சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A new stage in the attacks on the European working class

ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களில் ஒரு புதிய கட்டம்

Peter Schwarz
3 September 2012

use this version to print | Send feedback

ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் ஒரு மூர்க்கத்தனமான புதிய சுற்று சமூகத் தாக்குதல்களை எதிர்கொள்ளவிருக்கிறது. கிரேக்கம், போர்த்துக்கல் மற்றும் அயர்லாந்தில் ஆரம்பித்த வழிவகை ஸ்பெயினிலும் இத்தாலியிலும் தொடர்ந்தது. இப்பொழுது அது பிரான்சில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் தலைமையில் இயங்கும் அரசாங்கம் இம்மாதம் 2013க்கான நாட்டின் வரவு-செலவுத் திட்டத்தை அறிவிக்க உள்ளது. சர்வதேச வணிகச் செய்தி ஊடகங்கள் பாரிய வெட்டுக்களுக்கு ஆதரவு கொடுக்கும் கட்டுரைகளை ஏராளமாகப் பிரசுரிக்கின்றன.

பிரெஞ்சுப் பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது. வளர்ச்சி என்பது அநேகமாக தேக்க நிலையில் உள்ளது. ஆகஸ்ட் மாதம் வேலைதேடுவோர் எண்ணிக்கை 3 மில்லியனைக் கடந்தது. Peugeot Citroën போன்ற பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் அறிவிப்புக்களை கொடுத்துள்ளன. அரசாங்கம் கிட்டத்தட்ட 33-40 பில்லியன் யூரோக்களை சேமித்தால்தான் ஹாலண்ட் உறுதியளித்துள்ள வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை 3% ஆக மட்டுப்படுத்த முடியும் என்று பொருளாதார வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது பிரான்சின் வரலாற்றில் முன்னோடியில்லாத செயல் ஆகும். இதன் பொருள் சமூகநலச் செலவுகளில் மிகப் பெரிய வெட்டுக்கள் என்பதாகும்.

பைனான்சியல் டைம்ஸ், ஹாலண்ட் திரு. இயல்பானவர் என்ற தோற்றத்தைக் காட்டுவதை விடுத்து திரு. புகழற்றவர் என்ற பெயரை எதிர்கொள்ள வேண்டும் என்று கோருகிறது.

Süddeutsche Zeitung பத்திரிகை ஜேர்மனியில் சமூக ஜனநாயக கட்சியின் ஹெகார்ட் ஷ்ரோடர் ஒருமுறை அதிர்ச்சி சிகிச்சைக்கு நாட்டை உட்படுத்தியதுபோல், சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி இங்கும் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. பிரெஞ்சுப் பொருளாதாரத்தின் சர்வதேச போட்டித்தன்மையை வலுப்படுத்துவதற்கு, ஹாலண்ட் தொழிலாளர்துறை செலவினங்களைக் கணிசமாகக் குறைக்க வேண்டும், பணி நேரங்கள், தொழிலாளர் சந்தை ஆகியவற்றைக் கடுமையான கட்டுப்பாட்டில் இருந்து நீக்க வேண்டும், நலன்கள் வழங்குவதை குறைக்க வேணடும் என்று கோருகிறது.

இத்தகைய அழைப்புக்களின் முக்கியத்துவத்தில் சந்தேகத்திற்கு இடமில்லை. இவற்றை ஹாலண்ட் பின்பற்றாவிட்டால், வங்கிகள் பிரான்சின் மீது ஸ்பெயின் மற்றும் இத்தாலிக்கு கொடுத்த தலைவிதியைத்தான் கொடுக்கத் திட்டமிட்டுள்ளன. அதாவது நிதிய ஊக வங்கியாளர்கள் நாட்டில் இறங்கி அதன் பத்திரங்கள் மீதான வட்டி விகிதங்களை உயர்த்தி, அவர்களுடைய ஆணைகளுக்கு அரசாங்கத்தை நிபந்தனையற்றுச் சரணடைய வைப்பர்.

உண்மையில் இத்தகைய வெளி அழுத்தங்கள் தேவையில்லை. ஏற்கனவே ஹாலண்ட் தன்னுடைய அரசாங்கம் தானாகவே முன்வந்து நிதிச் சந்தைகளின் ஆணைகளை செயல்படுத்தும் என்பதைத் தெளிவாக்கியுள்ளார்.

கோடை விடுமுறைக்குப்பின் அவருடைய முதல் பகிரங்க உரையில், பிரெஞ்சு மக்கள் ஒரு நீண்ட, மிகத் தீவிர பொருளாதார நெருக்கடிக்கு தங்களைத் தயாரிப்பில் கொள்ள வேண்டும் என்று ஹாலண்ட் அறிவித்தார். Châlons-en-Champagne இல் ஒரு வணிகக் காட்சிக்கூடத்தில், அவர் வளர்ச்சி, வேலைகள் மற்றும் போட்டித்தன்மைக்கான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு மூன்று மாதங்களோ, ஓராண்டோ போதாது, தன் முழு ஐந்து ஆண்டுகள் வரைகாலமும் தேவைப்படும் என்றார்.

உத்தியோகபூர்வ அரசியல் வார்த்தை பிரயோகங்களில், வளர்ச்சி, வேலைகள் மற்றும் போட்டித்தன்மை என்பவை ஊதியக் குறைப்புக்கள், சமூகநலச் செலவுக்குறைப்புக்கள், தொழிலாளர் உரிமைகள் குறைப்புக்கள் என்று பொருளாகும். உண்மையில் ஹாலண்ட் சமூகச் சரிவு ஐந்தாண்டுகளுக்கு தொடரும் என உறுதியளித்துள்ளார்.

அவருடைய பிரதம மந்திரி Jean-Marc Ayrault இன்னும் வெளிப்படையாகப் பேசினார். பல வாரங்களாக அவர் பிரெஞ்சு நிறுவனங்கள் கூடுதலான போட்டித் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்று வாதிடுகிறார். இதனால் EADS வான் மற்றும் விண்வெளி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் Louis Gallois குறிப்பான திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

Gallois பிரெஞ்சுப் பொருளாதாரத்திற்கு போட்டித்திறன் அதிர்ச்சி கொடுக்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறார். இதில் முக்கியமான பிரச்சினை தற்பொழுது மணி ஒன்றிற்கு 34 யூரோக்கள் என்று இருக்கும் தொழிலாளர்களின் அதிக செலவுதான். இது ஜேர்மனியில் உள்ள மணிக்கு 30 யூரோக்கள், பிரித்தானியாவில் 20 யூரோக்கள் என்னும் விகிதிங்களைவிட மிக அதிகம் என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய மட்டத்தில், ஹாலண்ட் இப்பொழுது அவருக்கு முன் பதவியில் இருந்த நிக்கோலோ சார்க்கோசியின் அடிச்சுவட்டை பின்பற்றி வருகிறார். ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுடன் இணைந்து ஐரோப்பா முழுவதும் சமரசத்திற்கு இடமில்லாத சிக்கன நடவடிக்கை கொள்கையை செயல்படுத்தப்பட வேண்டும் என முனைகிறார். இந்த ஆண்டு, முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் மேர்க்கெலுக்கு ஒரு மாற்றீடு போல் காட்டிக் கொண்டு, புதிய ஐரோப்பிய நிதிய உடன்படிக்கைக்கு மீள்பேச்சுவார்த்தைகள் இருக்கும் என உறுதியளித்திருந்தார்.

ஹாலண்ட் தன்னுடைய பிரச்சார உறுதிமொழிகளை சிறிதும் தயக்கமின்றி தூக்கி எறிந்துவிட்டார். நிதிய உடன்பாட்டை மாறுதல்கள் ஏதும் இல்லாமலும் மற்றும் ஒரு பொதுஜன வாக்கெடுப்பு இல்லாமலும் ஏற்றுக்கொள்வது என திட்டமிட்டுள்ளார். உடன்பாட்டின் கடுமையான விதிகளை ஏற்பது என்பது அவரை மிகப் பெரிய வெட்டுக்களைக் கொண்டுவரக் கட்டாயப்படுத்தும் என்ற உண்மை இருந்தாலும்கூட. கிரேக்க பிரதம மந்திரி அன்டோனிஸ் சமரஸ் சமீபத்தில் பாரிஸிற்கு வருகை தந்து அவருடைய நாட்டின்மீது சுமத்தப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகள் சற்று தளர்த்தப்பட வேண்டும் என்று கோரியபோது, ஹாலண்ட் மற்றும் மேர்க்கல் இருவரும் அபராதம் போன்ற வெட்டுக்களுக்கு மாற்றீடு ஏதும் இல்லை என்று பிடிவாதமாக இருந்துவிட்டனர்.

கடந்த வாரம் ஜேர்மனியின் நிதி மந்திரி வொல்ப்காங் ஷௌய்பிள மற்றும் பிரெஞ்சு நிதி மந்திரி பியர் மொஸ்கோவிசியும் ஒரு கூட்டு உயர்மட்ட செயற்குழு ஒன்றை அமைத்து அது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நிதிய, பொருளாதாரக் கொள்கைகளை ஒருங்கிணைக்கவும், ஸ்பெயின் மற்றும் கிரேக்கம் ஆகியவற்றுடன் கலந்துரையாடவும் பயன்படுத்தப்படும் என்று ஒப்புக் கொண்டனர். ஷௌய்பிள மற்றும் மொஸ்கோவிசி இருவரும் இருவாரங்களுக்கு ஒருமுறை ஆலோசனைகளுக்காகாக கலந்து பேசுவது என்றும் ஒப்புக் கொண்டனர். சார்க்கோசியின் ஜனாதிபதி பதவிக்காலத்தில் இருந்ததுபோல், பிரான்ஸும் ஜேர்மனியும் ஒன்றாகச் செயல்படுவது என்பது ஐரோப்பா முழுவதும் நிதிச் சந்தைகளின் ஆணைகளுக்கு ஏற்ப வெட்டுக்களைச் செயல்படுத்துவது என்பதுதான்.

தனக்கு முன் பதவியில் இருந்தவருடைய கொள்கைகளை உள்நாட்டுத் துறையிலும் தொடர இடைவெளியின்றி ஹாலண்ட் முயல்கிறார். பெருகும் வர்க்கப் போராட்டங்களில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காக அவர் ரோமாவிற்கு எதிரான இனவெறிப் பிரச்சாரங்களைத் தூண்டுவதுடன், கிளர்ச்சி செய்யும் இளைஞர்களுக்கு எதிராக பொலிசாரைப் பயன்படுத்துகிறார். இந்த மூலோபாயத்தின் ஒரு பகுதிதான் சிரியாவில் ஒரு இராணுவத் தலையீடு வேண்டும் என அவர் வலியுறுத்துவது. மத்தியக் கிழக்கில் பிரெஞ்சு ஏகாதிபத்திய நலன்களை மட்டும் அவர் தொடரவில்லை; பெருகும் உள்நாட்டு எதிர்ப்பை திசைதிருப்பவும் அதற்காகத் தயாரிப்புக்களை நடத்தவும் இராணுவவாதத்தை பயன்படுத்துகிறார்.

ஐரோப்பா முழுவதும் இருக்கும் தொழிலாளர்கள் பிரான்ஸில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து தேவையான அரசியல் படிப்பினைகளை உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது பிரான்ஸ், கிரேக்கத்தையும் ஸ்பெயினையும் சூழ்ந்திருந்த அதே சமூக எதிர்ப்புரட்சியைத்தான் முகம் கொடுக்கிறது. ஜேர்மனியிலும், கடந்த தசாப்தத்தில் ஒரு பெரிய குறைவூதியப் பிரிவு உருவாக்கப்பட்டு, இதுவரை முறையான வேலைகள், ஊதிய ஒப்பந்தங்களைக் கொண்டிருந்த அத் தொழிலாள வர்க்க பிரிவுகள் இப்போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தற்பொழுது Lufthansa வில் உள்ள மோதலின் முக்கியத்துவம் இதுதான், அங்கு விமானிகள் கட்டுப்பாட்டு அறைக் குழு உறுப்பினர்கள், குறைவூதியம் பெறுவோரால் அகற்றப்பட்டு அல்லது தற்காலிகத் தொழிலாளர்கள் அவர்களுக்குப் பதிலாக நிறுவனத்தால் நியமிக்கப்படுகின்றனர்.

நிதியச் சந்தைகள் ஐரோப்பாவில் நலன்களும் ஊதியங்களும் சர்வதேசத் தரங்களை அடையும் வரை ஓயமாட்டா. அதாவது அத்தரங்கள் சீனா அல்லது அதைபோன்ற நாடுகளில் நிலவும் தரத்திற்கு வரும் வரை. சமூக ஜனநாயகக் கட்சிகள் இவ்வகையில் உதவ வரிசையில் நிற்கின்றன. அவர்களுக்கும் பழைமைவாத மற்றும் தடையற்ற சந்தை எதிர்ப்பாளர்களுக்கும் இருந்த வேறுபாடு இப்போது கிட்டத்தட்ட காணமுடியாத நிலையில் உள்ளது. இதே நிலையில்தான் தொழிற்சங்கங்களும் உள்ளன. அவை பெருநிறுவனங்கள், தம்நாட்டு அரசாங்கங்கள் ஆகியவற்றுடன் நெருக்கமாக உழைக்கின்றன.

பிரான்சில் நடைபெறும் நிகழ்வுகள் போலி இடது அமைப்புக்களையும் முற்றிலும் அம்பலப்படுத்தியுள்ளன; இவை ஐரோப்பிய ஒன்றியத்தை போருக்குப் பிந்தையகாலத்திய சீர்திருத்தக் கோரிக்கைகளின் தளத்தின் மூலம் புதுப்பிக்க இயலும் என்று கூறுகின்றன. இவை சமூக ஜனநாயகத்தினருக்கும் தொழிற்சங்கங்களுக்கும் ஒரு மூடிமறைப்பு என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அரசாங்கத்தில் இருக்கும்போது இவர்கள் சிக்கன நடவடிக்கைகளைத் தாங்களே செயல்படுத்தத் தயாராக உள்ளனர்.

இவ்வகையில் இந்த ஆண்டு கிரேக்கத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, SYRIZA  என்னும் இடது மாற்றீட்டின் கூட்டணி வேட்பாளர் அலெக்சிஸ் சிப்ரஸ் பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்டை ஒரு நண்பர் என்று பாராட்டியும், ஐரோப்பிய முதலாளித்துவத்தை சீர்திருத்த சாத்தியமான ஒரு உயிர்வாழும் நிரூபணம் என்றும் கூறினார். இப்பொழுது இது வேண்டுமென்றே கூறப்பட்ட ஒரு பொய், ஏமாற்றுத்தனம் என்பது தெளிவாகியுள்ளது.

ஐரோப்பிய மற்றும் சர்வதேச முதலாளித்துவம் சீர்திருத்தப்பட முடியாதது. நிதியச் சந்தைகளின் ஆணைகள் ஒரு சமூகப் புரட்சியின் மூலம்தான் எதிர்க்கப்பட முடியும். இதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்படுவது தேவையாகும்.

முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு பதிலாக தொழிலாளர்களின் அரசாங்கங்கள் நிறுவப்பட வேண்டும். அவை வங்கிகள், தனியார் முதலீட்டு நிதிகள் மற்றும் பெரிய நிறுவனங்களை பறிமுதல்செய்து, பெரும் செல்வங்களைப் பற்றி எடுத்துப் பொருளாதார வாழ்வை நிதியச் சந்தைகளின் இலாபத் தேவைகளுக்கு பதிலாக சமூகத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அமைக்கும். வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் ஒரு கருவியாக உள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பதிலாக ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் நிறுவப்பட வேண்டும்.