World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Costs of Iraq, Afghanistan wars could rise to $6 trillion

ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களின் செலவு 6 டிரில்லியன் டாலர்களுக்கு உயரக்கூடும்

By Bill Van Auken
2 April 2013

Back to screen version

ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் ஒரு தசாப்தத்திற்கும் மேலான அமெரிக்க ஆக்கிரமிப்பு போர்கள் இறுதியில் அநேகமாக 6 டிரில்லியன் டாலர்கள் செலவை அடையலாம், இது ஒவ்வொரு அமெரிக்க குடும்பத்திற்கும் 75,000 டாலருக்கு சமம் எனலாம்.

இப்போர்கள் அமெரிக்காவை பெரும் கடனில் ஆழ்த்தியுள்ளன, கூட்டாட்சி அரசாங்கத்தின் நிதிய வரவு-செலவுத் திட்ட நெருக்கடிகளுக்கு நீடித்த காலம் வகை செய்யலாம். இவைதான் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் கென்னடி அரசாங்கக் கூடம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் உள்ள முடிவுரைகள் ஆகும்.

ஹார்வர்டில் டானியல் பாட்ரிக் மோனிஹன் மூத்த விரிவுரையாளர், பொதுக் கொள்கைப் பகுதியில் இருக்கும், மற்றும் நிதிய, வரவு-செலவுத் திட்ட, மூத்த சிப்பாய்கள் பிரச்சினையில் முக்கிய வல்லுனராக இருக்கும் லிண்டா பில்ம்ஸால் வரையப்பட்ட இந்த அறிக்கை, டிரில்லியன் டாலர்கள் செலவுகளை அளிப்பதில் மிகப்பெரிய பங்கு, நூறாயிரக்கணக்கான துருப்புக்கள் உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் இரு போர்களாலும் சேதப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு பாதுகாப்பு, இழப்பீடு ஆகிய செலவுகளில் இருந்து வந்துள்ளது என்கிறது.

“ஈராக் மற்றும் ஆப்கானிய மோதல்களை ஒன்றாக எடுத்துக் கொண்டால் அமெரிக்க வரலாற்றிலேயே அது மிக செலவுடையதாக இருக்கும் -- 4 பில்லியன் டாலர்களில் இருந்து 6 டிரில்லியன் டாலர்கள் வரை மொத்தம் இருக்கலாம்” என்று பில்ம்ஸ் எழுதுகிறார். “இதில் நீண்ட கால மருத்துவ பாதுகாப்பு, துருப்பினருக்கு, மூத்த சிப்பாய்களுக்கு மற்றும் குடும்பங்களுக்கு, உறுப்புக்கள் இழந்ததை ஒட்டிய இழப்பீடு, இராணுவத் தளவாடங்கள் ஈடுகட்டப்படல், சமூகப், பொருளாதார செலவுகள் ஆகியவை அடங்கும். செலவுகளின் மிக அதிக பகுதி இன்னமும் கொடுக்கப்படவில்லை.”

போர்களின் நீண்ட கால செலவுகளின் மற்றொரு முக்கிய பங்கு, டிரில்லியன் கணக்கான டாலர்கள் என்று ஏற்பட்ட கடன்களை திருப்பிக் கொடுப்பதில் உள்ளது; அமெரிக்க அரசாங்கம் இதை தன் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் சேர்க்கவில்லை, அதே நேரத்தில் செல்வந்தர்களுக்கு பெரும் வரி வெட்டுக்களைச் செயல்படுத்தியது.

இதைத்தவிர, பெரும் செலவுகள் இரண்டு போர்களிலும் பயன்படுத்தப்பட்ட இராணுவ தளவாடங்களுக்கு பதிலாக புதிய கருவிகளுக்கு செலவு செய்யப்பட வேண்டும். இந்த அறிக்கை 2004ம் ஆண்டு இராணுவத்தின் ஊதியம் மற்றும் பிற நலன்களை முன்னேற்றுவிக்க செய்யப்பட்டவற்றையும் குறிப்பிடுகிறது; ஏனெனில் ஈராக் போரில் இறப்பு விகிதங்கள் அதிகமாகி தேர்ந்தெடுக்கப்படும் சிப்பாய்களின் விகிதம் குறைவதைத் தடுக்க இவை தேவைப்பட்டன.

“ஈராக் மற்றும் ஆப்கானிய போர்களின்போது எடுக்கப்பட்ட முடிவுகளின் மரபியம், பல தசாப்தங்களுக்கு வருங்காலக் கூட்டாட்சி வரவு-செலவுத் திட்டங்களில் ஆதிக்கம் செலுத்தும்” என்று பிலம்ஸ் எச்சரிக்கிறார்.

அறிக்கையின் அதிர்ச்சி தரும் முடிவுரைகளில் ஒன்று கிட்டத்தட்ட 1.56 மில்லியன் அமெரிக்கத் துருப்புக்கள்—அனைத்து ஆப்கானிஸ்தான், ஈராக்கிய மூத்த சிப்பாய்களில் 56% —தற்பொழுது மூத்த சிப்பாய்கள் நிர்வாக நிலையங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் இந்த நலன்கள் அவர்களுக்கு கொடுக்கப்படும். அறிக்கையில் மேற்கோளிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, “ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இரண்டு மூத்த சிப்பாய்களில் ஒருவர் ஏற்கனவே நிரந்தர இயலாமை நலன்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.”

உத்தியோகபூர்வ 50,000 அமெரிக்க துருப்புக்கள் “போரில் காயமுற்றனர்” என்பது பரந்த முறையில் இரண்டு அமெரிக்க போர்களால் ஏற்பட்ட உண்மையான மனிதச் செலவுகளை குறைத்து மதிப்பிட்டு தெரிவிக்கிறது.

“மூத்த சிப்பாய்களாக திரும்பும் மூவரில் ஒருவர் மனநல சுகாதார பிரச்சினைகளைக் கொண்டுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது —கவலை, தளர்ச்சி, மற்றும்/அல்லது அழுத்த ஒழுங்கீனம் (PTSD). இதைத்தவிர, கால் மில்லியன் துருப்புக்களுக்கும் மேலான எண்ணிக்கை TBI எனப்படும் அதிரச்சி தரும் மூளைக் காயங்களால் இடர்ப்படுகின்றனர். இவற்றுள் பலவற்றுடன் PTSD யும் சேர்ந்துள்ளது; இது சிகிச்சை, நோயில் இருந்து மீட்பு ஆகியவற்றை இன்னும் பிரச்சினைகளுக்கு உட்படுத்தும்” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

இந்த மன நல சுகாதார நெருக்கடியின் கடுமையான கூறுபாட்டில் குறிப்பாக இருப்பது அமெரிக்க இராணுவத்தினரின் தற்கொலை விகிதம் இரு மடங்காக ஆகியிருப்பது: “தீவிர காயங்களால் கஷ்டப்படும் பலரும் தற்கொலைக்கு முயல்கின்றனர்.”

மொத்தத்தில், மூத்த சிப்பாய்களுடைய நிர்வாகத்திற்கான வரவு-செலவுத் திட்டம் கடந்த தசாப்தத்தில் இரு மடங்கிற்கும் அதிகமாக, 2001ல் 61.4 பில்லியன் டாலர்களில் இருந்து 2013ல் 140.3 பில்லியன் டாலர்கள் என உயர்ந்துள்ளது. அமெரிக்க வரவு-செலவுத் திட்டத்தில் இதன் பங்கு இதே காலகட்டத்தில் 2.5% என்பதில் இருந்து 3.5% என ஆகியுள்ளது.

மூத்த சிப்பாய்களுக்கு உயரும் மருத்துவச் செலவுகள் பல காரணிகளால் ஏற்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் விரைவான சிகிச்சையில் முன்னேற்றங்கள் ஆகும்; ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சிப்பாய்கள் ஆரம்ப போர்களில் இழந்திருக்கக்கூடிய உயிர்களுக்கு பதிலாக காயங்களுடன் தப்பியுள்ளனர்.

அமெரிக்க அரசாங்கம் ஏற்கனவே 134 பில்லியன் டாலர்களை மருத்துவ பாதுகாப்பு மற்றும் இயலாதோர் நலன்களுக்கு என ஈராக், ஆப்கானிஸ்தான் மூத்த சிப்பாய்களுக்கு செலவழித்துள்ள நிலையில், அறிக்கை இந்த எண்ணிக்கை இன்னும் கூடுதலாக 836 பில்லியன் டாலர்களாக வரவிருக்கும் தசாப்தங்களில் உயரும் எனக் கூறுகிறது. சுகாதார பாதுகாப்பில் மிக அதிக செலவுகள் இரண்டாம் உலகப் போர் மூத்த சிப்பாய்கள் குறித்து 1980களில் இருந்தன என்று குறிப்பிடுகிறது, அது போர் முடிந்து நான்கு தசாப்தங்களுக்கு பின் ஆகும். மருத்துவப்பாதுகாப்பு, இயலாமை இழப்பீடுகள் என்று வியட்நாம் போர் மூத்தவர்களுக்கு இன்னும் உயர்ந்துகொண்டிருக்கிறது.

இரண்டு போர்களில் இருந்து திரும்பிய துருப்புக்கள் இடருறும், மிகவும் பொதுவான மருத்துவ பிரச்சினைகள் அறிக்கையின்படி, “சேர்க்கவும்: தசைநார் எலும்புக்கூட்டுக்குரிய நோய்கள் (முக்கியமாக மூட்டு, முதுகுப்புறப் பிரச்சினைகள்) மன ஆரோக்கிய ஒழுங்கீனங்கள், மத்திய நரம்பு மண்டலம், மற்றும் உட்சுரப்பு ஒழுங்கீனங்கள் மற்றும் சுவாச, சீரண, தோல், கேட்கும் ஒழுங்கீனங்கள்.” துருப்புக்களில் 29% PTSD இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.

மிகவும் மோசமாக காயமுற்றவர்களில் 6,476 சிப்பாய்களும், மரைன்களும் உள்ளனர்; அவர்கள் “கடுமையான மூளை ஊடுருவல் காயத்தால்” பாதிக்கப்பட்டுள்ளனர்; மற்றும் ஒரு 1,715 பேர் ஒன்று அல்லது இரண்டு மூட்டு உறுப்புக்களை இழக்க நேரிட்டுள்ளது. 30,000 க்கும் மேற்பட்ட மூத்த சிப்பாய்கள் 100 சதவிகிதம் பணித் தொடர்புடைய இயலாநிலையில் கஷ்டப்படுகின்றனர் மற்றும் ஒரு 145,000 பேர் 70 முதல் 90% வரை செயல்பட முடியாதவர்கள் எனப்பட்டியல் இடப்பட்டுள்ளனர்.

இப்பாதிப்புக்களில் மோசமானவை ஒபாமா நிர்வாகத்தால் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி உத்தரவிட்டிருந்த விரிவாக்கம் என்பதில் பாதிக்கப்பட்டவர்களாவர். “Walter Reed இராணுவ மருத்துவமனை நூற்றுக்கணக்கான சமீபத்திய உறுப்பு இழந்தவர்கள் மற்றும் கடுமையான இழப்புக்களை உடையவர்களுக்கு சிகிச்சை கொடுக்கிறது; இம்மருத்துவமனை, 2010ல் 100 உறுப்பு இழந்தவர்களுக்கு சிகிச்சை கொடுத்தது, 2011ல் 170 உறுப்பு இழந்தவர்களுக்கு, 2012ல் 107 உறுப்பு இழந்தவர்களுக்கு” என்று அறிக்கை கூறுகிறது. “மரைன்கள் மிக அதிக எண்ணிக்கையில் உறுப்புக்களை இழந்துள்ளனர்.”

அறிக்கை சுட்டிக்காட்டுவது போல், இரண்டு ஏகாதிபத்திய தலையீடுகள் குறித்த பாரிய நேரடிச் செலவுகள் தொடர்கின்றன. ஆப்கானிஸ்தானில் 60,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கத் துருப்புக்கள் இன்னமும் உள்ளனர். ஒரு அமெரிக்க சிப்பாய், ஓராண்டிற்கு இப்போரில் ஈடுபடுவதற்கான செலவு 1 மில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது; இதில் ஆப்கானிய பாதுகாப்புப் படையினர் தங்களுடைய நட்புப்படை அமைப்பினர் மீது நடத்திய “பச்சை நீலத்தின்மீது” எனப்பட்ட தாக்குதல்களும் அடங்கும். அவர்கள் வீடுகளுக்கு கொண்டுவரப்படுகையில், அது இன்னமும் கூடுதலாக மருத்துவப் பாதுகாப்பு மற்றும் இயலாமை இழப்பீட்டை அதிகரிக்கும்.

மேலும், “போர் அலைகள் பின்வாங்குகின்றன” என்னும் ஒபாமாவின் கூற்றுக்கள் இருந்தாலும்கூட, “ஒரு நீடித்த மூலோபாய பங்காளித்தன உடன்பாடு” அமெரிக்க ஜனாதிபதி மற்றும் காபூலில் இருக்கும் அமெரிக்க கைப்பாவை ஜனாதிபதி ஹமித் கர்சாயிக்கு இடையே கையெழுத்தானது, 2014 முடிவில் முறையாக பின்வாங்குவதற்கான காலக்கெடு முடிந்த பின்னும் கூட, அமெரிக்க இராணுவ செயற்பாடுகள் ஆப்கானிஸ்தானில் குறைந்தபட்சம் இன்னும் ஒரு தசாப்தத்திற்கு தொடரும்.

அறிக்கை சுட்டிக் காட்டுவது போல், “அமெரிக்கா ஈராக்கில் பரந்த இராஜதந்திர நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதில் குறைந்தப்பட்சம் 10,000 தனியார் ஒப்பந்தக்காரர்கள், பாதுகாப்பு, தொழில்நுட்பத் தகவல், தளவாடங்கள், பொறியியல் மற்றும் பிற தொழில்களில் ஈடுபடுபவர்கள் உள்ளனர்; இது தவிர தளவாட ஆதரவு, குவைத்தில் பெற்ற குத்தகை நிலையங்களுக்கான பணம் அளித்தல் ஆகியவையும் உண்டு.”

இறுதியில் அமெரிக்க அரசாங்கம் போர்களுக்கு ஒதுக்கிய நிதி வழிவகையும் உள்ளது; இது பயங்கரவாதம், “பேரழிவு ஆயுதங்கள்” என்று அவற்றை தொடக்குவதற்கு கூறப்பட்ட போலிக் காரணங்கள் போன்ற தளத்தையே கொண்டிருந்தன.

புஷ் நிர்வாகம் ஈராக்கிய போரின் தொடக்கத்தில், ஈராக்கிய எண்ணெய் வருமானத்தின் மூலமே போருக்கான நிதி கிடைத்துவிடும் எனக் கூறியது. புஷ்ஷின் தேசிய பொருளாதாரக் குழுவின் இயக்குனர் Lawrence Lindsey வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம், போர், 100 பில்லியன் டாலர்களில் இருந்து 200 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என கூறியபோது, நிர்வாகத்தின் மற்றவர்களிடம் இருந்து அவர் தாக்குதலுக்கு உட்பட்டார், அது மிக அதிகமான மதிப்பீடு என்று அவர்கள் கூறினர்; லின்ட்சே இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டார்.

இரண்டு போர்களுக்கும் நிதியளிக்க வாஷிங்டன் கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர்கள் கடன் வாங்க நேர்ந்தது; இதன் பெரும் பகுதி வெளிநாட்டுக் கடன் கொடுப்போரிடம் இருந்து வந்தது. இது 2001 முதல் 2012 வரை அமெரிக்க தேசிய கடனுக்கு சேர்க்கப்பட்ட மொத்தப் பணத்தில் கிட்டத்தட்ட 20% ஆகும். அறிக்கையின்படி, அமெரிக்கா “ஏற்கனவே 260 பில்லியன் டாலர்களை போர்க்கடனுக்கான வட்டியாக கொடுத்துள்ளது”, வருங்கால வட்டிப் பணங்கள் டிரில்லியன் கணக்கான டாலர்களாக இருக்கும்.

அறிக்கை, “இப்படி கடன் வாங்குவது நாட்டின் மூலதன கையிருப்புக்கு முதலீடு செய்யப் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது” என்று கூறுகிறது. “உதாரணமாக, கல்வி, உள்கட்டுமானம், அறிவார்ந்த நிலை (ஆய்வு & வளர்ச்சி) ஆகியவை நாட்டிற்கு நலன் அளிப்பதற்கானவை, எனவே இந்தக் கடன் ஒரு பயனுள்ளதாக நோக்கத்திற்காகனதாகும். மாறாக போர்க்கடன் என்பது குறிப்பாக எந்தவித பயனையும் தராது.”

பரந்த வளங்கள் உண்மையில் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் புகையாகத்தான் போயின; பல பில்லியன் டாலர்கள் உதவி, மறுகட்டமைப்பு திட்டம் என்று கூறப்பட்டவை பெரும் ஊழல் தகுதியற்றநிலை, திறன் இல்லாநிலை ஆகியவற்றால் வீணடிக்கப்பட்டன. அந்நாட்டு மக்களின் நிலைமைகளை மேம்படுத்த அவை ஒன்றும் செய்யவில்லை.

அதன் முடிவுரையில், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் முழு அளவுப் போர்களை முடிப்பது ஒருவித “சமாதானம் பற்றிய ஈவைக் கொடுக்கும்” என்னும் போலிக் கருத்துக்களை அகற்ற அறிக்கை முற்படுகிறது; அதாவது அத்தகைய சமாதான ஈவு, வறுமை, வேலையின்மை, சரியும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை அமெரிக்காவிலேயே உயர்த்த உதவும் என்பதுதான் அந்த போலிக்கருத்தாகும்.

“மாறாக, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மோதல்களின போது எடுக்கப்பட்ட ஏராளமான முடிவுகள் குறிப்பிடத்தக்க நீண்டகால செலவுகளை கூட்டாட்சி அரசாங்கத்தின் மீது சுமத்தும்” என்று அது எச்சரிக்கிறது. “சுருங்கக் கூறின், சமாதான ஈவு என்று ஏதும் இருக்கப்போவதில்லை, ஈராக் ஆப்கானிய மரபியம் பல தசாப்தங்கள் நீடிக்கும் செலவுகளாக இருக்கும்.”