சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Government thugs attacked Tamil political party office in Kilinochchi

இலங்கை: கிளிநொச்சியில் தமிழ் கட்சியின் அலுவலகத்தின் மீது அரசாங்க குண்டர்கள் தாக்குதல்

By  Subash Somachandran
19 March 2013

use this version to print | Send feedback

இலங்கையின் வட மாகாணத்தில் முன்னாள் யுத்த வலயமான கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காரியாலயத்தின் மீது, கடந்த மார்ச் 30 அன்று இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு குண்டர் குழு, தாக்குதலை நடத்தியுள்ளது.

இராஜபக்ஷ அரசாங்கம், எதிர்வரும் செப்டம்பர் மாதம் வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளதை அடுத்து, பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரச்சாரத்துக்கு திட்டமிட்டுக்கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல், வடக்கில் மாகாணசபையை கைப்பற்றுவதற்காக அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மீது எவ்வாறான வன்முறைகளை கையாளப் போகிறது என்பதற்கான எடுத்துக் காட்டாகும்.

கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, இலங்கையின் தேசியக் கொடியினைப் பிடித்துக் கொண்டு, கூட்டமைப்புக்கு எதிராக கோசங்களை கூறிக் கொண்டு அங்கு ஊடர்வலமாக வந்த சுமார் 40 அல்லது 50 வரையான குண்டர்கள், அலுவலகத்தின் மீது கற்களை எறிந்து தாக்கினர். அப்போது, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், எஸ் சிறிதரன் மற்றும் சரவணபவன் ஆகியோர் தமது ஆதரவாளர்களுடன் வெளியில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தனர்.

தாக்குதல் ஆரம்பித்தவுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்டிடத்துக்குள் சென்ற பின்னரும், குண்டர்கள் வளாகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல்கள் பற்றிய ஒரு வீடியோ காட்சியினை, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் கூட்டமைப்பு ஆதரவுப் பத்திரிகையான உதயனின் இணைய தளம் வெளியிட்டிருந்தது. அதில்சுமார் 40 அல்லது 50 பேர் வரையானவர்கள் தேசியக் கொடியினைத் தாங்கிய வண்ணம் வீதியால் ஊர்வலமாக கோசங்கள் எழுப்பியபடி வருவதையும் அவர்கள் பின்னர் தாக்குதல் தொடுப்பதையும் காட்டியிருந்தது.

அந்தக் குழுவில் இருப்பவர்கள் இளைஞர்களாக இருந்தனர். ஒருவர் தொலைபேசியூடாக  உரையாடிக் கொண்டு அந்த தாக்குதல்களை வழி நடத்துவதாக அந்த வீடியோ சித்தரித்தது. ஒரு இராணுவக் காவலரண்போல் தோற்றமளிக்கும் ஒரு இடத்தின் அருகில் நின்று குண்டர்கள் கல் எறிந்து கொண்டிருந்தார்கள்.

கிளிநொச்சி நகரமானது, இராணுவத் தாக்குதலில் நசுக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலமையகம் இருந்த இடமாகும். இராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் யுத்தத்தை தொடங்கியதை அடுத்து, கிளிநொச்சி கொடூரமாக சீரழிக்கப்பட்டபோது, பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் கை கால்களையும் இழந்தனர்.

தற்போது அந்த நகரம், வர்த்தக நோக்கத்தினை மட்டும் அடிப்படையாக கொண்டு புனரமைக்கப்பட்டு வருகின்றது. ஆனால், மக்கள் மீள் குடியேற்றம் என்ற பெயரில் எதுவிதமான அடிப்படை வசதிகளுமற்று சாதாரண கூடாரங்களில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளார்கள்.

யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் பூர்த்தியடைந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த நகரம் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளேயே இருக்கின்றது. இராணுவ காவலரண்கள், கண்காணிப்புக்கள் மற்றும் நடமாட்டங்கள் நிறைந்த இந்த நகரத்தில் இவ்வாறான தாக்குதல்கள் இராணுவத்தின் உடந்தையின்றி நடக்கமுடியாது.

தாக்குதலின்போது, பாராளுமன்ற உறுப்பினர்களின் மெய் பாதுகாவலர்கள் உட்பட கூட்டத்திற்கான பாதுகாப்புக்கும் சில பொலிசார் நின்றிருந்தனர். இவர்கள் இந்தக் குண்டர்களைத் தடுக்க எந்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களில் மூவரை, கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பிடித்து பொலிசாரிடம் ஓப்படைத்த போதிலும் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், தான் பொலிஸ் புலனாய்வாளர் என தனது அடையாள அட்டையைக் காட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

இந்த தாக்குதல் அரசாங்கத்தின் ஆதரவுடன் இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்களால் நடத்துப்பட்டது என தமிழ் கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். “அரசாங்கத்தினால் வடமாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், கிளிநொச்சியில் முதலாவதாக நடந்த கூட்டமைப்பின் மக்கள் சந்திப்புக் கூட்டத்தை குழப்பியடிக்கும் நோக்கில் அரசின் அனுமதியுடன் இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்களும் அரசின் அடிவருடிகளும் அராஜகம் புரிந்துள்ளனர்,என கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிலையத்தைத் தாண்டி, வீதிப் போக்குவரத்துப் பொலிஸாரின் துணையுடன் எவ்வாறு ஊர்வலம் நடந்தது? எம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த பொழுது இங்கிருந்த  பொலிஸார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை மக்கள் பிடித்துக் கொடுத்த போதும் பொலிஸார் அவர்களை விடுவித்து விட்டனர். இந்தத் தாக்குதல் அரசினதும், அரச துணைப் படையினரின் ஆதரவுடனும் நடத்தப்பட்டது என்பது இதிலிருந்து தெரிகின்றது, என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துளார்.

இந்த சம்பவத்தை வழமைபோல் அப்பட்டமாக மூடி மறைத்த இராணுவப் பேச்சாளர் ரூவான் வணிகசூரிய,தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொது மக்களே இந்த தாக்கதலை மேற்கொண்னடுள்ளனர். எனினும் நிலைமையை காவற்துறையினர் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதற்கும், இராணுவத்தினருக்கும் சம்பந்தமில்லைஎன தெரிவித்தார்.

இவ்வாறான தாக்குதல்களை அரசாங்கம் ஒருபோதும் ஒத்துக் கொண்டதுமில்லை, தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை இதுவரை கைது செய்ததும் இல்லை.

இந்த தாக்குதலை அடுத்து ஏப்பிரல் 3 அன்று அதிகாலை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவுப் பத்திரிகையான உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி பிரதேச விநியோக அலுவலகம் குண்டர்களின் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த தாக்குதலில் பத்திரிகை விநியோக முகாமையாளரான, 66 வயதான ஆறுமுகம் பொன்ராஜ் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். பொன்ராஜ் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பத்திரிகையை விநியோகத்துக்காக தயார் செய்து கொண்டிருந்தபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதை அடுத்து இன்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகையின் அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் தீவைத்து கொழுத்தப்பட்டுள்ளது.

பத்திரிகை மீதான இந்த தாக்குதல் இந்த ஆண்டில் இது ஐந்தாவது தாக்குதலாகும். மார்ச் 8ம் திகதி வலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவரும் குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

கடந்த பெப்ரவரி மாதம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் அலுவலகம் தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர் புலனாய்வுப் பிரிவின் 4ம் மாடி அலுவலகத்துக்க அழைக்கப்பட்டு மூன்று மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த 4ம் மாடி அலுவலகம் சித்திரவதைகளுக்கு பேர் போனதாகும். இந்த தேடுதலைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் அற்று தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

அரசாங்கம் தேர்தல் வெற்றி பற்றி அவநம்பிக்கை கொண்டுள்ளதையே இந்த சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த உள்ளூராட்சி மற்றும் பொதுத் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பீ.டி.பீ.) வேட்பாளர்கள், வாக்காளர்களின் எதிர்ப்புக் காரணமாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

அரசாங்கம் சர்வதேசத்தின் விமர்சனம் மற்றும் எதிரப்பினை முறியடிப்பதற்காக, தமிழ் மக்கள் தங்களுடன் இருக்கிறார்கள் என்று காட்டிக் கொள்வதற்கு, இந்த மாகாணசபைத் தேர்தலில் அதிக ஆசனங்களை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றது. அது மட்டுமன்றி, வடக்கிலும் கிழக்கிலும் தனது அதிகாரத்தின் கீழான ஒரு மாகாண சபை ஆட்சியை ஸ்தாபிப்பதன் மூலம் எந்தவொரு எதிர்ப்பும் இன்றி தனது நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்க முடியும் என அது எதிர்பார்க்கின்றது.

பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரர்களில் ஒருவருமான கோடாபய இராஜபக்ஷ கடந்த மாத கடைசியில் ஐலண்ட் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில் இதை தெளிவாக வெளிப்படுத்தினார். இலங்கையின் வடக்கு அல்லது கிழக்கு மாகாணத்தில் ஒரு பகைமை மாகாண நிர்வாகம் அமைந்தால், அது யுத்தத்துக்குப் பிந்திய தேசிய நல்லிணக்க முன்னெடுப்புகளுக்கு விரோதமானதாக இருக்கும்,என அவர் தெரிவித்தார். இனவாதத்தை கிளறும் முயற்சியுடன் பதிலளித்த அவர், அத்தகைய ஒரு நிர்வாகம் புலிகளால் விடுக்கப்பட்ட முறையான இராணுவச் சவாலைப் போல் அச்சுறுத்தல் விடுப்பதாக இருக்கக் கூடும்எனக் கூறினார்.

புலிகளின் முன்னாள் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் கூட்டமைப்பு, இந்த தேர்தலில் வெற்றியீட்டிக் கொள்வதன் மூலம், வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு அதிகாரப் பகிர்வுக்காக, ஏகாதிபத்தியவாதிகள் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று நம்புகின்றது. இந்த மூலோபாயத்தினை வாக்காளர்கள் நம்பாததன்  விளைவே குறைந்த வாக்களிப்பு வீதமாகும்.

2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்த உடன், சமாதானமும் சுபீட்சமும் மலரும் என அரசாங்கம் வாக்குறுதியளித்தது. அதற்கு நேர் மாறாக இராணுவம் வடக்கில் எதிர்கட்சிகள் மீது கொடூரமான தாக்குதல்களை மேற்கொள்வதுடன், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பொதுமக்களின் எதிர்ப்பினை நசுக்குவதில் முன்நின்று செயற்படுவதன் மூலம் தனது பிடியை இறுக்கி வருகின்றது.

சர்வதே நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தி வருகின்ற அரசாங்கம், தெற்கில் வளர்ச்சி கண்டுவரும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை கண்டு பீதியடைந்துள்ளது. வெகுஜன போராட்டங்களை நசுக்குவதற்காக அது யுத்த காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட பொலிஸ்-இராணுவ வழிமுறைகளை நாடுவதோடு நாடு பூராவும் பொலிஸ்-அரசைக் கட்டியெழுப்புவதற்கு செயற்படுகின்றது.

ஒரு அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தின் மூலம் வடக்கில் தமிழ் முதலாளித்துவத்தின் கையில் அதிகாரத்தை கையளிப்பதன் மூலமோ அல்லது ஏகாதிபத்திய சக்திகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமோ அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் வாழ்க்கை நிலைமைகளையும் தக்க வைத்துக்கொள்ள முடியாது. இராணுவ ஆக்கிரமிப்பு, யுத்தம், இன மற்றும் மத பேதம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் தோற்றுவாயான முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கி வீசி, சோசலிச வேலைத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதன் மூலம் மட்டுமே ஜனநாயக உரிமைகளையும் வாழ்க்கை நிலைமைகளையும் பாதுகாக்க முடியும்.

இந்த முன்நோக்குக்காக சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை மட்டுமன்றி தெற்காசியாவிலும் உலகம் பூராவும் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களை ஐக்கியப்படுத்துவதற்காகப் போராடும் ஒரே அமைப்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. அது உலகம் பூராவும், குறிப்பாக தெற்காசியாவிலும் ஐக்கிய சோசலிச குடியரசுகளின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடி வருகின்றது.