World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

The Cypriot bailout marks a new stage in the euro crisis

சைப்ரியட் பிணை எடுப்பு யூரோ நெருக்கடியில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது

Christoph Dreier
11 April 2013

Back to screen version

1958ல் ஐரோப்பிய பொருளாதார சமூகம் நிறுவப்பட்டு (European Economic Community- EEC) 55 ஆண்டுகளுக்குப்பின், ஒரு முதலாளித்துவ அடிப்படையில் ஐரோப்பாவை ஒன்றுபடுத்தும் திட்டம் மற்றும் நீடித்த செழிப்பு கொண்டுவருதல் என்பவை உலக முதலாளித்துவ நெருக்கடியால் தீர்க்கப்பட முடியாமல் சிதைக்கப்பட்டுவிட்டது.

சமீபத்தில் சைப்ரஸ் பிணை எடுக்கப்பட்டு, கிரேக்கத்திற்கும் போர்த்துக்கல்லிற்கும் எதிராக புதிய சிக்கன நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஐரோப்பாவின் மீது ஆதிக்கம் செலுத்த போட்டியிடும் ஆளும் உயரடுக்குகள் இரக்கமின்றிப் போராடுகையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU), அப்பட்டமாக தொழிலாளர்களின் சமூக உரிமைகளை நசுக்கும் ஒரு கருவியாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சைப்ரஸ் பிணை எடுப்பு சைப்ரியட்டின் சேமிப்பாளர்களின் பணத்தை திருடுவதை கருத்திற் கொண்டதாக இருக்கிறது —முடக்கி வைத்தல், மற்றும் பகுதியளவில் 100,000 யூரோக்களுக்கு மேலான அனைத்து வங்கிச் சேமிப்புக்களையும் பறிமுதல் செய்வதின் மூலம்—அதையொட்டி நாட்டின் வங்கித் துறையை நசுக்கும் போக்கு உள்ளது. பிணை எடுப்பு என்பது, தொழிலாள வர்க்கம் சோசலிச அடிப்படையில் முதலாளித்துவச் சொத்தை பறிமுதல் செய்வது என்பதுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.

இப் பிணை எடுப்பு முக்கிய ஐரோப்பிய வங்கிகளின் போட்டியை அகற்றி, ஒரு பொருளாதாரச் சரிவின் மூலம் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை முன்கூட்டியே கொண்டு வருவதாகும். சைப்ரஸில், பிணை எடுப்பின் விளைவாக வரவிருக்கும் ஆண்டுகளில் பொருளாதாரம் 25% சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம், கிரேக்கத்தில் ஒரு சமூகப் பேரழிவிற்கு வழிவகுத்த  பெரும் பணிநீக்கங்கள், ஊதிய வெட்டுக்கள் மற்றும் தனியார்மய முறை மாதிரியை சைப்ரஸ் அரசாங்கம் செயலபடுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.

இத்தகைய பிணை எடுப்புக்களின் பரந்த நோக்கம், கிரேக்கத்தின் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் மரியா டமனகி சமீபத்தில் கூறியதுபோல், ஐரோப்பா முழுவதும் பணி நிலைமைகளையும் ஊதியங்களையும் வெட்டி, அவற்றை கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் மிகவும் மோசமாக சுரண்டப்படும் நாடுகளில் இருக்கும் தரத்திற்கு கொண்டு வருதல் என்பதாகும்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் சட்டத்தில் முறையாக பொறிக்கப்பட்டுள்ள அனைத்து சமூக உரிமைகளும்—அப்பொழுது ஐரோப்பிய முதலாளித்துவம் சமூக சமரசங்களை மேற்கொண்டு ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியை தொடர்ந்த பரந்த புரட்சிகரப் போராட்டங்கள் போன்ற எழுச்சி தவிர்க்கப்பட வேண்டும் என உணர்ந்தது—நசுக்கப்பட்டுள்ளன. உலக நெருக்கடியால் உந்துதல் பெறும் முதலாளித்துவம் தன்னுடைய சட்டங்களையே கிழிப்பதுடன், ஒரு முந்தைய காலத்தின் சமூக நலன்களையும் அழிக்கிறது; இது தொழிலாள வர்க்கத்தை பல தசாப்தங்கள் பின்னோக்கி தூக்கி எறியும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

போர்த்துக்கல்லில் சமீபத்தில் தலைமை நீதிமன்றம் ஐரோப்பிய ஒன்றியம் கோரும் சமூகத் தாக்குதல்கள் நாட்டின் அரசியலமைப்பை மீறுகின்றன எனத் தீர்ப்பு அளித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அதன்பின் போர்த்துக்கல் முற்றிலும் பிணை எடுப்பு உறுதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரியபோது, அரசாங்கம் அது கல்வி, சுகாதாரம், சமூகநல முறைகளில் செலவைக் குறைத்து அது கடன் வாங்கியுள்ளவர்களுக்கு திருப்பிக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளது.

கிரேக்கத்தில், ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்டு, அரசாங்கம் நடைமுறைப்படுத்திய பொதுக்கல்வி முறையில் பரந்த பணிநீக்கங்கள் செய்யப்பட்டது அப்பட்டமாக அரசியல் அமைப்பு உரிமைகளை மீறிய செயலாகும்.

தொழிலாள வர்க்கத்திடையே சீற்ற அலையையும் சமூக எதிர்ப்பு எழுச்சியையும் உணர்ந்த முதலாளித்துவம் இன்னும் அதிக கடுமையான நடவடிக்கைகளை தயாரிக்கிறது. டச்சு நிதி மந்திரி Jeroen Dijsselbloem இன் கருத்துப்படி சைப்ரஸின் பிணை எடுப்பு வகைகள் மற்ற யூரோப் பகுதி நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் அல்லது கிரேக்கத்திலும் செயல்படுத்தப்படலாம் என்று கூறினார்.  ஐரோப்பிய ஒன்றிய உட்சந்தை ஆணையர் மிசேல் பார்னியே வங்கிக் கணக்குகளை “சமன்படுத்துலை” வசதிப்படுத்த ஏற்கனவே ஒரு சட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

குறிப்பாக பேர்லின், சைப்ரியட்டின் வங்கிகள் அழிப்பில் ஒரு முன்னோடியை நிறுவ முற்பட்டுள்ளது; தன் ஆணைகளை மீறும் எந்த நாட்டிற்கும் சைப்ரஸ் ஓர் உதாரணமாக இருக்க வேண்டும் என விரும்புவதுடன், போட்டியாளர்களின் இழப்பில் தன்னுடைய வங்கிகளை வளர்க்கும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கிறது.

சைப்ரசில் தங்கள் வங்கிக் கணக்குகளை சேமிப்பாளர்கள் இழப்பதை முகங்கொடுப்பது பற்றிக் குறிப்பிட்ட Comdirect இன் தலைமை நிர்வாக அதிகாரி Thorsten Retitmeyer, Wirtschaftswoche இடம் கூறினார்: “ஜேர்மனியில் கணக்கு வைத்துக் கொள்வது எவ்வளவு பெறுமதியானது என்பதை மக்கள் காணலாம்” என்றார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே அறிவிக்கப்படாத நிதியப் போர் வலுவடைகையில், இராணுவ உயர் அதிகாரிகள் உண்மையான போர்களுக்கு தயாரிப்புக்களை செய்கின்றர். ப்ளூம்பேர்க் செய்தியின்படி, சுவிஸ் இராணுவம் கடந்த ஆண்டு அதன் அண்டை நாடுகளுக்கு இடையே (ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா) யூரோ சரிவிற்குப்பின் போர் மூளலாம் என்ற முன்கருத்தில் பயிற்சிகளை மேற்கோண்டது. இத்தகைய பயிற்சி மேற்கொள்ளப்பட்டதில் சுவிஸ் இராணுவத்தின் பிரதான நோக்கம், அதன் எல்லைகளைக் கடந்து வெள்ளமென அகதிகள் வருவதை நிறுத்த வேண்டும் என்பதுதான்.

முதலாளித்துவ பிற்போக்குத்தன தாக்குதலை எதிர்க்கும் தொழிலாள வர்க்கத்தின் ஆரம்ப முயற்சிகள் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், குட்டி முதலாளித்துவ “இடது” கட்சிகள் ஆகியவற்றால் விற்கப்பட்டு விட்டன அல்லது அப்பட்டமான ஆற்றலால் முறிக்கப்பட்டன. கிரேக்க கடன் நெருக்கடி தொடங்கியதில் இருந்தே, கிரேக்க இராணுவம் இரண்டு முறை நாடுதழுவிய தொழில்துறை நடவடிக்கைகளை முறித்து, வேலைநிறுத்தம் செய்தவர்களை கட்டாயப்படுத்தி பணிக்கு திரும்ப வைக்க பயன்படுத்தப்பட்டது. இராணுவ வகை அடக்குமுறை ஸ்பெயின் மற்றும் பிரான்சிலும் வேலைநிறுத்தங்களை முறிக்கப் பயன்படுத்தப்பட்டன.

ஐந்து ஆண்டுகள் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் சமூகப் பிற்போக்குத்தனத்திற்கு பின்னர் தொழிலாள வர்க்கம் ஒரு கர்வம் மிக்க உண்மையை நேருக்கு நேர் காண்கிறது: ஆளும் வர்க்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதோ அல்லது சீர்திருத்துவதோ முடியாதது, அது தூக்கியெறியப்பட வேண்டும் என்பதே அது. இதற்காக தொழிலாள வர்க்கத்திற்கு முற்றிலும் வேறுபட்ட போராட்ட அமைப்புக்கள், ஒரு புதிய அரசியல் தலைமை ஆகியவை தேவைப்படுகின்றன.

குட்டி முதலாளித்துவ “இடது” கட்சிகளும் ஐரோப்பிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் ஆளும் உயரடுக்கின் கருவிகளாக செயல்பட்டு வருகின்றன; உறுதியாக வலதிற்கு நகர்வதோடு நெருக்கடி தீவிரமாகிவிட்ட நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனும் தங்கள் சொந்த தேசிய ஆளும் உயரடுக்குகளுடனும் நெருக்கமாக செயற்படுகின்றன.

ஜேர்மனியில் உள்ள இடது கட்சி சைப்ரஸின் வங்கி முறையை அழிப்பதற்கு ஆதரவு கொடுத்து, இந்தக் கொள்கை இன்னும் தொடர்ச்சியாக சர்வதேச அளவில் ஏற்கப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது. ஜேர்மனி, சைபரஸ் இன் பொருளாதாரத்தை நசுக்கையில் அதை நியாயப்படுத்த, இடது கட்சியின் துணைத் தலைவர் Sarah Wagenknecht இதே தீவிர தேசியவாத வாதங்களை பயன்படுத்தினார்.

கிரேக்க முதலாளித்துவத்தின் பிரிவுகளுடைய நலன்களுக்கு ஏற்ப, தீவிர இடது கூட்டணி (சிரிசா) இதேபோன்ற தேசியவாத நிலைப்பாட்டைத்தான்  எடுத்துள்ளது. அது சைப்ரஸ் எதிர்கொள்ளும் சிக்க நடவடிக்கைகள குறித்து மறு பேச்சுக்கள் வேண்டும் என்ற அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தை விமர்சித்திருந்தது; அதே நேரத்தில் அதி-தேசியவாத, ஜனரஞ்சகக் கருத்துக்களைக் கூறும் கிரேக்க சுதந்திரக் கட்சியுடன் கூட்டும் வைத்துக் கொண்டுள்ளது.

இக்கட்சிகளின் ஆக்கிரோஷமான திருப்பம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தொடர்ந்த நிலைப்பாடான தொழிலாள வர்க்கம் பிற்போக்குத்தன அதிகாரத்துவங்களில் இருந்தும் குட்டி முதலாளித்துவ போலி இடதின் பிற்போக்குத்தன அரசியலில் இருந்தும் சுயாதீனமாக அணிதிரட்டப்பட வேண்டும் என்பதை நிரூபணம் செய்கின்றன.

முதலாளித்துவத்தின் ஈவிரக்கமற்ற தன்மை மற்றும் மிருகத்தனத்தை தொழிலாள வர்க்கம் தன்னுடைய முன்னோக்கின் மூலம் எதிர்த்து நிற்க வேண்டும், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதுதான் 1940ம் ஆண்டு நான்காம் அகிலம் விரிவாக்கிய அடிப்படைக் கொள்கையாகும்; அது கடைசி ஐரோப்பிய பேரழிவான இரண்டாம் உலகப்போர் வெடித்திருந்த நிலையில் கூறப்பட்டது. “தேசிய பாதுகாப்புஎன்னும் பிற்போக்குத்தன கோஷத்திற்கு எதிராக, தேசிய அரசு புரட்சிகரமாக அழிக்கப்பட வேண்டும் என்னும் கோஷம் முன்வைக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஐக்கிய சோசலிச உலக அரசுகள் என்பதற்கு பாதை அமைக்கும் அரங்காக, முதலாளித்துவ ஐரோப்பா என்னும் கிறுக்குத்தனமான அமைப்பை எதிர்த்து ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகள் என்ற வேலைத்திட்டத்தை முன்வைப்பது அவசியமாகும்.