World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan plantation unions sign secret wage deal
 

இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் இரகசிய சம்பள ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன

 

By M. Thevaraja and W. A. Sunil

16 April 2013


Back to screen version

இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள், ஏப்ரல் 4 அன்று இரண்டு வருடத்திற்கான புதிய சம்பள ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. வறிய மட்டத்திலான நாட் சம்பளத்தைப் பேணும் இந்த உடன்படிக்கை பற்றி அவை தொழிலாளர்களுடன் எத்தகைய கலந்துரையாடலும் நடத்தவில்லை.

ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான போராட்டம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் வேலை இழப்புக்கு மத்தியில், ஏனய பகுதி தொழிலாளர்கள் மத்தியிலும் பரவக்கூடம் என்ற பீதியின் காரணமாக, அத்தகைய ஒரு போராட்டத்தை முன்கூட்டியே தடுப்பதன் பேரில், தொழிற்சங்கங்கள், தோட்ட உரிமையாளர்கள் மற்றும் ஜனாதிபதி இராஜபக்ஷவின் அரசாங்கமும் கூட்டாக எடுத்த நடவடிக்கையின் விளைவே இந்த ஒப்பந்தமாகும்.

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாட்சம்பளம் 380 ரூபாவிருந்து 450 ரூபாவாக மட்டுமே உயர்த்தப்படும் -அமெரிக்க நாணயத்தில் வெறும் 59 சதம். ஆயினும், இதை நியாயமான ஒப்பந்தமாக காட்டும் முயற்சியில், தோட்ட உரிமையாளர்கள் 20 வீத சம்பள உயர்வு என அறிவித்துள்ளனர்.

வருகைக்கான மேலதிக கொடுப்பனவு 105 இலிருந்து 140 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், விலை பங்கு கொடுப்பனவான 30 ரூபாயில் மாற்றமில்லை. ஒட்டு மொத்த நாட்சம்பளம் 620 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள போதிலும், வருகைக்கான மேலதிக கொடுப்பனவு தொழிலாளி வேலை செய்யும் நாட்களின் எண்ணிக்கையிலேயே தங்கியுள்ளது. ஒரு தொழிலாளிக்கு மாதாந்தம் வழங்கப்படும் 25 வேலை நாட்களில், அவர் 75 வீதம் சமூகமளிக்காவிட்டால், அவர் முழு மேலதிக கொடுப்பனவையும் இழப்பார்.

இந்த சம்பள உயர்வு என சொல்லப்படுவது, எந்த வித்தத்திலும் வானளவில் உயர்ந்திருக்கும் வாழ்க்கைச் செலவுக்கு போதுமானதல்ல. மேலும், தொழிற் சங்கங்கள் உற்பத்தித் திறன் முன்னேற்றத்திற்கு”, அதாவது வேலைப் பளுவை உயர்த்துவதற்கு உடன்பட்டுள்ளதாக பெருந்தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் கூட்டணி பங்காளிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), லங்கா சமசமாஜக் கட்சியினதும் கம்யூனிஸ்ட் கட்சியினதும் தலைமையிலான பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு மையம், மற்றும் வலதுசாரி எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களே இலங்கை வேலை கொள்வோர் சம்மேளனத்துடன் இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளன.

இவற்றுக்கு, மலையக தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற இன்னொரு தொழிற்சங்க கூட்டணியும் உதவியுள்ளது. இதில் இராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காளிகளான தொழிலாளர் தேசிய சங்கமும் (NUW) மலையக மக்கள் முன்னணியும், மற்றும்  ஜனநாயக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான ஜனநாயக தொழிலாளர் காங்கிரசும் (ஜ.தொ.கா.) அடங்குகின்றன.

மலையக கூட்டமைப்பு நியாயமான சம்பள உயர்வுக்காக போராடுவதாக முன்னர் கூறிய போதிலும், மற்ற தொழிற்சங்கள் தமது துரோக வேலையை முடிக்கும்வரை மெளனமாக இருந்தன. அண்மைய ஆண்டுகளில் செய்த ஒவ்வொரு சம்பள வியபாரத்தின் போதும் போலவே, தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர்கள் ஏப்ரல் 4 ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகத் தெரிவித்தனர். ஆனால், இது தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கும் மற்றும் ஒப்பந்தத்திற்கு எதிரான தொழிலாளர்களின் கோபத்தை திசை திருப்புவதற்குமான தந்திரம் மட்டுமே.

வழங்கப்பட்ட அற்ப சம்பளத்தை உயர்த்துவதற்கு பெருந்தோட்ட உரிமையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுப்பதற்காக, ஏப்ரல் 21ம் திகதி கொட்டகலையிலும் அடுத்த நாள் கொழும்பிலும் கறுப்பு நாளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன் கூறினார்.

NUW தலைவர் ஆர். திகாம்பரம், தனது தொழிற்சங்கம் உடன்படிக்கைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யத் தயாராவதாகக் கூறினார். அதே மூச்சில் அவர் தெரிவித்ததாவது: எங்களுடைய தொழிற்சங்க கூட்டமைப்பு, ஒப்பந்தத்தில் கைசாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு எதிரானது அல்ல. எமது போராட்டம் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிரானது ஆகும். கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, நாம் வெளியிலிருந்து போராடுவோம் என நான் ஆறுமுகம் தொண்டமானுக்கும் வேலாயுதத்திற்கும் [ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கத் தலைவர்கள்] கூறினேன்.

 “கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, எமது தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாமான சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதன் பேரில் அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற தனது ஆலோசனையை தொண்டமானும் வேலாயுதமும் கவனத்தில் எடுக்கவில்லை என்பதையிட்டு அதிருப்தியுற்றுள்ளதாக மனோ கணேசன் பாசாங்கு செய்கின்றார். போலி போராளி தொழிற்சங்கத் தலைவர்கள், ஒப்பந்தத்தின் மீதான தொழிலாளர்களின் எதிர்ப்பை தணியச் செய்வதற்காக, அதை எதிர்ப்பதாக பாசாங்கு செய்வதில், தொழிற்சங்கத் தலைவர்கள் வேலையை பங்கிட்டுக்கொண்டிருப்பது அம்பலத்துக்கு வருகின்றது.

தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர்கள் இத்தகைய துரோகத்தை செய்வது இது முதல் முறையல்ல. இதே வலதுசாரி தொழிற்சங்கத் தலைவர்களால் செய்துகொள்ளப்பட்ட முன்னைய ஒப்பந்தங்களுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்துவது பற்றி இத்தகயை போலி வாய்ச்சவடால்கள் விடுக்கப்பட்டுள்ளன. 2006ல் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது, இந்த போராளிகள் தொழிலாளர்களை அமைதிப்படுத்தி எதிர்ப்பை கலைப்பதற்கு செயற்பட்டனர்.

இந்த புதிய ஒப்பந்தம், தோட்டத் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை மீறி இரகசியமாக செய்யப்பட்டதானது தொழிற் சங்கத் தலைவர்கள் கம்பனியனதும் அரசாங்கத்தினதும் நேரடி ஏஜன்டுகள் என்பதை மீண்டும் நிரூபிக்கின்றது. அவர்கள் எல்லோரும் சொத்து உரிமையாளர்கள், வியாபாரிகள் அல்லது முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள அரசியல்வாதிகளாவர். அவர்கள் தொழிலாளர்களின் தேவைகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மாறாக அவர்கள் முதலாளிமார்களதும் முதலாளித்துவ அரசினதும் நலன்களுக்காகவே செயற்படுக்கின்றார்கள்,

பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் தலைவர் லலித் ஒபயசேகர, மேலதிக சம்பளச் செலவை ஈடுகட்ட உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு தொழிற்சங்கங்கள் உத்தரவாதமளித்திருப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார். முதலாளிமார் சம்மேளனம் கூறுவதன்படி, சம்பளச் செலவு வருடத்திற்கு 250 மில்லியனில் இருந்து 350 மில்லியன் ரூபா வரையாகும்.

2011ல் கைச்சாத்திடப்பட்ட முன்னய ஒப்பந்தத்தின் பின்னர், வேலைச் சுமை அதிகரிக்கப்பட்டதற்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் எதிர்புகள் கிளம்பின. ஹட்டன், மஸ்கெலியா, நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் உள்ள பல தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சங்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது எதிர்ப்பு பிரச்சாரங்களில் ஈடுப்ட்டார்கள்.

இலங்கையின் மொத்த தேயிலை ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்தில் 6.6 வீத்தத்தினால் வீழ்ச்சியடைந்தது. இருந்தும் ரூபா மதிபிறக்கம், தேயிலை விலை அதிகரிப்பு மற்றும் தேயிலை கம்பனி பங்கு விலை அதிகரிப்பினதும் விளைவாக பெருந்தோட்டக் கம்பனிகள் நூற்றுக்கணக்கான மில்லியன் இலாபத்தை ஈட்டியுள்ளன.

இலாபம் அதிகரித்துள்ள அதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலமை மோசமடைந்துள்ளதுடன், உண்மையான சம்பளம் 2011ல் கடந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் இருந்து 3.6 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உணவான கோதுமை மா, அநேகமான வீடுகளில் வெளிச்சத்திற்காக பிரதானமாக உபயோகிக்கப்படும் மண்ணெண்ணெய் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடந்த இரண்டு வருடங்களில் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. மின்சாரக் கட்டணமும் போக்குவரத்துக் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளன.  

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை திருப்திப்படுத்துவதற்காக இராஜபக்ஷ அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சிக்கன நடவடிக்கைகளின் கீழ், தோட்டத் தொழிலாளர்களின் மற்றும் முழுத் தொழிலாள வர்க்கத்தினதும் வாழ்க்கை நிலமை மேலும் வீழ்ச்சிநடைந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் தமது அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை தொழிற்சங்கங்களின் ஊடகவும் முதலாளித்துவ கட்சிகளுக்கூடாகவும் பாதுகாக்க முடியாது. வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு ஏற்ப மாதச் சம்பளம், தக்க சுகாதார மற்றும் வீட்டு வசதிகள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் உட்பட்ட தமது வர்க்க நலன்களுக்காக போராடுவதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு சுயாதீனமான ஒரு அரசியல் இயக்கம் அவசியம்.

இது இராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் மற்றும் ஒட்டு மொத்த முதலாளித்துவ வர்க்கத்திற்கும் எதிரான அரசியல் போராட்டமாகும். இது, தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்துக்கான, சோசலிசக் கொள்கைக்கான போராட்டத்தை ஐக்கியப்படுத்த, ஒவ்வொரு தோட்டத்திலும் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கவேண்டியதை அவசியமாக்குகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த முன்னோக்குக்காக போராடுவதற்கு தேவையான புரட்சிகரத் தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டி எழுப்புவது அவசியமாகும்.