World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Political and historical issues in the South African miners’ revolt

தென்னாபிரிக்க சுரங்கத் தொழிலாளர்கள் எழுச்சியில் உள்ள அரசியல், வரலாற்றுப் பிரச்சினைகள்

Julie Hyland
20 September 2012
Back to screen version

ஆகஸ்ட் 16ம் திகதி மாரிக்கானாவிலுள்ள லோன்மின் பிளாட்டினம் சுரங்கத்தில் வேலைநிறுத்தம் செய்துவந்த 34 தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டது மற்றும் சுரங்கத் தொழிலாளர்களுக்கும் ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் (ANC)  இற்கும் இடையே பரவும் முரண்பாடும் இனவாத, தேசியவாத அரசியலின் பிற்போக்குத்தன்மையை அம்பலப்படுத்தியுள்ளன.

மில்லியன் கணக்கானவர்களின் போராட்டம் ஒரு சட்டபூர்வான முடிவை வெள்ளையர் சிறுபான்மை ஆட்சிக்கு கொண்டுவந்து பதினெட்டு ஆண்டுகளுக்கு பின்பும், தென்னாபிரிக்காவில் மிக அதிகம் சுரண்டப்படும் தொழிலாளர்கள் மீண்டும் மிருகத்தனமாக நடத்தப்படுவதுடன் சர்வதேச சுரங்க, தாதுப் பொருட்கள் பெருநிறுனங்களின் நலன்களுக்காக கொல்லவும் படுகின்றனர். ஆனால் இப்பொழுது அவர்களை நசுக்குபவர்கள் முன்பு கறுப்பின மக்களுக்கு விடுதலை அளிப்பவர்கள் என உறுதியளித்த ஆபிரிக்க தேசியக் காங்கிரஸில் இருப்பவர்களும் தென்னாபிரிக்க தொழிற்சங்கக் காங்கிரஸினரும் (COSATU)ஸ்ராலினிச தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியினரும்தான் (SACP).

ஜனாதிபதி ஜாகப் ஜுமா மாரிக்கானாவிற்கும் இனப்பாகுபாடு காலத்தில் இருந்த பொலிஸ் அரசாங்க நடவடிக்கைகளுக்கும் இடையே உள்ள ஒப்பீடுகளை பற்றிய பேச்சை பொறுப்பற்றவை எனக் கண்டித்துள்ளது வியப்பு இல்லை. அதிலும் குறிப்பாக 69 கறுப்பின இளைஞர்களைக் கொன்று குவித்த 1960ம் ஆண்டு மார்ச் 21 அன்று நடத்தப்பட்ட ஷார்ப்வில்லே படுகொலை பற்றியதுடன் ஒப்பிட்டுப் பேசுவதை.

ஆனால் இனப்பாகுபாட்டிற்கும் முன், இனப்பாகுபாட்டிற்குப்பின் என்று தென்னாபிரிக்காவில் தொடர்பவை குருதி கொட்டிய நிகழ்வுடன் நின்றுவிடவில்லை. பெரும் கறுப்பின பெரும்பான்மையின் உண்மையான எழுச்சிச்சூழ்நிலைமைகளின் கீழ் அதிகாரத்திற்கு வந்த ஆபிரிக்கத் தேசியக் காங்கிரஸ் இனப்பாகுப்பாட்டுச் சகாப்தச் சட்டங்களைப் பயன்படுத்தி சுரங்கப் பெருநிறுவனங்களுக்கும் மற்றும் தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் இருக்கும் அவற்றின் கைக்கூலிகளுக்கு எதிராக நடத்தப்படும் அடிமட்டத் தொழிலாளர்களின் எழுச்சியை அடக்குகிறது.

ஆபிரிக்க தேசியக் காங்கிரஸுஉடைய சுரங்கத் தொழிலாளர்களின் மீதான மிருகத்தனத் தாக்குதலுக்கு தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம், தென்னாபிரிக்க தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் முழு ஆதரவு இருக்கிறது. இவை முன் அனுமதியற்ற வேலைநிறுத்தங்களுக்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கோருகின்றன. இந்த வேலைநிறுத்தங்கள் பிளாட்டினம் பிரிவை கடந்து தங்க, குரோம் பிரிவுகளிலும் பரவியுள்ளது.

லோன்மின் சுரங்கத் தொழிலாளர்கள் 22 சதவிகித ஊதிய உயர்வை ஏற்றுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. ஆனால் மற்ற இடங்களில் வேலைநிறுத்தங்கள் தொடர்கின்றன. நேற்று பொலிசார் ஒரு  ஆங்கில-அமெரிக்கச் சுரங்கத்திற்கு அருகே ரப்பர் தோட்டாக்களையும் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் பயன்படுத்தியதாகத் தெரிய வந்துள்ளது.

சுரங்கத் தொழிலாளர்களை அரசாங்கம் வன்முறையில் அடக்குவது என்பது இனம், இனவழி அல்லது பிற விடயங்கள் என்று இல்லாமல் வர்க்கம் என்பதுதான் தென்னாபிரிக்கச் சமூகத்தையும் உலகம் முழுவதையும் அடிப்படையில் பிரிக்கிறது என்பதற்கான சக்திவாய்ந்த உறுதிப்பாட்டை வழங்குகிறது.  ஆபிரிக்க தேசியக் காங்கிரஸும் அதன் பங்காளிகளும் தமக்கு முன்பு இருந்த வெள்ளையர்களைவிட வேறுவிதமாக நடக்காதற்கு காரணம், சுரங்கத் தொழிலாளர்களின் எழுச்சி இப்பொழுது சுரங்க நடவடிக்கைகளை மட்டும் இல்லாமல் அவர்களுடைய சமூக நலன்களையும் அச்சுறுத்துவதாலாகும்.

1994ம் ஆண்டு இனப்பாகுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க அது பேச்சுக்கள் நடத்தியபோது, முதலாளித்துவ தேசியவாத ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் முதலாளித்துவ சொத்து உரிமைகளை தக்க வைப்பதாக உறுதியளித்தது; அதே நேரத்தில் கறுப்பினத்தவருக்கு பொருளாதார முறையில் சக்தியளித்தல் என்னும் தன் கொள்கையையும் கூறியது: அது அடக்குமுறையை முடித்து அனைவருக்கும் வேலைகள் வழங்கி வாழ்க்கைத் தரங்களையும் உயர்த்தும் என்று கூறப்பட்டது. இந்த அரசியல் கட்டுக்கதைக்கு தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி பேராதரவு கொடுத்தது. சர்வதேசியம் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் ஆகியவற்றை நீண்ட காலம் முன்பே நிராகரித்திருந்த இந்த அமைப்பு தொழிலாளர்கள் தங்கள் வர்க்க நலன்களை கறுப்பின பெரும்பான்மை ஆட்சி இருத்தப்படுவதற்கு அடிபணிய செய்துகொள்ள வேண்டும் என்றும், அந்த ஆட்சி முதலாளித்துவ அஸ்திவாரங்களில் இருக்கும் என்றும் வலியுறுத்தியது.

கடைசி இரு தசாப்தங்கள் தொழிலாள வர்க்கம் மற்றும் அடக்கப்பட்டிருக்கும் வெகுஜனங்களின் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூகத் தேவைகள் அவை எத்தகைய முன்னேற்றம் அல்லது இடது சார்பு உடையதாக இருந்தாலும்கூட தேசிய முதலாளித்துவ ஆட்சியின் கீழ் பூர்த்தி செய்ய இயலாது என்பதை உறுதியாக நிரூபித்துள்ளன. இத்தனியுரிமை விரிவாக்கப்பட்டமை சிறுபான்மை ஆட்சி இருந்தகாலத்திலும் பெரும் ஆதாயங்களை அடைந்த இதே சர்வதேச மற்றும் தென்னாபிரிக்க நிறுவனங்களின் நலன்களை மறைத்துவிட்டது.

ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ், தொழிற்சங்கங்கள் மற்றும் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இனப்பாகுபாட்டிற்குப் பிந்தைய அரசாங்கத்தில் இணைக்கப்பட்டுள்ளமை அவற்றைத் தென்னாபிரிக்க முதலாளித்துவம் மற்றும் உலக மூலதனத்தின் அரசியல் பிரதிநிதிகள் என்று முத்திரையிட வைத்துள்ளது. நிறுவனங்கள் அவர்கள் உரிமையின் ஒரு பகுதியை கறுப்பினத்தவர் கரங்களில் வைக்க வேண்டும் என்னும் நிபந்தனை கறுப்பின மக்களின் ஒரு மிகச் சிறிய அடுக்கு செல்வக்கொழிப்புப் பெறுவதற்கு ஒரு அமைப்புமுறையை அமைத்துள்ளது.

கடந்த மாத நிகழ்வுகள் இந்த கறுப்பு முதலாளித்துவத்தினர் அவர்களுடைய வெள்ளை சக முதலாளிகளைவிடச் சற்றும் தொழிலாள வர்க்கத்தின்மீது தீமையைப் புரிவதில் குறைந்தவர்கள் அல்லர் என்பதைத்தான் நிரூபித்துள்ளன.

இத்தகைய வர்க்க அணிதிரளல் பெரும் ஆதாயம் தரும் சுரங்கத் தொழிலை விட வேறு எங்கும் இவ்வளவு தெளிவாக இல்லை. கடந்த வாரம் மற்றொரு தாக்குதலை மாரிக்கானா சுரங்கத் தொழிலாளர்களுக்கு எதிராக நடத்திய ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் உடைய நீதித்துறை மந்திரியும் முக்கிய தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரியுமான ஜெப் ராடெபி, அவருடைய மனைவி Bridgette Radebe மூலம் சுரங்க நலன்களில் நெருக்கமான குடும்பப் பிணைப்புக்களைக் கொண்டுள்ளார். அவருடைய மனைவி Mmkau Mining  உடைய தலைவரும் தென்னாபிரிக்காவிலேயே அதிக செல்வம் படைத்த பெண்மணி ஆவார். அவருடைய மனைவியின் சகோதரர் Patrice Motsepe, ஒரு சுரங்க முதலாளி, தென்னாபிரிக்காவில் மிகப் பெரிய பணக்காரர் என்று சண்டே டைம்ஸினால் 2011க்கான செல்வந்தர் பட்டியலில் அழைக்கப்பட்டார்.

தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் நிறுவனரும் முன்னாள் ஆபிரிக்கத் தேசியக் காங்கிரஸ்  பொதுச்செயலாளருமான சிரில் ராமபோசா நாட்டின் பெரும் செல்வம் படைத்த வணிகர்களுள் ஒருவர் ஆவார். இவர் நிர்வாகியில்லாத இயக்குனரான லோன்மின்னில் இருப்பதுடன், நிறுவனத்தின் சுரங்கங்களில் பங்குகளை கொண்டுள்ளார்.

பலவற்றுள் இவை இரண்டும் உதாரணங்கள்தான்: இது ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ்   மற்றும் அதன் பங்காளிகள் தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதில் நேரடி ஆதாயம் கொண்டவர்கள், கீழிருந்து எந்த அச்சுறுத்தல்கள் வந்தாலும் அவற்றை அடக்குவதில் பொருளாதாய தலன்களை கொண்டுள்ளனர் என்பதைக் காட்டும். இதுதான் சுரங்கத் தொழிலாளிகளுக்கும் தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்திற்கும் இடையே மோதலின் மூல காரணமாகும்.

இந்த உறவுகள் சுரங்கங்களுடன் நின்று விடவில்லை. தொழிலாளர்களின் பெரும்பாலானவர்களுக்கு, இனப்பாகுப்பாட்டுக் காலத்தை விட இப்பொழுது நிலைமைகள் மோசமாக உள்ளன. உலகில் சமூகச் சமத்துவம் அற்ற நாடுகளில் தென்னாபிரிக்காவும் ஒன்றாகும். நாட்டின் மொத்த வருமானத்தில் 60% உயர்மட்ட 10%த்தினருக்குச் செல்லுகிறது. அதே நேரத்தில் கீழே உள்ள 50% மொத்தத்தில் 8%க்கும் குறைவாக ஈட்டுகின்றனர். கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் வேலையின்றி உள்ளனர்.

சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் தென்னாபிரிக்காவில் வளர்ந்து வரும் சமூக மற்றும் அரசியல் அழுத்தங்களின் சமீபத்திய, மிகவும வெடிப்புத் தன்மையான அடையாளங்களில் ஒன்றுதான். டைம் ஏட்டின்படி, இந்த ஆண்டு ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து தெருக்களில் காணப்பட்ட ஆர்ப்பாட்டங்களைவிட மிக அதிகமான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த இதழ் பெரும்பாலான எதிர்ப்புக்கள் ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் நடத்தும் உள்ளூர் அதிகாரங்களை (அவற்றுள் பலவும் ஊழல் நலிந்தவை) சேவைகளை ஒழுங்காகச் செய்யவில்லை என்பதற்காக நடந்தன என்று குறிப்பிட்டுள்ளது.

எனவே ஜுமாவின் உறுதிமொழியான சட்டவிரோதமாகக் கூடுவதின் மீதான தடை தொழிலாளர் துறை பூசல்களுக்கும் மட்டும் பொருந்தும் என்று இல்லாமல், சேவையளிக்கும் துறைகளில் ஏற்படும் எதிர்ப்புக்களுக்கும் பொருந்தும். இவையும் சில நேரங்களில் வன்முறையில் முடிகின்றன, சொத்துக்கள் அழிக்கப்படுவதும் அதில் அடங்கும். என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் தொடர்புடையது தனிப்பட்ட நபரின் ஊழல் மட்டும் அல்ல. இந்நிலைமைகள் தென்னாபிரிக்காவுடன் நின்றுவிடவும் இல்லை. சுரங்கத் தொழிலாளர்களுக்கு எதிராகச் சக்திகள் வரிசையாக நிற்பது தொழிலாள வர்க்கத்திற்கு செயல்படக்கூடிய முன்னோக்கு ஏதும் இல்லாததைத்தான் குறிப்பிடுகிறது. இது வரலாற்றுரீதியாக ஒடுக்கப்பட்ட நாடுகளாக இருந்தாலும் சரி, அல்லது சோசலிசப் புரட்சிக்கு வெளியே முன்னேற்றமடைந்திருந்த நாடுகளாயினும் சரி.

மனிதகுலத்தின் வரலாறு என்பது வர்க்கப் போராட்டத்தின் வரலாறு, பொருளாதார உறவுகள்தான் இறுதியில் அரசியல் உறவுகளை நிர்ணயிக்கின்றன மற்றும் தொழிலாளர் வர்க்கத்திற்கும் முதலாளிகளுக்கும் இடையே உள்ள நலன்களின் சமரசத்திற்கு இடமில்லாத மோதல் உள்ளது என்ற மார்க்சிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் தென்னாபிரிக்காவில் நிகழும் வெடிப்புத்தன்மை உடைய நிகழ்ச்சிகளால் உலகின் கண்களுக்கு முன்  உறுதிபடுத்துப்படுகின்றன.

இது உலகளவில் வர்க்கப் போராட்டம் மற்றும் சமூகப் புரட்சி மீண்டும் எழுச்சி பெற்று வர இருப்பதைத்தான் குறிப்பிடுகறிது. இதில் முக்கிய பிரச்சினை லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் புரட்சிகரக் கட்சிகளைக் கட்டியமைக்க வேண்டும் என்ற அவசிய தேவையாகும்.  

ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் இன் பரிமாணம் பொருளாதார ரீதியாக ஏகாதிபத்தியத்தை நம்பியுள்ள தேசிய முதலாளித்துவம் பொதுமக்கள் முகங்கொடுக்கும் ஜனநாயக, சமூகப் பணிகளைத் தீர்க்க இயலாது என்ற ட்ரொட்ஸ்கி வலியுறுத்திய கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அது முதலாளித்துவத்தை புரட்சிகரமாக தூக்கிவீசுவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் மூலம்தான் சாதிக்கப்பட முடியும். அது ஏகாதிபத்தியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, உலக சோசலிசத்தை நிறுவும் ஒரு சர்வதேச போராட்டத்தின் பகுதியாக இருக்கும்.