World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan union prepares to sell out university strike

இலங்கை தொழிற்சங்கங்கள் பல்கலைக்கழக வேலைநிறுத்தத்தை விற்றுத்தள்ள தயாராகின்றன

By our correspondents
5 October 2012

Back to screen version

வேலை நிறுத்தம் செய்யும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களதும் ஐந்து நாள் கண்டன ஊர்வலம் ஒன்று தெற்கில் காலி நகரத்தில் இருந்து இலங்கை தலைநகரான கொழும்பு வரை பயணித்தது. முடிவாக கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஒரு கூட்டத்தில் சுமார் 4,000 பேர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் வந்தவர்கள் தங்களது கோரிக்கைகளுக்கு கணிசமானளவு ஆதரவை வென்றனர். அவர்கள் 20 சதவீத சம்பள உயர்வையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து அரசாங்கம் கல்விக்கு ஒதுக்கும் செலவை 6 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரினர்.

பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் குடும்ப பெண்களும் வழி நெடுகிலும் கூடி வாழ்த்து தெரிவித்தனர். காலியைச் சேர்ந்த  ஒரு தாய் உலக சோசலிச வலைத் தளத்துடன் (WSWS) பேசும் போது, நாங்கள் இந்த போராட்டத்தை ஆதரிக்கின்றோம். கல்வியில் நெருக்கடியை தீர்க்க, கல்விக்கான செலவை 6 சதவீதம் அதிகரிக்க வேண்டும், என்றார். மற்றொரு பெண், கல்வி நெருக்கடியை தீர்க்காமைக்காக அரசாங்கத்தை குற்றஞ்சாட்டியதோடு, விரிவுரையாளர்கள் சம்பந்தமாக அமைச்சர்கள் காட்டும் அலட்சியத்தையும் கண்டனம் செய்தார். பாடசாலைகளுக்கு நிதி பற்றாக்குறை காரணமாக, எங்கள் பெற்றோர்கள் நிதி சுமைகளை சுமக்கத் தள்ளப்பட்டுள்ளனர், ஆனால் அவர்களால் அதை செய்ய முடியாது, என ஒரு பாடசாலை மாணவன் விளக்கினார்.

இந்த போராட்டத்துக்கு உழைக்கும் மக்கள் மத்தியில் காணப்படும் அனுதாபமானது, சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைகளின்படி அரசாங்கம் அமுல்படுத்தும் சிக்கனத் திட்டத்தின் மீது ஆழமாக ஊன்றியுள்ள சீற்றத்தையும் விரோத போக்கையும் பிரதிபலிக்கின்றது. முழு தொழிலாள வர்க்கமும் சம்பள அதிகரிப்பு நிறுத்தம், விலைவாசி உயர்வு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை சமூக சேவைகளுக்கான செலவு வெட்டுக்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் (எஃப்.யு.டீ.ஏ.), ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்ட இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்யவில்லை. மாறாக, மூன்று மாத வேலை நிறுத்தத்தை விற்றுத் தள்ள தொழிற்சங்கம் முயற்சிக்கின்ற நிலையில், அழுத்தத்தை தணிப்பதற்காகவே ஊர்வலத்தை ஏற்பாடு செய்தது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு எந்த சலுகையும் வழங்காது என்று அரசாங்கம் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. ஊர்வலத்தின் போது, உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, பல்கலைக்கழக ஆசிரியர்கள் "ஆட்சி மாற்றத்தை இலக்காகக் கொண்ட வேறு வார்த்தைகளில் சொன்னால் அரசாங்கத்தை மாற்றுவது- சதியின் பாகமாக செயற்படுகின்றனர், என குற்றம் சாட்டினார்.

ஆனால் எஃப்.யு.டீ.ஏ. தலைவர் நிர்மல் ரஞ்சித்  தேவசிறி, "பல்கலைக்கழக ஆசிரியர்களது போராட்டம் யாரையும் தோற்கடிப்பதற்காக அல்ல, என்று கடந்த வெள்ளியன்று நடந்த கூட்டத்தில் கூறினார். இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க எஃப்.யு.டீ.ஏ. தலைமை மறுப்பது, நீண்ட கால போராட்டத்தை தொழிற்சங்கம் காட்டிக்கொடுக்கத் தயாராவதற்கான அறிகுறியாகும். அமைச்சர் எந்தவொரு சமரசத்தையும் நிராகரித்துள்ள நிலையிலும், திறைசேரி செயலாளர் பி.பி. ஜயசுந்தரவுடன் இன்னொரு கலந்துரையாடலை எதிர்பார்ப்பாதாக தேவசிறி அறிவித்தார்.

எஃப்.யு.டீ.ஏ.  துணைத்தலைவரும் ஒரு பௌத்த துறவியும் மற்றும் எதிர்க் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பீ.) உறுப்பினருமான தம்பர அமில, விரிவுரையாளர்கள் மேலும் ஆர்ப்பாட்டங்கள், மேலும் பட்டினி மற்றும் பல்கலைக்கழகங்கள் முன் சாகும்வரை உண்ணாவிரதத்துக்கும் கூட தயாராக வேண்டும் என கூட்டத்தில் கூறினார். போராளிக்குணம் மிக்க நடவடிக்கைகள் பற்றிய இத்தகைய வாய்ச்சவாடல் அறைகூவல்கள், அரசாங்க அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் மூடிய கதவுகளுக்கு பின்னால் தயாரிக்கப்பட்டுவரும் வியாபாரத்தை மூடி மறைக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள், ஆழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க வைக்க நிதி மூலதனம் முன்னெடுக்கும் சர்வதேச நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும். அரசாங்கத்துக்கும் மற்றும் அது பாதுகாக்கும் முதலாளித்துவ முறைமைக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தையும் கிராமப்புற வறியவர்களையும் சுயாதீனமாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே வாழ்க்கைத் தரத்தின் மீதான இந்தத் தாக்குதலை எதிர்த்துப் போராட முடியும்.

தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புவதற்கு மாறாக, எஃப்.யு.டீ.ஏ. தலைமைத்துவமானது ஏனைய தொழிற்சங்கங்கள், எதிர் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுடன் அடிப்படை வேறுபாடுகளைக் கொண்டிராத முன்னாள் இடது அமைப்புக்களை நோக்கித் திரும்பியுள்ளது. முந்தைய ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பீ.) அரசாங்கங்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) உள்ளிட்ட கூட்டணி அரசாங்கமும் பொதுக் கல்வி மீதான தாக்குதல்களை செயல்படுத்தியமைக்கு பொறுப்பாளிகளாகும்.

நவசமசமாஜ கட்சி, ஐக்கிய சோசலிச கட்சி (யு.எஸ்.பீ.) போன்ற முன்னாள் போலி இடது அமைப்புக்கள், உழைக்கும் மக்களுக்கான ஒரு உண்மையான மாற்றீடாக எதிர் கட்சிகளை காட்ட இன்னும் ஒரு படி முன் சென்றுள்ளன. நவசமசமாஜ கட்சியும் மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும், ஒரு வலதுசாரி முதலாளித்துவக் கட்சியான யு.என்.பீ. உடன் ஒரு ஐக்கிய எதிர்ப்புக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. கல்வி தனியார்மயம், நலன்புரி சேவைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கான செலவுகளை வெட்டிக் குறைத்தல் உட்பட, சந்தை சார்பு மறுசீரமைப்பு திட்டத்தை 1970களில் தொடக்கி வைத்தமைக்கு யூ.என்.பீ. பொறுப்பாகும்.

ஊர்வலத்தின் போது, பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேலைநிறுத்தத்தை ஆதரித்தும், இலவச கல்வியைப் பாதுகாக்கவும் மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 12,500 ரூபா மாத ஊதியம் கோரியும் ஒரு நாள் எதிர்ப்பு வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து ஒரு துண்டு பிரசுரத்தை ஐக்கிய சோசலிச கட்சி வெளியிட்டுள்ளது. எவ்வாறெனினும், இந்த கோரிக்கைகளை  யூ.என்.பி., ஜே.வி.பீ., பல்வேறு தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களும் அற்ப வேண்டுகோள்களாக முன்வைத்துள்ளன.

விரிவுரையாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் இருந்து வந்த பல்கலைக்கழக மாணவர்களது ஊர்வலம் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு வந்த போதிலும், விரிவுரையாளர்களின் பேரணியில் சேரவில்லை. இந்த ஆர்ப்பாட்டம், ஜே.வி.பீ.யில் இருந்து பிரிந்து சென்ற முன்னணி சோசலிசக் கட்சியைச் சார்ந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (அ.ப.மா.ச.) அழைப்பாளர் சஞ்சீவ பண்டார, தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவ ஆதரவளித்த யூ.என்.பி. உடன் ஒரு ஒன்றிணைந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று ஊர்வலத்தினர் மத்தியில் கூறி ஒரு தீவிர தோரணையைக் காட்ட முயற்சித்தார். ஆனால் முன்னணி சோசலிசக் கட்சியும் அ.ப.மா.சம்மேளனமும், சலுகைகளுக்காக இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுக்குமளவுக்கு முட்டுச்சந்துக்குள் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களை திசை திருப்ப முயற்சிக்கின்றன.

முன்னிலை சோசலிசக் கட்சியின் (மு.சோ.க.) ஜனரல என்ற சஞ்சிகையின் ஆசிரியர் தலைப்பு, சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் உழைக்கும் மக்களை அணிதிரட்டும் போராட்டத்தை வெளிப்படையாக எதிர்த்தது. இறுதியில், ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தால் காட்டக்கூடிய குறைந்தபட்ச ஒழுக்கப் பண்பை வெளிப்படுத்தி, பிரச்சினையைத் தீர்க்கத் தலையிடுமாறு நாம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், என அது வலியுறுத்தி வாதிட்டது.  உண்மையில், உழைக்கும் மக்கள் மீது பொருளாதார நெருக்கடியின் சுமைகளை சுமத்தத் தீர்மாணிக்கும் போது, இலங்கையில் அல்லது வேறு எந்த நாட்டிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் அவை எதையும் செய்யப் போவதில்லை.

எஃப்.யு.டீ.ஏ. தலைமைத்துவம் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் போராட்டத்தை காட்டிக்கொடுக்கவுள்ளதற்கான ஏனைய தீவிர எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. கடந்த வார இறுதியில், தம்பர அமில உட்பட எஃப்.யு.டீ.ஏ. பிரதிநிதிகள், தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தருமாறு வேண்டுகோள் விடுக்க கண்டியில் உயர் மட்ட பௌத்த பீடத்தினரை சந்தித்தனர்.

ஒரு சமரசத்திற்கான சாத்தியத்தைப் பற்றி கேட்டபோது, தொழிற்சங்கமானது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் இராஜபக்ஷ செய்த முன்மொழிவுகளை ஆதரிக்கும் என்று அமில சுட்டிக்காட்டினார். எனினும், இந்த அமைச்சர், கொள்கை அடிப்படையில் எஃப்.யு.டீ.ஏ. கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளாரே தவிர வேறு எதையும் கொடுத்துவிடவில்லை இது, காலவரையற்ற எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை தவிர வேறு எதுவும் கொடுக்காமல் இருப்பதற்கான ஒரு பொதுவான தந்திரமாகும்.

அரசாங்கம் கல்விக்காக மொத்த தேசிய உற்பத்தியில் இருந்து 6 வீதத்தை ஒரே இரவில் ஒதுக்க வேண்டும் என எஃப்.யு.டீ.ஏ. எதிர்பார்க்கவில்லை என அதன் பிரதிநிதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். உண்மையில், கல்வி நிதிக்காக அத்தகைய ஒரு அதிகரிப்புக்காகப் போராடும் சிறு எண்ணம் கூட தொழிற்சங்கத்துக்கு இருக்கவில்லை. அது கடந்த ஆண்டு சம்பள உயர்வுக்கான போராட்டத்தை விற்றுத் தள்ளியபோது செய்தது போலவே, இந்தக் கோரிக்கையையும் கைவிடத் தயாராகின்றது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு தீர்க்கமான புள்ளியில் இருக்கின்றனர். வேலை நிறுத்தம் எஃப்.யு.டீ.ஏ.யின் கைகளில் விடப்பட்டால், அது விற்றுத் தள்ளப்படும். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் சாதாரண உறுப்பினர்களைக் கொண்ட நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதோடு இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் உழைக்கும் மக்களின் ஏனைய பிரிவினரின் பக்கம் திரும்ப வேண்டும். இது தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகவும் சகலருக்கும் இலவசமான உயர் தரமான கல்வி மற்றும் ஆசிரியர்களுக்கு சிறந்த சம்பளம் மற்றும் நிலைமைகள் உட்பட சோசலிசக் கொள்கைகளுக்காகவும் போராட வேண்டிய அவசியத்தை முன்வைக்கின்றது.