா அனைத்தையும் ஒரு பொருளாதார கீழ்நோக்குச் சரிவில் இழுக்கும் என்று கூறினார். “யூரோப் பகுதி புதைமணல் கொள்கையை முகம் கொடுக்கும் நிலைமையில் தன்னைக் காணக்கூடும். இதில் இடைவிடாத இருப்புநிலைக் குறிப்பு சீரழிவு பொருளாதாரத்தை இன்னும் சரிவில் தள்ளி, தைரியமான கொள்கைச் திருத்தலையும் மழுங்க வைத்துவிடும். அந்த நிலைதான் ஜப்பானில் கடந்த 20 ஆண்டுகள் நிலவியதை நாம் பார்த்தோம்” என்றார் அவர்.

இக்கொள்கையின் அடித்தளத்திலுள்ள வர்க்க நலன்கள் அப்பட்டமாக ஒரு சமீபத்திய பேட்டியில் ஐரோப்பிய ஆணையாளர் மரியா டாமனகியால் கூறப்பட்டது. இவர் கிரேக்கத்தின் ToVima  வானொலியிடம் பின்வருமாறு கூறினார்: “கடந்த ஒன்றரை ஆண்டில் ஐரோப்பிய ஆணையத்தின் மூலோபாயம் ஐரோப்பிய நிறுவனங்களின் போட்டித்தன்மையை அதன் கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு எதிராக முன்னேற்றுவிக்கப்பட அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலாளர் செலவுகளைக் குறைத்தல் என்பதாகும்.”

இந்த நலன்கள் ஐரோப்பாவில் 2009ல் இருந்து ஐரோப்பாவில் தொழிலாளர் வர்க்கத்தின் மீது சுமத்தப்பட்ட அனைத்துத்தாக்குதல்களின் தோல்வியைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. எதிர்ப்பு வேலைநிறுத்தங்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன, தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் தொழில்துறை நடவடிக்கைகள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டன, தேவைப்பட்டால் 2010 கிரேக்க வாகன சாரதிகள் வேலைநிறுத்தம், பிரெஞ்சு எண்ணெய்ச் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் நடவடிக்கை மற்றும் ஸ்பெயினின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலைநிறுத்தம் ஆகியவற்றில் நடந்தது போல் பாதுகாப்பு படைகளால் முறிக்கப்பட்டன. ஐரோப்பிய ஆளும் உயரடுக்குகள் தொழிலாளர் வர்க்கத்தின் வறிய நிலைதான் தங்கள் இலாபங்களை உயர்த்தவும், உலக அரங்கில் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கை என்று கருதுகின்றன.

ஆளும் வர்க்கத்திறகு உந்துதல் கொடுக்கும் முக்கிய அச்சம் எழுச்சி பெறும் சீற்றமும் தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்பும் ஆகும். திங்களன்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸே பரோசோ “சிக்கனக் கொள்கைகள் அரசியல், சமூக ஏற்றுக்கொள்ளலின் உயர்வரம்பை அடைந்துவிட்டது” என்று எச்சரித்தார்.

ஆயினும்கூட, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அடிப்படை சிக்கன நடவடிக்கையின் கட்டமைப்பில் இருந்து நகரவில்லை. பிரான்ஸின் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் பிரான்சின் பொருளாதாரச் சரிவு நடப்பதைச் சமாளிக்க எந்தப் புதிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட மாட்டாது என்று கூறிவிட்டார். “2013ல் நமக்கு வளர்ச்சி இருக்காது. ஒரே முன்னேற்றப்பாதை நாம் அறிமுகப்படுத்தியுள்ள நடவடிக்கைகளை முழுமையாகப் பயன்படுத்துவதுதான்” என்றார்.

அனைத்து அடையாளங்களும் தொழிலாளர்களுக்கும் பிற்போக்குத்தன நிதியப் பிரபுத்துவத்திற்கும் இடையே ஐரோப்பா முழுவதும் வர்க்கப் போராட்டங்கள் வெடிப்பு வரும் என்பதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் Eurobarometer கருத்துக் கணிப்பு நிறுவனம் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பின் முடிவில் ஆறு ஐரோப்பிய  நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆழ்ந்த விரோதப் போக்கைக் காட்டுகிறது என்பதை வெளியிட்டது. போலந்து நாட்டில் 42%, இத்தாலியில் 53%, பிரான்ஸில் 56%, ஜேர்மனியில் 59%, பிரித்தானியாவில் 69% மற்றும் ஸ்பெயினில் 72% மக்கள் அவர்கள் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு அமைப்பு என்பதை நம்புவதற்கில்லை என்று கூறியுள்ளனர். ஒன்றாக இந்நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகையான 50 மில்லியனில் மூன்றில் இரு பகுதிக்கு மேல் கொண்டுள்ளன.

ஹாலண்டின் கருத்துக் கணிப்பு மதிப்பு 26 சதவிகிதம் எனக் குறைந்துவிட்டன. இது ஐந்தாவது குடியரசில் ஒரு பிரெஞ்சு ஜனாதிபதிக்கு இதுவரை இல்லாத அளவிற்குக் குறைந்தது ஆகும். ஸ்பெயினின் பிரதம மந்திரி மரியானோ ரஜோயின் அளவு பெப்ரவரியில் 19 சதவிகிதம் எனக் குறைந்துவிட்டது.