சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

UN human rights officials visit Sri Lanka

ஐநா மனித உரிமை அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர்

By Sampath Perera
24 September 2012
use this version to print | Send feedback

ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையரான நவநீதம்பிள்ளை இலங்கை வரவிருப்பதற்கான தயாரிப்பாக சென்ற வாரத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அலுவலகத்தில் இருந்து இலங்கை வந்து சேர்ந்த அதிகாரிகள் அரசாங்க அதிகாரிகள் மற்றும் தமிழ் தலைவர்களை சந்தித்துப் பேசினர்.

இத்தகையதொரு விஜயத்திற்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்த இலங்கை அரசாங்கம் தனது முடிவை மாற்றிக் கொண்டு இப்போது அழைப்பு விடுத்திருப்பதென்பது அது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளிடம் நெருக்கமான உறவை எதிர்நோக்குகிறது என்பதைக் காட்டுகிறது. ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ மீது அழுத்தம் அளிப்பதற்கான ஒரு வழியாக இலங்கையின்மனித உரிமைகள்”  பிரச்சினையை அமெரிக்கா சுரண்டி வருகிறது.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு(LTTE)எதிராக நடத்திய இனவாதப் போரின்போது போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை இராஜபக்ஷ அரசாங்கம் முற்றிலுமாய் நிராகரித்திருக்கிறது. சென்ற ஆண்டில் ஐநாவின் நிபுணர் குழு ஒன்று 2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முந்தைய இறுதி மாதங்களில் இலங்கை  இராணுவம் போர்க் குற்றங்களை புரிந்ததற்கானநம்பகமான ஆதாரங்களைக் கண்டது. அந்தக்  காலகட்டத்தில் பத்தாயிரக்கணக்கிலான தமிழ் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். “காணாமல்  போவது”, நீதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட கொலைகள் மற்றும் சித்திரவதை ஆகியவை உள்ளிட  ஜனநாயக உரிமைகளின் அப்பட்டமான மீறல்களையும் ஐநா குழு விவரித்திருந்தது.

மார்ச் மாதத்தில், அமெரிக்கா கொண்டுவந்து ஐநா மனித உரிமை கவுன்சிலில் (UNHRC) ஏற்றுக்  கொள்ளப்பட்ட ஒரு வரம்புபட்ட தீர்மானம், இலங்கை அரசாங்கம், அதன் சொந்தகற்றுக் கொண்ட  படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க குழுவின் (LLRC) பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு  தேசிய நடவடிக்கைத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு  விடுத்தது.

இலங்கையில் மனித உரிமைகளைப் பற்றியதல்ல அமெரிக்காவின் கவலை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இராஜபக்ஷ புதுப்பித்து நடத்தியதை அமெரிக்கா ஆதரித்தது என்பதோடு போரின் இறுதி மாதங்கள் வரைக்கும் இலங்கை இராணுவம் செய்த குற்றங்களுக்கு கண்ணை மூடிக்  கொண்டது. பின் அந்தப் பிரச்சினையை சீனாவிடம் இருந்து இராஜபக்ஷ அரசாங்கத்தை விலகியிருக்கச் செய்வதற்கு (போரின் போதும் போருக்குப் பிறகும் சீனா இலங்கைக்கு கணிசமான  இராணுவ மற்றும் நிதி உதவியை வழங்கியது)அழுத்தமளிப்பதற்கு அமெரிக்கா பயன்படுத்தியது.

UNHRC தீர்மானம் வெறும் சம்பிரதாயமான தன்மையைக் கொண்டிருந்தபோதிலும், அதனை இராஜபக்ஷ அரசாங்கம் கடுமையாக எதிர்த்தது. தான் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என அறிவித்தது. இலங்கைக்குள்ளாக, அரசாங்க அமைச்சர்கள் எல்லாம் இந்த நடவடிக்கையை தேசிய இறையாண்மையை மீறிய செயல் என்று கண்டித்ததோடு தமது நாட்டிற்கு எதிராகஒரு சர்வதேச சதி இருந்ததாகவும் அறிவித்தனர்.

இருந்தபோதிலும் ஜூலை மாதத்தில் இலங்கை UNHRC யிடம் தேசிய நடவடிக்கைத் திட்டத்தை  சமர்ப்பித்தோடு நவநீதம் பிள்ளையின் வருகைக்கான தன் ஆட்சேபத்தையும் கைவிட்டது. இலங்கை அதிகமாய் தனிமைப்படுத்தப்பட்டு அமெரிக்க ஆதரவுடனான ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு ஒரு இலக்காகி விடலாம் என்ற அரசாங்கத்தின் கவலைகளே இந்த அந்தர்பல்டிக்கான உந்துசக்தியாக  இருந்தன.

அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் உலக நிதி நிறுவனங்களுக்கான அணுகலை கட்டுப்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றன என்பதும் அமெரிக்காவுடனான உறவுகளை சீர்செய்து  கொள்ள இலங்கை அரசாங்கம் முடிவெடுத்ததன் பின்னிருக்கும் இன்னொரு காரணம். வரவு-செலவு இடைவெளியின் நெருக்கடி மோசமடைந்து கொண்டிருப்பதன் இடையில், இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய  நிதியத்திடம் (IMF)இருந்து இன்னொரு கடன் உதவியை எதிர்பார்த்திருக்கிறது.

ஆயினும், இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்திற்குப் பொறுப்பான போர்க் குற்றங்கள் மற்றும்  ஜனநாயக உரிமை மீறல்கள் மீது எந்தவிதமான உருப்படியான விசாரணைகளும் நடக்கப்  போவதில்லை என்பதை UNHRC தீர்மானம், தேசிய நடவடிக்கைத் திட்டம், மற்றும் ஐநா விஜயங்கள் இவற்றின் ஒட்டுமொத்த சட்டகமும் உறுதிப்படுத்துகிறது.

UNHRC தீர்மானம் போர்க்குற்றங்களுக்கு ஆதாரத்தை வழங்கிய ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையில்  கவனம் செலுத்தாமல் அதற்குப் பதிலாக இராஜபக்ஷவே தேர்ந்தெடுத்து நியமித்த  உறுப்பினர்களுடனான இலங்கை அரசாங்கத்தின் மோசடியான LLRC குழுவின் கண்டறிவுகளின் மீது  கவனத்தைக் குவித்தது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளை சமாதானம் செய்வதும் அப்பாவித்  தமிழ் மக்களுக்கு எதிராய் இராணுவம் நடத்திய குற்றங்கள் மற்றும் மீறல்களுக்கு அரசாங்கம்  கொண்டிருக்கக் கூடிய பொறுப்பை மூடிமறைப்பதுமே LLRC இன் நோக்கமாய் இருந்தது.

சட்டவிரோதமான போராளிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவது, குற்றச்சாட்டுகள் பதியாமல் தடுத்து வைத்திருக்கும் தமிழ் கைதிகள் மீது சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது, அத்துடன்  தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் மாகாண மட்டத்தில் கொஞ்சம் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது ஆகியவை உட்பட LLRC இன் வரம்புபட்ட ஆலோசனைகளையே தேசிய நடவடிக்கைத் திட்டம் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்த நடவடிக்கைகளில் எதுவும் தீவின் தமிழ்  சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ந்த அமைப்புமுறைரீதியான பாகுபாட்டை நிவர்த்தி செய்வனவாக இல்லை.

இந்தத் திட்டத்தின் பகுதியாக, “அப்பாவிகளுக்கு மரணம் அல்லது காயம் ஏற்பட்டிருக்கக் கூடிய  குறிப்பான சம்பவங்கள் குறித்தும்சரண் அடைந்ததற்கு அல்லது கைது செய்யப்பட்டதற்குப் பின்னர் காணாமல் போனதான குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரிப்பதற்கும்தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவதற்கும் அரசாங்கம் வாக்குறுதியளித்திருக்கிறது.

ஆயினும், இராணுவப் படைகள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று ஏற்கனவே வலியுறுத்தி இருக்கின்ற பாதுகாப்புத் துறையின் மூலம் தான் இந்தஒழுங்கு விசாரணைகள் நடத்தப்படவிருக்கின்றன. இராணுவத்தைப் பொறுத்தவரை தனது தாக்குதல்கள்மனிதாபிமான  நடவடிக்கையைச் சேர்ந்தவை என்றும் அப்பாவிப் பொதுமக்கள் தரப்பிலான எந்த மரணங்களையும் விளைவித்தது விடுதலைப்புலிகள் தாம் என்றும் அது கூறியிருக்கிறது.

அரசாங்கம், தனது நடவடிக்கை திட்டத்தின் கீழ், அப்பாவி மக்களுக்கு ஏற்பட்ட கொலைகள் மற்றும் காயங்களின் அளவையும் சூழ்நிலைகளையும், அத்துடன் சண்டையின் போது சொத்துகளுக்கு நேர்ந்த  சேதத்தையும் மதிப்பீடு செய்வதற்கு தீவு முழுவதிலும் ஒருதொழில்முறை கணக்கெடுப்புக்கு தொடக்கமளித்திருக்கிறது. இது இராணுவத்தின் பாத்திரத்தை பூசிமறைக்கும் என்று ஒருவர்  முன்கூட்டியே கணித்துக் கூறமுடியும்.

உண்மையை நிறுவ சனல் 4 வீடியோவின் மீது ஒரு சுயாதீனமான விசாரணைக்கும் இத்திட்டம் மேலும் உறுதிமொழியளிக்கிறது. 2011 இல் பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த  வீடியோ மருத்துவமனைகளில் இருந்தவர்கள் உள்பட அப்பாவி மக்கள் இராணுவக் குண்டுவீச்சுக்கு  இலக்கான காட்சிகளையும், பிடிபட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினர் நீதிமுறைக்கு அப்பாற்பட்ட  முறையில் தண்டிக்கப்படுகின்ற காட்சிகளையும் கொண்டிருந்தது.

இந்த விசாரணையில்சுயாதீனம் எதுவுமில்லை. பாதுகாப்பு அமைச்சகத்தாலும் ஜனாதிபதியின்  செயலகத்தாலும் இந்த விசாரணை நடத்தப்படும். இந்த வீடியோ விடுதலைப் புலிகள் அமைப்பின்  அனுதாபிகளால் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்று அவை ஏற்கனவே அறிவித்திருக்கின்றன.

கடத்தல்கள், பலவந்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் மற்றும் தன்னிச்சையான  கைதுகள் ஆகிய குற்றச்சாட்டுகள் மீதான ஒரு விசாரணைக்கும் அரசாங்கத்தின் திட்டம் அழைப்பு  விடுக்கிறது. இராணுவத்துடன் துணையாகச் செயல்படுகின்ற அரசாங்க-ஆதரவு கொலைப் படைகளின் மூலமாய் நூற்றுக்கணக்கான மக்கள், பிரதானமாகத் தமிழர்கள், “காணாமல் போயிருந்தனர்”. இந்தக்  குற்றங்களுக்கெல்லாம் எவரொருவர் மீதும் குற்றம் பதியப்பட்டிருக்கவில்லை.

சட்டவிரோதமான போராளிக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்களைக் களைவதும் பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் இந்தப் போராளிகள் இராணுவத்துடன்  சேர்ந்து வேலை செய்தே, பல சமயங்களில் இராணுவத்திடமிருந்து ஆயுதங்கள் பெற்றே, தமிழ்  மக்களை பயத்திற்குட்படுத்தியிருந்தனர் என்பது நன்கறிந்த விடயமாகும். இந்தப் போராளிக்  குழுக்களில் சில இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியின் பாகமாக இருக்கின்ற அரசியல் கட்சிகளுடன்  தொடர்புபட்டவையாகும்.

எந்த விசாரணையின் மீதும் ஒரு இறுக்கமான அதிகாரத்தைப் பராமரிக்க அரசாங்கம் நோக்கம்  கொண்டிருக்கிறது. அரசாங்கம்தேசிய பாதுகாப்பை விலையாகக் கொடுத்து தகவல் உரிமைச் சட்டத்தை அறிமுகம் செய்யாது என்று ஜூலை மாதத்தில் ஊடக அமைச்சகத்தின் செயலரான  சரிதா ஹெராத் கூறினார். “வெளியிலிருக்கும் கூறுகள்” “பதட்டத்திற்குரிய தகவல்களைப் பெற  இந்த சட்டத்தைப் பயன்படுத்தக் கூடும் என்று அவர் அறிவித்தார். 2002 இல் விவாதத்திற்குட்படுத்தப்பட்ட இந்த சட்ட ஏற்பாட்டை, போர்க் குற்றங்கள் மற்றும் பிற மனித உரிமை மீறல்கள்  குறித்த தகவல்களைப் பெறுவதற்கு ஊடகங்கள் பயன்படுத்தக் கூடும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது.

ஐநா உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் வரலாற்றைத் திறனாய்வு செய்கிற UNHCR குறித்தகால  உலகளாவிய திறனாய்வு (UNHCR’s Universal Periodic Review) நவம்பர் 1 அன்று  நடைபெறவிருக்கிறது. ஐநா அதிகாரிகளின் இப்போதைய குழு அதற்கு அறிக்கையளிக்கும். அடுத்த  மார்ச் மாதத்தின் UNHCR அமர்வுக்கான இன்னொரு அறிக்கையை நவநீதம் பிள்ளை தயார்  செய்தளிப்பார்.

தனது குற்றங்களை UNHRC பூசிமறைக்க வேண்டும் என்பதே இலங்கை அரசாங்கத்தின் தெளிவான  விருப்பமாய் இருக்கிறது. UNHRCக்கான இலங்கை தூதுக்குழுவில் இடம்பெற்றிருப்பவரான முன்னாள்  அட்டர்னி ஜெனரல் மோகன் பீரிஸ் சென்ற வாரத்தில் ஊடகங்களிடம் பேசுகையில், நவநீதம் பிள்ளையின்  வருகைஇலங்கை தனது மனித உரிமை கடமைப்பாடுகளை பூர்த்தி செய்திருக்கிறது என்பதை  எடுத்துக் காட்டவிருக்கிறது என்று கூறினார்.

அத்தகைய ஒன்று உண்மைக்கு எட்டாத் தொலைவாகத் தான் இருக்க முடியும். UNHRC இன் கலந்தாலோசனைகளின் முடிவு என்பது பெருமளவில், ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையுடன் (ஆசியா முழுவதிலும் சீனாவின் செல்வாக்கைப் பலவீனப்படுத்துவதற்கு அது மேற்கொண்டுவரும் தீவிரமான நடவடிக்கைகள் உட்பட) இஇராஜபக்ஷ அரசாங்கம் எந்த அளவுக்கு ஒத்திசைந்து பின்நிற்கிறது என்பதன் மூலமே தீர்மானிக்கப்படுவதாய் இருக்கும்.