World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Thatcher’s legacy

தாட்சர் விட்டுச்சென்றுள்ள மரபுரிமை

9 April 2013
Julie Hyland and Chris Marsden

Back to screen version

சிலி நாட்டின் பாசிச சர்வாதிகாரியான ஜெனரல் அகஸ்டோ பினோசேயின் நண்பரும் தென் ஆபிரிக்காவில் இனப்பாகுபாட்டின் அடிப்படையிலான இனவாத அமைப்புமுறையினதும் ஆதரவாளரான மார்கரட் தாட்சர் தனது 87வது வயதில் மாரடைப்பினால் காலமானார்.

ஒரு மாபெரும் அரசபெண்மணி என்று ஊடகங்கள் சூட்டும் புகழாரங்களோ, அல்லது பூரண இராணுவ மரியாதைகளுடன் ஒரு நாள் தேசிய அளவில் துக்கம் அனுஷ்டிப்பதோ, அவர் பிரிட்டிஷ் அரசியலில் அநேகமாய் மிகவும் வெறுக்கப்பட்ட நபராக இறந்திருக்கிறார் என்ற உண்மையை மறைக்க முடியாதது.

உழைக்கும் மக்களில் அநேகமானோர் அவரது இறப்புச் செய்தியை கொஞ்சமும் வருத்தமின்றியோ, அலட்சியத்துடனோ அல்லது சில வேளை கொண்டாட்டத்துடனோ தான் எதிர்கொண்டனர். அவர் இறந்து சில மணி நேரங்களுக்குள்ளாக பல நகரங்களில் உடனடியான வீதிக் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன.

தாட்சரை வின்ஸ்டன் சேர்ச்சிலுடன் ஒப்பிடுதல் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. அந்த ஒப்பீடுகள் பொருத்தமற்றவையாகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வலது-சாரி பாதுகாவலராக இருந்தபோதிலும், சேர்ச்சிலின் எதிரிகளும் கூட அவரது வெளிப்படையான அரசியல் கவுரவத்தை மறுக்க மாட்டார்கள். கூர்மையான நெருக்கடியின் காலத்தில், வரலாற்றில் நிலைத்துநிற்கவும் ஆளும் உயரடுக்கினுள் உள்ள தனது இயல்பான ஆதரவாளர்களிடம் மட்டுமல்லாது ஏனைய சமூகத்தட்டுகளிடமும் அழைப்புவிடுவதற்கு முடிந்தது. ஆனால் அதற்கு நேரெதிராக தாட்சரின் விடயத்திலோ, அவரிடமிருந்து ஒரு புத்திசாலித்தனமான குறிப்பு வந்ததாக மேற்கோள் காட்டப்பட முடியாதுஆதரிக்கும் ஊடகத்திற்கென அளவெடுத்து தொகுக்கப்பட்ட விட்டுக்கொடுக்காத பெண் என்ற உள்ளடக்கமின்றிய வார்த்தைகளையே காட்டமுடியும்.

இங்கிலாந்தின் நடுத்தர வர்க்கத்து குறுகிய-பார்வை மற்றும் அற்பத்தனம் அத்தனையின் உருவடிவமாகவே மார்கரெட் ஹில்டா ராபர்ட்ஸ் இருந்தார். ஒரு பணக்கார கணவரைப் பெற்றிருந்ததே அவரது வெற்றியின் பெரும்பகுதிக்கு காரணமாக இருந்த நிலையில், சுய-முன்னேற்றம் மற்றும் செல்வந்தராவது குறித்த கருத்துகளால் முழுக்க ஆக்கிரமிக்கப்பட்டவராக அவர் இருந்தார். அவரிடம் அரசியல் தகமைகள் ஏதாவது இருந்ததென்றால் அவை சமூகத்தின் உயர்மட்டத்திற்கு ஏற முயலும் ஒருவரின் வெறுப்பூட்டும் சூழ்ச்சித்தனமும் இரக்கமின்மையுமே உள்ளடங்கியிருந்தது.

ஒப்புமையில் ஒன்றுமில்லாத, அரசியல்ரீதியாக சமூகத்திற்கு விரோதமான சிந்தனை உடைய  இதன் சிகரமாக சமூகமென்ற ஒன்றே கிடையாதுஎன்று அறிவித்த ஒருவரை இத்தகையதொரு முக்கியமான பதவிக்கு கொண்டு வந்த வரலாற்று சூழல் அவரது சொந்த வாழ்க்கை வரலாற்றை விட அதிகம் சுவாரஸ்யமானதாகும்.

1975 ஆம் ஆண்டில் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைக்கு தாட்சர் உயர்ந்ததானது, 1968க்கும் 1975க்கும் இடையில் ஐரோப்பாவை உலுக்கிய வெடிப்பு மிகுந்த வர்க்கப் போராட்டங்களின் அலை ஓய்ந்திருந்த நிலையில் பிரிட்டிஷ் மற்றும் சர்வதேச அரசியலில் உருவாகியிருந்த வலது-சாரி திருப்பத்தின் வெளிப்பாடாக இருந்தது. 1974 இல் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தினால் தாட்சருக்கு முன்னர் இருந்த எட்வர்ட் ஹீத் தோற்கடிக்கப்பட்டதில் மிகவும் கசப்படைந்திருந்த பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்திற்குள் இருந்த மிகவும் ஊழலடைந்த மற்றும் பிற்போக்குத்தனமான கூறுகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாகனமாக இவர் இருந்தார்.

தாட்சர் ரோனால்ட் ரீகனின் ஜனாதிபதி காலத்துடன் தெளிவாக தொடர்புபட்டிருந்தார். அமெரிக்காவில் ரீகனாமிக்ஸ்” (“Reaganomics”) நடைமுறைப்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்த மில்டன் ஃப்ரீட்மேனின் பணப் பொருளாதாரத்தை அவர் தழுவிக் கொண்டிருந்தார். தனியார் செல்வத் திரட்டலுக்கு தடையாகவிருந்த அத்தனையும் அகற்றுகின்ற நோக்கத்துடன், அவரது தலைமையானது (1979-1990) சோசலிசத்திற்கு எதிராக பின்தள்ளும் பதாகையின் கீழ் நடத்தப்பட்டது. போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் தொழிலாள வர்க்கம் வென்றெடுத்திருந்த அத்தனை சமூக வெற்றிகளையும் இல்லாதொழிப்பதே இதன் அர்த்தமாக இருந்தது.

உள்ளபடியே இவரது அரசியல் கோரிக்கை முதன்மையாக, வரி விலக்குகள் மூலமும், அரசுச் சொத்துகளை மிகக்குறைந்த விலைக்கு தனியாரிடம் தள்ளி விடுவதன் மூலமும் மற்றும் ஊக வணிக எழுச்சியின் மூலமும் விரைவில் பணக்காரராகும் திட்டத்திற்கு வாக்குறுதி பெற்ற உயர் நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியை நோக்கியே செலுத்தப்பட்டதாக இருந்தது. தொழிற்துறை அழிக்கப்பட்டமை மற்றும் இலண்டன் மாநகரம் தாராளமயமாக்கப்பட்டமை ஆகியவற்றுடன் கைகோர்த்து தொழிற்சங்க உடைப்பு, சமூகநல உதவிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலன்களில் மூர்க்கமான உறுதி ஆகியவை கைகோர்த்து வந்தன. இவற்றின் பின்விளைவாக பாரிய வேலைவாய்ப்பின்மையும் வன்முறையான வர்க்க மோதலுமே இருந்தது.

ஊடகங்களால் இப்போது மூடிமறைக்கப்படுகின்ற தாட்சரின் குற்றங்களில் இன்னொன்று, 1981 இல் வட அயர்லாந்தில் சின் ஃபெயின் பாராளுமன்ற அங்கத்தவரான பொபி சாண்ட்ஸ் மற்றும் பிரிட்டிஷ் அரசின் சிறைகளில் ஒன்பது பிற கைதிகள் உண்ணாநிலை போராட்டத்தில் உயிரிழந்ததில் அவர் ஆற்றிய முக்கிய பாத்திரமாகும். அதற்கு ஒரு வருடத்திற்குப் பின்னர், தேர்தல் ஆதாயத்திற்காக அவர் மால்வினாஸ்/ஃபால்க்லண்ட்ஸ் தீவுகள் தொடர்பாக ஆர்ஜெண்டினாவிற்கு எதிராக போரைத் தொடங்கினார். இம்மோதலின் போது இங்கிலாந்து ஒருதரப்பாக விதித்திருந்த மோதல்விலக்கு மண்டலத்திற்கு வெளியே பின்வாங்கிச் சென்று கொண்டிருந்த ARA ஜெனரல் பெல்கிரனோ கப்பல் திட்டமிட்டு மூழ்கடிக்கப்பட்டதில் 323 பேர் உயிரிழந்தனர். தாட்சரின் தென் அட்லாண்டிக் சாகசம் 900 உயிரிழப்புகளுக்கு இட்டுச் சென்று இன்னும் ஏராளாமானோரின் வாழ்வில் நிரந்தரமான வடுக்களை உருவாக்கியது.

இரும்புப் பெண்மணிஎன்று சித்தரிக்கப்படும் தாட்சர் கொண்டிருந்த மிகப்பெரும் அனுகூலம் என்னவென்றால், தோல்வியடைய தீர்மானித்திருந்தவர்களை மட்டுமே எதிரிகளாக எதிர்கொண்டதுதான். இது தான் அவர் குறித்து பெருமையுடன் கூறப்படும் வெற்றிகளுக்கான காரணமாய் இருந்தது.

ஆர்ஜென்டினாவின் இராணுவ ஆட்சியாளர் விடயத்திலும் இதுவே நிச்சயமாக நடந்தது. எல்லாவற்றினும் மிக முக்கியமாக, தொழிலாள வர்க்கத்தின் மீதான அவரது தாக்குதல் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் செயலூக்கமிக்க ஆதரவைப் பெற்றிருந்தது. தேர்தல்ரீதியாக தொழிற் கட்சியின் ஒரு பிரிவினரால் உருவாக்கப்பட்ட சமூக ஜனநாயகக் கட்சியின் மீது அவர் நம்பியிருந்தார். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாய் தொழிற் கட்சி தொழிற்சங்க காங்கிரசுடன் (Trades Union Congress) கூட்டுச் சேர்ந்து தனது அரசாங்கத்துக்கான வெகுஜன எதிர்ப்பை திட்டமிட்டு சிதறடிப்பதையே அவர் சார்ந்திருந்தார்.

1984-85 ஓராண்டு காலம் நிகழ்ந்த சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தனிமைப்படுத்தப்பட்டு காட்டிக் கொடுக்கப்பட்டதில் இது உச்சகட்டத்தை அடைந்தது. இதன்போது சுமார் 20,000 சுரங்கத் தொழிலாளர்கள் காயமுற்றனர், 13,000 பேர் கைது செய்யப்பட்டனர், 200 பேர் சிறையிலடைக்கப்பட்டதுடன் ஏறக்குறைய 1,000 பேர் ஒட்டுமொத்தமாக வேலைநீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன் இரண்டு பேர் வேலைநிறுத்த போராட்டத்தின் போது கொல்லப்பட்டனர்.

தொழிற்சங்கங்களும் தொழிற்கட்சியும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களைப் பாதுகாப்பதை வெளிப்படையாகக் கைவிட்டு விட்டன என்பதற்கான அடையாளமாக சுரங்கத் தொழிலாளர்களின் தோற்கடிப்பு அமைந்திருந்தது. “புதிய யதார்த்தவாதம்என்பது வர்க்கப் போராட்டம் மற்றும் தொழிலாளர்ஒற்றுமை குறித்த எந்தக் கருத்தையும் கைவிடுவதற்கும், “சுதந்திர சந்தையைத் தழுவிக் கொண்டு பெருவணிகத்தின் மிகை வலது-சாரி கட்சியாக தொழிற்கட்சி உருமாற்றம் பெற்றதற்குமான குறியீட்டு வார்த்தையாக ஆனது.

தொழிற் கட்சி தாட்சரிசத்தை தழுவிக் கொள்வதில் மும்முரமாக இருந்தபோதிலும் கூட, தாட்சரின் முன்னோக்கு தோல்வியடைந்து கொண்டிருந்தது.

தொழிற் கட்சியிடம் இருந்தோ தொழிற்சங்கங்களிடம் இருந்தோ எந்த எதிர்ப்பும் இல்லாத நிலையில், ஆழமான பிளவு கொண்டிருந்த அவரது சொந்த கட்சியே தேர்தல் படுதோல்வியை தவிர்க்க அவரை 1990 இல் சத்தமில்லாமல் கைவிட்டுவிட்டது. அச்சமயத்தில், தாட்சரின் பொருளாதார மற்றும் சமூக கொள்கையின் அழிவுகரமான பின்விளைவுகள் மிக வெளிப்படையாகியிருந்தன. ஒரு தசாப்தத்திற்கு சற்று அதிகமானதொரு காலத்திற்குள்ளாக, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகள் நிதி பிரபுத்துவத்தின் நலன்களுக்காக பெருமளவில் தலைகீழாக்கப்பட்டிருந்தன. நாட்டின் பெரும்பகுதிகள் தொழிற்துறை அழிவுநிலங்களாக மாறி வறுமையையும் மலிவு ஊதிய வேலைவாய்ப்புகளையும் வடுக்களாய் பெற்றிருந்தன. பெரும் செல்வந்தர்களின் குற்றவியல் நடவடிக்கைகளுக்கான ஒரு உலக மையமாக பிரிட்டன் உருமாறி, ரூபேர்ட் மேர்டோக் மற்றும் ஏராளமான ரஷ்ய தன்னநலக்குழு போன்றோருக்கான சுவர்க்கமாக அது ஆகியிருந்தது.

புத்திஜீவித்தன மற்றும் கலாச்சார வாழ்வு என்பது அடையாளம்காண முடியாத அளவுக்கு சிதைந்து போயிருந்தது.

தொடர்ந்து வந்த ஆண்டுகளில், தாட்சரிச பொருளாதார மாதிரியின் ஸ்திரமற்ற அடித்தளங்களான பொருளாதார உற்பத்தியின் எந்த அபிவிருத்தியுடனும் தொடர்பின்றி கற்பனை மூலதனத்தின் பாரிய பெருக்கம், அத்துடன் நிதியுதவி வழங்குவதை அடிப்படையாக கொண்ட கடன்கள் வெடித்துப் பெருகியமை உலக பங்குச் சந்தைகளில் தொடர்ச்சியான நெருக்கடிகளை உருவாக்கவிருந்தது. இருந்தபோதிலும், தாட்சரினால் தனது அரசியல் வாரிசாகப் பிரகடனம் செய்த டோனி பிளேயரின் கீழான தொழிற் கட்சியால் தாட்சரின் கொள்கைகள் பின்தொடரப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டன.

இன்னும் ஏராளமாக கூறமுடியும், கூறப்படும். ஆனாலும் 2008 நிதி நெருக்கடி ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், பாரிய சிக்கன நடவடிக்கைகளே அன்றாட வழக்கமாகியிருக்கும் நிலையில், எந்தவொரு புறநிலையான மதிப்பீடும் 20 ஆம் நூற்றாண்டின் முதலாம் பாதிக்குப் பின் முதலாளித்துவத்தை உலுக்கியிருக்கும் மாபெரும் பொருளாதார மற்றும் சமூகநெருக்கடிதான், தாட்சர் விட்டுச் சென்றிருக்கும் உண்மையான மரபு என்பதை தெளிவாகக் காட்டி விடும்.

செல்வம் கீழ்நோக்கி வடியச் செய்வதின் மூலமாகவும் சந்தையின் அற்புதத்தின் மூலமாகவும் சகலருக்கும் வளமை தருகின்ற ஒரு ஜனநாயகத்தின் சொந்த வீடாக பிரிட்டன் திகழும் என்று அவரளித்த முட்டாள்தனமான மற்றும் நேர்மையற்ற மக்கள் முதலாளித்துவத்தின் வாக்குறுதிகளில் எதுவும் இப்போது மிஞ்சவில்லை. இப்போது அழுகிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறையின் சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களுக்கு தலைமை கொடுத்தவராகவே எதிர்கால தலைமுறை அவரை நினைவுபடுத்திக்கொள்ளும்.