WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The bankers’ dictatorship in Greece
கிரேக்கத்தில்
வங்கியாளர்களின் சர்வாதிகாரம்
Stefan Steinberg
8 September 2012
சர்வதேச
நாணய நிதியம், ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி எனப்படும் முக்கூட்டு
இந்த வாரம் கிரேக்கத் தொழில்துறை அமைச்சரகத்திற்கு எழுதிய கடிதத்தில் உள்ள
விவரங்கள் ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் முட்டுச்சந்தியில் இருப்பதைத்
தெளிவாக்குகின்றன. நிதிய உயரடுக்கு 20ம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கம் பெற்ற
அனைத்து நலன்கள் மீதும் அடிப்படைத் தாக்குதலுக்கு அழைப்புவிடுகின்றது.
எட்ட மணி
நேர வேலைநேரத்திற்கான முதல் போராட்டங்கள் நடந்த 150 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல்
ஐந்து நாள் வேலைவாரம் அறிமுகப்படுத்தப்பட்ட 100 ஆண்டுகளுக்குப் பின்னர், முக்கூட்டு
கிரேக்கத்தில் தொழிலாளர்கள் உயிர்வாழ்வதற்கே போதுமான அல்லது அதையும் விடக் குறைந்த
ஊதியத்திற்கு வாரத்திற்கு 6 அல்ல 7 நாட்களுக்கும் உழைக்க வேண்டும் எனக் கோருகிறது.
இந்த இலக்கையொட்டி முக்கூட்டு கிரேக்கத்தின் ஏற்கனவே அற்பமான குறைந்தப்பட்ச ஊதியம்
(586 யூரோக்கள் அல்லது அமெரிக்க $735 ஒரு மாதத்திற்கு) என்பதில் இன்னும்
வெட்டுக்கள் ஏற்படுத்த விரும்புவதுடன், முதலாளிகள் தொழிலாளிகளைப் பணிநீக்கம்
செய்வதற்கும் புதிய அதிகாரங்களை நாடுகிறது.
முக்கூட்டின் கடிதம் இழிந்த முறையில் அதன் நடவடிக்கைகள் பரந்த வேலையின்மையை
எதிர்த்துப் போராடும் என்றும் கூறுகின்றது. உண்மையில் தற்போதைய 30% வேலையின்மை
என்று கிரேக்கத்தில் இருப்பது முக்கூட்டு சுமத்தியுள்ள சிக்கன நடவடிக்கைகளின் நேரடி
விளைவுதான். இவை கிரேக்கப் பொருளாதாரத்தை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன. ஆனால்,
முக்கூட்டின் கருத்துக்கள் முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளர்களை உண்மையான அடிமை
உழைப்பு நிலைமைகளிலேயே தொழிலாளர்களை மீண்டும் வேலைகளில் இருத்தும் என்பதை
தெளிவுபடுத்தியுள்ளன.
முக்கூட்டின் கடிதம் வெளியிடப்படுவதற்கு சற்று முன்பு, ஐரோப்பிய பாராளுமன்றத்தின்
தலைவர் மார்ட்டின் ஷூல்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special
Economic Zones SEZ)
கிரேக்கத்தில் நிறுவுவதற்கு
அழைப்பு விடுத்துள்ளார். அத்தகைய பகுதிகள், வறிய ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் உள்ள
குறைவூதிய தொழிலாளர் நிலைமைகளை மாதிரியாகக் கொண்டவையும், மிக அதிகம் தொழிலாளர்களை
சுரண்டும் நிறுவனங்களுக்கு வரிவிலக்குகள் வழங்கும் வசதியான இடங்களாகவும் இருக்கும்.
இத்தகைய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
“ஐரோப்பிய
வளர்ச்சி நிறுவனம்”
ஒன்றினால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும் ஷூல்ஸ் அறிவித்தார்.
இதேபோன்ற மண்டலங்கள் கிரேக்கத்தில் செயல்படத் தொடங்கியபின் கண்டம் முழுவதும்
நிறுவப்படும்.
ஜேர்மனியின்
சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான ஷூல்ஸ், ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவராக இந்த
ஆண்டு ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டமை தொழிற்சங்க வட்டாரங்களில் ஆர்வத்துடன்
வரவேற்கப்பட்டன. அவை பொருளாதார வளர்ச்சி குறித்த அவர் வலியுறுத்தல் ஐரோப்பிய
அரசியலில் இடதிற்கு ஒரு மாற்றம் என வாதிட்டன.
மே மாதம்
ஷூல்ஸ்,
புதிய பிரெஞ்சு
ஜனாதிபதியான சோசலிஸ்ட் கட்சியின் பிரான்சுவா ஹாலண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டதை
ஆர்வத்துடன் வரவேற்றார். கிரேக்கத்தில் சிரிசா கூட்டணியின் தலைவர் அலெக்சிஸ்
சிப்ரசுடன் இவர்கள் தொழிற்சங்கங்களால் குட்டி முதலாளித்துவ
“இடது”
கட்சிகள், ஐரோப்பாவில் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சக்தி என்று
சித்தரிக்கப்பட்டன. இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பேர்லின் ஆணையிடும் சிக்கன
அரசியலை எதிர்க்கும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் சில
மாதங்களுக்குப் பின், இக்கூற்றுக்கள் பொய்கள் என அம்பலமாகியுள்ளன. கடந்த சில
வாரங்களில் ஹாலண்ட் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கலுடன் கொண்டிருந்த கருத்து
வேறுபாடுகளை களைந்து, அவர் சந்தைகள் இதே செயற்பாட்டை பிரான்ஸில் முன்வைக்க வேண்டும்
என்பதை நன்கு அறிந்தும் கிரேக்கத்திற்கான கடுமையான புதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு
ஆதரவைக் கொடுத்துள்ளார்.
21ம்
நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் ஆரம்பகால முதலாளித்துவத்தின் தீமைகள் என்று
வரலாற்றாளர்கள் அனைவராலும் எழுதப்பட்டவை இப்பொழுது ஐரோப்பாவில் மீண்டும்
வெளிவந்துள்ளன. இந்த ஆண்டு முன்னதாக
Le Monde
இத்தாலியில்
சிறுவர் உழைப்பு குறித்து எழுதியிருந்தது. ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பள்ளியைவிட்டு
நீங்கித் தங்கள் பெற்றோர்களுக்கு ஆதரவளிக்க வேலை தேடுகின்றனர் என எழுதியிருந்தனர்.
இச்செய்தித்தாள் நேபிள்ஸின் துணை மேயரை மேற்கோள்காட்டி:
“ஆம்,
இத்தாலியில் நாங்கள் மிக வறிய பகுதி. ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின் இத்தகைய
நிலைமையைக் கண்டதில்லை... 10 வயதில் இக்குழந்தைகள் ஏற்கனவே நாள் ஒன்றிற்கு 12 மணி
நேரம் உழைக்கின்றனர்.”
என்றார்.
ஜேர்மனியில் தொழிலாலளர் தொகுப்பில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் குறைவூதியத்
தொழில்பிரிவில் பணியில் உள்ளனர். மில்லியன் கணக்கான மக்கள் சமூகநல உதவித் தொகைகளை
நம்பியுள்ளனர். ஒரு சமீபத்திய அறிக்கை வாடிக்கையான உணவு உதவியைப் பெறும்
ஜேர்மனியர்கள் எண்ணிக்கை 2011ல் 300,000 ஆல் அதிகரித்து மொத்தம் 1.5 மில்லியன்
என்று ஆகிவிட்டது என வெளிப்படுத்தியது.
நிதிய
உயரடுக்கு கோரும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தேசிய அரசாங்கங்களினால்
செயல்படுத்தப்படும் சிக்கன நடவடிக்கைகளின் விளைவு பாரிய வறுமைதான். கடந்த மாதம்
Unilever
உடைய ஐரோப்பியச்
செயற்பாடுகளின் தலைவர்
Jan Zijderveld
தன்னுடைய நிறுவனம்
ஐரோப்பாவில் “வறுமை
மீண்டும் வந்துள்ளது”
என்பதை அடுத்து அதன்
விற்பனை மூலோபாயத்தை மறுபரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளது. யூனிலீவர் ஏற்கனவே
ஸ்பெயினில் குறைந்த ஊதிய வருமான வாடிக்கையாளர்களுக்கு விற்பதற்கு உற்பத்திப்
பொருட்களையும் குறைந்துள்ளது. இது இந்தோனிசியாவில் அதன் செயற்பாடுகளை மாதிரியாகக்
கொண்டது. அங்கு
Zijderveld டின்
கருத்துப்படி “நாங்கள்
தனித்தனி ஷாம்பு பைகளை 2 முதல் 3 சென்டுகளுக்கு விற்கிறோம், அப்படியும் நல்ல இலாபம்
பெறுகிறோம்.”
சோவியத்
ஒன்றியம் கலைக்கப்பட்டபின், முதலாளித்துவத்தின் பிரச்சாரகர்கள் தடையற்ற சந்தையின்
நலன்கள் முன்னாள் காலனித்துவ நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களுடைய வாழ்க்கைத்
தரங்கள் மேலை நாடுகளில் இருப்பதைப் போல் செய்யும் என்று வாதிட்டனர். உண்மையில்,
இந்த வழிவகை முற்றிலும் எதிர்த்திசையில் செல்கிறது. மார்க்ஸ் விளக்கியுள்ள தொழிலாள
வர்க்கத்தை வறிய நிலையில் தள்ளுதல், நீண்டகாலம் அவருடைய குட்டிமுதலாளித்துவ
குறைகூறுபவர்களால் கற்பனை என்று எள்ளிநகையாடப்பட்டது. இது இப்பொழுது இரக்கமின்றி
ஒரு சிறிய, ஒட்டுண்ணித்தன, வியப்படைய வைக்கும் செல்வந்தர் உயரடுக்கினால்
செயல்படுத்தப்படுகிறது.
மக்களை வறிய
நிலையில் தள்ளுவதற்கும் மற்றும் டிரில்லியன் கணக்கான யூரோக்களை நிதியப்
பிரபுத்துவத்தின் பைகளுக்குள் செலுத்தவும் பாரிய வரலாற்று பின்னோக்கிசெல்லலை
தயாரிக்கும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பிற்போக்குத்தன, பகுத்தறிவற்ற தன்மை
தவிர்க்க முடியாமல் தொழிலாள வர்க்கத்திடையே பாரிய போராட்டங்களைத் தூண்டிவிடும்.
சர்வதேச
வர்க்க உறவுகளின் நிலைப்பாடு மிகப் பொருத்தமாக மார்க்சினால் அரசியல்
பொருளாதாரத்தின் விமர்சனத்திற்கான ஒரு பங்களிப்பு -A
Contribution to a Crituque of Political Economy-
என்னும் நூலில்
எழுதப்பட்டுள்ளது;
“தங்கள்
வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சமூகத்தின் சடத்துவ உற்பத்தி சக்திகள்
இருக்கும் உற்பத்தி முறைகளுடன் மோதலுக்கு வரும், அல்லது இதே விடயத்தில் ஒரு
சட்டபூர்வ வெளிப்பாடான இதுவரை அவை இயங்கிவந்துள்ள சொத்துறவுகளுக்குள் மோதல் வரும்.
உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் வடிவங்களிலிருந்து இந்த உறவுகள் அவற்றின்
தளைகளாக மாறும். அதன் பின் சமூகப் புரட்சி சகாப்தம் தொடங்கும்.”
தொழிலாள
வர்க்கத்தை எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சினை ஒரு புதிய சர்வதேச அரசியல் கட்சியை
கட்டமைப்பதுதான். இது கடந்த வர்க்கப் போராட்டங்களின் முக்கிய அனுபவங்களை
அனைத்தையும் உள்ளீர்த்து, உண்மையான புரட்சிகர முன்னோக்கை வழங்கும். ஐரோப்பாவில்
இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் அங்கத்துவ நாடுகளுக்கு எதிரான போராட்டம்
தேவைப்படுகிறது; தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றி உலக சோசலிசப் புரட்சியின்
ஒருங்கிணைந்த பகுதி என்னும் முறையில் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை
கட்டியமைக்கவேண்டும். |