World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

How Germany's super-rich benefit from the economic crisis

ஜேர்மனியின் பெரும் செல்வந்தர்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து எவ்வாறு பயனடைந்தனர்

By Dietmar Henning
16 October 2012
Back to screen version

 

ஜேர்மனியின் மிகப்பெரும் செல்வந்தர்கள் கடந்த ஆண்டு இன்னும் கூடுதலான செல்வத்தை அடைந்தனர். 500 மிக அதிக பணக்கார ஜேர்மன் குடும்பங்களினதும் தனிநபர்களினதும் செல்வம் இப்பொழுது அரை டிரில்லியன் யூரோக்களுக்கு அதிகமாகிவிட்டது. Manager Magazin ஏட்டின் அக்டோபர் 9, 2012 சிறப்புப் பதிப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு தரப்பட்டியலில் இருந்து வெளிவரும் தகவல் இதுதான்.

 

மத்திய அரசாங்கத்தினால் மிகஅதிகம் விவாதிக்கப்படும் வறுமை மற்றும் செல்வம் பற்றிய அறிக்கையை அடுத்து இப்பட்டியல் வந்துள்ளது. அந்த அறிக்கை மிக அதிக செல்வம் படைத்த 10% இனர் தங்கள் மொத்த சொத்துக்களில் பங்கை 1998ல் 45% என்பதில் இருந்து 2008ல் 53% என உயர்த்திக் கொண்டனர் எனக் கண்டறிந்துள்ளது. அரசாங்கத்தின் அறிக்கை Manager Magazin பெயரிட்டுள்ள பெரும் செல்வந்தர்களை கொண்டிருக்கவில்லை. வருமானம் மற்றும் நுகர்வு அளவை (Consumption Survey- EVS), சமூகப் பொருளாதாரக் குழு (Socio-Economic Panel -SOEP) ஆகியவை வெளியிட்டுள்ள அறிக்கைத் தகவல்களை அது தளமாகக் கொண்டுள்ளது. இந்த அறிக்கைகள் குடும்ப மாத வருமானங்கள் 18,000 யூரோக்களுக்கு அதிகமாக உள்ளவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் இதனால் புள்ளிவிவர தெளிவின்மை மிக அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பெரும் செல்வந்தர்களின் செல்வம் கணக்கில் சேர்க்கப்பட்டால், ஜேர்மன் சமூகத்திற்குள் இருக்கும் பிளவுகள் கணிசமான முறையில் வறுமை மற்றும் செல்வம் பற்றிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட அதிகமாக இருக்கும். இதனால் செல்வந்தர் பட்டியலில் ஒருவர் இடம் பெறுவது இன்னும் கடினமாகும். உயர்மட்ட 10% மக்கள் தொகையின் சராசரிச் சொத்துக்கள் (நிலச் சொத்துக்கள் உட்பட) அரை மில்லியன் யூரோவை அண்மித்து இருக்கும் நிலையில், உயர்மட்ட 500 மிகப் பெரிய செல்வந்தர்களுக்கு இந்த எண்ணிக்கை ஒரு பில்லியன் யூரோக்கள் என்றும் 100 செல்வம் நிறைந்த குடும்பங்கள், தனிநபர்களுக்கு 3.2 பில்லியன் யூரோக்கள் என்றும் இருக்கும்.

சமீபத்திய ஆண்டுகளைப் போலவே, மிக அதிகச் செல்வம் படைத்த ஜேர்மனியர் அல்டி தள்ளுபடி (Aldi discount) அங்காடித்தொடரின் உரிமையாளர்கள்தான். 92 வயதான கார்ல் அல்பிரெக்ட் உடைய சொத்துக்கள் 17.2 பில்லியன் யூரோக்கள் ஆகும். 2010ல் இறந்துபோன அவருடைய சகோதரர் தியோவின் மகன்கள் பெர்த்தோல்ட், தியோ அல்பிரெக்ட் ஆகியோர் 16 பில்லியன் யூரோக்களுக்கு உரிமையாளர்கள் ஆவர்.

உலக நிதியநெருக்கடி மற்றும் யூரோ நிதிய நெருக்கடி ஆகியவற்றின் விளைவுகள் ஐரோப்பாவின் மக்களில் பலரைப் பெரும் வறுமையில் தள்ளியிருக்கையில், அவை ஜேர்மனியின் மிகப் பணக்காரர்களின் நிதி நிலைமையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. உண்மையில் 100 மிக அதிகப் பணக்காரர்கள் தங்கள் சொத்துக்களை 4%க்கும் மேலாக கிட்டத்தட்ட 329 பில்லியன் யூரோக்கள் என அதிகரித்துள்ளனர்த இதனால் அவர்கள் நிதிய நெருக்கடிக்கு முன் இருந்த தமது தரத்திற்கு திரும்பியுள்ளனர். இப்பொழுது 115 என்றுள்ள ஜேர்மனிய பில்லியனர்களின் எண்ணிக்கை ஒரு புதிய உயர் அளவு ஆகும். கடந்த ஆண்டு அது 108 ஆக இருந்தது.

ஒரு சில விதிவிலக்குகளுடன், மிகப் பெரிய செல்வந்தர்கள் மீண்டும் சில்லறை மற்றும் நிதியத்துறைகளின் வலுவான வளர்ச்சியில் இருந்து ஆதாயம் அடைந்துள்ளனர். SAP மென்பொருள் நிறுவனத்தின் தலைவரான ஹாசோ பிளாட்டர் தன்னுடைய சொத்துக்களை 900 மில்லியன் யூரோக்கள் என்பதில் இருந்து கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 6 பில்லியன் யூரோக்கள் என்று அதிகரித்துள்ளார். வுர்த் குடும்பம் (வுர்த் சர்வதேச மொத்த விற்பனையாளர்கள்) மற்றும் டீட்மார் ஹொப் (SAP மென்பொருள் நிறுவனம்) ஆகியவையும் ஒவ்வொன்றும் 800 மில்லியன் யூரோக்கள் வருமானம் என்பதைப் பதிவு செய்தன. அவற்றின் சொத்துக்கள் முறையே 8, 5.9 பில்லியன் யூரோக்கள் எனப் பெருகின.

ஷிலெக்கர் (Schlecker) குடும்பம் மிக அதிக இழப்பான 1.92 பில்லியனைக் காட்டியது. இதற்குக் காரணம ஷிலெக்கர் மருந்துக் கடைத் தொடரின் திவால்தன்மை ஆகும். ஆனால் இன்னும் கிட்டத்தட்ட 40 மில்லியன் யூரோக்கள் சொத்தைத் தக்கவைத்துள்ள நிலையில், இதை ஒன்றும் வறிய அமைப்பு எனக் கூறமுடியாது.

அல்டி உரிமையாளர்களைத் தவிர, உயர்மட்ட செல்வம் படைத்த 10 பேரில் பின்வருவோர் அடங்குபவர்கள்: டீட்டர் ஷ்வார்ட்ஸ் (Lidl, Kaufland, €12 billion சொத்து), ரைமான் குடும்பம் (Reckitt Benckiser, Coty etc., €11 பில்லியன்); சுசான கிளாட்டன்(BMW, Altana etc., €9 பில்லியன்); ஒட்டோ குடும்பம் (Otto Mail Ordering, ECE, €8.2 பில்லியன்); வுர்த் குடும்பம் (Würth, €8 பில்லியன் ); குந்தர், டானியேலா ஹெடஸ் (German Lloyds etc., €7 பில்லியன்);  ஒக்டார் குடும்பம் (Oetker, Hamburg Süd etc., €6.9 பில்லியன்) ஸ்ரெபான் குவாந்ட் (BMW, €6.6பில்லியன்).

உயர்மட்ட 500 பேர் பட்டியலில் கடைசிப் பெயரில் 1974ஆம் ஆண்டு உலகக் கால்பந்து போட்டி வீரர் பிரன்ஸ் பெக்கன்பவர் உள்ளார். இவருடைய சொத்துக்களின் மதிப்பு 150 மில்லியன் யூரோக்கள் ஆகும். Manager Magazin இவருடைய வணிகப் பிரிவை கால்பந்து துறை மற்றும் நிலச் சொத்துக்கள் எனப் பட்டியலிட்டுள்ளது.

 

Spiegel செய்தித்துறைகுழுவின் Manager Magazin உடைய சிறப்புப்பதிப்பின்  பட்டியலில் இடம் பெற வேண்டும் எனப் போட்டியிடுவோரால் வெளிப்படையான ஆர்வத்துடன் படிக்கப்படுகிறது. இதில் மிகப் பெரிய பணக்காரர்கள் மட்டும்தான் வாங்கக்கூடிய பல விளம்பரங்களும் ஆடம்பரப் பொருட்களுக்கான கட்டுரைகளும் உள்ளன.  இவ்வகையில் இப்பக்கங்களில் நாம் ஒரு புதிய Ferrari FF பரிசோதனை ஓட்டத்தைப் பற்றிய அறிக்கையைக் காண்கிறோம். இக்காரின் விலை 270,000 யூரோக்கள் ஆகும். கிரேக்கம், மாசிடோனியா மற்றும் துருக்கியில் உள்ள ஆடம்பர விடுதிகளைப் பற்றிய குறிப்புக்கள்.  இவற்றில் ஓர் இரவு தங்குவதற்கான செலவு ஒரு கிரேக்க ஆசிரியருடைய மாத வருமானத்தை விட (800 முதல் 1150 யூரோக்கள்) அதிகம் ஆகும். வெற்றிகரமான மதுவகை பற்றிய அறிக்கை (ஒரு போத்தல் போர்தோ வைன், சிறப்புப் பானம் 2005 தயாரிப்பு, 2000 யூரோக்கள்). செல்வத்தை நிர்வகிப்பது எப்படிஎன்ற துணை வழிகாட்டிநூல்- இதில் ஒரு நபர் எப்படி கொந்தளிப்பான காலத்திலும்சொத்துக்களைச் சேகரிக்க முடியும் என்பது கூறப்படுகிறது. மூன்றாம் விதி: தங்கத்தில் சிறிது சேமிப்பு என்பது கட்டாயம். என்பவை காணப்படுகின்றன.

பொருளாதார சக்தி உடைய உயரடுக்கு நாட்டிற்கு ஆற்றல் மிகுந்த தொழில்வழங்குனரையும், தகுதியான மேலாளர்களையும் வழங்குகிறதுஎன்று Manager Magazin   கூறுகிறது. இவர்கள்தான் அனைவரின் செல்வசெழிப்பிற்கான உந்துசக்திகள் ஆகும் என்கிறது.

அதிருஷ்டவசமாக இந்த ஏடு இந்த உயரடுக்கு உறுப்பினர்களின் ஆற்றல், திறமை பற்றி நடைமுறை உட்பார்வைகளையும் கொடுக்கிறது. உதாரணமாக டக்லாஸ் வாசனைத் திரவியச் சங்கிலியை நிறுவிய ஜோர்ன் கிரேக்கே இனை பற்றி. தற்பொழுது நிர்வாகக் குழுவின் தலைவராக இருக்கும் இந்த 72வயது நபர் தன்னுடைய நிறுவனத்தின் குறைந்த பங்கு விலையை பயன்படுத்தி ஒரு 6.4மில்லியன் யூரோக்கள் பங்குகளை வாங்கினார். கடைசியாக வாங்கப்பட்டு ஆறு வாரங்களுக்குப் பின் டக்லால் ஹோல்டிங் உரிமையாளர் தன்னுடைய வணிகத்திற்கு அமெரிக்க முதலீட்டாளர்களை அணுகுவதற்கு பேச்சுக்களை நடத்தினார். இது விரைவில் பங்குகளின் விலைகளை அதிகரித்தது. கிரேகேயை 1.3 மில்லியன் யூரோக்கள் ஆறுமாதங்களுக்குள் பெறுவதற்கு உதவியது.

உயரடுக்கில்  சிலர் கற்பனை செய்தும் பார்க்க முடியான செல்வத்தை அடைவதற்குக் குறிப்பிடத்தக்க வகையில் ஆற்றல் உடையவர்களாக  இருக்க வேண்டும் என்பதில்லை. BMW  நிறுவன வாரிசுகள் ஜோகானா குவான்ட்,   அவருடைய இரு குழந்தைகள் சுசானா கிளாட்டன், ஸ்ரெபான் குவான்ட் ஆகியோர் கார்த்தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகளில் 46%ஐக் கொண்டுள்ளனர். சமீபத்தில் நிகர பங்கு இலாபத்தொகையான 647 மில்லியனைப் பெற்றனர். 2010ல் அவர்கள் பெற்ற தொகை இதில் பாதிதான்.

ஹெங்கெல் குடும்பம் (ஒட்டும் பொருட்கள், தூய்மைப்படுத்தும் பொருட்கள் தயாரிப்பு) தங்கள் சொத்தை 9இல் இருந்து 13 பில்லியனுக்கு அதிகரித்தது. இதற்கு அவர்களுக்கு உதவியவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான காஸ்ப்பர் றோஸ்ரெட் ஆகும். மிகஅதிக இலாபங்களை அடைய முடிந்ததற்குக் காரணம் வாடிக்கையாளர்கள் உயர்ந்த விலையைக் கொடுத்தனர், நிர்வாகம் குறைந்த உற்பத்திச் செலவுகளைக் கொண்டிருந்ததுஎன்று Manager Magazin கூறுகிறது.பாதுகாப்பாக இருப்பதற்கு இந்த வியக்கத்தக்க செயலரினுடனான ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது.

MerchFinck & Co. Bank உடைய நிறுவனரின் பேரர் அகஸ்ட் வான் பிங்க் பிரபு, தன்னுடைய சொத்துக்களை 100 மில்லியன் யூரோக்கள் கடந்த ஆண்டு அதிகரித்து 4.6 பில்லியன் என்று உயர்த்திக் கொண்டார். இப்பிரபு Movenpick சொகுசுவிடுதி மற்றும் விடுதிச் சங்கிலியில் பங்குகளைக் கொண்டுள்ளார். ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஒரு கோட்டை வீட்டில் வசிக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவர் தாராளவாத ஜனநாயகக் கட்சிக்கு (FDP) 1.1 மில்லியன் நன்கொடை அளித்தார். இதற்காக அது விடுதிகளில் இரவில் தங்கினால் மதிப்புக் கூட்டிய வரிவிகிதத்தை (VAT) குறைத்து சொகுசுவிடுதி தொழிலுக்கு என்று சலுகை கொடுத்தது.

AWD Holding நிதியப் பொருள் விற்பனையாளரின் நிறுவனரான கார்ஸ்டன் மார்ஸ்மையர் உம் பட்டியலில் காணப்படுகிறார் (112வது இடம், 1.05 பில்லியன் சொத்துக்கள்). முன்னாள் சான்ஸ்லர் ஹெகார்ட் ஷ்ரோடார்(சமூக ஜனநாயகக் கட்சி-SPD)  உடைய மற்றும் முன்னாள் ஜேர்மனிய ஜனாதிபதி கிறிஸ்டியன் வுல்பின் நண்பர் என்னும் முறையில் மார்ஸ்மையர் செய்தி ஊடகத்தில் தொடர்ச்சியாக சந்தேகத்திற்குரிய வணிகச் செயற்பாடுகளில் குறிக்கப்படுகிறார்.

இதற்கிடையில் அவர் MaschmeyerRürup PLC  யின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனார். இதை அவர் பேர்ட் ரூருப் (SPD) உடன் ஜனவரி 2010ல் நிறுவினார். 2002ல் பேராசிரியர் ரூருப் அப்பொழுது சான்ஸ்லராக இருந்த ஷ்ரோடரால் ரூருப் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இக்குழுதான் ஓய்வூதியத் தொகை, சுகாதாரக்காப்பீட்டுத் திட்டங்கள் ஆகியவற்றின் சீர்திருத்தங்களுக்கான திட்டத்தை வரைந்தது.

ரூருப் ஆணைக்குழு ஓய்வூதியங்களில் நீண்டகாலக் குறைப்பு என்பதை முன்வைத்து, ஓய்வூதிய வயதை 65ல் இருந்து 67 என உயர்த்தியது. மேலும் ஓய்வூதியங்களை  சுயநிதியுதவி மூலம் ஒழுங்கமைக்கும் மாதிரிகளை வழங்கியது. இத்திட்டங்களில் பெரும்பாலானவை செயல்படுத்தப்பட்டுவிட்டன. தனியார் ஓய்வூதிய நிதி குறித்த நடவடிக்கை ரூருப் ஆணைக்குழுவால் ஆரம்பிக்கப்பட்டது. இது AWD போன்ற பெருநிறுவனங்களுக்குத் தங்கச் சுரங்கம் போல் ஆயிற்று. அங்கு ரூருப் 2009ல் தனியார் ஓய்வுதியங்களுக்கு பொறுப்பான தலைமைப் பொருளாதார வல்லுனரானார்.

ஜேர்மனியின் சொத்துக்களைப் பற்றிய அறிக்கைகள் செல்வந்தர்கள் பெரும்பாலும் வெற்றிகரமான வணிகர்கள்என்பதை இடைவிடாமல் வலியுறுத்துகின்றன. உண்மையில் அமெரிக்காவில் இருப்பது போல் ஜேர்மனியில் உள்ள பெரும் செல்வந்தர்களில் மிக அதிகமான நிதியத்துறை வல்லுனர்கள் காணப்படவில்லை. Manager Magazin  பட்டியல் மூலதன முதலீடு”, “சொத்து நிர்வாகம்”, “வணிக முதலீடுகள் என்ற வணிகப் பிரிவுகளை நாட்டின் 100 பெரும் செல்வந்தர்களில் நான்கில் ஒருவரைக் குறிக்கப் பயன்படுத்துகிறது.

ஆனால் பெரும் செல்வம் படைத்த தொழிலதிபர்களின் வாரிசுகள் பலர் பில்லியன்கள் கிடைத்ததை நிதியச் செயற்பாடுகளில் முதலீடு செய்து தங்கள் சொத்துக்களை அதிகரிக்கின்றனர். பட்டியலைப் படிக்கையில் நாம் முன்னாள் Boehringer இல் இருந்தவர்”, “முன்னாள் Wella, wertkauf, Hexan இல் இருந்தவர்என்ற வாசகங்களை காணக்கூடியதாக உள்ளது. இவர்களின் இன்றைய கிளைகள்: மூலதன முதலீடு, சொத்து நிர்வாகம், வணிக முதலீடு ஆகும். மேலும் வணிக உரிமையாளர்களின் சொத்துக்கள் அவர்களுடைய பங்குகளின் மதிப்பு உயர்வதால் கூடுகின்றன. இது ஜோர்ன் கிராகே, குவான்ட் குடும்பம் இவற்றினால் நிரூபணம் ஆகிறது.

அலியான்ஸ் காப்பீட்டுக்குழு நடத்திய ஆய்வு ஒன்று இத்தகைய செல்வக் குவிப்பில் முக்கியமான காரணி டிராகி விளைவு-“Draghi effect”-என அழைக்கப்படுவது எனக் கூறுகிறது. ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் யூரோவை மீட்பதற்குத் தான் அனைத்தையும் செய்வதற்குத் தயார் என்று கொடுத்துள்ள அறிவிப்பு உலகெங்கிலும் பங்குகளின் விலைகளை உயர்த்தியது. ஒரு சில வாரங்களுக்குள் ஜேர்மனியக் குடும்பங்களின் பாதுகாப்புப் பத்திரச் சொத்துக்களின் மதிப்பு 30 பில்லியன் யூரோக்கள் அதிகம் ஆயிற்று. இது உலகெங்கிலும் 400 முதல் 600 பில்லியன் வரை அதிகமாயிற்று.

பெரும் செல்வந்தர்கள் தங்கள் சொத்துக்களை அதிகரிப்பதற்காக நெருக்கடியின் விலை ஐரோப்பியத்  தொழிலாளர்களால் ஊதிய வெட்டுக்கள், வேலையின்மை, பட்டினி, பெருகிய அடக்குமுறை ஆகியவற்றால் கொடுக்கப்படுகிறது.