World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Support the struggle of Sri Lankan university teachers

இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் போராட்டத்தை ஆதரியுங்கள்

By the Socialist Equality Party (Sri Lanka)
25 September 2012
Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ...) அதன் மாணவர் இயக்கமான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்களும் (.எஸ்.எஸ்..), வேலைநிறுத்தம் செய்யும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு பொதுமக்கள் கொடுக்கும் பரந்த ஆதரவை முழு மனதுடன் வரவேற்கின்றன. நல்ல சம்பளம் மற்றும் நிலைமைகளுக்கான அவர்களின் கோரிக்கைகள், அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மூலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முழு தொழிலாள வர்க்கத்தையும் தட்டி எழுப்பியுள்ளது.

சோ.ச.க., வாழ்க்கைத் தரத்தை பாதுகாப்பதற்கான சாத்தியமானளவு பரந்த பிரச்சாரத்தை முன்னெடுப்பதன் பகுதியாக, இந்த விரிவுரையாளர்களுக்கு ஆதரவளிக்க சொந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது. இது ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கும் முழு கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை அவசியமாக்கியுள்ளது. இதில் சம்பந்தப்பட்டுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் (எஃப்.யு.டீ.ஏ) தலைவர்கள், அடிப்படையில் இந்த முன்னோக்குக்கு எதிரானவர்களாக இருப்பதோடு, இதன் விளைவாக, இராஜபக்ஷ அரசாங்கத்திடம் சரணடைந்து வேலைநிறுத்தத்தை விற்றுவிடுவர் என நாம் எச்சரிக்கை விடுக்கின்றோம்.

இந்த வேலை நிறுத்தம் ஏற்கனவே இரண்டரை மாதங்களாக நீடித்துள்ளது. பொது ஆதரவை பெறுவதற்காக இரண்டு நீண்ட பேரணிகள் தற்போது காலி மற்றும் கண்டி நகரங்களில் இருந்து வந்துகொண்டிருக்கின்றன. இவை வெள்ளிக்கிழமை கொழும்பில் நடக்கவுள்ள கூட்டத்துடன் முடிவடையவுள்ளன. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 20 சதவீத ஊதிய உயர்வும், பொதுக் கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீத ஒதுக்கீடும் கோருவதோடு பல்கலைக்கழக தனியார்மயமாக்கத்தை நிறுத்துமாறும் போராடுகின்றனர்.

இங்கு எழும் அடிப்படை கேள்வி: இந்த கோரிக்கைகளை இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் அல்லது வேறு எந்த முதலாளித்துவ அரசாங்கத்தின் கீழாவது நிறைவேற்ற முடியுமா? பதில் தெளிவானது: உலகம் முழுவதும் உள்ள அதன் சம தரப்பினரைப் போல், இலங்கை அரசாங்கமும், உலக பொருளாதார வீழ்ச்சியின் சுமைகளை உழைக்கும் மக்களின் முதுகில் சுமத்த முற்படுகிறது என்பதாகும்.

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைகின்ற நிலையிலும், நுகர்வோர் பொருட்களின் மீது அதிக வரி விதிக்கப்படுகின்ற நிலைமையிலும் மற்றும் அத்தியாவசிய சமூக சேவைகளுடன் சேர்த்து விலை மானியங்கள் வெட்டிக் குறைக்கப்பட்டு வருகின்ற நிலைமையிலும், ஏற்கனவே ஜனாதிபதி இராஜபக்ஷ அனைத்து தொழிலாளர்களினதும் சம்பள அதிகரிப்பை முடக்கி வைத்துள்ளார். கல்வித் துறையில், 150 பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள அதே வேளை, அரச பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்களை சேர்த்துக்கொள்ளவும் விரிவுரை அறைகள், ஆய்வுக் கூடங்கள் மற்றும் நூலக வசதிகளை உருவாக்கவும் தேவையான நிதியை இழந்து வருகின்றன.

பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அல்லது தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினருக்கு சலுகைகள் செய்வதற்கு மாறாக, இராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, இந்த சிக்கன திட்டத்தை துரிதப்படுத்த முயற்சிக்கின்றது. பிரதான எதிர் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி (யூ.என்.பி.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.), முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க வைப்பதில் அடிப்படை வேறுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை.

எனினும் எஃப்.யு.டீ.. தலைவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை வழங்க இராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற ஆபத்தான மாயையை ஊக்குவிக்கின்றனர். கடந்த வார இறுதியில் லக்பிம  பத்திரிகையுடன் பேசிய எஃப்.யு.டீ.. தலைவர் நிர்மல் தேவசிறி, ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பெசில் இராஜபக்ஷ உட்பட அரச அதிகாரிகளுடனான அவரது கலந்துரையாடல்கள், மிகவும் "மனப்பூர்வமானதாக இருந்தன என கூறினார். பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு மிக நன்றாக தெரிந்தவாறு, இதே அரசாங்கமே அவர்களது கோரிக்கைகளை இரண்டு ஆண்டுகளாக நிராகரித்து வருகின்றது.

தொழிலாள வர்க்கத்தில் ஒரு "சிறப்புரிமைகொண்ட பகுதி" என்ற வகையில், பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் ஏனைய தொழிலாளர்களின் ஆதரவின்றி தமது கோரிக்கைகளை வெல்ல முடியும் என்று எஃப்.யு.டீ..  வலியுறுத்துகிறது. தமது வாழ்க்கை தரங்கள் மீது தொடுக்கப்படும் இதே போன்ற அழிவுகரமான தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஏனைய தொழிலாளர் தட்டினர் ஒருபுறம் இருக்க, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவுக்குக் கூட தொழிற்சங்க தலைவர்கள் அழைப்பு விடுக்க மறுக்கின்றனர்.

எஃப்.யு.டீ.ஏ., கடந்த ஆண்டு நீடித்த சம்பள முரண்பாட்டை காட்டிக் கொடுத்து முடிவுக்கு கொண்டு வந்த அதே பாதையில் விரிவுரையாளர்களின் வேலை நிறுத்தத்தை வழிநடத்துகிறது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நீடித்த பிரச்சாரத்தின் பின்னர், எஃப்.யு.டீ.ஏ. முதலில் கோரிய சம்பள அதிகரிப்பை விட மிகவும் குறைந்த சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொண்டதோடு, மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்பது உட்பட ஏனைய கோரிக்கைகளையும் சாதாரணமாக கைவிட்டுவிட்டது.

சலுகைகள் கிடையாது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்திவிட்டது. அரசாங்கம் விரைவில் வேலைநிறுத்தத்தை நசுக்கும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க பெருமிதமாகக் கூறிக்கொண்டார். இது வெற்று அச்சுறுத்தல் அல்ல. அரசாங்கம் கடந்த காலத்தில் வேலைநிறுத்தம் செய்த மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸ் மற்றும் இராணுவத்தைப் பயன்படுத்தத் தயங்கவில்லை.

எஃப்.யு.டீ.ஏ. ஒரு புறம் இருக்க, உழைக்கும் மக்களின் ஒரு இயக்கம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் மற்றும் பொதுக் கல்வியை காப்பதற்கான அவர்களின் செயற்பாடுகளையும் ஆதரிக்கத் தொடங்கியுள்ளது. சரியாக இந்தக் கட்டத்திலேயே, லங்கா சமசமாஜ கட்சி (ல.ச.ச.க.), கம்யூனிஸ்ட் கட்சி போன்ற பழைய தொழிலாள வர்க்கத் துரோக தலைமைகளுடனும், மற்றும் நவ சமசமாஜக் கட்சி (ந.ச.ச.க.), ஐக்கிய சோசலிச கட்சி (ஐ.சோ.க.) போன்ற போலி தீவிரவாத அமைப்புகளுடனும் சேர்ந்து எதிர்க் கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் யூ.என்.பி.யும் "போராட்டத்தை ஆதரிப்பதாகக்" கூறி எஃப்.யு.டீ.ஏ.யின் களத்தில் இணைந்துள்ளன.

இந்த அமைப்புகள் போலி நண்பர்கள் என சோசலிச சமத்துவக் கட்சி பல்கலைக்கழக ஆசிரியர்களை எச்சரிக்கின்றது. இந்த கட்சிகள் எஃப்.யு.டீ.ஏ. தலைவர்களுக்கு ஆதரவளிக்கவே நுழைந்துள்ளனவே அன்றி, அவை வேலைநிறுத்தம் செய்யும் விரிவுரையாளர்களுக்கும் மற்றும் அவர்களை ஆதரிக்கும் உழைக்கும் மக்களுக்கும் ஆதரவு கொடுக்க தலையீடு செய்யவில்லை. லங்கா சமசமாஜ கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காளிகளாக இருப்பதோடு அதன் சிக்கன திட்டத்துக்கும் பொறுப்பாளிகளாகும். ஜே.வி.பி. மற்றும் யூ.என்.பி.யும் சந்தை சார்பு செயற்பட்டியலை அமுல்படுத்திய அரசாங்கங்களில் உறுப்பினர்களாக இருந்துள்ளன.

ஏறத்தாழ வலதுசாரி யூ.என்.பீ.யின் கூட்டாளிகளாக இருக்கும் நவ சமசமாஜக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற முன்னாள் இடது கும்பல்களே மிகவும் துரோகப் பாத்திரத்தை ஆற்றுகின்றன. இவர்கள் அனைவரும், ஒரு சோசலிச மற்றும் அனைத்துலக வேலைத் திட்டத்தின் அடிப்படையில், முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டப் போராடும் ஒரே கட்சியான சோசலிச சமத்துவ கட்சி மற்றும் ஐ.எஸ்.எஸ்.ஈ. க்கும் எதிராக தமது அரசியல் தாக்குதலைத் திருப்புவர்.

தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து சுயாதீனமாக, கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் அடங்கிய நடவடிக்கைக் குழுக்களை ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பகுதியினர் மத்தியிலும் அமைக்குமாறு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.

கண்ணியமான ஊதியங்கள் மற்றும் இலவச உயர்தர பொதுக் கல்வியும் ஆசிரியர்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்துக்கும் இருக்கவேண்டிய அடிப்படை உரிமைகள் ஆகும். இந்த உரிமைகளை சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான ஒரு பரந்த அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே வெற்றிகொள்ள முடியும். சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, சமுதாயத்தில் பெரும்பான்மையானவர்களான உழைக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவாறு சமுதாயம் மேலிருந்து கீழ் வரை மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டும்.

எமது வேலைத் திட்டத்துடன் உடன்படும் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறும் அதை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்புமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.