World Socialist Web Site www.wsws.org |
Obama’s “playbook” and the threat of nuclear war in Asia ஒபாமாவின் “நெறிப்படுத்தலும்” ஆசியாவில் அணுவாயுதப்போர் அச்சுறுத்தலும்
Peter Symonds கடந்த ஒரு மாதமாக ஒபாமா நிர்வாகம், வடகொரியாவிற்கு எதிராக பொறுப்பற்ற ஆத்திரமூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இது வடகிழக்கு ஆசியாவில் அழுத்தங்களுக்கு தீயூட்டி போர் அபாயங்களை அதிகரித்துள்ளது. இப்பிரச்சாரத்துடன் இணைந்த வகையில் வட கொரியா ஆட்சியை அரக்கத்தனமாக சித்தரிப்பதுடன் மற்றும் அமெரிக்க இராணுவத்தை கட்டியெழுப்புவது முற்றிலும் “தற்பாதுகாப்பிற்கு” என்று கூறப்படுகின்றது. ஆனால், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் CNN இரண்டும் நேற்று பென்டகன் பல மாதங்கள் முன்னரே இயற்றப்பட்டு ஒபாமா நிர்வாகத்தால் இந்த ஆண்டு முன்னதாக ஒப்புதல் கொடுக்கப்பட்ட “நெறிப்படுத்தல்” (“the playbook”) எனக்கூறப்படுவதை பின்பற்றுகிறது என்றும் கூறுகின்றன. தென் கொரியாவிற்கு அணுவாயுதத்திறன் கொண்ட B52 விமானங்களை மார்ச் 8, 26 திகதிகளில் கொண்டு சென்றதும், மார்ச் 28ல் B2 விமானங்களை அனுப்பியதும், மார்ச் 31ல் F22 Raptor போர்விமானங்களை முன்கூட்டியே அனுப்பியதும் இத் திட்டத்தின் ஒரு பாகமாகும். B52, B-2 அணுவாயுதத் திறன் உடைய முக்கியமான குண்டுத்தாக்குதல் விமானங்களில் “தற்பாதுகாப்பு” அம்சம் ஏதும் இல்லை. இந்த விமானங்கள் முதலில் வட கொரியாவிற்கும் மற்றும் வடகிழக்கு ஆசியாவில் எங்கும் அமெரிக்க இராணுவம் அணுவாயுதத் தாக்குதல்களை நடத்தும் திறனை நிரூபிக்கும் வடிவமைப்பு கொண்டவை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பென்டகன் ஆசிய-பசிபிக்கில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை முறைகளை அதிகரிப்பதை அறிவித்து, இரண்டு அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு அழிப்பு அமைப்புக்களை கொரியாவின் கடலோரப் பகுதியில் நிறுத்தியுள்ளது. CNN உடைய கூற்றின்படி, “நெறிப்படுத்தல்” முன்னாள் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டாவால் இயற்றப்பட்டு, அவருக்கு அடுத்தாற்போல் வந்துள்ள சக ஹாகெல் இதற்கு “வலுவாக ஆதரவு கொடுக்கிறார்.” இத்திட்டம் அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளான “வடகொரிய இராணுவ பதிலடி குறைந்தளவே சாத்தியம்” என்ற மதிப்பீடுகளை அடித்தளமாக கொண்டது. வேறுவிதமாகக் கூறினால், பியோங்யாக் தீவிர அச்சுறுத்தல் எதையும் காட்டவில்லை. பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகள் வாஷிங்டன் இப்பொழுது அமெரிக்க ஆத்திரமூட்டல்கள் வட கொரியாவில் “தவறாக கணிப்பீடுகளுக்கு வகை செய்யலாம்” என்ற கவலைகளுக்கு இடையே சற்று பின்வாங்கியுள்ளது எனக்கூறியுள்ளனர். ஆனால், ஆசியாவில் மிக ஆபத்தான வெடிப்புப்பகுதிகளில் வேண்டுமென்றே எரியூட்டியபின், ஒபாமா நிர்வாகம் பின்வாங்கிக்கொள்ளும் என்பதற்கான அடையாளங்களும் இல்லை. உண்மையில் புதன் அன்று, பாதுகாப்பு மந்திரி ஹாகெல் வடகொரியா காட்டும் இராணுவ அச்சுறுத்தல் பற்றி வலியுறுத்தி, இது “ஓர் உண்மையான, தெளிவான, ஆபத்தை” காட்டுகின்றது என அறிவித்தார். சொற்களை தேர்ந்தெடுத்தவிதம் கவனம் செலுத்தப்பட்டும், அச்சுறுத்துவதாகவும் உள்ளது. “ஒரு தெளிவான, ஆபத்தை முன்வைக்கின்றது” என்னும் சொற்றொடரின் எதிரொலி, கடந்தகால அமெரிக்க ஆக்கிரமிப்பு போர்களை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. உறுதியற்ற, பிரிந்துள்ள வடகொரிய ஆட்சி வாஷிங்டன் வலையில் நேரடியாக விழுந்துள்ளது எனலாம். அதன் ஆக்கிரோஷமான அறிக்கைகளும் மற்றும் வெற்று இராணுவ அச்சுறுத்தல்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உண்மையான போராட்டத்துடன் எத்தொடர்பையும் கொண்டிராததுடன், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு விரோதமானவை ஆகும். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு முற்றிலும் மாறாக, இதன் ஸ்ராலினிச தலைவர்கள் அமெரிக்காவுடனும் அதன் நட்பு நாடுகளுடனும் பல தசாப்தங்களாக நீடித்திருக்கும் பொருளாதார முற்றகைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு உடன்பாடு காண விரும்புவதுடன், நாட்டை உலக நிறுவனங்களுக்கு ஒரு குறைவூதிய தொழிலாளர் அரங்காக திறந்துவிடவும் தயாராக உள்ளனர். தற்போதைய மோதல் காட்டுவது போல், பியோங்யாங் ஒரு சில அற்ப அணுவாயுதங்களைக் கொண்டிருப்பது அமெரிக்கத் தாக்குதலுக்கு எதிராக அதன் பாதுகாப்பை எவ்வகையிலும் அதிகரித்துவிடல்லை. தென்கொரியாவிற்கு பறந்து சென்றுள்ள இரண்டு B2 Stealth குண்டுவீசும் விமானங்கள் நாட்டின் முழு தொழில்துறையையும் மற்றும் இராணுவத்திறனை அழிக்கப் போதுமான அணு ஆயுதங்களைக் கட்டவிழ்த்துவிடும் திறன் உடையவை. அத்துடன் 1950களில் கொரியாவில் மூன்று ஆண்டுகளில் அமெரிக்க போர் கொன்ற 2 மில்லியன் வட கொரியக் குடிமக்களை விட அதிக கொலை செய்யும் திறனும் உடையவை. அமெரிக்க, ஜப்பானிய மற்றும் தென் கொரிய நகரங்களைத் தாக்க முடியும் என்று கூறும் வடகொரியாவின் அச்சுறுத்தல்கள் ஆளும் வர்க்கங்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த பயன்படுத்தும் அச்ச சூழ்நிலையை பலப்படுத்தவே உதவும். தொழிலாள வர்க்கம் ஒன்றுதான் போரைத் தடுக்கும் திறன் உடைய ஒரே சமூக சக்தி ஆகும். சர்வதேசச் செய்தி ஊடகத்தில் உள்ள விமர்சகர்கள் வட கொரிய ஆட்சியின் நடத்தைக்கு காரணங்களைப்பற்றி முடிவிலா ஊகங்களைக் கூறுகின்றனர். ஆனால் கேட்கப்படாத உண்மையான வினா இதுதான்: எதற்காக ஒபாமா நிர்வாகம் வடகிழக்கு ஆசியாவில் ஆபத்தான அழுத்த விரிவாக்கங்களில் ஈடுபடுகிறது? சமீபத்திய அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் டிசம்பர் 2010ல் எடுத்த நடவடிக்கைகளைவிட அதிகம் செல்கின்றன. அப்பொழுது அமெரிக்க மற்றும் தென்கொரிய கடற்படைகள் ஆத்திரமூட்டும்வகையில் வட கொரியாவிற்கும் சீனாவிற்கும் அருகே உள்ள நீர்நிலைகளில் கூட்டுப்பயிற்சிகளை நடத்தின. ஒபாமாவின் வட கொரியா “நெறிப்படுத்தல்” இந்த “ஆசிய முன்னிலை” என அழைக்கப்படுவதில் ஒரு கூறுபாடுதான். ஆசிய முன்னலை என்பது தொடர்ந்து ஆசியாவில் அமெரிக்க ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான இராஜதந்திர, பொருளாதார இராணுவ மூலோபாயமாகும். பிராந்தியம் முழுவதும் அமெரிக்கா வெடிப்புத்தன்மை மிக்க தளங்களை ஊக்குவிப்பதுடன், ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே மோதலுக்கு உட்பட்ட சென்காகு/டயோயுத் தீவுகள் என கிழக்கு சீனக் கடலருகே இருப்பவற்றில் மோதலை தூண்டியிருக்கும் வகையில் புதியவற்றை ஏற்படுத்துகிறது. ஒபாமாவின் முக்கிய இலக்கு வட கொரியாவை பொருளாதார அளவில் திவாலாக்குவதில்லை, ஆனால் அதன் நட்புநாடு சீனாவே இலக்காகும். இதைத்தான் வாஷிங்டன் போட்டித்திறன் உடைய ஆபத்தான நாடு எனக் கருதுகிறது. உலகப் பொருளாதார நெருக்கடியின் ஆழ்ந்த தன்மையினால் உந்தப்பெற்ற நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் தன் இராணுவ வலிமையை பயன்படுத்தி ஆசியா மற்றும் உலகம் முழுவதும் தன் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த முற்படுகிறது. வட கொரியாவிற்கு எதிரான அதன் இராணுவ நடவடிக்கைகள் தன் நட்பு நாடுகளான ஜப்பான், தென் கொரியா ஆகியற்றை தான் பாதுகாக்கும் என்னும் “உத்தரவாதத்தை” வழங்கும் வடிவமைப்பைக் கொண்டவை எனக்கூறுகின்றது இரு நாடுகளில் இருந்தும் முக்கிய நபர்கள் அவற்றின் சொந்த அணுவாயுதங்களை வளர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். அமெரிக்காவின் “உறுதியளிக்கும் சொற்கள்” வடகிழக்கு ஆசியாவில் அணுவாயுதப் போட்டியை தொடங்கும் நோக்கம் கொண்டவை. இது சமாதானத்தை பாதுகாக்கவல்ல மாறாக அமெரிக்க அணுவாயுத ஏகபோக உரிமையை வலுப்படுத்தவாகும். வட கொரியா அழுத்தங்களை அதிகரித்துள்ளது சீனா மீது பெரும் அழுத்தங்களை கொடுத்துள்ளது. அதேபோல் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்கும் அழுத்தம் கொடுத்துள்ளது. பெய்ஜிங்கில் பியோங்யாங்கைத் தொடர்ந்து ஆதரிப்பதா வேண்டாமா என்ற ஒரு முன்னோடியில்லாத பொது விவாதம் ஆரம்பித்துள்ளது. சீனத் தலைமை எப்பொழுதுமே வட கொரிய ஆட்சியை தன்னுடைய வடகிழக்கு எல்லைகளில் ஒரு முக்கிய இடைத்தடை நாடு எனக் கருதி வருகிறது. ஆனால் இப்பொழுது கொரிய தீபகற்பத்தில் இடைவிடா அழுத்தங்கள் என்பது ஒரு பெரிய இராணுவக் கட்டமைப்பை கட்டியெழுப்ப அமெரிக்காவாலும் அதன் நட்பு நாடுகளாலும் பயன்படுத்தப்படலாம் என அஞ்சுகிறது. உண்மையில் ஏவுகணை எதிர்ப்பு முறைகளை அதிகரித்தல், அணுவாயுதத்திறன் உடைய விமானங்களின் பரிசோதனை ஓட்டம் உள்ளடங்கிய பென்டகனின் கடந்த மாத நடவடிக்கைகள் அனைத்துமே அமெரிக்கா சீனாவிற்கு எதிராக அணுவாயுதப் போர் நடத்தும் திறனை அதிகரித்துள்ளன. மேலும் அமெரிக்கா ஒரு போரைத் தூண்ட விரும்பாமல் இருக்கலாம், ஆனால் அதன் ஆத்திரமூட்டல்கள் எப்பொழுதுமே ஆபத்தான முறையில் கட்டுக்கடங்காமல் போய் விரிவடைந்துவிடும் தன்மையைக் கொண்டுள்ளது. ஒபாமாவின் ஆசியப் போருக்கான “நெறிப்படுத்தல்” என்பது சந்தேகத்திற்கிடமின்றி செய்தி ஊடகத்திற்கு கவனமாக கசியவிட்டிருப்பதைவிட இன்னும் அதிகமான பல படிகளை கொண்டுள்ளன. பென்டகன் உடைய அனைத்து நிலைப்பாடுகளுக்கும் திட்டங்களில் கொரிய நெருக்கடி அமெரிக்காவையும் சீனாவையும் ஒரு பேரழிவு தரும் அணுவாயுத மோதலின் விளிம்பில் நிறுத்தும் வாய்ப்பை உள்ளடக்கியுள்ளது. அணுவாயுதப் போர் ஆபத்தை தீர்க்கக்கூடிய ஒரே தீர்வு அதன் மூலாதாரத்தை அழிப்பதுதான். அதாவது திவாலாகிவிட்ட இலாபமுறையையும் மற்றும் உலகை போட்டி தேசிய அரசுகளாக காலம்கடந்து விட்ட முறையில் அது பிரித்துவைத்திருப்பதை அகற்றுவதுதான். சீனா, அமெரிக்கா, ஜப்பான், கொரியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் அனைத்துவித தேசியவாதம், நாட்டுப்பற்று இவற்றை நிராகரித்து போர் என்னும் காட்டுமிராண்டித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் உலகளவில் திட்டமிடப்பட்ட சோசலிசப் பொருளாதாரத்திற்கான ஒரு கூட்டு போராட்டத்திற்காக ஐக்கியப்பட்டவேண்டும். |
|