தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு use this version to print | Send feedback சைப்ரஸின் மீது சுமத்தப்பட்டுள்ள அபராத நடிடக்கைகள் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் வர்க்கப் போர் தாக்குதலில் ஒரு பண்புரீதியான தீவிரமடைதல் வந்துவிட்டதை குறிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் (EU, ECB, IMF) என்னும் முக்கூட்டு ஆணையிட்டுள்ள விதிகளின்படி,10 பில்லியன் யூரோக்கள் வங்கிப் பிணையெடுப்பு கடன் ஒரு சிறிய மத்தியதரைக்கடல் தீவின் பொருளாதார உயிர்வாழ்வின் அடித்தளத்தை அழிப்பதுடன் பிணைந்துள்ளது. அதனது பாரிய வங்கிகள் கட்டுப்படுத்தப்பட அல்லது மறுகட்டமைக்கப்பட உள்ளதுடன், 100,000 யூரோவிற்கு அதிகமாக உள்ள சேமிப்புக்கணக்குளில் இருந்து 60% ஆன பணம் ஐரோப்பிய மத்திய வங்கிக்கு திருப்பிக்கொடுப்பதற்காக பறிமுதல் செய்யப்படவுள்ளது. இது நிதிய மூலதனத்தின் மிகச்சக்தி வாய்ந்த பிரிவுகளின் கொள்ளைச் செயல் என்பது சைப்ரஸ் அரசாங்கம் மற்றும் முக்கூட்டிற்கும் இடையேயான கசிய விடப்பட்டுள்ள “புரிந்துணர்தல் குறிப்பு” என்பதில் இருந்து தெளிவாகின்றது. “நம்பிக்கைக்குரிய” என்று குறிக்கப்பிடப்பட்டுள்ள இப்பத்திரம் சைப்ரஸ் “உடனடியாக கட்டுமானச் சீர்திருத்தங்களைச்” செயல்படுத்த வேண்டும், அதில் ஓய்வூதிய வயது அதிகரிப்பு வேண்டும், அரசதுறை வேலைகள் குறைப்பு வேண்டும், பரந்த தனியார்மயமாக்கல்கள் வேண்டும் மற்றும் நாட்டின் இயற்கை எரிசக்தி வளங்களைச் சுரண்டவும் “சந்தைப் பொருளாதாரரீதியாக ஒழுங்கமைக்கவும்” “செயற்பாட்டுத்திட்டம்” தேவை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. “பொருளாதாரத்தின் போட்டித்தன்மையுடன்” இயைந்திருக்கும் வகையில் “ஓர் ஊதியக் குறியீட்டு முறை” நிறுவப்பட வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியை பொறுத்தவரை 25% சரியும் என்றும் வேலையின்மை அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரு மடங்கு ஆகும் என்றும் கணிக்கப்பட்டுள்ள சைப்ரசின் நிலையில், இது பாரிய ஊதியவெட்டுக்கள் வரும் என்றே பொருள்படும். ஆளும் உயரடுக்கின் இத்தகைய அரசியல் குற்றத்திற்கான காரணம் என்ன? இதன் உந்துதல்கள் சைப்ரஸ் நெருக்கடி விரிவடைய தொடங்குகையில் கிரேக்கத்தில் ஐரோப்பிய ஆணையாளரான மரியா டமனாகியால் To Vima FM வானொலிக்கான ஒரு நேர்காணலில் விளக்கப்பட்டன. “கடந்த ஒன்றரை ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகளாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் மூலோபாயம் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலாளர் செலவினங்களைக் குறைத்து ஐரோப்பிய நிறுவனங்களின் போட்டித்தன்மையை கிழக்கு ஐரோப்பா அல்லது ஆசியப் போட்டி நிறுவனங்களுக்கு எதிராக முன்னேற்றுவது என்பதாகும்” என்றார் அவர். அடிப்படை செயற்பட்டியல் ஐரோப்பிய ஒன்றியம் சைப்ரஸ், கிரேக்கம் மற்றும் ஐரோப்பா முழுவதும் இருக்கும் நாடுகளில் சுமத்தியுள்ள சமூக அழிவைத் தரும் பிணையெடுப்புக்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் முழு நாடுகளையும் பேரழிவிற்கு உட்படுத்தத் தயாராக உள்ளது என்றால், அதற்குக் காரணம் ஐரோப்பிய மூலதனம் அதன் சர்வதேசபோட்டி அமைப்புக்ளுக்கு எதிராக திறம்படச் செயல்படுவது உறுதியாக்கப்பட வேண்டும் என்பதற்காக அதன் அடிப்படைச் செயற்பட்டியல் ஐரோப்பிய தொழிலாளர் வர்க்க பிரிவை மீண்டும் வறுமையில் தள்ளத் தயார் என்பதுதான். டமனாகியின் சீனா, கிழக்கு ஐரோப்பாவிற்கு எதிராகப் போட்டியின் தேவை பற்றி சாதாரணமாக குறிப்பிட்டதின் தாக்கம் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை 1930களுக்கு பின் கண்டிராத நிலைமைகளுக்கு தள்ளுவதும், இதனால் ஐரோப்பிய நிதியப் பிரபுத்துவத்தின் இலாபங்களை கொழிக்க வைப்பதும்தான். சீனாவில் உத்தியோகபூர்வ மாதாந்திர குறைந்தபட்ச ஊதியம் மாநிலத்திற்கு மாநிலம் 60 யூரோக்களில் இருந்து 200 யூரோக்கள் வரை என வேறுபடுகிறது. ஆனால் கிழக்கு ஐரோப்பா ஒன்றும் அதிகம் பின்தங்கிவிடவில்லை. மாதம் குறைந்தப்பட்ச வருமானம் இங்கு ரூமேனியாவில் 157 யூரோக்கள் ஆகவும், பல்கேரியாவில் 159 யூரோக்கள் ஆகவும், சற்று அதிகமாக செக் குடியரசில் 312 யூரோக்கள் என்றும் போலந்தில் 377 யூரோக்கள் என்றும் உள்ளது. இத்தகைய வறுமைத் தர ஊதிய விகிதங்கள் 1990களில் கிழக்கு ஐரோப்பா முழுவதும் நடத்தப்பட்ட “அதிர்ச்சி வைத்தியத்தின்” நேரடி விளைவாகும். இது சோவியத் ஒன்றியம் அதன் ஆதரவிலான நாடுகள் வீழ்ச்சியடைந்தபின் ஏற்பட்டது. கிழக்கு ஜேர்மனியில் இருந்த ஜேர்மனியின் முக்கிய பெருநிறுவனங்களாலும் மற்றும் வங்கிகளாலும் நம்பிக்கையுடையது எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட Treuhand எனப்படும் ஒரு தனியார்மயமாக்கும் நிறுவனத்தினை முன்னோடியாக கொண்டு, தொழில்துறை மற்றும் சமூக உள்கட்டுமானம் இந்நாடுகளில் மூடப்பட்டன அல்லது மிக அடிமட்ட விலைகளுக்கு விற்கப்பட்டன. மில்லியன் கணக்கானவர்கள் வேலையற்று இருக்கையில், இப்பிராந்தியம் ஒரு குறைவூதிய சந்தையாக சர்வதேச நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது. அவை இங்கு தங்களது செயற்பாடுகளை ஆரம்பிக்க விரைந்தன. இப்பொழுது முழு ஐரோப்பிய முதலாளித்துவமும் உலகப் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி கிழக்கு ஐரோப்பிய “மாதிரியை” கண்டம் முழுவதும் புதிய இயல்புமுறையாக நிறுவ முற்படுகின்றது. சோவியத் ஒன்றியத்தின் சரிவின் 20 ஆண்டுகளுக்குப்பின், ஆளும் உயரடுக்கு அதன் விளைவு ஒரு “சமூக ஐரோப்பாவாக” செழிப்படையும் என்ற அதனது போலி வாக்குறுதிகளை காப்பாற்ற முன்னிற்கவில்லை. மாறாக, தொழிலாளர்களின் உரிமைகள் ஐரோப்பிய மூலதனத்தின் போட்டித்தன்மைக்கு ஒரு தடை என்று கண்டிக்கப்பட்டு, எவர் ஆகக்குறைந்தளவு வழங்குவது என்ற கீழ்நோக்கிய போட்டிக்காக இன்னும் மிருகத்தனமாக அந்த உரிமைகள் அகற்றப்பட வேண்டும் என்று கருதப்படுகிறது. முழு நாடுகளும் “தோல்வியுற்ற நாடுகளுக்கு” சமமானவை என அறிவிக்கப்படுவதுடன், அவற்றின் பொருளாதாரங்கள் சூறையாடப்பட்டு, வேலையின்மை உயர்வடைய செய்யப்பட்டு பல்கேரியாவில் காணப்படுவது போல் மிகமோசமான சுரண்டல் நிலைமையை அடைய வேண்டும் என முனைகின்றன. கடந்த ஆண்டு German Foreign Policy.com கூறியது போல், “அரசாங்கத்திற்கு சொந்தமான வெளிநாட்டு வணிக வளர்ச்சி நிறுவனமான ஜேர்மன் வணிகம் மற்றும் முதலீடு (GTAI) என்பது கிரேக்கத்தில் “ஹெலெனிக் குடியரசு சொத்து அபிவிருத்தி நிதியத்திற்கு (HRADF) ஆலோசனை அமைப்பாக உள்ளது. மார்ச் மாத இறுதியிலிருந்து இது கிரேக்க அரசாங்கச் சொத்துக்களின் உரிமைகள் அனைத்தையும் கொண்டு, அவற்றை விற்கவும் தயாரிப்புக்களை நடத்துகிறது.” “ஜேர்மன் Treuhand வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள HRADF புதிதாக உருவாக்கப்பட்ட ஜேர்மன் மாநிலங்களின் தனியார்மயமாக்கல் மற்றும் மறுகட்டமைப்பு வழிவகைகளில் இருந்து பெற்ற ஜேர்மன் அனுபவத்தில் இருந்து நலன்களைப்பெறுகிறது என்று ஜேர்மனிய பொருளாதார அமைச்சரகம் கருதுவதாக” அவ் வலைத் தளம் எழுதியது. இதே வடிவமைப்பு, ஸ்பெயின், போர்த்துக்கல் இன்னும் பிற இடங்களில் செயல்படுத்தப்பட்டதுபோல் சிறப்புப் பொருளாதார வலையங்களுக்கான திட்டங்களுடனும், தனியார்மயமாக்கல் நிறுவனங்கள் மற்றும் பெரும் தொழில்துறைச் சீர்திருத்தங்கள், பொதுநல வெட்டுக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. இதன் விளைவாக மாநாட்டுக்குழுவான Conference Board என அழைக்கப்படுவது ஜனவரி மாதம் ஓய்வூதியம், இழப்பீடு ஆகிய தொழிலாளர்களின் சமூக உரிமைகளில் காரணியான ஒரு அலகிற்கான உழைப்பு செலவு (unit labour cost) இந்நாடுகளில் 2011, 2012ல் “சரிந்து”விட்டன. கிரேக்கத்தில் கிட்டத்தட்ட 10% சரிந்துவிட்டது. இது ஒரு ஆரம்பம்தான். கிரேக்கத்தில், கடந்த ஆண்டு குறைந்தப்பட்ச ஊதியம் 25% இனால் குறைக்கப்பட்டு 25வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மாதம் 510 யூரோக்களாகவும் மற்றவர்களுக்கு 740 யூரோக்களுக்குக் கீழ் என இருக்கும்போது, வணிகத் தலைவர்கள் வெளிப்படையாக மாதம் 250 யூரோக்களாக குறைக்கப்பட வேண்டும் என்றனர். இந்த தொழிலாளர்களின் ஊதியங்களையும் நிலைமையையும் அழிக்கும் உந்துதல்தான் சைப்ரசிற்கு ஐரோப்பிய ஒன்றியம் காட்டும் இரக்கமற்ற தன்மைக்குக் காரணம் ஆகும். இது ஐரோப்பாவின் ஆளும் உயரடுக்கு தன் இலக்குகளை அடைய எதையும் செய்யும் என்ற எச்சரிக்கையைத்தான் காட்டுகிறது. இந்த ஆளும்தட்டு எந்தவித அச்சமும் இன்றி அது செயல்படச் சுதந்திரமாக இருப்பதாக உணருவதற்கான பொறுப்பு தொழிற்சங்கங்கள் மற்றும் கிரேக்கத்தில் சிரிசா போன்ற போலி இடது குழுக்களாகும். இவை ஐரோப்பிய ஒன்றியத்தின் மிக ஆர்வமுடைய அரசியல் பாதுகாவலர்களாக செயல்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் எதிர்ப்பை நசுக்குகின்றன. மத்தியதர வகுப்பின் சலுகை பெற்ற பிரிவைப் பிரதிநிதித்துப்படுத்தும் இந்த அமைப்புக்கள், ஐரோப்பிய மூலதனம் அதன் போட்டியாளர்களுக்கு எதிராக மேலாதிக்கம் பெற உதவுவதில் சொந்த நலன்களை கொண்டுள்ளன. ஐரோப்பாவில் நடைபெறும் சமூக எதிர்ப்புரட்சி வர்க்கப் போராட்டங்கள் வழிமுறைகள் மூலம்தான் தோற்கடிக்கப்பட முடியும். அனைத்தும் ஐரோப்பிய ஒன்றியம் அதன் அங்கத்துவ அரசாங்கங்கள் மற்றும் அவற்றின் அரசியல் பாதுகாவலர்களுக்கு எதிராக ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை நிறுவுவதற்கான ஓர் ஐக்கியப்பட்ட கண்டம் தழுவிய போராட்டத்தின் அபிவிருத்தியிலேயே தங்கியுள்ளது. |
|
|