World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lankan SEP meeting marks 25th anniversary of Keerthi Balasuriya’s death இலங்கை சோ.ச.க. கீர்த்தி பாலசூரியவின் 25வது நினைவுக் கூட்டத்தை நடத்தியது By our correspondents 14 February 2013 இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.ச) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.ஸ்.ஈ) அமைப்பும் ஒழுங்கு செய்த, கீர்த்தி பாலசூரியாவின் 25வது நினைவு தினக் கூட்டம் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் பெப்பரவரி 10 அன்று நடைபெற்றது. சோ.ச.க.யின் முன்னோடி இயக்கமான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக செயலாளரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைவர்களுள் ஒருவருமான தோழர் கீர்த்தி பாலசூரிய, கொழும்பு அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த வேளையில் இதய நோயினால் பாதிக்கப்பட்டு, 1987 டிசம்பர் 18 அன்று மரணமடைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 39. உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோ.ச.க.யின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் பிரதான பேச்சாளர் ஆவர். அவர் அனைத்துலகக் குழுவினதும் மற்றும் அமெரிக்க சோ.ச.க.யினதும் வாழ்த்துக்களை தெரிவித்தார். அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் கனடாவில் உள்ள சோ.ச.க.யின் வாழ்த்துக்கள் கூட்டத்தின் தலைவரால் வாசிக்கப்பட்டன. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் உட்பட கிட்டத்தட்ட 200 பேர் வரை கொழும்பிலிருந்தும் ஏனய பிரதேசங்களில் இருந்தும் வந்து கூட்டத்தில் பங்கு பற்றியிருந்தனர். வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்தும் மற்றும் மத்திய பெருந்தோட்ட மாவட்டங்களில் இருந்தும் வந்த கட்சி அங்கத்தவர்களும் ஆதரவாளர்களும் இதில் அடங்குவர். கூட்டத்திற்கு தலைமை வகித்த சோ.ச.க.யின் அரசியல் குழு உறுப்பினர் கே. ரட்னாயக்க, கீர்த்தியை நினைவு கூரும் முகமாக ஒரு நிமிட அஞ்சலிக்கு அழைப்பு விடுத்தார். கீர்த்தி போராடிய அரசியல் கொள்கைகள் மற்றும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்குக்கு அவர் வழங்கிய பங்களிப்பின் முக்கியத்துவத்தை இன்றய சர்வதேச அரசியல் நிலமைகள் தெளிவுபடுத்துகின்றன என அவர் கூறினார். “1964ல் லங்கா சமசமாஜக் கட்சி, பப்லோவாத சந்தர்ப்பவாதத்தின் அடிப்படையில் ஸ்ரீ லங்கா சதந்திரக் கட்சியின் முதலாளித்துவ கூட்டரசாங்கத்துள் நுழைந்துகொண்டு செய்த காட்டிக்கொடுப்பின் மூல காரணத்தை, அனைத்துலகக் குழுவின் தலையீட்டின் ஊடாக கீர்த்தி விளங்கிக் கொண்டார்,” என ரட்னாயக்க விளக்கினார். அந்த விளக்கத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை தீர்க்க வேண்டிய அவசியத்தை கீர்த்தி கிரகித்துக் கொண்டு, அகால மரணம் அடையும் வரை அதற்காகப் போராடினார் கீர்த்தியின் வாழ்க்கை துணைவியான விலானி பீரிஸ், கீர்த்தி இறந்த பின்னர், கடந்த 25 வருட காலத்துள் சோ.ச.க. மற்றும் அனைத்துலகக் குழுவும் பாரிய அரசியல், தத்துவார்த்த அபிவிருத்தியை ஏற்படுத்தியுள்ளன, என சுட்டிக் காட்டினார். எல்லா வகையான சந்தர்ப்பவாத மற்றும் திரிபுவாத போக்குகளுக்கும் எதிராக கீர்த்தி தொடுத்த போராட்டங்களின் வரலாற்று படிப்பினைகள், பின்னர் அனைத்துலகக் குழுவும் சோ.ச.க.யும் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.” 1971ல் குட்டி முதலாளித்துவ மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமை தாங்கிய கிராமப்புற இளைஞர்களின் கிளர்ச்சியின்போது, அரச ஒடுக்குமுறைக்கும் அரசியல் பிரச்சனைகளுக்கும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) முகம் கொடுத்தவேளை, கீர்த்தி கட்சியின் வரலாறு பற்றிய ஒரு தீர்க்கமான கற்கையில் ஈடுபடத் தீர்மானத்தார். அனைத்துலகக் குழுவின் பிரித்தானிய பகுதியான சோசலிச தொழிலாளர் கழகம் (எஸ்.எல்.எல்.), தனது கடந்த கால வளமிக்க தத்துவார்த்த போராட்டங்களை கைவிட ஆரம்பித்த காலத்தில், கீர்த்தி அவர்களின் ஆலோசனைக்கு எதிராக கட்சியின் வரலாறு பற்றிய தனது ஆவணத்தையும் மற்றும் முன்னோக்கு வரைவையும் சமர்பிக்க செயற்பட்டார். “ஒவ்வொரு அரசியல் பிரச்சனையையும் அவர் வரலாற்று ரீதியாக அணுகினார்” என பீரிஸ் குறிப்பிட்டார். சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா தனது உரையில் தெரிவித்ததாவது: “அனைத்துலகக் குழுவின் அப்போதைய பிரித்தானிய பகுதியான தொழிலாளர் புரட்சிக் கட்சி, 1970களின் இறுதிப் பாகத்தில் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை நிராகரித்து, மத்திய கிழக்கில் முதலாளித்துவ தேசிய அரசுகளுக்கு அடிபணிந்து சென்றது. அப்படி இருந்த பொழுதிலும், பு.க.க. கீர்த்தியின் தலைமையின் கீழ், இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவத்துக்கு எதிராக சிங்களத் தமிழ் தொழிலாளர்களை சோசலிச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்த போராடியது.” ஐ.எஸ்.எஸ்.ஈ. அழைப்பாளர் கபில பெர்ணான்டோ தெரிவித்ததாவது: “இன்று பூகோள முதலாளித்துவ முறைமையின் நெருக்கடியின் சுமைகள், உலகம் பூராவும் ஏகாதிபத்திய மற்றும் தேசிய முதலாளித்துவ அரசாங்கங்களால் வெகுஜனங்கள் மீது சுமத்தப்படுகின்ற நிலைமையின் கீழ், இளைஞர்கள் உட்பட உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது இடைவிடாத தாக்குதல் தொடுக்கப்படுகின்றது. இத்தகைய நிலமையின் கீழ், தெற்காசியவிலும் உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் பேரில், புரட்சிக் கட்சியை கட்டி எழுப்புவதற்காக பு.க.க. முன்னெடுத்த போராட்டத்தின் வரலாற்று பாடங்கள் என்றும் இல்லாதாவாறு இன்று தீர்க்கமானவையாக உள்ளன.” “அனைத்துலகக் குழுவுக்குள் கீர்த்தியுடன் வேலை செய்த தோழர்கள் மத்தியில் அவர் ஏற்படுத்தியிருந்த மறக்க முடியாத தாக்கத்தை பற்றி” ஞாபகப்படுத்தி டேவிட் நோர்த் தனது உரையை ஆரம்பித்தார். முதன் முதலாக 1972ம் ஆண்டு பிரிட்டனில் சோசலிசஸ்ட் லேபர் லீக் ஏற்பாடு செய்திருந்த கோடைகால பாடசாலையில் கீர்த்தியை சந்தித்ததை பற்றி அவர் நினைவு கூர்ந்தார். அங்கே “கீர்த்தி 1923ல் ஜேர்மன் புரட்சியின் தோல்வியின் காரணிகளை உத்வேகத்துடன் சக்திவாய்ந்த முறையில் தெளிவுபடுத்தினார். நீண்ட தூரத்தில் உள்ள இலங்கையிலிருந்து வந்த இளம் மார்க்ஸ்சிஸ்ட் வெளிக்காட்டிய அறிவினால் ஈர்க்கப்படாமல் எவரும் இருந்திருக்க முடியாது” கீர்த்தியுடன் தனது ஆரம்பகால அரசியல் கூட்டுறவை தொழிலாளர் புரட்சிக் கட்சி (தொ.பு.க.) தடுத்தது பற்றி நோர்த் விளக்கினார். தொ.பு.க. நிரந்தரப் புரட்சி தத்துவத்தை கைவிட்டது சம்பந்தமாகவும் மற்றும் மத்திய கிழக்கு முதலாளித்துவ அரசாங்கங்களுடன் அது சந்தர்ப்பவாத கூட்டு வைத்திருந்தமை சம்பந்தமாகவும் அமெரிக்க தொழிலாளர் கழகம் முன்வைத்த தெளிவான விமர்சனத்தை, பிரிடிஷ் கட்சி பு.க.க.க்கும் ஏனைய அனைத்துலகக் குழு பகுதிகளுக்கும் மூடிமறைத்தது. 1985 கோடை காலத்தில் தொ.பு.க.க்குள் ஏற்பட்ட நெருக்கடி, அனைத்துலகக் குழு மீதான அதன் அமைப்பு ரீதியான ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்ததோடு, கீர்த்திக்கும் தனக்கும் இரண்டு வருட நெருங்கிய அரசியல் கூட்டுறவுக்கு வழிவகுத்தது, என அவர் தெரிவித்தார். முதலாளித்துவ தேசியவாதத்தின் பாத்திரத்தை தெளிவுபடுத்துவதற்காக எம்.என். ரோய்யிடம் இருந்து நோர்த் மேற்கோள் காட்டினார். ரோய், 1922 நவம்பரில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் நான்காவது காங்கிரசில் பங்குபற்றிய பிரதிநிதியாவார். அதில் 1917 அக்டோபர் ரஷ்யப் புரட்சிக்கு பின்னர், பரந்த காலனித்துவ எழுச்சிகளில் ஏற்பட்ட அரசியல் பிரச்சனை பற்றி விவாதிக்கப்பட்டது. ரோய் பின்னர் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு வக்காலத்து வாங்குபவராக அடிபணிந்து போயிருந்தாலும், தொடர்ந்தும் காலனித்துவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நாடுகளில் தேசிய விடுதலை சம்பந்தமான கம்யூனிச அகிலத்தின் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்தார். முதலாம் உலக யுத்தத்தின் முடிவில், பாரிய சமூக எழுச்சிகள் ஏற்பட்ட வேளையில், அவை வெளிநாட்டு ஏகாதிபத்தியத்தை மாத்திரமல்ல, தேசிய முதலாளித்துவத்தையும் உசார்படுத்தின, என றோய் கூறினார். ஏகாதிபத்தியத்திடம் இருந்து தேசிய விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் அவசியம் என ரோய் மேலும் தெரிவித்தார். “மார்க்ஸ்சிஸ்டுகளுக்கு, 91 வருடங்களுக்கு முன்பே, அதாவது 1922ல், முதலாளித்துவத்தின் காட்டிக் கொடுப்பு ஏற்கனவே தெளிவு படுத்தப்பட்டிருக்குமாயின், இன்றைய காலகட்டத்தில் இந்த அரசியல் சீரழிவு நிகழ்வுப்போக்கு எவ்வளவு ஆழமானதாக இருக்கும்?” என நோர்த் கேள்வி எழுப்பினார். கீர்த்தியின் மரணத்தின் பின்னர், கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சியானது, பூகோள அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட நோர்த் தெரிவித்ததாவது: “ஆனால் இந்த உலக வரலாற்று நிகழ்வுகள், கீர்த்தி போராடிய கொள்கைகள் மற்றும் அரசியல் போக்குகளை பெறுமதி இழக்கச் செய்யவில்லை, மாறாக அதன் வரலாற்று முக்கியத்துவத்தை மேலும் உயர்ந்த முறையில் நிரூபித்திருக்கிறது.” பப்லோவாதிகள் உட்பட்ட குட்டி முதலாளித்துவ இடது குழுக்கள், சீன மாவோவாத ஆட்சி மற்றும் பலவகையான முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகள் மற்றும் இயக்கங்களை, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்திற்கு பதலீடாக முன்வைத்ததுடன் பூகோள மூலதன்த்தின் வெளிப்படையான முகவர்களாக ஆகியமை, கீர்த்தி போராடிய கொள்கைகளை சக்தி வாய்த முறையில் நிரூபிக்கின்றன. “ஏகாதிபத்தியத்தின் மிகவும் குற்றவியல் வடிவிலான வெடிப்பை எமது கண்முன்னாலேயே நாம் காண்கின்றோம். ‘பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்’ என்ற போர்வையின் கீழ், அமெரிக்கா உலகம் பூராகவும் பயங்கரவாதத்தையும், குற்றங்களையும் தூண்டிவிடும் பிரதான ஆத்திரமூட்டல் காரனாக முன்வந்திருக்கின்றது,” என அவர் வலியுறுத்தினார். பெப்ரவரி 14 அன்று வரவிருக்கின்ற உலக சோசலிச வலைத் தளத்தின் 15வது ஆண்டு நிறைவு பற்றி நோர்த் கூறியதாவது: “உலக சோசலிச வலைத் தளம் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரமான ஐக்கியத்திற்கு மிகவும் சக்தி வாய்ந்த உபகரணமாக தொழிற்படுகின்றது என்பதை அதுவே நிரூபித்திருக்கின்றது. அத்துடன் இனிவரும் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் உலக சோசலிசப் புரட்சியை ஒழுங்கு செய்யும் கருவியாக அது மாறும் என்பதில் சந்தேகமில்லை” “தோழர் கீர்த்தி புரட்சிகர மார்க்சிசத்தின் முன்னோடியாவார். அவரது வாழ்க்கையும் வேலையும், இன்று அனைத்துலகக் குழுவின் செயற்பாடுகளை வழிநடத்துகின்றன. எமது எழுத்துக்களிலும், எமது வேலைகளிலும் அவர் பிரதிபலிக்கின்றார். எமது இயக்கத்தின் முன்னால் உள்ள எதிர்கால வெற்றிகளிலும் அவர் நினைவுகூரப்படுவார்,” என கூறி நோர்த் உரையை நிறைவு செய்தார். சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ் இறுதி உரையை நிகழ்த்தினார். “நாங்கள் இந்தக் நினவுக் கூட்டத்தை ஒழுங்கு செய்தது, வெறுமனே கடந்த 25 வருடங்களை கணக்கில் கொண்டல்ல. எங்களது கூட்டத்தின் நோக்கம், நாம் இப்பொழுது வாழ்கின்ற உலக அரசியல் நிலமைகள் மற்றும் அபிவிருத்தி அடையும் வர்க்கப் போராட்டங்களையும் ஆய்வு செய்வதேயாகும்”. கீர்த்தியும், தான் உட்பட்ட இளைஞர் குழுவும், 1964ல் லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பினால் எழுப்பப்பட்ட அரசியல் பிரச்சனைகளை, அனைத்துலகக் குழுவின் வழிகாட்டலின் கீழ் கிரகித்துக்கொண்டு, 1968ல் பு.க.க.வை அனைத்துலகக் குழுவின் பகுதியாக அமைத்தது எப்படி என்பதை தெளிவான விபரங்களுடன் டயஸ் விளக்கினார். கீர்த்தி தலைமையிலான பு.க.க., சமசமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்ட பல்வேறு குட்டி முதலாளித்துவ இயக்கங்களின் அரசியலையும் வர்க்கப் பண்பையும் அம்பலப்படுத்தப் போராடியது. பு.க.க.வை தொழிலாள வர்க்க சர்வதேசிய பாதையில் ஸ்தாபித்துக்கொள்ளும் போராட்டத்தின் பாகமாக, கீர்த்தியின் தலை சிறந்த படைப்பான மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலும் வர்க்கப் பண்பும் என்ற நூல், குட்டி முதலாளித்துவ இயக்கங்களின் அரசியலை விபரமான மார்க்சிச விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. கீர்த்தி, கட்சி அங்கத்தவர்கள் மத்தியில் உள்ள அரசியல் பிரச்சனைகள் சம்பந்தமாக விழிப்பாக இருந்தார் என டயஸ் விளக்கினார். 1976 பொது வேலை நிறுத்தத்திற்கு வழிவகுத்த வர்க்க எழுச்சியின் மத்தியில், கட்சிக்குள் இருந்த தொழிலாள வர்க்கத்தின் தன்னிச்சையான போராட்டத்திற்கு அடிபணிகின்ற போக்குக்கு எதிராக பொறுமையாக கீர்த்தி போராடினார். “தொழிலாள வர்க்கம் போராட்டத்திற்கு வரும் போது, கட்சியின் காரியாளர்களின் கடமைகள் தளர்த்படுவதற்கு மாறாக, அந்தப் போராட்டத்தில் இருந்தே வெளிப்படும் வேலைத்திட்டப் பிரச்சினைகள் உட்பட அரசியல் பிரச்சினைகளைக் கையாள்வதில் புரட்சிக் கட்சியின் முன்னால் புதிய சவால்கள் முன்வைக்கப்படுகின்றன என்பதை எப்பொழுதும் கீர்த்தி வலியுறுத்தினார்” என டயஸ் தெரிவித்தார். இலங்கை முதலாளித்துவ ஆட்சியின் அரசியல், பொருளாதார நெருக்கடியின் புதிய வெளிப்பாடே, ஜனாபதியின் நம்பிக்கைக்கு உரியவரை பிரதியீடு செய்வதற்காக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றப் பிரேணையாகும், என டயஸ் விபரித்தார். தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வரும் தவிர்க்க முடியாத எதிர்ப்பை நசுக்குவதற்கான பொலிஸ்-அரச வழிமுறையின் பாகமாக, ஜனாதிபதி இராஜபக்ஷ அரசியல் அதிகாரங்களை தனது கரங்களில் குவித்துக்கொள்கிறார் என டயஸ் விளக்கினார். நவ சமசமாசக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற போலி இடது குழுக்கள், முதலாளித்துவ அமைப்பை பாதுகாப்பதற்றகாக வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதை டயஸ் சுட்டிக்காட்டினார். சோ.ச.க. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் தலையீட்டுக்காக போராடுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். “இராஜபக்ஷ அரசாங்கத்தை வெளியேற்றி, சர்வதேசிய சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் -விவசாயிகள் அரசாங்கத்தை பதிலீடு செய்யும் போராட்டத்திற்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம். இது உலகிலும், தெற்காசியாவிலும் ஐக்கிய சோசலிசக் குடியரசுகளின் பகுதியாக ஸ்ரீலங்கா–ஈழம் சோசலிசக் குடியரசை அமைப்பதற்கான முன்னோக்காகும்.” சிங்கள மற்றும் தமிழ் மொழி பகுதிகள் உட்பட உலக சோசலிச வலைத் தளத்தில் பிரசுரிக்கப்படுகின்ற அனைத்துலகக் குழுவின் மற்றும் சோ.ச.க.யின் அரசியல் ஆய்வுகளை கவனமாக படிக்குமாறும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிக் கட்சியை கட்டி எழுப்பும் போராட்டத்தில் இணையுமாறும் கூட்டத்தில் பங்குபற்றியோரிடம் டயஸ் கேட்டுக்கொண்டார். |
|