World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek police collude with fascist Golden Dawn group

கிரேக்கப் பொலிஸ் பாசிச கோல்டன் டவ்ன் குழுவுடன் இணைந்து செயல்படுகிறது

By Robert Stevens
9 October 2012

 

Back to screen version

 

கிரேக்கப் பொலிசார் மிகவும் வெளிப்படையாக பாசிச கோல்டன் டவ்ன் (Golden Dawn -Chrysi Avgi) குழுவுடன் கூட்டாகச் செயல்படுகின்றனர்.

கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கோல்டன் டவ்ன் இன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தலைநகர் ஏதென்ஸ் இன்னும் நாடெங்கிலும் உள்ள பிற சிறு நகரங்களிலும் குடியேறுபவர்களையும் அரசியல் எதிர்ப்பாளர்களையும் எந்த ண்டனைக்கும் உள்ளாகாமல் தாக்குவதில் ஈடுபடுகின்றனர்.

கட்சியின் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் தலைமையில் நடக்கும் இத்தாக்குதல்களில் சில புகைப்படமாகவும், ஒளிப்பதிவாகவும் எடுக்கப்பட்டுள்ளன. பொலிசார் இதைப் பற்றிச் சிறிதும் கண்டு கொள்வதில்லை. ஆனால் அவர்களும் தாக்குதல்களுக்கு ஊக்கம் கொடுக்கின்றனர் அல்லது அவற்றில் பங்கு பெறுகின்றனர்.

பொலிஸாரின் உதவியை கேட்கும் குடிமக்களை பாசிஸ்ட்டுக்களை அணுகுமாறு கூறும் உண்மைக்கு ஆதாரங்கள் உள்ளன. கார்டியன் செய்தித்தாள் சமீபத்தில் ஏதென்ஸ் மக்கள் இப்பொழுது நவ-நாஜிக் குழுவினரை உதவிக்கு அணுகுமாறு பொலிசாரால் வெளிப்படையாகக் கூறப்படுகின்றனர் என்பதற்கான அதிகரித்த சான்றுகள் உள்ளன என்று தகவல் கொடுத்துள்ளது.

ஒரு குற்றத்தினால் பாதிக்கப்பட்டவரும் அமெரிக்க பயிற்சி பெற்ற அரச உத்தியோகத்தரும் நன்கு பேசக்கூடியவருமான ஒருவர் கார்டியனிடம் அவர்களுடைய நகரத்தில் உள்ள குடியிருப்பிற்கு அருகே அல்பானிய குடியேறியவர்கள் குறித்த நிகழ்வு ஒன்றைப் பற்றி பொலிசாரிடம் அவருடைய தாயார் தெரிவிக்கையில், அவருக்கு அக்கட்சியை அணுகுமாறு கூறப்பட்டது குறித்து தன்குடும்பத்தின் அதிர்ச்சியை குறிப்பிட்டார். குடியேறுபவர்கள் பற்றிய பிரச்சினை என்றால் கோல்டன் டவ்னை அணுகவும் என்று உடனடியாக அவர்கள் கூறினர்.என்று 38 வயதுடைய, தன் வேலை, பாதுகாப்புக் குறித்துக் கவலை கொண்ட பெண்மணி பெயரைக் கூறக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் இதைக் கூறினார். என்று கார்டியன் மேற்கோளிட்டுள்ளது.

 

ஜூன் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் ஒரு வெற்றியை அடைவதற்கு கோல்டன் டவ்னிற்கு தீவிரமான பொலிஸ் ஆதரவு முக்கியமானதாக இருந்தது. விமா இன் கருத்துப்படி பொலிஸ் அதிகாரிகளில் 50% கோல்டன் டவ்னிற்கு வாக்களித்தனர். பல பொலிஸ் அதிகாரிகளும், குறிப்பாக கலகப் பிரிவுத் துறைக்குள் இருப்பவர்கள் கோல்டன் டவ்னின் உறுப்பினர்கள் ஆவர்.

கோல்டன் டவ்னினால் சாதகமாக பயன்படுத்தப்படும் இனவெறி அரசாங்கம் மற்றும் பொலிஸாரால் தூண்டுதல் பெறுகிறது. ஆகஸ்ட் மாதம் பிரதம மந்திரி அன்டோனிஸ் சமரஸ் உடைய தலைமையில் உள்ள கூட்டணி அரசாங்கம் 4,500 பொலிஸாரை பயன்படுத்தி ஏராளமான குடியேறுபவர்களை சுற்றிவளைத்துப் பிடிக்கத் தொடங்கினர். தெருக்களில் இருந்து பிடிக்கப்பட்ட 1,400 பேரில் பெரும்பாலானவர்கள் அவர்களுடைய தோலின் நிறத்தை ஒட்டியும் அவர்கள் வெளிநாட்டவர் போல் தோற்றத்தைக் கொண்டிருந்ததாலும் பிடிக்கப்பட்டனர்.

கடந்த வாரம் 2,135 பதிவு செய்யப்படாத குடியேறியவர்கள் அவர்கள் தாய்நாட்டிற்கு ஆகஸ்ட், செப்டம்பரில் அனுப்பப்பட்டனர் என்று பொலிசார் கூறினர். மொத்தம் 1,259 பேர் வெளிநாட்டினருக்கான அலுவலகத்தால் அனுப்பப்பட்டனர். பெரும்பாலானவர்கள் பாக்கிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் அல்பானியாவில் இருந்து வந்தவர்கள்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது சமரஸ் கிரேக்க முதலாளித்துவம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுமத்தும் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பேரழிவிற்கு குடியேறியவர்களை பலிகடாக்கள் ஆக்கினார். கிரேக்கத்தில் இருக்கும் ஆவணமற்ற தொழிலாளர்களை ஆயுதமின்றி படையெடுத்தவர்கள் என்று குறிப்பிட்டார். துருக்கியுடனான எல்லையில் இருந்து நாட்டில் நுழைவதைத் தடுக்க அரசாங்கம் அங்கு கூடுதல் பாதுகாப்புப் படைகளை நிறுத்தி வைத்துள்ளது.

இப்பின்னணியில்தான் செப்டம்பர் 7ம் திகதி கோல்டான் டவ்னின் பாராளுமன்றப் பிரதிநிதி ஜியோர்ஜோஸ் ஜேர்மனிஸ் அவருடைய கட்சியின் 40 குண்டர்களை ஏதென்ஸின் வடகிழக்கே ரபினா நகர இரவுச் சந்தைக்கு பெரும் சேதம் விளைவிக்க அழைத்துச் சென்றார். கறுப்பு நிறத்தையுடைய வணிகர்கள் தங்கள் அனுமதிச் சீட்டுகளைக் காட்டுமாறு இவர்கள் கோரி, பல கடைகள் அழிக்கப்பட்டன. அதன்பின் கோல்டன் டவ்ன் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தோம் என நாங்கள் பொலிசிடம் கூறினோம் என்று ஜேர்மனிஸ் வாயடித்துக்கொண்டார்.

மற்றொரு கோல்டன் டவ்ன் பாராளுமன்ற உறுப்பினர் பனயிஓடிஸ் இலியோபோலுஸும் தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளார்.

பொது மக்களின் கண்டனத்திற்கு பின் ரபினாவில் முக்கிய பொலிஸ் தலைமையகத்தில் பொறுப்பில் இருந்த பொலிஸ் தலைவர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு தாக்குதல் மேற்கு கிரேக்கத்தில் மிசோலோன்கியில் நடைபெற்றது. பிரதிநிதி கோஸ்டாஸ் பார்பரௌசிஸ் தலைமையில் கோல்டன் டவ்ன் உறுப்பினர்கள் குடியேறியவர்களுக்குச் சொந்தமான பழக்கடை, காய்கறிக் கடை என்று சந்தையில் இருந்தவற்றை அழித்தனர். இத்தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரியும் பங்கு பெற்றதாகக் கூறப்படுகிறது; விசாரணை முடியும் வரை அவர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஒரு முன்னாள் பொலிஸ் மந்திரி கோல்டன் டவ்ன் வாடிக்கையாக பொலிசுடன் ஒத்துழைத்தது என்பதை உறுதிபடுத்தி, பாசிஸ்ட்டுக்கள் கூட்டு நடவடிக்கைகளை எடுத்து, கிரேக்கப் பொலிசுக்கு உதவியுள்ளனர்என்றும் ஒப்புக் கொண்டார். ஒரு இனவெறி எதிர்ப்பு பிரச்சாரகர் பைனான்சியல் டைம்ஸிடம் இந்த மாதம், கோல்டன் டவ்ன் உடைய உறுப்பினர்கள் பாதுகாப்புக் கொடுக்கும் குழுக்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன, சில நேரம் இவை பொலிசின் ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது.

ஜூன் மாதம் எகிப்திய மீன்பிடிப்போர் பெரயோசிற்கு புறத்தே உள்ள பெரமாவில் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தாக்கியவர்களில் ஒருவர் ஒரு கோல்டன் டவ்னின் மேற்சட்டையை அணிந்திருந்தார் எனக் கூறினார். சில மணி நேரங்களுக்கு முன்னர்தான் கோல்டன் டவ்ன் பாராளுமன்ற உறுப்பினர் லோனானிஸ் லாகோஸ் ஒரு பேச்சில், எகிப்திய மீன்பிடிப்பவர்கள் அவர்களுடைய நடவடிக்கைகளுக்காக கோல்டன் டவ்னினாலும் கிரேக்க மக்களாலும் பதிலளிக்க வேண்டியவர்களாக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இனவெறித் தூண்டுதலுக்கு எதிராகச் சட்டங்கள் இருந்தபோதிலும்கூட, லாகோஸ் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் வைக்கப்படவில்லை.

இந்த ஆண்டு நடந்த நூற்றுக்கணக்கான இனவெறித் தாக்குதல்களில் இவை சிறிது அளவுதான். இந்நிகழ்வுகள் கடந்த ஆண்டு இதேகாலத்தில் இருந்ததைப்போல் இருமடங்காகிவிட்டன. சிலர் இவற்றின் விளைவாக இறந்தும் போயினர்.

செய்தி ஊடகம் கோல்டன் டவ்னுக்கு ஏற்றம் கொடுப்பதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. தேர்தலில் இருந்து பாசிஸ்ட்டுக்கள் தொலைக்காட்சி, வானொலி நிகழ்வுகளில் வாடிக்கையாக இடம் பெறுகின்றனர். கட்சிப் பிரதிநிதிகள் நிரந்தரமாகத் தோன்றுகின்றனர்.

இவர்களை முன்கொண்டுவருவதில் முக்கிய கூறுபாடு அரசாங்கத்தின் முன்னோடியில்லாத சிக்கன நடவடிக்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பையும் எதிர்க்கும் முயற்சி ஆகும். வலதுசாரி நாளேடான KathimeriniI இல் ஒரு கட்டுரையாளர், ஜனநாயகத்தை நம்பும் நம்மில் சிலர் கோல்டன் டவ்னிற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.என எழுதியுள்ளார். இடதுகளின் நியாயபூர்வமான வன்முறை எனக்கூறுவதை எதிர்கொள்வதற்கு இது சட்டபூர்வமான வாய்ப்பாகும் என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

செப்டம்பர் 10ம் திகதி பொது ஒழுங்கு மந்திரி நிக்கோஸ் டென்டியஸ் கிரேக்கப் பொலிஸ் கோல்டன் டவ்ன் பிரதிநிதிகளுக்கு கொடுத்துள்ள அரசாங்க மெய்க்காவலர்களை திரும்பப் பெறக்கூடும் என்று அறிவிக்கும் கட்டாயத்திற்கு உள்ளானார். ரபினா சந்தைத் தாக்குதலுக்குப்பின், டென்டியஸ் அதிகாரிகளை இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யுமாறு கூறினார். ஒரு பொலிஸ் அறிக்கை உத்தரவை நிறைவேற்றும் என்று உடன்பட்ட நிலையில், பாதுகாவலர்கள் கட்சித் தலைவரான நிகோஸ் மிகாலோலியகோஸ் இன்னும் கோல்டன் டவ்னின் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

டென்டியஸின் நடவடிக்கை அதிகப்பட்சமாக கோல்டன் டவ்னிற்கும் பொலிசுக்கும், அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கும் இடையே உள்ள உறவுகளை அதிக மறைப்பு இல்லாமல் காட்டும் முயற்சி ஆகும்.

டென்டியஸ் பகிரங்கமாக குடியேற்றப் பிரச்சினை கிரேக்கத்தின் நிதியப் பிரச்சினைகளைவிட பெரியது எனக் கூறினார். அதேநேரத்தில் சமரஸ் இந்த மாதம் ஆபிரிக்கா, தெற்கு ஆசியா இப்பொழுது சிரியாவில் இருந்து கிரேக்கத்திற்கு வருபவர்கள் பெரும் பிரச்சனைகளைதோற்றுவிக்கின்றனர் என்றார். கோல்டன் டவ்னிற்கும் பொலிசுக்கும் இடையே உள்ள நெருக்கமான உறவுகளைப் பற்றி கேட்கப்பட்டதற்கு, அவர்கள் தங்கள் வேலையை செய்யும் முறை குறித்து எனக்கு மகிழ்ச்சிதான் என்றார்.

சமரஸ் தலைமையில் இருக்கும் பழைமைவாத புதிய ஜனநாயக கட்சி மட்டும் குடியேறும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்தவில்லை. இதற்கு அதன் கூட்டணிப் பங்காளிகளான சமூக ஜனநாயக PASOK, DIMAR, முதலாளித்துவ இடது சிரிசா கூட்டணியில் இருந்து 2010ல் விலகிய ஜனநாயக இடது கட்சியினரும் உதவுவதுடன், ஊக்கமளிக்கின்றனர்.  

கிரேக்கத்தில் நாஜி ஆக்கிரமிப்பு இருந்த நாட்களை நினைவுபடுத்தும் காட்சிகளைப் போல், கூட்டணி கடந்த மாதம் 400 குடியேறியவர்களை கோரிந்த் நகருக்கு வெளியே பயன்படுத்தப்படாத இராணுவ முகாம்களுக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்தது. நகரத்தில் இருந்த கோல்டன் டவ்ன் உறுப்பினர்கள் குடியேற்ற எதிர்ப்பு வெறியைத் தூண்டினர். மைக்கலோலியகோஸ் வார்த்தைஜாலமாக எதற்காக கிரேக்கத்தின் வரி செலுத்துபவர்கள் நாம் விரும்பாத மக்களுக்கு விடுமுறை முகாமில் முழுஉணவுடன் தங்குவதற்கு நிதியுதவி வழங்க வேண்டும்? எனக்கேட்டார்:

குடியேறுபவர்கள் முகங்கொடுக்கும் கொடூர, மனிதத் தன்மையற்ற நிலைமைகளைப் பற்றி நன்கு தெரிந்துள்ள நகரத்தின் PASOK கட்சி நகரசபை தலைவரான அலெக்சாண்ட்ரோஸ் நெவ்மடிகோஸும் அவர்கள் வருகை குறித்துத் தன் கட்சியின் எதிர்ப்பை தெரிவித்தார். உடனடியாக அவர் முகாமிற்குச் செல்லும் நீரை பல மணி நேரம் நிறுத்திப் பதிலடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

நெவ்மடிகோஸ் கூறினார்: இம்மக்கள் அனைவரையும் நகர அதிகாரிகளுடன் விவாதிக்காமல் இங்கு அமைச்சரவை அனுப்பி வைத்திருப்பது ஏற்க முடியாதது.அவர் மேலும் கூறியதாவது: நகரத்தில் பெரும் பின் விளைவு ஏற்பட்டுள்ளது; ஏனெனில் ஏராளாமான குடியேறுபவர்கள் தப்பியோடித் துறைமுகத்தை அடையலாம், அங்கிருந்து இத்தாலிக்கு கப்பலில் செல்லலாம்... என்ற அச்சம் உள்ளது. அவர்கள் இங்கு தங்கக்கூடாது.