WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
Financial markets rejoice over European Central Bank plan
ஐரோப்பிய மத்திய வங்கியின் திட்டம் குறித்து நிதியச் சந்தைகள்
மகிழ்ச்சியடைகின்றன
By Nick Beams
7 September 2012
ஐரோப்பிய மத்திய வங்கியின்
(ECB)
தலைவர் மரியோ ட்ராகி வரம்பற்ற முறையில் அரசாங்க பத்திரங்களை
வாங்கும் தன் திட்டத்தை, இத்தாலி மற்றும் ஸ்பெயினின் கடன்வாங்கும் செலவுகளை தடுத்து
நிறுத்தல் மற்றும் யூரோப் பகுதி முறிந்து போவதை தடுப்பதை நோக்கமாக கொண்டது என
அறிவித்துள்ளார்.
ஜூலை மாத இறுதியில் ஐரோப்பிய மத்திய வங்கி
“எப்படியும்”
யூரோவை தக்க வைக்க நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய அவருடைய கருத்துக்களை தொடர்ந்து
நிதியச் சந்தைகள் ஆர்வத்துடன் நேற்றைய ஐரோப்பிய மத்திய வங்கியின் நிர்வாகக்குழுக்
கூட்டத்திற்கு ஏதேனும் உருப்படியான செயல் முன்வைக்கப்படுமா எனப் பார்ப்பதற்கு
காத்திருந்தன. இது அறிவிக்கப்பட்டபின், அவை தங்கள் இருப்புகளுக்குள்
நூற்றுக்கணக்கான பில்லியன்கள் உட்செலுத்தப்படும் வாய்ப்பை நினைத்துக் களித்து
மகிழ்ந்தனர். ஸ்பெயின் மற்றும் இத்தாலிய அரசாங்கப் பத்திரங்களின் வட்டி விகிதங்கள்
சரிந்ததுடன்,
S&P 500
பங்குக் குறியீடு வோல் ஸ்ட்ரீட்டில் நான்கு ஆண்டுகள் இல்லாத
அளவிற்கு உயர்ந்தது.
பைனான்சியல் டைம்ஸின்
வார்த்தைகளில் நிதியச் சந்தைகள்
“பெரும்
உற்சாகத்தில்”
இருக்கையில், இந்த முடிவுகள் கண்டம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்
தரங்களில் மேலும் தாக்குதல்கள் என்பதைத்தான் உணர்த்துகின்றன. ஏற்கனவே கிரேக்கம்,
போர்த்துக்கல் மற்றும் அயர்லாந்தில் நடைமுறையில் இருக்கும் சிக்கனத் திட்டங்கள்
போன்ற கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான்
“நேரடி
நிதிய பரிமாற்றச் செயல்கள்”
பத்திரங்கள் வாங்குவதற்கு இருக்கும் என்று ட்ராகி வலியுறுத்தினார்.
யூரோப் பகுதியில் ஒரு நிதியச் சர்வாதிகாரி போல் ஐரோப்பிய மத்திய
வங்கி தொடர்ந்து செயல்பட்டு, நிதியச் சந்தைகள் அவற்றின் ஊக நடவடிக்கைகளுக்கு
நிதியம் வழங்க தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரங்கள் மீது இன்னும் ஆழ்ந்த வெட்டுக்களை
செயல்படுத்தும்.
ஐரோப்பிய மத்திய வங்கியின் திட்டம்
“நிதியச்
சந்தைகளில் உள்ள குறுகிய கால குழப்பங்களை”
தீர்க்கும் என்றார் ட்ராகி. அவருடைய சொற்கள் கவனத்துடன்
தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன; ஏனெனில் மத்திய வங்கி நேரடியாக நாடுகளுக்கு நிதியம்
வழங்குவதற்கு தடை உள்ளது. எனவே வரம்பற்ற முறையில் இருக்கும் இத்தலையீடு ஓராண்டில்
இருந்து மூன்று ஆண்டுகாலம் வரையிலான பத்திரங்களை வாங்குவதன் மூலம் நிதியச்
சந்தைகளுக்குக் குறுகிய காலத்திற்கு உதவும்.
ஜேர்மனியில் மத்தியவங்கி இந்தப் பத்திரம் வாங்கும் திட்டத்தை
உறுதியாக எதிர்த்துள்ளது; இது சட்டவிரோதமானது, பணிவீக்கத்தைக் கொண்டுவரும் என்று
கூறுகிறது. ஆனால் ட்ராகியின் கூற்றுப்படி, குழுவில்
“மிகப்
பெரியப் பெரும்பான்மையுடன்”
இந்த முடிவு ஏற்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
ஐரோப்பிய மத்திய வங்கி அதன் வரையறைகளுக்கு அப்பால் நடக்கிறது என்ற
கூற்றுக்களுக்கு விடையளிக்கும் வகையில், ட்ராகி பத்திரங்கள் வாங்குவது நியாயமே,
ஏனெனில் வட்டி விகிதங்களை உயர்த்தும் வகையில் ஸ்பெயின் மற்றும் இத்தாலியின்
பத்திரச் சந்தைகள்
“மாற்றீட்டு
அபாயத்தை”
அதிகரித்துள்ளன என்றார். வேறுவிதமாக கூறினால், யூரோப்பகுதி
முறிந்துபோகும் அபாயம் வட்டிவிகிதங்கள் எவ்வாறு இருக்க வேண்டுமோ அவ்வாறு இல்லாது
உயர்ந்துவிட்டதால்தான். எனவே பத்திரங்கள் வாங்கும் திட்டம் நாடுகளுக்கு
நிதியளிக்கும் நோக்கம் கொண்டவை அல்ல, ஒற்றை நாணயத்தைக் காப்பாற்றுவதற்குத் தேவையான
நடவடிக்கையாகும்.
ஆனால் ஜேர்மன் மத்திய வங்கி இதைக் கருத்திற்கொள்ளவில்லை. நிர்வாகக்
குழுவில் அதன் பிரதிநிதியான மத்திய வங்கி தலைவர் ஜென்ஸ் வைட்மான், கூட்டம் முடிந்த
பின் தொடர்ச்சியான முக்கிய கருத்துக்களை வெளியிட்டார். வங்கி பத்திரங்கள் வாங்குவது
“வங்கி
பணத்தை அச்சடிப்பதின் மூலம் அரசாங்கங்களுக்கு நிதி வழங்குதலுக்கு ஒப்பாகும்”
என்று ஜேர்மனிய மத்திய வங்கி கருதுவதாகவும், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலையீடுகள்
இறுதியில் பல நாடுகளில்
“வரிசெலுத்துபவர்களுக்கு”
கணிசமான அபாயங்களை மறுபங்கீடு செய்யும் என்றார். வேறுவிதமாகக்
கூறினால், ஜேர்மனியும் மற்ற நிதியளவில் வலுவான வடக்கு ஐரோப்பிய நாடுகளும் தெற்கே
உள்ள நிதிய முறையில் வலுவற்ற நாடுகளைப் பிணையெடுக்கும் கட்டாயத்திற்கு
உட்படுத்தப்படும்.
ஐரோப்பிய மத்திய வங்கியின் திட்டம் யூரோப்பகுதியை உறுதியான
நிதியியல் அடித்தளத்தில் இருத்தும் வழிவகையாகவும், ஸ்திரப்பாட்டை கொண்டுவரும்
திட்டம் என்றும் வரவேற்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூற்றுக்களும் முக்கிய இரு
ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கிகள் திட்டத்திற்கு எதிராக உள்ளது என்ற உண்மையினால்
நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை.
திங்களன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மூடிய கூட்டத்தொடரில் ஆற்றிய
உரையில், ட்ராகி அவரைப் பொறுத்தவரை, ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவில் யூரோ
தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற அக்கறையைத் தவிர வேறு ஏதும் இல்லை என்பதைத்
தெளிவுபடுத்தினார். வங்கியின்
“முக்கிய
செயல் நிலைப்பாடு”
இப்பொழுது ஒரு
“துண்டுதுண்டாகியுள்ள
யூரோப்பகுதி”
ஆகியுள்ள நாடுகளின் பத்திரச் சந்தைகளில் தேவையானால் தலையிட்டு வட்டி
விகிதங்களை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல். ஐரோப்பிய மத்திய வங்கியின்
முடிவுகள் நிதிய முறையில் வலுவற்ற நாடுகளின் மீது கிட்டத்தட்ட எந்தப்
பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவற்றின் வட்டிவிகிதங்கள் பத்திரச் சந்தைகளால்
நிர்ணயிக்கப்படுகின்றன என்றார் அவர்.
“வெளிப்படையாகக்
கூற வேண்டும் என்றால், இவை அனைத்துமே யூரோ தொடர்ந்திருப்பதற்காகத்தான்”
என்றார் அவர். நெருக்கடியில் இருக்கும் நாடு குறித்துச் சந்தைகள் ஒரு உள்ளுணர்வை
கொண்டுள்ளன. அதன் பொருள் அவை அதிக வட்டி விகிதங்களை அந்நாடு வெளியிடும்
பத்திரங்கள்மீது கோருகின்றன என்பதாகும். ஆனால் இது அரசாங்க நிதியங்களை மட்டும்
பாதிக்காமல், பெருநிறுவன, வங்கிப் பத்திரங்களையும் பாதித்து, அதிக வட்டி
விகிதங்களுக்கு வகை செய்யும். இதனால்
“நெருக்கடி
பற்றிய உள்ளுணர்வை வலுப்படுத்திவிடும்.”
இதுதான் ஐரோப்பிய மத்திய வங்கி உள்ளே நுழைந்து பத்திரங்களை
வாங்குவதற்கான முக்கியக் காரணம் ஆகும்.
ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவுகளை ஐரோப்பாவின் பொருளாதார
மீட்பிற்கான பாதையில் ஒரு படி என்று சித்தரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அத்தகைய உறுதியான கூற்றுக்கள் கண்டம் முழுவதும்
மில்லியன் கணக்கான மக்கள் அனைத்து நிதிய நடவடிக்கைகளிலும் அடிப்படையாக இருக்கும்
அரசாங்கச் சிக்கன நடவடிக்கைகளின் உண்மையான பாதிப்பை அனுபவிப்பதில் வெளிப்படையாகத்
தெரிகின்றன.
சிக்கன நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும், தீவிரப்படுத்தப்பட வேண்டும்
என்பதை ட்ராகி தெளிவாக்கினார். ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் ஒரு தீய வட்டத்தைத்தான்
நிறுவுகின்றன. அரசாங்கங்கள் மற்றும் தொழிலாளர்களின் செலவுகளை வெட்டும்போது, பெருகிய
வேலையின்மை, ஊதியக் குறைப்புக்கள் ஆகியவற்றின் விளைவாக, இவை வரிகள் மூலமான
வருமானத்தையும் பிற அரசாங்க வருவாய்களையும் குறைக்கின்றன. அவை தன் பங்கிற்கு
அரசாங்கத்தின் கடன் தன்மையை மோசமாக்கி நிதிய நெருக்கடியையும் தீவிரப்படுத்துகின்றன.
மேலும், இந்த புதிய கொள்கைக்குள்ளேயே புதிய நிதிய நெருக்கடி,
யூரோப்பகுதி முறிதல் ஆகியவற்றை ஏற்படுத்தும் பொறிமுறைகளும் உள்ளன.
ஜேர்மன் மத்தியவங்கி இன்னும் பிற இடங்ககளில் இருந்து வரும்
குறைகூறல், அதாவது ஐரோப்பிய மத்திய வங்கி கடன்பட்டுள்ள அரசாங்கங்களின் பத்திரங்களை
வாங்குவதற்கு தடையற்ற உத்தரவாதம் கொடுக்கிறது என்பதை எதிர்கொள்கையில், ட்ராகி
சிக்கன நடவடிக்கைகள் பற்றிய உத்தரவுகளை செயல்படுத்தாமல் எந்த அரசாங்கம் இருந்தாலும்
அதன் பத்திரங்கள் வாங்கப்படமாட்டாது என்று உறுதிப்படுத்தினார்.
ஆனால் விரைவில் சுட்டிக்காட்டியபடி, அத்தகைய நடவடிக்கை எந்த நிதி
நெருக்கிடியையும் அதிகப்படுத்தத்தான் செய்யும். அரசாங்கம் அதன் வரவு-செலவுத்
திட்ட பற்றாக்குறை இலக்குகளை அடையாவிட்டால் அரசாங்கப் பத்திரங்கள் வாங்குவது
நிறுத்தப்படுவது என்பதை ஒட்டி, வட்டி விகிதங்கள் மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும்.
ட்ராகியின் நடவடிக்கைகளை
“திமிர்த்தனமான
சூது”,
இவை யூரோப்பகுதியில் சற்றே உறுதிப்பாட்டைக் கொண்டுவரும் வாய்ப்பை பெற்றுள்ளன என்று
பாராட்டுகையில், பைனான்சியல் டைம்ஸில் ஒரு தலையங்கம்
“கடுமையான
மற்றும் செயலூக்கமுள்ள நிபந்தனைகளின்”
தாக்கங்கள் குறித்து கவனத்தை ஈர்த்துள்ளது.
“திரு.
டிராகி ஐரோப்பிய மத்திய வங்கி உடன்பட்ட திட்டங்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளாத
நாடுகளின் பத்திரங்களை வாங்குவதை நிறுத்தும் என்று கூறலாம். ஆனால் அவ்வாறு
செய்கையில், அதுவும் மத்திய வங்கி ஒரு நாட்டின் பத்திரங்களை நிறைய வாங்கியபின்
செய்வது என்பது, தன் தலையிலேயே துப்பாக்கியை அழுத்தி, சுட்டுக் கொள்ளுவேன் என்று
அச்சுறுத்துவது போல் ஆகும்”:
என்று அது கூறியுள்ளது.
யூரோப்பகுதியின் நிதிய நெருக்கடிக்கு ஒரு தீர்வு அளித்தல் என்பதற்கு
முற்றிலும் மாறாக, ட்ராகியின் திட்டம் உண்மையில் நிதியப் புயலின் மையத்தில்
ஐரோப்பிய மத்திய வங்கியை இருத்துவதின் மூலம் அதைத் தீவிரப்படுத்தத்தான் செய்கிறது. |