சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

UN body passes further resolution on Sri Lankan human rights

.நா. சபை இலங்கை மனித உரிமைகள் சம்பந்தமாக மேலும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது


By K. Ratnayake
23 March 2013

use this version to print | Send feedback

வியாழக்கிழமை, ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவை (UNHRC) கூட்டத்தில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கையில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக அமெரிக்க ஆதரவிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கும் மனித உரிமைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது, தெற்காசியாவில் தமது நலன்களை முன்னெடுப்பதற்காக, குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், சீனாவில் தங்கியிருப்பதை குறைக்குமாறு அழுத்தம் கொடுப்பதற்காக, அமெரிக்க மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகள் மேற்கொள்ளும் இராஜதந்திர சூழ்ச்சியின் பாகமாகும்.

யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானம் போர் குற்றங்கள் பற்றிய புதிய ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலைமையிலேயே நிறைவேற்றப்பட்டது. பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி, 2009ல் யுத்தத்தின் கடைசி நாட்களில், புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 12 வயது மகனை இலங்கை இராணுவம் சட்டத்துக்கு புறம்பாக படுகொலை செய்துள்ளதை வெளிப்படுத்தும் புகைப்படங்களை கொண்ட ஒரு விவரணப்படத்தை காட்சிப்படுத்தியது. மனித உரிமைகள் கண்காணிப்பகம், தமிழ் கைதிகள் பரவலாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானமை பற்றி ஒரு தொகுக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டது. ஏற்கனவே, 2011ல், .நா. நிபுணர்கள் குழுவானது 2009ல் இராணுவத் தாக்குதலின் கடைசி வாரங்களில் 40,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று மதிப்பீடு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்ததோடு, போர் குற்றங்கள் சம்பந்தமாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக முடிவுக்கு வந்தது. கடந்த காலத்தில் செய்தது போலவே, இராஜபக்ஷ அரசாங்கம் வெறுமனே சமீபத்திய அம்பலப்படுத்தல்களையும் மறுத்தது.

மாதக் கணக்கான வெளிப்படையான வாத விவாதங்களின் பின்னர், அமெரிக்க தீர்மானத்திற்கு 25 நாடுகள் ஆதரவாகவும் 13 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்ததோடு 8 நாடுகள் வாக்கெடுப்பை பகிஷ்கரித்தன. இந்த தீர்மானம் ஒரு வருடம் முன்னர் ஐ.நா. சபையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விட ஒரு சிறிய வித்தியாசம் கொண்டது. இது தீவில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில், மாகாண தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியையும் உட்கட்டமைப்பு, மறுகட்டமைக்கப்பட்டு, கண்ணி வெடி அகற்றல் மற்றும் மீள்குடியேற்றத்தில் உள்ள "முன்னேற்றங்களையும்" வரவேற்றுள்ளது. அதே நேரத்தில், அது "சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக தனது சொந்த சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணையை நடத்துமாறு" இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றது.

இது அரசாங்கத்தின் சொந்த போர் குற்றங்களை ஆய்வு செய்யுமாறு அதற்கே வேண்டுகோள் விடுப்பதை தவிர வெறொன்றுமல்ல. "படையினர் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை கொன்றமை சம்பந்தமாக அதிகரித்துவரும் ஆதாரங்களுக்கு கண்ணியமான இராஜதந்திர சுருக்கவுரையாகும்," என தீர்மானம் சம்பந்தமாக நியூயோர்க் டைம்ஸ் கூறியுள்ளது.

அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி, "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) பரிந்துரைகளை செயல்படுத்துமாறும், சமீபத்தியகாலமாக எதிர்மாறாக அபிவிருத்தியடையும் சட்ட ஆட்சி மற்றும் மனித உரிமை நிலைமைகளை சரிசெய்யுமாறும்" இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்தார். அமெரிக்கா "இந்த இன்றியமையாத வேலைகளில் உதவத் தயார், "என்று அவர் கூறினார்.

எல்.எல்.ஆர்.சி. அரசாங்கத்தின் வெள்ளை பூசும் வேலையில் ஒன்றாகும். அமெரிக்காவின் விமர்சனங்கள் உட்பட விமர்சனங்களை திசைதிருப்புவதற்கும் போர் குற்றங்களை மூடிமறைப்பதற்குமான முயற்சியில், 2010 அளவில் இராஜபக்ஷ அதை நியமித்தார். அது துணைப்படை குழுக்களின் ஆயுதங்ளை களையவும், காணாமல் போனவர்கள் மற்றும் நீதிக்குப் புறம்பா கொலைகள் பற்றி விசாரணை செய்யவும் மற்றும் தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுடன் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளை செய்துகொள்ளவும் வரையறுக்கப்பட்ட பரிந்துரைகளை செய்தது. ஆயினும், இராஜபக்ஷ அரசாங்கம் அந்த திட்டங்களை கூட கிடப்பில் போட்டுவிட்டது.

கெர்ரியின் அறிக்கை முற்றிலும் பாசாங்கானதாகும். புலிகளுக்கு எதிரான யுத்தத்தை ஆதரித்த அமெரிக்க மற்றும் ஏனைய உலக சக்திகள், இராணுவ தாக்குதலின் இறுதி மாதங்களில் மட்டுமே மனித உரிமை மீறல் பற்றி விமர்சனங்களை முன்வைத்தன. சீனா இராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு முக்கிய ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி வழங்குநராக வெளிப்பட்டதுடன், பின்னர் இந்திய பெருங்கடலில் ஒரு இன்றியமையாத கப்பல் பாதைக்கு அருகில் முக்கிய அமைவிடமாக அமெரிக்கா கருதும் அம்பாந்தோட்டையில் ஒரு துறைமுகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் ஒப்பந்தம் செய்தது.

இந்தியா தனது செல்வாக்குக்கு உட்பட்ட பகுதியாகக் கருதும் பிராந்தியத்தில், அதன் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை முன்னெடுக்கும் எதிர்பார்ப்பில் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. இந்திய அரசாங்கம் திரைக்குப் பின்னால் தீர்மானத்தின் செறிவைக் குறைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தது. உதாரணமாக, அமெரிக்காவின் வரைவில் இலங்கைக்கு UNHRC அதிகாரிகள் "தடங்கலின்றி நுழைவதற்கு" அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இலங்கை அமைச்சரவை அமைச்சர் கெஹலியே ரம்புக்வெல்ல, இந்த நிபந்தனை மற்றும் ஏனைய பிரிவுகளையும் நீக்கியமைக்கு கொழும்பு "இந்தியாவுக்கு நன்றி" கூறுகிறது என்றார்.

அதிகமான அழுத்தம் இராஜபக்ஷவை சீனாவின் சுற்றுப்பாதைக்குள் மேலும் தள்ளும் என்று அஞ்சிய புது தில்லி, கொழும்பு அரசாங்கத்தை சமாதானப்படுத்த இந்த மாற்றங்களை ஏற்படுத்த விரும்பியது. வியாழக்கிழமை, ஹிந்து பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. "இலங்கையின் மூலோபாய துறைகளில் சீனவின் கால்தடங்கள் அதிகரிப்பது பற்றி இந்திய பாதுகாப்பு ஸ்தாபனத்தில் கவலை வளர்ந்து வருகிறது," என்று அது தெரிவித்தது. ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கு சீன மற்றும் இலங்கை நிறுவனங்கள் கூட்டாக செயற்பட்டமையை, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு சபை ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாக மேற்கோளிட்டிருந்தது.

மேலும் இலங்கையில் UNHRC தலையீட்டுக்கான கோரிக்கைகளை ஆதரிப்பது, இந்தியாவின் சொந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவே அவை பயன்படுவதற்கு ஒரு முன்னோடியை அமைக்கும் என்று புது தில்லி கணக்கிட்டுள்ளது.

தென் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் அரசியல் கட்சிகள் கொழும்புக்கு எதிராக ஆரவாரமான இனவாத பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளதுடன், திராவிட முன்னேற்ற கழகம் இலங்கை மீது கடுமையான நிலைப்பாட்டை எடுக்கக் கோருகிறது. புது தில்லி அரசு, தான் அமெரிக்க தீர்மானத்தில் வலுவான திருத்தங்களை கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தது. ஆயினும், இறுதியில், அது எந்த திருத்தங்களையும் முன்வைக்கவில்லை.
 
இந்த ஆண்டு UNHRC உறுப்பினராக இல்லாத சீனா, ஜெனீவாவில் நடந்த கூட்டங்களில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்தது. மேலும், வியாழக்கிழமை, சீன தூதர் லுவோ பூஃகே கொழும்பில் இராஜபக்ஷவுடன் ஒரு கூட்டத்தை நடத்தியதுடன், சீனா இலங்கையின் இறைமையை ஆதரிக்கும் என்றும் சர்வதேச அரங்குகளில் "ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை" எதிர்க்கும் என்றும் தெரிவித்தார். மேலும் உறவுகளை பலப்படுத்துவதற்காக, அவர், சீனா உள்கட்டமைப்பு தவிர்ந்த ஏனைய துறைகளிலும் மேலும் திட்டங்கள் தொடங்கும் என்றும் அறிவித்தார்.

இராஜபக்ஷவின் தூதர் மஹிந்த சமரசிங்க தீர்மானத்தை முழுமையாக நிராகரித்ததோடு இது உச்ச கட்ட ஊடுருவலாகும் எனவும் கடுமையாக கண்டனம் செய்தார். அரசாங்கம் தமிழ் கைதிகள் "12,000 பேருக்கு புணர்வாழ்வு" அளித்துள்ளதாகவும் வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு 27 சதவீத பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளதாகவும் கூறினார்.

உண்மையில், இரகசிய இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்து "புணர்வாழ்வு" அளிக்கப்பட்ட கைதிகள், விடுவிக்கப்பட்ட பின்னர் இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் நிலையான கண்காணிப்பின் கீழ் உள்ளனர். பொருளாதார வளர்ச்சி பற்றிய கூற்று வெறும் வாய்ச்சவாடல் மட்டுமே. அது முதலீட்டையும் சுற்றுலா பயணிகளையும் ஈர்க்க அரசாங்கம் வடக்கில் வீதிகள் மற்றும் பாலங்கள் கட்டும் வேலைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. போரால் நாசமாக்கப்பட்ட அந்தப் பிராந்தியத்தில் மக்கள் தீவிர இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் மிகவும் வறுமையில் வாழ்கின்றனர்.

இராஜபக்ஷ போர் குற்றச்சாட்டுகளை ஒரு "மேற்கத்திய சதி" வகைப்படுத்தினார். அரசாங்கம், மேற்கத்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை கிளறிவிடவும் UNHRC தீர்மானத்தைப் பற்றிக்கொண்டது. புதன்கிழமை, சுமார் 1,000 அரசாங்க ஆதரவாளர்கள் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். சிங்கள-பெளத்த அதிதீவிரவாத குழுக்களும் தமிழ்-விரோத மற்றும் இந்திய எதிர்ப்பு உணர்வை தூண்டிவிட, தமிழ்நாடு கட்சிகளின் இனவாத பிரச்சாரத்தை சுரண்டிக்கொள்கின்றன.

வாழ்க்கை நிலைமைகள், வேலைகள் மற்றும் ஊதியங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் மத்தியில் பெருகிவரும் எதிர்ப்பை திசை திருப்ப, இத்தகைய மேற்கத்தைய எதிர்ப்பு தோரணையுடன் சேர்த்து இனவாத பதட்ட நிலைமைகளை தூண்டி விடுவது அரசாங்கத்துக்கு அவசியமாகும்.

ஏனைய இலங்கை கட்சிகள், அமெரிக்க தொடங்கிய UNHRC தீர்மானத்துக்கு பின்னால் அணிதிரண்டன.

தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் ஒரு கூட்டணியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜெனீவாவுக்குச் சென்று தீர்மானத்துக்கு சார்பாக ஆதரவு தேடினர். "இன பாகுபாடுகளுக்கு அப்பால் அனைத்து இலங்கையர்களுக்கும் நன்மை பயக்கும், என கூட்டமைப்பு குறிப்பிட்டது. கூட்டமைப்பு ஒரு "வலுவான தீர்மானத்துக்காக" பிரச்சாரம் செய்தது. அதன் கவலை மனித உரிமைகளை பாதுகாப்பது பற்றியது அல்ல, மாறாக, அமெரிக்க மற்றும் இந்திய உதவியுடன் ஒரு அதிகார பகிர்வு உடன்படிக்கையே ஏற்படுத்திக்கொள்வதற்காக, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதே ஆகும்.

வலதுசாரி ஐக்கிய தேசிய கட்சி (யூ.என்.பீ) தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தீர்மானம் இலங்கைக்கு ஏற்படுத்தவுள்ள பெரிய நெருக்கடி அவர் கூறிக்கொண்டதை அனுகுவதற்காக, ஒரு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார். அவரது ஊடக மாநாட்டில், விக்கிரமசிங்க போலி இடது நவசமசமாஜ கட்சியின் (....) தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன புடைசூழவும் இருந்தார். அரசாங்கம் அதன் சொந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று விக்கிரமபாகு அறிவித்தார்.

யூ.என்.பி.யுடன் கூட்டணி சேர்ந்துகொண்டுள்ள மற்றொரு போலி "இடது" குழுவான ஐக்கிய சோசலிச கட்சியும், UNHRC தீர்மானம் இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது ஒரு தீர்க்கமான அழுத்தத்தை திணிக்கும்," என நம்பிக்கை தெரிவித்தது.

யூ.என்.பி. உடன் அணிதிரள்வதன் மூலம், பல சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் இனவாத குழுக்கள் போலவே, இந்த முன்னாள் இடது அமைப்புக்களும் தாம் ஒரு ஏகாதிபத்திய சார்பு பாதையை தொடர்கிறோம் என்ற செய்தியை அமெரிக்க மற்றும் ஏனைய சர்வதேச சக்திகளுக்கும் திட்டவட்டமா சமிக்ஞை செய்கின்றன.
 
லிபியா இப்போது மாலி மற்றும் சிறியாவிலும் கொள்ளையடிக்கும் படையெடுப்புக்கு ஒரு போர்வையை வழங்கிய, அமெரிக்காவினதும் ஏனைய வல்லரசுகளதும் மனித உரிமை பாசாங்குகளை தொழிலாள வர்க்கம் நிராகரிக்க வேண்டும். இதே சக்திகள் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவில் போர் குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும். அவை சில உதாரணங்கள் மட்டுமே. அதே நேரம், தொழிலாளர்கள் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து தினிக்கப்படும் பொலிஸ்-அரச வழிமுறைகளை எதிர்ப்பதோடு, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்ட கோர வேண்டும்.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களுக்கு உள்ள ஒரே முன்னோக்கிய வழி, இராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராகவும், ஏகாதிபத்திய சக்திகளின் திட்டங்களுக்கு எதிராகவும் இன பாகுபாடுகளைக் கடந்து சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்படுவதே ஆகும். அதன் அர்த்தம், தெற்காசிய சோசலிச குடியரசு ஒன்றியத்துக்காகவும் மற்றும் உலக சோசலிசத்திற்காகவும் முன்னெடுக்கும் போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுவதே ஆகும்.